சிறுவர் சிறுகதை: ஒழுக்கத்தின் மதிப்பு!

ஒழுக்கத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் சுவாரசியமான சிறுவர் சிறுகதை
சிறுவர் சிறுகதை | The Guru and Four Disciples
சிறுவர் சிறுகதை | The Guru and Four DisciplesAI Image
Updated on

குருநாதர் தியானத்தில் இருந்தார். அவரிடம் நான்கு சீடர்கள் இருந்தனர். ஒருவன் அந்த நாட்டு மன்னரின் மகன். அடுத்தவன் அமைச்சரின் மகன். இன்னொருவன் தளபதியாரின் மகன். நான்காவது சீடன் ராஜகுருவின் மகன் ஆவான். குருநாதர் மிகவும் கண்டிப்புக்கு பெயர் பெற்றவர். சிறப்பாக பாடங்களை நடத்தி அவற்றை அவரவர் புத்தியில் ஏற்றி நாடு சிறப்பாக திகழ அணைத்தையும் செய்வார் குருநாதர். தவறு செய்தால் அதற்கேற்ற தண்டனையும் உண்டு.

அன்று தியானத்தில் இருந்த குருநாதரின் தலையில் தொப் என்று விழுந்தது ஒரு மாங்கனி. உடனே கண்களை திறந்தவர் வானை பார்த்தார். சூரியன் சரியாக நடுவானில் இருந்தது.

ஓ... இது உச்சி வேளை என்று நினைக்கும் போதே அவர் முன் நின்றிருந்த அமைச்சர் மகன், "குருதேவா..! நான் கவனித்தேன். உங்கள் தியானத்தை கெடுத்தது நீங்கள் அமர்ந்திருக்கும் மரத்தின் மேல் இருந்த ஒரு பறவை தான். உத்தரவு தாருங்கள். அதை நான் பிடித்து கொன்று விடுகிறேன்" என்றான்.

"சரி.. உனக்கு என்ன வேலை கொடுத்திருந்தேன்" என்று கேட்டார் குருநாதர்.

"வாயில் முழுதும் சுத்தம் செய்து சாணத்தால் மொழுக வேண்டும்" என்றான்.

"அதை நீ செய்த மாதிரி தெரியவிலலையே."

"ஆம் குருநாதா. இன்று மாட்டு சாணம் அவ்வளவாக கிடைக்கவில்லை. அதான் காத்திருக்கிறேன்" என்றதுமே.. மாடு, "அம்மா" என்று உரக்க குரலிட்டது. உடனே சீடனையும் அழைத்துக்கொண்டு மாட்டு தொழுவத்துக்கு வந்தார். அங்கே அவ்வளவு சாணம் இருக்க அமைச்சர் மகன் பொய் சொல்கிறான் என்று அறிந்து தன் சுட்டெறிக்கும் விழிகளால் பார்க்க அவனுக்கு அச்சத்தில் உடல் வியர்த்து விட்டது.

"சரி.. மன்னர் மகன் இந்நேரம் சமைத்து முடித்திருக்க வேண்டுமே. சமையல் முடிந்ததா?" என்றதும் அமைச்சர் மகன் ஓடிப்போய் சமையல் கூடத்தில் இருந்த மன்னர் மகனை அழைத்து வந்தான்.

இதையும் படியுங்கள்:
சிறுவர் சிறுகதை: சுற்றுச்சூழல் ஆர்வலர்!
சிறுவர் சிறுகதை | The Guru and Four Disciples

"என்ன சமையல் முடிந்ததா?"

"குருநாதா மன்னிக்கனும். இன்று அடுப்பு மக்கர் செய்கிறது. விறகுகள் ஈரம். ஆதலால் அவ்வளவு சீக்கிரமாக எரியாததால் என்னால் சமைக்க முடியவில்லை" என்றான்.

"ஓ.. அப்படியா.. சரி என் துணிகளை துவைக்க ஆற்றுக்கு சென்ற தளபதியார் மகன் திரும்பி வந்து விட்டானா?"

உடன் அவன் ஓடிவந்தான்.

"நீ என்ன சொல்லப்போகிறாய்."

"குருநாதா. மன்னிக்கவும். இன்று என்னால் தோய்த்து உளர்த்த முடியவில்லை. காரணம் ஆற்றில் நீர் வெள்ளமாய் பெருக்கெடுத்து ஓடுகிறது. கால் கீழே வைத்ததுமே முதலை ஒன்று வந்து அச்சுறுத்தியது. அதனால் அப்படியே பயந்து ஒடிவந்து விட்டேன்" என்றான்.

"நல்லது. இன்னும் ஒருவன்தான் பாக்கி அவன் என்ன செய்கிறான் என்று நானே பார்க்கிறேன்" என்றதுமே மூன்று சீடர்களுக்கும் உடல் நடுங்க ஆரம்பித்து விட்டது.

காரணம் அவன் குறட்டை விட்டு நன்கு உறங்கிக் கொண்டிருந்தான்.

உள்ளே சென்ற குருநாதர் ஒரு துணியை எடுத்து அவனுக்கு போர்த்தி விட்டு வெளியே வந்தார்.

"ஏன்டா உச்சி வெயில் தாண்டி ஒரு நாழி ஆகிவிட்டது. உங்களுக்கு பசிக்காதா.. ஆளுக்கு ஒரு காரணம் சொன்னால் அதுவும் பொய்யான காரணம் சொன்னால் எப்படி" என்றதும், மன்னர் மகன், "ஆம் குருநாதா.. மிகவும் பசிக்கிறது. ஆனால் அடுப்பு படுத்துகிறது. என்ன செய்வது என்று தெரியவில்லை" என்றதுமே ஒரு மீன் கொத்தி பறவை வந்து ஒரு மீனை கொண்டு வந்து குருநாதர் முன் போட்டது.

"ஓ.. புரிந்து கொண்டேன். அனைவரும் நான் தியானம் முடித்து வருவதற்குள் பிரியாணி செய்து மீன் குழம்பும் வைத்து உண்டு அதில் ஏற்பட்ட மயக்கத்தில் ஒருவன் சுருண்டே படுத்து விட்டான். இவ்வளவு அக்கிரமங்களையும் செய்து விட்டு ஒருவன் மாடு சாணம் போட வில்லை என்கிறான். அடுத்தவன் ஆற்றில் முதலை என்கிறான். இன்னொருவன் அடுப்பு எரியாமல் சதி செய்கிறது என்கிறான். ஒரு சுகவாசி நன்கு உண்டு விட்டு குறட்டை விடுகிறான். ஆக இந்த ஆசிரமத்தின் விதிகள் அனைத்துமே மீறப்பட்டிருக்கிறது. இதற்கான தண்டனை கடுமையாகத்தான் இருக்கும். ஆனால் அதை அனுபவித்துத்தான் ஆக வேண்டும்" என்ற குருநாதர் நான்கு சீடர்களையும் அழைத்துக்கொண்டு ஆற்றுக்கு சென்றார். ஆற்றில் வெள்ளமும் இல்லை. ஆனால் இடுப்பளவே தண்ணீர் இருந்தது.

இதையும் படியுங்கள்:
சிறுவர் சிறுகதை: ஒற்றுமை ஒரு ஆயுதம்!
சிறுவர் சிறுகதை | The Guru and Four Disciples

"அனைவரும் இறங்கி நடு ஆறு வரை செல்லுங்கள்" என்றார் குருநாதர்.

நால்வரும் மிக வருத்தம் மற்றும் கோபத்துடன் ஆற்றில் இறங்கி நடு ஆறுவரை சென்றனர்.

குருநாதர் அவர்களை அங்கேயே நீரில் நிற்க சொன்னார். "மறுநாள் இதே நாழிவரை அனைவரும் நீரில் நின்றாக வேண்டும். யாரும் இந்த தண்டனையில் இருந்து தப்ப முடியாது" என்று கூறிவிட்டு ஆசிரமம் சென்று விட்டார்.

ஒரு நாழி கழிந்ததும் இளவரசன் கால்கள் மரத்து போயின. உடனே தப்புவதற்கு நீரில் இருந்து கரை ஏற நகர்ந்த போது பெரும் வாயை திறந்து கொண்டு ஒரு முதலை அவனை நோக்கி வரவும் அவன், "அய்யோ.." என்று அச்சத்தில் குரலிட்டு தன் இடம் சென்று நின்றான். அடுத்த நாழியில் அமைச்சர் மகன் வேறு ஒரு திசை சென்று கரை ஏற முயன்ற போது இன்னொரு முதலை வாயை பிளந்து அவனை விழுங்குவது போல் வரவும் அவனும் உரக்க குரலிட்டு அழுதபடி தன் இடம் வந்து நின்றான்.

உடனே அவர்களை சுற்றி வட்டமிட்டு அவர்கள் தப்பிக்காதவாறு முதலைகள் நின்றன.

நால்வரும் அழுது கொண்டே கால்கள் மறக்க உடல் நடுங்கியபடியே நின்றிருக்க குதிரை வீரர்கள் வருவது தெரிந்தது.

பக்கத்து நாட்டு மன்னரின் பிறந்த நாள் விழா முடிந்து மன்னர் அமைச்சர் தளபதி இராஜகுரு திரும்பி நாட்டுக்கு வந்து கொண்டிருந்தனர்.

"அய்யோ.. என் மகன் நடு ஆற்றில்" என்றார் அதிர்ச்சியுடன் மன்னர். அதே போல் அமைச்சரும் தளபதியும் ராஜகுருவும் தங்கள் மகன்களையும் நீரில் வெடவெடக்க நிற்பதை பார்த்தனர்.

மன்னா உடன் தன் மகனை அழைக்க அப்பா என்று ஓடியபோது அவனை போக விடாமல் தடுத்தது முதலைகள். என்ன இது. ஒன்றும் புரியவில்லையே என்று மன்னரும் மற்றவர்களும் குழம்பியபோது ராஜகுரு பேசினார்.

"மாமன்னா இது குருநாதர் கொடுத்திருக்கும் தண்டனை என்றுதான் நினைக்கிறேன். காரணம் அவர்களை சுற்றி தப்பிக்காதவாறு முதலை வளையம் வேறு அமைத்துள்ளார்.

சிறுவர் சிறுகதை | The Guru and Four Disciples
சிறுவர் சிறுகதை | The Guru and Four DisciplesAI Image

இது நாம் குருநாதரிடம் சென்றால்தான் விடை கிடைக்கும்" என்றதும் மன்னரும், "ஆம் சரியாக சொன்னீர்கள் என்று கூற, உடனே அமைச்சர் மகன் உரக்க கூவினான். "அப்பா எங்கள் இந்த நிலைக்கு காரணம் குருநாதர் தியானம் செய்யும் மரத்தில் இருக்கும் ஒரு பறவையால்தான் என்றும் அதை பிடித்து அழிக்க வேண்டும்" என்றும் ஆவேசமாக கூறினான்.

"சரிடா தம்பி அதை ஒரு வீரனை விட்டு பிடித்து கொன்று விட செய்கிறேன்" என்று கூறி அனைவரும் குருநாதரை பார்க்க சென்றனர்.

புன்முறுவல் கொண்டு அணைவரையும் வரவேற்றார் குருநாதர்.

"குருநாதா என்ன நடந்தது, ஏன் இந்த கொடும் தண்டனை எங்கள் பிள்ளைகளுக்கு" என்று மன்னர் கேட்டார்.

"மன்னா உங்கள் மகன்கள் என்று நினைத்து கேட்டால் என்னால் பதில் சொல்ல முடியாது. உங்களுக்கு சாமர்த்தியம் இருந்தால் அவர்களை உங்களுடன் அழைத்து சென்று விடுங்கள். ஆனால் என் சீடர்கள் என்று நினைத்து கேட்டால் நான் பதில் சொல்வேன்" என்றார் குருநாதர்.

"மன்னிக்கனும் குருநாதரே. அவர்கள் உங்கள் சீடர்கள்தான்" என்று இருகரம் கூப்பி வணங்கினார் ராஜகுரு.

"இந்த ஆசிரமம் நல்லொழுக்கத்துக்கு பெயர் பெற்றது. ஒழுக்க கேடான வாழ்வியல் முறை இந்த நாட்டையும் அழிக்கும். மக்களையும் வாட்டும். காரணம் படிக்கும் சீடர்கள் அனைவரும் நாளை அரசை ஆளும் மற்றும் வழி நடத்த இருக்கும் பெரும் பொறுப்பு வாய்ந்த சீடர்கள். அவர்கள் தகாத செயல் செய்வது என்பது வேலியே பயிரை மேய்ந்ததற்கு நிகரானது. பெற்ற தாயையும் தந்தையையும் காக்க வேண்டிய மகன் அவர்களை வாள் கொண்டு வெட்டினால் சும்மா இருக்க முடியுமா. அதற்கு யாராச்சும் வக்காலத்து வாங்குவார்களா.

இதையும் படியுங்கள்:
சிறுகதை: ஆட்டோ டிரைவர்!
சிறுவர் சிறுகதை | The Guru and Four Disciples

அதைப்போல்தான் இன்று சீடர்கள் செய்த செயல். அதற்கு இந்த ஆசிரமத்தில் ஒரு நாளும் இடம் கிடையாது.

என் கட்டுப்பாட்டில் இருந்தால் படிக்கட்டும். இல்லையேல் தாங்கள் அவர்களை தாராளமாக அழைத்து செல்லலாம்" என்று கூறி அன்று ஆசிரமத்தில் பிரியாணி செய்து மீன் குழம்பு உண்டது வரை அனைத்தையும் கூறி, "ஒரு பொய்யை மறைக்க அவரவர் ஆளுக்கொரு பொய்யை கூறியதாலும் தங்கள் கடமைகளை செய்ய தவறியதாலும் இந்த கடும் தண்டனை கொடுக்க நேர்ந்தது" என்றார் குருநாதர்.

மன்னர் உட்பட அனைவரும் வெட்கி தலை குனிந்தனர்.

"குருநாதா.. ஒரு வேண்டுகோள்" என்றார் அமைச்சர்.

"என்ன வேணும்"

"ஒரு மாங்கனியை மரத்தில் இருந்து உங்கள் தலையில் போட்டு உங்கள் தியானத்தை கலைத்த அந்த பறவையை பிடித்து அழிக்க வேண்டும். அதற்கு என் வீரன் ஒருவன் மரம் ஏற அனுமதி வேண்டுகிறேன்" என்றார்.

"முடியாது. அதுதான் இந்த ஆசிரமத்தின் காலம் காட்டி. அது சிறிய பறவை ஆனாலும் அதன் காலம் தவறாமல் கடமை செய்வது அதன் மகத்துவத்தை உணர்த்தும். நான் தியானம் செய்யும் போது சரியாக சூரியன் நடு வானில் வரும் போது ஒரு மாங்கனியை கடித்து என் தலையில் போடும் போது நான் விழிப்பேன்.

அந்ந நேரமே நடுப்பகல். என் சீடர்களுக்கு கொடுத்த வேலைகளை சரியாக செய்திருக்கிறார்களா என்று பார்ப்பேன். பிறகுதான் அவர்கள் கல்வி ஆரம்பம்."

"அது என்ன பறவை."

இதையும் படியுங்கள்:
சிறுவர் சிறுகதை: உண்மை + நேர்மை!
சிறுவர் சிறுகதை | The Guru and Four Disciples

"ஒரு வேடனால் அடித்து ஒரு கால் ஒடிந்த பச்சை கிளி. அதை எடுத்து நான்தான் காப்பாற்றி மரத்தில் ஒரு கூடு பின்னி அதில் வைத்தேன். அதற்கு இருக்கும் சிற்றறிவு கூட என் சீடர்களுக்கு இல்லியே என்று என் மனம் அழுகிறது. கேடு கெட்ட மனிதர்கள் முன் இந்த பறவை உயர்ந்து நிற்கிறது. அதனால் வீரன் ஏறுவதற்கு அனுமதியில்லை" என்று குருநாதர் கூறவும் மீண்டும் அவமானத்தால் தலை குனிந்தனர் மன்னரும் மற்றவர்களும்.

பின் அவர்கள் குருநாதரிடம் விடை பெற்று திரும்பியதோடு அல்லாமல் நால்வரும் தங்கள் பணியில் இனியாவது சிறந்து செயல்பட அங்கேயே சத்தியம் செய்து தங்கள் குதிரையில் ஏறினர்.

நீதி: ஒரு நல்லொழுக்கமுள்ளவனின் மதிப்புக்கு பல்லாயிரம் இரத்தின கற்கள் கொண்டு செய்யப்பட்ட சிம்மாசனமும் ஈடாகாது. நல்லொழக்கத்துடன் வாழுங்கள் சிறார்களே.

logo
Kalki Online
kalkionline.com