

சிங்கபுரியை ஆண்டு வந்த சிம்மகேசரி மன்னர் பிற நாட்டு நிலவரங்களை நன்கு அறிந்து கொள்ள எண்ணினார். மாறுவேடமிட்டுக் கொண்டு ஒரு வெண்குதிரையில் ஏறிக் கொண்டு, ஊர் ஊராகச் சென்றார்.
மன்னர் திருநல்லூர் வந்தடைந்த போது மிகவும் வியப்புற்றார். மிகத் தூய்மையாக இருந்தது கிராமம்.
கிராமத்தை நெருங்கும் போதே அழகான தோரண வாயில் அவரை வரவேற்றது. வீதிகளில் குப்பையோ கூளமோ இல்லை. தெருவிளக்கு மாடங்கள் தூய்மையாக இருந்தன. குளங்களும் குட்டைகளும் எவ்விதக் கசடும் இல்லாமல் தூர் வாரப்பட்டு இருந்தன.
பொது மாடங்கள், மக்கள் கூடும் மண்டபங்கள் மெழுகப்பட்டு, அழகான கோலங்களுடன் இருந்தன. தோட்டங்கள் கூட சித்திரமோ என வியக்கும் வண்ணம் அழகாக இருந்தன. கிராமத்துப் பாதைகளில் குண்டோ குழியோ இல்லை.
வழிப்போக்கர்களுக்கான விடுதியைக் கண்டறிந்து, குதிரையை லாயத்தில் விட்டார் மன்னர். தானும், குளித்து உணவருந்தி, களைப்பாறினார். அவரைப் போலவே மற்ற சில வழிப்போக்கர்களும் அங்கிருந்தனர்.
“இந்த ஊரின் தூய்மை என்னை வியக்க வைக்கிறது. இவ்வளவு தூய்மையாக வைத்திருக்கிறார்களே, ஊருக்கு மன்னரோ அல்லது அரச குடும்பத்தினர் எவரும் வருகை புரிய உள்ளாரோ?” என சிம்ம கேசரி வினவ, மற்றொரு வழிப்போக்கர் பதிலுரைத்தார்.
”திருநல்லூரின் தூய்மை மிகவும் பிரசித்தமாயிற்றே! நீங்கள் இந்தப் பகுதிக்குப் புதியவரோ? இந்த ஊர் எப்போதுமே தூய்மையாகத் தான் இருக்கும். தூய்மை மட்டுமல்ல, பற்பல நற்செயல்களும் இங்கே தினமும் சர்வசாதாரணமாக நடக்கும். எல்லாம் அந்த ஞானத்தோப்பு மகானின் அற்புதம்!” என்றார் அவர்.
”ஞானத்தோப்பு மகான் எங்கிருக்கிறார்? எப்படி இந்த அற்புதத்தைச் செய்கிறார்?”
“ஊரின் நடுவில் ஒரு குளம் இருக்கிறது அல்லவா? அதற்குத் தெற்காக ஒரு கல் தொலைவில் இருக்கிறது ஞானத்தோப்பு. வருவோருக்கு வயிறார உணவிடும் மகான் அங்கே தான் இருக்கிறார்.”
“அவர் வயிராற உணவிட்டால் …? ஊர் சுத்தமாக ஆகிவிடுமா…? புரியவில்லையே…”
“ஞானத்தோப்புக்குச் செல்லுவோர் அங்கே இருக்கும் ஞானக்குளத்தில் ஒரு முழுக்குப் போட வேண்டும். பிறகு, அங்கே உள்ள ஆலமர மேடையில் ஏறி, தான் அன்றைய தினம் ஊருக்காக செய்த நற்செயல் ஒன்றைச் சொல்ல வேண்டும். அந்தப்பணி சிறியதாக இருக்கலாம். அல்லது கடினமானதாக சிறப்பானதாக இருக்கலாம். ஆனால், ஊருக்கான நற்பணியாக இருக்க வேண்டும்.”
“ஆஹா, நல்ல திட்டம் தான்.”
மறுநாள் காலை திருநல்லூர் வீதிகளில் நடந்து சென்று மக்கள் என்ன செய்கிறார்கள் எனப் பார்த்தார் சிம்மகேசரி.
விவசாயிகள், நெசவாளிகள், மண்பாண்டம் செய்வோர், தச்சு வேலை செய்வோர் எனப் பலரும் தங்கள் பணியிணைச் செய்ய, ஒரு சிலர், வீதிகளில் கிடந்த குப்பைகள், இலை தழைகளைப் பெருக்குதல், மாடங்களைத் தூய்மை செய்தல் போன்ற பொதுப்பணிகளை மிகுந்த ஈடுபாட்டுடன் செய்தனர்.
“மதியம் ஒரு வேளை உணவுக்காக… இத்தனை ஈடுபாட்டுடன் பொதுவேலை செய்கின்றனரே” என வியந்த சிம்மகேசரி, தானும் ஞானத் தோப்புக்குச் சென்று பார்த்தால் என்ன என நினைத்தார்.
நடுக்குளத்தின் சில படிகளின் ஓரத்தில் பாசி படர்ந்திருந்தது. அதனைத் தேய்துக் கழுவி விட்டார் சிம்மகேசரி. பிறகு, ஞானத்தோப்புக்குச் சென்று, குளத்தில் மூழ்கினார். ஆலமர மேடையில் ஏறி, “நான் நடுக்குளத்தில் படிகளில் இருந்த பாசியைத் தேய்த்துவிட்டேன்” எனச் சொன்னார். அங்கு அமர்ந்திருந்த ஊர்மக்கள் முறுவலித்து, கைதட்டிப் பாராட்டினர்.
அதன் பின், ஒரு சிறப்பு விருந்தினர் போல சிம்மகேசரியை அழைத்துச் சென்றனர் மகானின் சீடர்கள். அங்கு வந்திருந்த அனைவருக்குமே அப்படி ஒரு மரியாதை தான். கைகளைக் கழுவிக் கொள்ள நீரை எடுத்துத் தருவதாகட்டும், வாருங்கள் என வணக்கத்துடன் அழைப்பதாகட்டும், வெற்றிலை வழங்கும் பணிவாகட்டும்… அப்படி ஒரு மரியாதை!
“ஊருக்கு நன்மை செய்”
“உண்மை பேசு”
என்ற இரு வாசகங்கள் ஞானத்தோப்பின் சுவர்களில் ஆங்காங்கே எழுதப் பட்டிருந்தன.
வயிற்றுக்கு உணவும், அன்பு கலந்த மரியாதையும், அறிவூட்டும் வாசகங்களும் தான் திருநல்லூரின் தூய்மைக்கும் அழகுக்கும் காரணம் என்பது சிம்மகேசரிக்குப் புரிந்தது.
தனது நாட்டிலும் எல்லா ஊர்களிலும் ஒரு ஞானத்தோப்பை நிறுவ வேண்டும் என்ற உறுதியுடன் நாடு திரும்பினான் சிம்மகேசரி.