தெனாலிராமன் கதை: படிக்காத புத்தகம்..! 

வெறும் வாதத்திறமை மட்டுமல்ல, சமயோஜித புத்தியே சிறந்த ஆயுதம் என நிரூபித்த, நகைச்சுவை கலந்த கதை!
தெனாலிராமன் கதை: Tenaliraman, Vidyasagar, and the Royal Court
தெனாலிராமன் கதை: Tenaliraman, Vidyasagar, and the Royal CourtImage credit: AI Image
Updated on

வடநாட்டில் மிகவும் புகழ் பெற்ற பண்டிதராக திகழ்பவர் வித்தியாசாகர். அவர் பயிலாத நூல்களே இல்லை; அவர் பார்க்காத விவாத மேடைகளே இல்லை; அவரை பேச்சில், வாக்குவாதத்தில் வெல்வது என்பது இயலாத காரியம் என்ற பெயரை பெற்றிருந்தார். 

அவர் விஜயநகர பேரரசுக்கு சொற்பொழிவாற்றவும், சிறந்த அறிஞர்களோடு வாதிடவும் வந்தார். மன்னரை சந்தித்து அவரிடம் தன் வாதத் திறமைகளை வெளிப்படுத்தினார்.

மன்னர் வித்யாசாகரின் திறமையை மெச்சி பாராட்டி சில பரிசுகளை வழங்கினார்.

அன்று மாலை அரசவை விழா மண்டபத்தில் வித்தியாசகரின் சொற்பொழிவு நிகழ்ந்தது.

அவர் பேச்சின் மூலம் இராமாயணம், மகாபாரதம், காளிதாசரின் காவியங்கள் என புராண இதிகாசங்கள், வேதங்களின் சிறப்புகள் மடைதிறந்த வெள்ளமாய் கேட்டவர்களின் காதுகளில் பாய்ந்தன.

அற்புதமான சொற்பொழிவு என்று அறிஞர்கள் கைதட்டி மகிழ்ந்தனர். பேச்சின் முடிவில், "நாளை நடைபெறும் வாதத்தில் என்னை வெல்பவர்களுக்கு இருபதாயிரம் பொற்காசுகள் பரிசாக வழங்குவேன்; என்னிடம் தோற்பவர்கள் என் வாழ்நாள் முழுக்க அடிமைகளாக பணிபுரிய வேண்டும்" என்று அறிவித்தார் வித்யாசாகர்.

விழாமுடிய அரசர் முதல் அனைவரும் கலைந்தனர்.

கிருஷ்ணதேவராயர் தன் அரசவை மந்திரிகள், புலவர்கள், ராஜகுரு, தெனாலிராமன் என்ற எல்லோரையும் அழைத்து அவை கூட்டம் நடத்தினார்.

"நாளை நடைபெற போகும் வாதத்தில் நமது பண்டிதர்கள் வித்யாசாகரை தோற்கடித்து நாட்டின் பெருமையை காப்பாற்ற வேண்டும்" என்றார்.

அரசவை பண்டிதர்களான பெத்தண்ணா, திம்மண்ணா, சூரண்ணா முதலான  ஏழு பெரும் பண்டிதர்களும் அமைதியாக இருந்தனர். 

இதையும் படியுங்கள்:
சிறுவர் சிறுகதை: பழிவாங்கும் மந்திர வாள்!
தெனாலிராமன் கதை: Tenaliraman, Vidyasagar, and the Royal Court

"என்ன பெத்தண்ணா, திம்மண்ணா, சூரண்ணா உங்களால் அந்த வித்யாசாகரரை வாதில் வெல்ல முடியாதா? உங்கள் அறிவும் திறமையும் கவிப்புலமையும் அவருடையதை விட குறைவானதா? ஏன் மௌனமாக இருக்கிறீர்கள்? உங்கள் அறிவின் மேல் உங்களுக்கு நம்பிக்கை இல்லையா? வேதனையாக இருக்கிறது. பண்டிதர்களே உங்களால் அவரை வெல்ல முடியும். இரவு முழுக்க நன்கு யோசித்து விட்டு நாளை வாருங்கள்..!" என்றவாரே மன்னர் எழுந்து சென்றார்.

பெரும்புலவர்கள் தெனாலிராமனை சூழ்ந்து கொண்டு, "இராமா..! நீ தான் இந்த நாட்டின் மானத்தை காக்க வேண்டும். எங்களுக்கு வித்யாசாகரரை வெற்றி கொள்ளும் அளவுக்கு புலமை இல்லை" என்றனர்.

"சரியாகட்டும் பார்ப்போம்..! எனக்கு தூக்கம் வருகிறது" என கொட்டாவி விட்டவரே அவர்களிடம் இருந்து விடைபெற்று கொண்டு தன் இல்லம் வந்தார் தெனாலிராமன்.

மறுநாள் மாலை விழா மண்டபம் கூட்டம் கூடியது. கிருஷ்ணதேவராயர் தனது இருக்கையில் அமர்ந்தார். அவருக்குள் சிறு கலக்கம் இருந்தது ஏழு பெரும் புலவர்களில் மூவரை காணவில்லை. வித்யாசாகரை எதிர்த்து வாதில் வெல்ல இயலாது என்ற பயத்தில் வீட்டிலேயே அடைந்து கிடக்கின்றனரோ அவருக்குள் வெறுப்பு குமிழிட்டது. 

தெனாலிராமன் சிறு துணியால் சுற்றப்பட்ட ஒன்றை வலது கையில் எடுத்துக்கொண்டு மேடைக்குச் சென்று வித்யாசாகரரை இரு கைகூப்பி வணங்கிவிட்டு அமர்ந்தான். 

வித்யாசாகர் காளிதாசரின் சாகுந்தலத்திலிருந்து சில பகுதிகளை மிக அற்புதமாக சொல்லி முடித்தார். அமர்ந்துள்ள கூட்டம், "ஆகா.. ஆகா.. அருமை.. அருமை.." என்று தலை யாட்டியது.

தெனாலிராமன் எழுந்தான் தொண்டையை செருமிக்கொண்டு, "அகிலம் புகழும் அறிவு சிறந்த சொற்பொழிவு சிங்கமே.! வாதத்தால் முன்னிருப்பவரை எல்லாம் புறமுதுகிட்டு ஓடச் செய்யும் பேரறிஞரே..! வணக்கம் தாங்கள் கற்காத நூல்கள் இவ்வுலகிலேயே இல்லை என்று நினைக்கிறேன்."

"உண்மை.. உண்மை.."  என்று தலை அசைத்தார் வித்யாசாகர்.

"ஆனால், நான் சொல்லும் ஒரு நூலை தாங்கள் படித்திருந்தால் நான் உங்களின் அடிமையாக இருப்பேன்" என்றான் தெனாலிராமன்.

"என்ன நூல் சொல்லும்" வித்தியாசாகர் செருக்குடன் கேட்டார்.

இதையும் படியுங்கள்:
சிறுவர் சிறுகதை: மாயக் குளமும்... வாடாத மலரும்!
தெனாலிராமன் கதை: Tenaliraman, Vidyasagar, and the Royal Court

"திடகாஷ்ட மகிஷபந்தனம் என்ற நூலை அறிவீரோ" தெனாலிராமன் கேட்டான். 

"என்ன நூல் மறுபடியும் சொல்லுங்கள்" வித்யாசகர் புரியாமல் கேட்டார்.

"தில காஷ்மீர் மகிஷ பந்தனம்" தெனாலிராமன் சொன்னான் மறுபடியும். 

"இப்படிப்பட்ட ஒரு நூலை நான் அறிந்ததே இல்லை" என்ற வித்யாசாகர் குழம்பினார்.

"பேரறிஞரே உங்களுக்கு நாளை மாலை வரை நேரம் கொடுக்கிறேன்; இந்த நூலைப் பற்றி அறிந்துகொண்டு என்னிடம் பேசுங்கள்; மற்றதை நாளை பார்ப்போம்" என்று சொல்லிவிட்டு எழுந்தான் தெனாலிராமன்.

தில காஷ்ட  மகிஷ பந்தனம் இப்படி ஒரு நூலா இதைப்பற்றி அறியாத நான் என்ன பெரிய அறிஞன். இந்த நூலை யார் எழுதியது; எப்போது எழுதப்பட்டது; ;என்ன மொழியில் இந்த நூலை எழுதியிருப்பார்கள்; வித்தியாசமாக இருக்கு ஒன்றும் புரியவில்லை.

இந்த நூலைப் பற்றி அறியாதது எவ்வளவு பெரிய முட்டாள்தனம். இப்படிப்பட்ட அரிய நூலை படித்தவர்களிடம் என்னால் எப்படி வாதத்தால் வெல்ல முடியும் என்று நினைத்தவாரே தனக்காக ஒதுக்கப்பட்ட இல்லத்திற்குள் நுழைந்தார் வித்யாசாகர்.

இரவு உணவு உண்ணும் விருப்பமே இல்லை. படுத்தாலும் அவருக்கு உறக்கமும் வரவில்லை. இமைகளை மூடினாலும் அவருக்கு அந்த நூலைப் பற்றிய சிந்தனையே மறுபடியும் கிளர்ந்தெழுந்து. நெஞ்சை குடைந்தது திடகாஷ்ட மகிஷபந்தனம் இந்த நூலை எவரிடமும் பெறுவது; எங்கு கிடைக்கும்; இந்த நூலில் எதைப்பற்றி இருக்கும்; அவருக்கு மூளை குழம்பியது.

உலகப் புகழ் பெற்ற அறிவு திறமை புத்திசாலித்தனம், மேதைமை, வாதத்திறன் எல்லாமே நாளை ஒன்றுமில்லாமல் போய்விடும் போலிருக்கிறது. கடவுளே நாளை இந்த நூலை பற்றி சொல்லவில்லை என்றால் தோல்வியடைய வேண்டி இருக்குமே. பத்து பேர் முன்னிலையில் அவமானப்படுவதை விட இரவோடு இரவாக யார் கண்ணிலும் படாமல் ஓடிப் போய் விடுவதே நல்லது என்று நினைத்த படி கிளம்பத் தயாரானார் வித்யாசாகர்.

மறுநாள் காலையில் கிருஷ்ணதேவராயர் காண தெனாலிராமன் சென்றான். மன்னர் ஏதோ யோசித்தவாரே இருப்பதை கண்டான்.

"மன்னா..! என்ன யோசனையில் இருக்கிறீர்கள்" என மெல்ல கேட்டான் தெனாலிராமன்.

தெனாலிராமன் கதை: Tenaliraman and king Krishnadevarayar
தெனாலிராமன் கதை: Tenaliraman and king KrishnadevarayarImage credit: AI Image

"வித்யாசாகரனை பற்றி தான் யோசித்துக்கொண்டிருக்கிறேன்" என்றார் அவர். 

"மன்னா..! அந்த தலைவலி ஓடியே போய்விட்டது."

"என்ன சொல்கிறாய் தெனாலி.." 

"மன்னா என் கேள்விக்கு பதில் தெரியாமல் அந்த அறிவு மேதை இரவோடு இரவாக ஓடிவிட்டார்" என்றான் தெனாலிராமன் சிரித்துக் கொண்டே.. 

"தெனாலிராமன்.. தில காஷ்ட மகிஷ பந்தனம்ன்னு ஒரு நூலை பற்றி சொன்னாயே அப்படி ஒரு நூலை பற்றி நான் கேள்விப்பட்டதே இல்லையே" என மன்னர் கேட்டார்.

"மன்னா அப்படி ஒரு நூல் இல்லவே இல்லை."

"என்ன சொல்கிறாய் நீ.. அப்படி ஒரு நூல் இல்லையா.. நூலை பற்றி சொல்லி அவரை துரத்தி  விட்டாயே நீ எமகாதகன்" என்று சொல்லிவிட்டு மன்னர் சிரித்தார்.

"நான் சொன்ன வார்த்தை ஒரு சில பொருட்களின் பெயர்கள்"

இதையும் படியுங்கள்:
சிறுவர் சிறுகதை: அணில் கடித்த மாம்பழம்..!
தெனாலிராமன் கதை: Tenaliraman, Vidyasagar, and the Royal Court

"என்னது பொருட்களின் பெயர்களா ஆச்சரியமாக இருக்கிறதே" 

"மன்னர் மன்னா.. எள்ளுக்கு இன்னொரு பெயர் திலம் என்பார்கள். காஷ்டம் என்றால் விறகு என்று சொல்லலாம்.  மகிஷபந்தனம் என்றால் எருமை கட்டும் கயிறு என்று பொருள். இந்த அர்த்தம் புரியாமல் அந்த வாத மேதை வித்யாசாகர் தடுமாறி குழம்பி ஒரே ஓட்டம் எடுத்திருக்கிறார்" என்றான்  தெனாலிராமன் சிரித்தபடியே. 

மன்னரும் அவன் சிரிப்பில் கலந்து கொண்டார். 

"உன் புத்திசாலித்தனத்தை எப்படி பாராட்டுவது என்றே தெரியவில்லை" என்று மனம் மகிழ்ந்தார் மன்னர்.

logo
Kalki Online
kalkionline.com