பீர்பால் சிறுகதை: ஆகாயத்தில் மாளிகை கட்ட முடியுமா?

Akbar and Birbal
Akbar and Birbal storyImage credit: AI Image
Updated on

ஒரு நாள் மாலை நேரத்தில் அரண்மனைத் தோட்டத்தில் தென்றல் காற்றை அனுபவித்தபடி அக்பரும் - பீர்பாலும் பேசிக் கொண்டு இருந்தனர்.

அப்போது அக்பர் திடீரென ஆகாயத்தை பார்த்தபடி, பீர்பாலிடம் , "ஆகாயத்தில் மாளிகை ஒன்றைக் கட்ட வேண்டும் என்று எண்ணுகிறேன். அதற்கான ஏற்பாடுகளை செய்து தர முடியுமா?" எனக் கேட்டார்.

அரசரின் பேச்சைக் கேட்டதும் பீர்பால் திடுக்கிட்டார். இருந்தாலும், அரசரிடம் எப்படி முடியாது என்று கூறுவது என்று தயங்கபடியே, "முயன்றால் முடியும் மன்னா!" என்றார்.

"எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை பீர்பால். அதற்கான வேலையில் வெகு சீக்கிரம் இறங்கி முடியுங்கள்" என்றார் அரசர்.

ஆகாயத்தில் அழகிய மாளிகை கட்டும் மன்னரின் ஆசை எப்படி சாத்தியமாகும்? அசட்டுத்தனமான இந்த ஆசை நிறைவேற வாய்ப்பில்லை. ஆகையினால், இந்த வேலை முடியாது என்பதை உணர்ந்து கொள்ளும்படி எதாவது செய்ய வேண்டும் என்று மனதிற்குள் எண்ணிக் கொண்டார் பீர்பால்.

"என்ன பீர்பால்... நான் கேட்டதற்கு எந்த பதிலும் கூறாமல் மௌனமாக உள்ளீர்!" என்றார் அரசர்.

"அரசே! ஆகாயத்தில் அழகிய மாளிகை கட்டுவதற்கு முன் பல முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும். அதனை செய்வதற்கு மூன்று மாதம் ஆகிவிடும். அதன் பின்னர் தான் கட்டடம் கட்ட முடியும்" என்றார் பீர்பால்.

"சரி! தாங்கள் கூறியபடியே ஏற்படுகளை செய்யுங்கள். நாளை காலை கஜானாவில் இருந்து, அதற்கான பணம் வரும்" என்றார் அரசர்.

இதையும் படியுங்கள்:
சிறுவர் சிறுகதை: குட்டி முயலின் அம்மா யார்? சிங்க ராஜாவின் தீர்ப்பு!
Akbar and Birbal

அடுத்த நாள் ஒரு வேடனிடம் சென்று சில கிளிகளை வாங்கி வந்து ஒரு கூண்டில் அடைத்து வைத்து  சில வார்த்தைகளைப் பேசக் கற்றுக் கொடுத்தார் பீர்பால். அதன் பின்னர் ஆகாயத்தில் மாளிகை கட்டும் பணிக்கு ஆட்கைளை திரட்டி வர வெளியூர் சென்றிருப்பதாக மன்னருக்கு தகவல் சொல்லி அனுப்பினார்.

மூன்று மாதங்கள் கழித்து அரண்மனைக்கு வந்து அரசரை சந்தித்தார். அழகிய மாளிகை கட்ட ஆட்களை தயார் செய்து விட்டேன். அவர்களை நீங்கள் வந்து பார்வையிட்டதும் வேலையை தொடங்கி விடலாம் என்றார் பீர்பால். உடனே மன்னர், மகிழ்ச்சி அடைந்தார்.

உடனே பீர்பாலுடன் புறப்பட்டுச் சென்றார் மன்னர். கிளிகள் இருந்த அறைக்கு அரசரை அழைத்துச் சென்றார் பீர்பால்.

அந்த அறையில் அரசரும் பீர்பால் மட்டுமே இருந்தனர். அரசரைப் பார்த்ததும், கிளிகள் "சுண்ணாம்பு கொண்டு வா! செங்கலை கொண்டு வா! சாரத்தைக் கட்டு! சுண்ணாம்பை பூசு!" என்று ஒவ்வொன்றும் பேச ஆரம்பித்தன.

அரசருக்கு ஆச்சரியம் அளித்தது. அதே சமயம் கோபமும், எரிச்சலும் பீர்பால் மேல் ஏற்பட்டது.

"பீர்பால் இது என்ன?" என்றார் கடும் கோபத்துடன்.

"மன்னர் பெருமானே! என்னை மன்னிக்க வேண்டும். ஆகாயத்தில் கட்டடம் கட்ட பறவைகளால் தான் முடியும். ஆகையினால் தான் இவை பேசுகின்றன. இவை எல்லாம் நல்ல பயிற்சி பெற்றவை ஆகும். அதனால் ஆகாயத்தில் மாளிகை கட்டும் வேலையை இப்போதே இவர்களிடம் ஒப்படைத்து பணியை ஆரம்பித்து விடலாம்," என்றார்.

பீர்பால் கூறியதைக் கேட்டதும், மன்னருக்கு புரிந்து விட்டது. ஆகாயத்தில் அந்தரத்தில் எப்படி மாளிகை கட்ட முடியும்? இது நடக்க முடியாத விஷயம் என்பதை நாசுக்காக நமக்கு உணர்த்துகிறார் என்பதை புரிந்து கொண்டு விட்டார் மன்னர்.

கட்டடம் கட்டும் தொடர்பான வார்த்தைகளை கிளிகளுக்கு சிரமப்பட்டு பீர்பால் கற்றுக் கொடுத்ததை எண்ணி பீர்பாலை மனதார பாராட்டினார் அக்பர்.

குட்டீஸ்...

செய்ய முடிந்த செயல்களை செய்ய வேண்டும்.

தகுதிக்கு மீறிய செயலை செய்யக் கூடாது. சரிதானே!

logo
Kalki Online
kalkionline.com