

“கோழிக்குஞ்சு.. கோழிக்குஞ்சு.. கலர் கோழிக்குஞ்சு ஒன்னு அஞ்சு..ஒன்னு அஞ்சு!”
டிவிஎஸ் பைக்கின் பின்புறம் பெரிய வட்டமான மரக் கூடைக்குள் கலர் கோழிக்குஞ்சுகளை போட்டு விற்பனைக்காக கூவிக்கொண்டு வந்தார், அந்த விற்பனையாளர்.
சத்தம் கேட்டதும், திண்ணையில் நண்பர்களோடு கேரம் போர்டு விளையாடிக் கொண்டிருந்த நகுலன் எழுந்துச் சென்று வண்டியை நிறுத்தி விட்டு, உள்ளே சமையல் வேலை செய்து கொண்டிருந்த அம்மாவை வெளியே இருந்தபடி, “அம்மா..அம்மா” என்று கோழிக்குஞ்சு விற்கும் நபரை விட அதிகமாகக் கூவினான்.
நகுலன் சத்தம் போட்டு கூப்பிடுவதைப் பார்த்த அம்மா எரிச்சலோடு, “இப்ப எதுக்கு ஊருக்கு கேக்குற மாதிரி அம்மானு ஏலம் போடுற!” என்றபடி வெளியே வந்தார்.
“அம்மா எனக்கு கோழிக்குஞ்சு வாங்கித்தா!”
“அதெல்லாம் வேணாம்.. அப்படிதான் போன தடவ வாங்கிக் கொடுத்தப்போ எல்லா கோழி குஞ்சையும் காக்கா தூக்கிட்டு போகவிட்டுட்ட.. நீதான் ஒழுங்கா பாத்துக்க மாட்டியே, அப்புறம் எதுக்கு கோழிக்குஞ்சு!”
“அம்மா.. அம்மா.. ப்ளீஸ்மா இந்த ஒரு தடவ வாங்கிகுடும்மா… நான் நல்லா பாத்துக்குவேன்! இந்த ஒரு வாட்டி மட்டும் ப்ளீஸ்மா”
“சரி வாங்கிக்கோ ஆனா மூணுக்கு மேல வாங்க கூடாது!”
“சரிம்மா, மூணு மட்டும் வாங்கிக்கிறேன்!”
அம்மா கொடுத்த 15 ரூபாயைக் கொண்டு, கோழிக்குஞ்சுகளை அவனுக்கு பிடித்த சிவப்பு, மஞ்சள், பச்சை வண்ணங்களில் வாங்கினான்.
கோழிக்குஞ்சுகளை கையில் வாங்கிய பின் நகுலனுக்கு சந்தோசம் தாங்கவில்லை.
நண்பர்களிடம் காண்பித்தான். எல்லோரும் கையில் பிடித்துப் பார்த்தார்கள்.
“டேய்.. பாத்து புடிங்கடா.. கோழிக்குஞ்ச அமுக்கிடாதீங்க!”
“நகுலா.. கடைக்கு போயிட்டு வா!” அம்மா உள்ளே இருந்து கூப்பிட...
இந்த நல்ல சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு உடனே நண்பர்களின் கையில் இருந்த கோழிக்குஞ்சுகளை கையில் வாங்கி, “அம்மா இந்த வாரேம்மா”என்றபடி வீட்டிற்குள் சென்றான்.
நகுலன் வீட்டிற்குள் சென்றவுடன், விளையாட வந்த நண்பர்கள் அனைவரும் அவர்களின் வீட்டை நோக்கிப் புறப்பட்டார்கள்.
அம்மா சொன்ன பொருட்களை வாங்குவதற்காகக் கூடையை எடுத்துக் கொண்டு கடைக்குச் சென்றான்.
வீட்டிற்கு வந்து கொண்டிருக்கும் போது, சாக்கடைக்குப் பக்கத்தில் இருந்த, முட்புதருக்குள் இருந்து கீச்.. கீச் என்ற சத்தம் கேட்டது.
நகுலன் போய் பார்த்தான். இரண்டு கோழிக்குஞ்சுகளின் கால்கள் புதரிலுள்ள கொடியில் மாட்டியிருந்தது. கூடையை கீழே வைத்துவிட்டு, மெல்ல கையை உள்ளே விட்டு இரண்டு குஞ்சுகளையும் ஒன்றன்பின் ஒன்றாக வெளியே எடுத்தான். முதல் கோழிக்குஞ்சு விடுதலையானதும் திரும்பிப் பார்க்காமல் ஓடிவிட்டது. இரண்டாவது கோழிக்குஞ்சுக்கு கால் லேசாக அடிபட்டிருந்தது. நடக்க முடியாமல் கீழே படுத்து விட்டது. காக்கா தூக்கி விடுமோ! என்ற பயத்தில், அந்தக் கோழிக்குஞ்சை கூடைக்குள் வைத்து வீட்டிற்கு எடுத்து வந்தான்.
இதைப் பார்த்த அம்மா, “எங்க இருந்து எடுத்துட்டு வந்த? யாரோட கோழிக்குஞ்சு?”
நகுலன் நடந்த விஷயத்தைச் சொன்னான்.
“ஒழுங்கா எங்க எடுத்தியோ அங்கேயே போய் விட்டுட்டு வந்துடு! இல்ல உங்க அப்பாட்ட சொல்லிடுவேன்!”
“அம்மா.. பாவம் இதால நடக்க முடியாது! வெளிய விட்டா காக்கா தூக்கிட்டு போயிரும்! அந்த மூணு கோழிக்குஞ்சோட சேத்து இதையும் பாத்துக்கிறேம்மா!”
“என்னமோ பண்ணிதொல ஆனா யாராவது கேட்டு வந்தா.. நீ தான் பதில் சொல்லணும் சரியா?”
“சரிம்மா”
திறந்த காகிதப் பெட்டிக்குள் இருந்த மூன்று கோழிக்குஞ்சுகளுடன் சேர்த்து, இந்த அடிபட்ட கோழிக்குஞ்சையும் விட்டான்.
பெட்டிக்குள்ளேயே வாட்டர் பாட்டில் முடியில் தண்ணியும், பக்கத்தில் குருணையாக அரைத்த அரிசியும் வைத்தான்.
கலர் கோழிக்குஞ்சுகளுக்கு; சீரோ, சுக்கி, ராஜு என்ற பெயரும், அடிபட்ட நாட்டுக்கோழிக் குஞ்சுக்கு தன்னுடைய அம்மாவின் பெயரான மகாலட்சுமியை சுருக்கி மகா என்ற பெயரையும் வைத்தான்.
இந்த பெயர்களை அம்மாவிடம் சொன்னான்.
இதைக் கேட்ட அம்மா, “மூணு பேர் சரி, ஆனா அந்த மகாங்கிற பேர் மட்டும் இடிக்குதே.. என்னோட பேர தான வச்சிருக்க!”
நகுலன் சிரித்துக் கொண்டே, “உன்னோட பேரு நல்லா இருந்துச்சும்மா அதான் சுருக்கி மகானு பேரு வெச்சேன்! நல்லா இல்லையாம்மா, நான் வேணா வேற பேரு வைக்கவா?”
“நல்லா தான் இருக்கு தங்கோம்… இதையே வச்சுக்கோ!”
இதற்கிடையில் பாட்டி வீட்டிலுள்ள தாத்தாவின் சைக்கிள் கூடை ஞாபகத்திற்கு வந்தது.
“அம்மா பாட்டி வீட்டுக்கு போயிட்டு வரேன்.. கோழிக்குஞ்ச பாத்துக்கோ!”
பாட்டி வீட்டை நோக்கி நடந்தான்.
வீட்டிற்குள் சென்று, வெங்காயம் பாதி நிரப்பப்பட்ட அந்த சைக்கிள் கூடையை பாட்டியிடம் கேட்டான்.
“உனக்கு எதுக்கு கூடை?”
“அதுக்குள்ள கோழி குஞ்ச போட்டு வளக்க வேணும்!”
தாத்தா இறப்பதற்கு முன் அவருடைய சைக்கிளை எடைக்குப் போடும்போது, பாட்டி சைக்கிளின் கூடையை மட்டும் வாங்கி அதனை வெங்காயக் கூடையாக பயன்படுத்தி வந்தார்.
தாத்தாவின் இறப்பிற்குப் பின் அந்தச் சைக்கிள் கூடையானது கணவனை ஏதோ ஒரு விதத்தில் ஞாபகப்படுத்தும் ஒரு பொக்கிஷமாக பாட்டிக்கு இன்றும் இருந்து வருகிறது.
பேரனின் ஆசை, கணவரின் நினைவு இப்படி இரு வேறுபட்ட மனநிலையில் இருந்த பாட்டி பேரனிடம், “கூடையில உள்ள வெங்காயம் முடியவும்.. நான் சொல்றேன்.. அப்ப வந்து கூடைய வாங்கிறியா செல்லம்!”
“கோழிக்குஞ்சுக்கு மேல கூடய கவுத்தி போட்டா, வீட்டுக்குள்ள வந்து கோழிக்குஞ்ச பூனை தூக்காம இருக்கும், அதுக்கு தான் கேக்குறேன்! கோழி பெருசானதும் கொடுத்துடறேன்.. ப்ளீஸ் பாட்டி இந்த கூடைய குடுக்கிறியா!”
வெங்காயத்தை கீழே தரையில் கொட்டி விட்டு, அந்த சைக்கிள் கூடையை நகுலனிடம் கொடுத்தார்.
கூடையை வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வந்தான்.
கீழே ஒரு சாக்கை விரித்து அதன் மேல் கோழிக்குஞ்சுகளை வைத்து சைக்கிள் கூடையால் மூடினான்.
கம்பு, அரிசி, சோளம் போன்ற தானியங்களை குருணையாக மிக்ஸியில் அரைத்து உணவாகக் கொடுத்தான். நாளடைவில் அடிபட்டிருந்த கோழிக்குஞ்சும் குணமாகிவிட்டது.
பள்ளிக்கூடம் விட்டு வந்ததும் கோழிக்குஞ்சுகளை கையில் பிடித்து கொஞ்சி விளையாடுவதும், பள்ளிக்கூடம் போகும்போது கூடையில் அடைத்து விட்டு போவதும் என்று இருந்தான்.
ஒன்றரை மாதம் ஆனது, கோழிக்குஞ்சுகள் எல்லாம் கோழிகளானது.
கலர் கோழிகளின் மேலுள்ள வண்ணங்கள் வெளுத்தது.
இதை பார்த்த நகுலன் அம்மாவிடம் கேட்டான்.
“கோழி பெருசாக பெருசாக கலர் போயிரும்டா..! கடைசில பிராய்லர் கோழி மாதிரி ஆயிரும்!”
இதைப் பற்றி நகுலன் பெருசாக எடுத்துக் கொள்ளவில்லை.
நாளடைவில் நாட்டுக்கோழியும், கலர் கோழிகளும் இணைபிரியா தோழிகள் போல் ஒட்டிக்கொண்டன.
இப்போது நகுலன் தைரியமாக முற்றத்தில் கோழிகளை மேய விட்டான்.
கோழிகளின் வண்ணங்கள் முழுவதுமாக வெளுத்து ஒரே வெள்ளை நிறத்தில் இருந்ததை பார்த்து; எது சீரோ, எது சுக்கி, எது ராஜு என்று நகுலனுக்கே அடையாளம் தெரியவில்லை. அன்றிலிருந்து நான்கு கோழிகளையும் ஒரே மாதிரி மகா என்றே அழைக்க ஆரம்பித்தான்.
சொன்னது போலவே நகுலன் சைக்கிள் கூடையை பாட்டியிடம் கொடுத்தான்.
“என்ன தங்கம் கோழி பெருசா ஆயிடுச்சா?”
“ஆமா பாட்டி கோழி எல்லாம் பெருசா வந்துருச்சு!”
“சரி.. சரி நல்லா பாத்துக்கோ!”
‘ஒரு கோழிய அடிச்சு குழம்பு வப்போமா?’ மனதில் எழுந்த கேள்வியை பேரனிடம் சொல்லாமல் முழுங்கி விட்டார், பாட்டி.
“பாட்டி நான் போயிட்டு வரேன்”
அம்மாவிடம் போய், “அம்மா.. நான் சொன்ன மாதிரியே கோழி குஞ்ச வளத்து காமிச்சிட்டேன் பாத்தியா!”
“சரி..சரி அதுக்கு என்ன இப்போ? வேணும்னா ஒரு கோழிய அடிச்சு குழம்பு வப்போமா?”
“அதெல்லாம் வேணாம்மா நான் கஷ்டப்பட்டு வளத்துருக்கேன்! கோழிக்கு ரொம்ப வலிக்கும்மா பாவம்! அப்பா கிட்டயும் சொல்லி வை கோழிய பிடிக்க கூடாதுன்னு”
வெளியே நண்பர்கள் சத்தம் கேட்டது.
“சரிம்மா நான் விளையாட போயிட்டு வரேன்! கோழிய பத்திரமா பாத்துக்கோ!”என்று சொல்லிவிட்டு கிளம்பினான்.
விளையாடிக் கொண்டிருக்கும்போது, சாலையில் அப்பா பைக்கில் வருவதைப் பார்த்தான்.
உடனே வேகமாக ஓடி வந்து அப்பாவின் பைக்கை நிறுத்தினான்.
“அப்பா எங்கப்பா போற?”
“கறி வாங்க போறேன்டா!”
“நானும் வாரேம்பா”
“அப்பாக்கு கொஞ்சம் வேற வேலை இருக்குப்பா.. நீ போய் விளையாடு அடுத்த வாரம் போவோம்”
பைக்கின் பக்கவாட்டில் ஒரு கட்டப்பை தொங்குவதை பார்த்த நகுலன், “அப்பா அந்த பைக்குள்ள என்ன இருக்கு?”
“அது ஒன்னும் இல்லடா சும்மா!” என்றபடி பைக்கை கிளப்பினார்.
வேகத்தடையில் பைக் மேலே ஏறி இறங்கும் போது கோழியின் சத்தம் கேட்டது.
சத்தத்தை கேட்ட நகுலன்,
“அப்பா பைக்க நிப்பாட்டு” என்றபடி கத்திக்கொண்டே ஓடினான்.
நகுலன் கீழே கிடந்த கல் தடுக்கி விழுந்தான். முட்டியிலிருந்து இரத்தம் வழிந்தது.
மகன் விழுந்ததைப் பார்த்த அப்பா பதறிக்கொண்டு வண்டியை நிறுத்திவிட்டு ஓடி வந்தார்.
“ஏண்டா இப்படி ஓடி வர்ற?”
“பைக்குள்ள மகாதான இருக்கு! அதோட சத்தம் எனக்கு கேட்டுச்சு”
அப்பா மகாவை கறிக்கடைக்குத்தான் எடுத்துச் செல்கிறார் என்பதை புரிந்துக் கொண்டான், நகுலன்
அழுது அடம்பிடித்து மகாவை அப்பாவிடம் இருந்து வாங்கி கொண்டு, வீட்டை நோக்கி புறப்பட்டான்.
அதன் பிறகு நகுலனின் அப்பா கறிக்கடைக்குச் சென்று பிராய்லர் கறியை வாங்கி வந்தார்.
மதிய நேரத்தில் கோழிக் குழம்பின் வாசம் வீடு முழுக்க பரவியிருந்தது.
நகுலனின் அம்மாவும் அப்பாவும் சோற்றை போட்டு குழம்பை ஊற்றி சாப்பிட ஆரம்பித்தார்கள்.
தட்டில் இருந்த கறியை பார்த்ததும், நகுலன் சாப்பிடாமல் எழுந்து அவன் வளர்த்த நான்கு ‘மகா’ கோழிகளை பார்க்கச் சென்றான்….
முற்றும்!