சிறுவர் சிறுகதை: ராஜராஜ சோழன் - தஞ்சைப் பெரிய கோவில்!

Thanjavur Brihadeeswara Temple
Thanjavur Brihadeeswara TempleAI Image
Updated on

நான் 5-ஆம் வகுப்பு படிக்கிறேன், எனக்கு வயது 9. என் அப்பா, அம்மா என் மீது பெரும் பாசம் வைத்துள்ளார்கள். வருடா வருடம் அப்பா தன் அலுவலகத்தில் சுற்றுலா செல்வதற்காக அட்வான்ஸ் பணம் வாங்கி, ஒரு 9 நாட்கள் விடுமுறை எடுத்துவிடுவார். அம்மா, அப்பா, பாட்டி (அப்பாவின் அம்மா) மற்றும் நான் என அனைவரும் சுற்றுலா செல்வோம்.

இந்த வருடம் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்குச் சென்றுவிட்டு, பிறகு தஞ்சைப் பெரிய கோவிலுக்குப் போனோம்.

அம்மம்மா...! அப்பப்பா...! ராஜராஜ சோழன் படம் பார்த்து இருக்கிறேன். ஐயோ, எவ்வளவு பெரிய கோவில்! நாலு திசையிலும் நாலு கோபுரம். அம்மாடியோவ்! இப்படிப்பட்ட கோவிலை நாம் இப்போது நினைத்தாலும் கட்ட முடியாது. ஒரே ஒரு கல்லில் செதுக்கப்பட்ட நந்தி சிலை... அம்மா, எவ்வளவு பெரிய நந்தி!

என் அம்மாவும் பாட்டியும் திரும்பத் திரும்பக் கடவுளைத் தரிசனம் செய்தார்கள். அப்பா பிரகாரத்தின் உள்ளே போனார். நான் நந்தியைப் பார்க்க ஓடினேன். பல நிமிடங்கள் நந்தியையே பார்த்துக் கொண்டு இருந்தேன்.

திடீரெனத்தான் நான் அதை உணர்ந்தேன்; என் அம்மா, அப்பா மற்றும் பாட்டியைத் தவறவிட்டுவிட்டேன்! எனக்குப் பயம் வந்தது. நான் காணாமல் போனது அவர்களுக்குப் பெரிய சங்கடத்தைக் கொடுத்திருக்கும். அவர்கள் பதற்றம் அடைந்திருப்பார்கள். எங்கு தேடியும் என்னால் அவர்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அம்மா, அப்பா, பாட்டி துடிதுப்போய் இருப்பார்கள்.

நான் கோவில் பிரகாரத்தில் ஓடினேன். ஒவ்வொரு சன்னதியாக அவர்களைத் தேடினேன்; கிடைக்கவில்லை. 'என்னை விட்டுவிட்டுப் போய்விட்டார்களா?' என்ற சிந்தனை ஓட்டம் எனக்குள் இருந்தது. ஒரு மணி நேரம் கழித்து மூலவரைப் பார்க்கப் போனேன், அவர்கள் அங்கில்லை. சிவலிங்கத்தை வணங்கினேன்.

இதையும் படியுங்கள்:
சிறுவர் சிறுகதை: மீனாவின் மீன் தொட்டி!
Thanjavur Brihadeeswara Temple

அப்போது எனக்கு ஒரு ஐடியா வந்தது. சுற்றிச் சுற்றிப் போவதில் அர்த்தமில்லை; ஓரிடத்தில் உட்கார வேண்டும். அப்போதுதான் அவர்கள் தேடும்போது என்னைக் கண்டுபிடிப்பார்கள் என்று நம்பினேன். நான் தேர்ந்தெடுத்த இடம் அந்தப் பெரிய நந்தி சிலை. நந்தியின் முன் உட்கார்ந்து "சிவ சிவ சிவ" என்று மந்திரம் சொல்லிப் பார்த்தேன். மனதில் பயம் அதிகமாக இருந்தது.

ஒன்றரை மணி நேரம் கழித்து, நந்தி இருக்கும் இடத்திற்குப் பாட்டி வந்தார். மனம் முழுக்கச் சந்தோஷம்! பாட்டி என்னைப் பார்த்துவிட்டார். அருகில் வந்து, "கண்ணா, எங்கே போனாய்?" என்று கேட்டார். "பாட்டி, ரொம்ப நேரமாக உங்களைத் தேடினேன்!" என்றேன். "ராஜா! என் கையைப் பிடித்துக்கொள்" என்றார் பாட்டி.

சிறிது தூரத்தில் அம்மா, அப்பா நின்றிருந்தார்கள். அம்மா அழுதுகொண்டே இருந்தார். அப்பாவுக்குச் செம டென்ஷன். இருவரும் என்னைக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தார்கள். நானும் அழுதேன். கடவுள் அருளால் எந்த அசம்பாவிதமும் நடக்கவில்லை. அந்த நந்திதான் என்னைத் தன் பெற்றோருடன் சேர்த்து வைத்தது என்று உறுதியாக நம்பி, நந்தியைச் சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்தேன்.

இதையும் படியுங்கள்:
சிறுவர் சிறுகதை: சுந்துவின் சந்தேகம்!
Thanjavur Brihadeeswara Temple

பின்னர் ஹோட்டலுக்குப் புறப்பட்டுப் போனோம். அம்மா இன்னும் அழுதுகொண்டே இருந்தார்; அப்பா கூட டென்ஷனுடன்தான் இருந்தார். பாட்டி எங்கள் மூவரையும் தேற்றினார். "நான் கும்பிடும் தெய்வம் நமக்குத் துன்பம் தராது. நல்லதே நடக்கும்" என்று உறுதியாகச் சொன்னார். ஆம், பாட்டிக்குச் சாமி பக்தி அதிகம். தினமும் பூஜை செய்யாமல் இருக்க மாட்டார்.

தஞ்சையிலிருந்து புறப்பட்டுச் சிறுவாச்சூர் போனார்கள். மதுர காளி அம்மன்தான் அவர்களது குலதெய்வம். இது திட்டத்தில் இல்லை. நான் காணாமல் போனதை நினைத்துதான் சிறுவாச்சூர் சென்றோம். அங்கே எனக்கு மொட்டை அடித்தார்கள். மதுர காளி அம்மன் தனது பக்தர்களுக்குத் துன்பம் தருவதில்லை.

logo
Kalki Online
kalkionline.com