
அடர்ந்து வளர்ந்த பெருங்காடு
அதிலே உயர்தொரு ஆலமரம்
படர்ந்த விரிந்த கிளையொன்றில்
பறவை ஒன்று இருந்ததுவாம்.
பறவைக் கூட்டில் அதன்குஞ்சு
பாசத்தோடு அவைவளர
தாயும் உணவு தேடிதினம்
தந்து அவற்றை வளர்த்தியதாம்.
ஒருநாள் கூரிய அம்பேந்தி
கொடி வீரன் வந்தானாம்
அம்பில் நஞ்சு தோய்ந்திருக்க
அதனை மரமேல் எய்தானாம்
நஞ்சு பட்ட காரணத்தால்
நாளும் மரமும் வாடியதாம்
தஞ்ச மிருந்த பறவைகளோ
தங்கள் இருப்பிடம் மாற்றினவாம்
இந்தப் பறவை தான்மட்டும்
இருப்பிடம் மாற்றிக் கொள்ளாமல்
அங்கே இருக்க அம்மரமும்
பட்டு வாடத் தொடங்கியதாம்!
கொஞ்ச நாளில் ஒருதேவன்
அந்த மரத்தை நெருங்கிவந்து
நஞ்சால் பட்ட இம்மரத்தில்
நாளும் இருப்பது ஏனாமோ?
வேற்றிடம் சென்று பிழைப்பதற்கு
விருப்பம் இலையோ எனக்கேட்டான்
மாற்றிடம் போகா அப்பறவை
அவரிடம் இப்படிச் சொல்லியதாம்:
வாழ எமக்கு இடமளித்தும்
வம்சம் பெருக கிளையளித்தும்
நாளும் உதவிய இம்மரத்தை
நலிந்த காலத்தில் விலகுவது…
செய்த நன்றி மறக்கின்ற
செயலாய் ஆகிப் போகாதோ?
என்றே சொல்லி மறுத்தங்கே
இறக்கவும் சம்மதம் என்றதுவாம்!
உய்ய உதவிய மரம்போல்தான்
உயிரோடிருக்கும் இந்நாடும்…
என்ன ஆயினும் இந்நாட்டில்
இருந்து காப்பதே பற்றாகும்!
சுதந்திர நன்னாள் இந்நாளில்
இதந்தரு இந்தத் திருநாட்டின்
இனிய பெருமை காப்பதுதான்
இந்தியர் நமக்குப் பெருமைதரும்!