

தமிழ் இலக்கணத்தில் பெயர்ச்சொற்கள் என்றால் என்ன? அதன் ஆறு வகைகள், இடுகுறிப்பெயர் மற்றும் காரணப்பெயர் பற்றிய எளிய விளக்கங்களை குழந்தைகளுக்கு எளிதாகப் புரியும் வகையில் இந்தக் கட்டுரை வழங்குகிறது.
மல்லிகா அம்மா விரைவாக வகுப்பறைக்குள் நுழைந்தார். அனைத்து மாணவர்களும் “வணக்கம் அம்மா!” என்று கூறினார்கள்.
“வணக்கம் மாணவர்களே.. இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக அமையட்டும்!”
“நன்றி அம்மா”
“எல்லோரும் காலையில் சாப்பிட்டீர்களா?”
“சாப்பிட்டோம் அம்மா!”
“எல்லோரும் காலை உணவைத் தவிர்க்காமல் சாப்பிடுங்கள். சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும். அதுபோல உடல் ஆரோக்கியமாக இருந்தால் தான் நன்றாக நாம் படிக்க முடியும்”
“எல்லோரும் கண்டிப்பாக சாப்பிடுவோம் அம்மா.. தவிர்க்கவே மாட்டோம்..”
“சொல் என்றால் என்ன என்பதை பற்றி யாராவது சொல்ல முடியுமா?”
“ஓர் எழுத்து தனித்து நின்றோ பல எழுத்துகள் சேர்ந்து நின்றோ பொருள் தருவது சொல் எனப்படும் என்று நாம் போன இலக்கண வகுப்பில் படித்திருக்கிறோம் அம்மா”
“அருமையான பதில் போதும் பொண்ணு! எல்லோரும் அவளுக்கு கைகளை தட்டுங்கள்!”
“ஒரு பெயரைக் குறித்து வந்தால் அதனை நாம் பெயர்ச்சொல் என்கிறோம். இன்று நாம் பார்க்க இருக்கின்ற பாடமோ பெயர்ச்சொல்தான்.. வாருங்கள் மாணவர்களே! பாடத்திற்குள் செல்வோம்”
“சரிங்க அம்மா”“மரம், பள்ளிக்கூடம், சித்திரை, கிளை, இனிப்பு, பாடுதல் ஆகிய சொற்களைக் கவனியுங்கள். இவை அனைத்தும் பெயரைக் குறிக்கின்றன. இவ்வாறு ஒன்றன் பெயரைக் குறிக்கும் சொல் பெயர்ச்சொல் எனப்படும். பெயர்ச்சொல் ஆறு வகைப்படும். அவை:
பொருட்பெயர்
இடப்பெயர்
காலப்பெயர்
சினைப்பெயர்
பண்புப்பெயர்
தொழிற்பெயர்
1. பொருட்பெயர்:
பொருளைக் குறிக்கும் பெயர் பொருட்பெயர் எனப்படும். இஃது உயிருள்ள பொருள்களையும் உயிரற்ற பொருள்களையும் குறிக்கும்.
(எ.கா.) மரம், செடி, மயில், பறவை, புத்தகம், நாற்காலி.
2. இடப்பெயர்:
ஓர் இடத்தின் பெயரைக் குறிக்கும் பெயர் இடப்பெயர் எனப்படும்.
(எ.கா.) சென்னை, பள்ளி, பூங்கா, தெரு.
3. காலப்பெயர்:
காலத்தைக் குறிக்கும் பெயர் காலப்பெயர் எனப்படும்.
(எ.கா.) நிமிடம், நாள், வாரம், சித்திரை, ஆண்டு.
4. சினைப்பெயர்:
பொருளின் உறுப்பைக் குறிக்கும் பெயர் சினைப்பெயர் எனப்படும்.
(எ.கா.) கண், கை, இலை, கிளை.
5. பண்புப்பெயர்:
பொருளின் பண்பைக் குறிக்கும் பெயர் பண்புப்பெயர் எனப்படும்.
(எ.கா.) வட்டம், சதுரம், செம்மை, நன்மை.
6. தொழிற்பெயர்:
தொழிலைக் குறிக்கும் பெயர் தொழிற்பெயர் எனப்படும்.
(எ.கா.) படித்தல், ஆடுதல், நடித்தல்.
“அறுவகைப் பெயர்ச்சொற்களுக்கான சான்றுகளை தொடரில் அமைத்து எழுதுவோமா?”
“எழுதுவோம் அம்மா”
காவியா புத்தகம் படித்தாள் - பொருட்பெயர்
காவியா பள்ளிக்குச் சென்றாள் - இடப்பெயர்
காவியா மாலையில் விளையாடினாள் - காலப்பெயர்
காவியா தலை அசைத்தாள் - சினைப்பெயர்
காவியா இனிமையாகப் பேசுவாள் - பண்புப்பெயர்
காவியாவுக்கு நடனம் ஆடுதல் பிடிக்கும் - தொழிற்பெயர்
இடுகுறிப்பெயர், காரணப்பெயர்:
நம் முன்னோர் பெயர்ச்சொற்களை அவை வழங்கும் அடிப்படையில் இடுகுறிப்பெயர், காரணப்பெயர் என இருவகைப்படுத்தினர்.
1. இடுகுறிப்பெயர்:
நம் முன்னோர் சில பொருள்களுக்குக் காரணம் கருதாமல் பெயரிட்டு வழங்கினர். அவ்வாறு இட்டு வழங்கிய பெயர்கள் இடுகுறிப்பெயர்கள் ஆகும்.
(எ.கா.) மண், மரம், காற்று.
இடுகுறிப் பொதுப்பெயர், இடுகுறிச் சிறப்புப்பெயர் என இடுகுறிப்பெயர் இரண்டு வகைப்படும்.
இடுகுறிப் பொதுப்பெயர்:
ஓர் இடுகுறிப்பெயர் அத்தன்மை உடைய எல்லாப் பொருள்களையும் பொதுவாகக் குறிப்பது இடுகுறிப் பொதுப்பெயர் எனப்படும்.
(எ.கா.) மரம், காடு.
இடுகுறிச் சிறப்புப்பெயர்:
ஓர் இடுகுறிப்பெயர் குறிப்பாக ஒரு பொருளை மட்டும் குறிப்பது இடுகுறிச் சிறப்புப்பெயர் எனப்படும்.
(எ.கா.) மா, கருவேலங்காடு.
2. காரணப்பெயர்:
நம் முன்னோர் சில பொருள்களுக்குக் காரணம் கருதிப் பெயரிட்டனர். இவ்வாறு காரணத்தோடு ஒரு பொருளுக்கு வழங்கும் பெயர் காரணப்பெயர் எனப்படும்.
(எ.கா.) நாற்காலி, கரும்பலகை.
காரணப் பொதுப்பெயர், காரணச் சிறப்புப்பெயர் எனக் காரணப் பெயர் இரு வகைப்படும்.
காரணப் பொதுப்பெயர்:
காரணப்பெயர் குறிப்பிட்ட காரணமுடைய எல்லாப் பொருள்களையும் பொதுவாகக் குறித்தால் அது, காரணப்பொதுப்பெயர் எனப்படும்.
(எ.கா.) பறவை, அணி.
காரணச் சிறப்புப்பெயர்:
குறிப்பிட்ட காரணமுடைய எல்லாப் பொருள்களுள் ஒன்றை மட்டும் சிறப்பாகக் குறிப்பது காரணச்சிறப்புப்பெயர் ஆகும்.
(எ.கா.) வளையல், மரங்கொத்தி.
நாம் இன்று பார்த்த பாடம் உங்களுக்கு எல்லோருக்கும் புரிந்து இருக்கும் என்று நான் நினைக்கிறேன். இவ்வாறு வாழ்க்கையில் நாம் பயன்படுத்துகின்ற பல்வேறு வகையான பெயர்ச்சொற்கள் இலக்கணத்தில் உள்ளவை தான். அவற்றை நாம் முறையாகக் கற்றால் தான் தமிழைப் பிழையின்றி பேசவும் எழுதவும் முடியும். அடுத்த ஓர் இலக்கண வகுப்பில் சந்திப்போம் மாணவர்களே!”
“நன்றி அம்மா!”
தமிழ் இலக்கணத்தின் அடிப்படை விதிகளை மிக எளிமையாகவும் தெளிவாகவும் புரிந்துகொள்வதன் மூலம், எந்தவொரு பிழையும் இன்றி அழகாகவும் சரியாகவும் எழுதவும் பேசவும் முடியும்.