செல்லங்களா... கொஞ்சும் தமிழ் கற்போமா? பாடம்14!

அன்றாடப் பேச்சுவழக்கில் மறைந்துள்ள வினைமுற்றுகளைக் கண்டறிந்து, உங்கள் தமிழ் மொழித் திறனை அடுத்த நிலைக்குக் கொண்டு செல்லுங்கள்.
வினைமுற்று
வினைமுற்றுAI Image
Updated on

தமிழ் இலக்கணப் பாடமாக அமைந்த இந்தக் கதையில், ஆசிரியையான தவமணி அம்மா மாணவர்களின் வீட்டு வேலை, உதவி போன்ற செயல்களை வைத்து வினைச்சொல், வினைமுற்று ஆகியவற்றை அறிமுகப்படுத்துகிறார். தெரிநிலை, குறிப்பு, ஏவல், வியங்கோள் வினைமுற்றுகளின் பண்புகள், காலம், இடம், பால், திணை போன்ற இலக்கண அம்சங்களை விளக்கி, மாணவர்களின் பதில்களை பாராட்டுகிறார். தமிழ் இலக்கணம் வாழ்வுடன் இணைந்தது என்பதை வலியுறுத்துகிறார்.

தவமணி அம்மா தமிழ் பாட வேளையில் வகுப்பறையில் நுழைந்தார். அனைத்து மாணவர்களும் மகிழ்ச்சியுடன் எழுந்து நின்று “வணக்கம் அம்மா!” என்று கூறினார்கள்.

“வணக்கம் அன்பு குழந்தைகளே எல்லோரும் சாப்பிட்டீர்களா?”

“சாப்பிட்டோம் அம்மா!”

“இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக அமைய என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்”

“செல்வம் எழுந்து நில் வீட்டு பாடங்களை செய்தாயா?”

“செய்தேன் அம்மா!”

“போதும் பொண்ணு நீ வீட்டில் என்ன வேலைகள் செய்தாய்?”

“வீட்டை பெருக்கினேன், அம்மாவுக்கு சமையலுக்கு உதவி செய்தேன்”

“அருமை மாணவர்களே அமருங்கள்!”

“நீங்கள் செய்த செயல்கள் எல்லாம் வினையைக் குறிக்கின்றன. இவ்வாறு வினையை குறிக்கும் சொல் வினைச்சொல் என்று நாம் கூறுகின்றோம்”

படித்தான், ஆடுகின்றாள், பறந்தது, செய்தேன், பெருக்கினேன், வந்தது, நின்றான், ஓடினான் ஆகியவை செயலை அடிப்படையாகக் கொண்ட சொற்கள் ஆகும். செயலை வினை என்றும் குறிப்பர். இவ்வாறு ஒன்றன் செயலைக் குறிக்கும் சொல் வினைச்சொல் எனப்படும்.

வினைமுற்று:

மலர்விழி எழுதினாள். 

கண்ணன் பாடுகிறான். 

அப்பா வந்தார். 

பள்ளிக்குச் சென்றான். 

மாடு மேயும்.

இதையும் படியுங்கள்:
செல்லங்களா... கொஞ்சும் தமிழ் கற்போமா? பாடம்13!
வினைமுற்று

இத்தொடர்களில் எழுதினாள், பாடுகிறான், மேயும், எழுதினாள், சென்றான், வந்தார் ஆகிய சொற்களைக் கவனியுங்கள். இச்சொற்களில் பொருள் முழுமை பெற்று விளங்குகிறது. இவ்வாறு பொருள் முற்றுப் பெற்ற வினைச்சொற்களை முற்றுவினை அல்லது வினைமுற்று என்பர். வினைமுற்று ஐந்து பால், மூன்று காலம், மூன்று இடம் ஆகிய அனைத்திலும் வரும்.

வினைமுற்று தெரிநிலை வினைமுற்று, குறிப்பு வினைமுற்று என இருவகைப்படும்.

1, தெரிநிலை வினைமுற்று:

ஒரு செயல் நடைபெறுவதற்குச் செய்பவர், கருவி, நிலம், செயல், காலம், செய்பொருள் ஆகிய ஆறும் முதன்மையானவை ஆகும். இவை ஆறும் வெளிப்படுமாறு அமைவது தெரிநிலை வினைமுற்று எனப்படும்.

(உ.ம்) மாணவி கட்டுரை எழுதினாள்.

செய்பவர் - மாணவி

கருவி - தாளும் எழுதுகோலும்

நிலம் - பள்ளி

காலம் - இறந்தகாலம்

செய்பொருள் - கட்டுரை

செயல் - எழுதுதல்

இதையும் படியுங்கள்:
செல்லங்களா... கொஞ்சும் தமிழ் கற்போமா? பாடம் 12!
வினைமுற்று

2. குறிப்பு வினைமுற்று:

பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் ஆகியவற்றில் ஒன்றனை அடிப்படையாகக் கொண்டு காலத்தை வெளிப்படையாகக் காட்டாது செய்பவரை மட்டும் வெளிப்படையாகக் காட்டும் வினைமுற்று, குறிப்பு வினைமுற்று எனப்படும்.

பொருள் - பொன்னன்

இடம் - தென்னாட்டார்

காலம் - ஆதிரையான்

சினை - கண்ணன்

பண்பு (குணம்) - கரியன்

தொழில் - எழுத்தன்

தெரிநிலை, குறிப்பு வினைமுற்றுகள் அன்றி ஏவல் வினைமுற்று, வியங்கோள் வினைமுற்று எனப் பிறவகை வினைமுற்றுகளும் தமிழில் உண்டு.

ஏவல் வினைமுற்று:

பாடம் படி. கடைக்குப் போ, அதை எடு, இதைக் கொடு.

இத்தொடர்கள் ஒரு செயலைச் செய்யுமாறு கட்டளையிடுகின்றன. இவ்வாறு தன்முன் உள்ள ஒருவரை ஒரு செயலைச் செய்யுமாறு ஏவும் வினைமுற்று, ஏவல் வினைமுற்று எனப்படும். ஏவல் வினைமுற்று ஒருமை, பன்மை ஆகிய இருவகைகளில் வரும்.

(உ.ம்) எழுது - ஒருமை

எழுதுமின் - பன்மை

பன்மை ஏவல் வினைமுற்று எழுதுங்கள் என வருவது இக்கால வழக்கு.

வினைமுற்று
வினைமுற்றுAI Image

வியங்கோள் வினைமுற்று:

வாழ்த்துதல், வைதல், விதித்தல், வேண்டல் ஆகிய பொருள்களில் வரும் வினைமுற்று வியங்கோள் வினைமுற்று எனப்படும். இவ்வினைமுற்று இரு திணைகளையும் (உயர்திணை, அஃறிணை) ஐந்து பால்களையும் (ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன் பால், பலவின் பால்) மூன்று இடங்களையும் (தன்மை, முன்னிலை, படர்க்கை) காட்டும். இதன் விகுதிகள் க, இய, இயர், அல் என வரும்.

(உ.ம்) வாழ்க, ஒழிக, வாழியர், வாரல்

“செல்வி நான் உன்னிடம் ஒரு கேள்வி கேட்கிறேன்?”

“கேளுங்கள் அம்மா!”

“ஏவல் வினைமுற்று எவ்வாறு நாம் கண்டறிய முடியும்?”

“முன்னிலையில் மட்டுமே வரும். ஒருமை பன்மை வேறுபாடு இதற்கு உண்டு. கட்டளை பொருளை மட்டும் உணர்த்தி நிற்கும். விகுதி பெற்றும் பெறாமலும் வரும்”

“எல்லோரும் செல்விக்கு பலத்த கைதட்டுகளைக் கொடுங்கள்!”

“ரமேஷ்! வியங்கோள் வினைமுற்று நாம் எவ்வாறு கண்டுபிடிக்க முடியும்?”

“இருதிணை, ஐம்பால், மூவிடங்களுக்கும் பொதுவாய் வரும். ஒருமை, பன்மை வேறுபாடு இதில் இல்லை. வாழ்த்துதல், வைதல், விதித்தல் வேண்டல் ஆகிய பொருட்களை உணர்த்தி நிற்கும். விகுதி பெற்றே வரும். அம்மா!”

“ரமேஷுக்கும் பலத்த கைதட்டுகளை கொடுங்கள் மாணவர்களே!”

இதையும் படியுங்கள்:
செல்லங்களா... கொஞ்சும் தமிழ் கற்போமா? பாடம் 11!
வினைமுற்று

“இந்த வினைமுற்று பாடம் உங்களுக்கு நன்றாக புரிந்தது என்று நான் நம்புகிறேன். வாழ்க்கையில் நாம் பேசிக் கொண்டிருக்கின்ற ஒவ்வொரு வார்த்தையிலும் இலக்கணங்கள் ஒளிந்து இருக்கின்றன. அவற்றினை நாம் புரிந்து கொண்டால் நமக்கு தமிழ் இலக்கணம் என்றும் துணை நிற்கும். அடுத்த வகுப்பில் மற்றொரு இலக்கண பாடத்தோடு நாம் சந்திப்போம்…..”

“நன்றி அம்மா!”

இந்தத் தொகுப்பை வாசிப்பதன் மூலம், நீங்கள் பேசும் மற்றும் எழுதும் வாக்கியங்களில் இலக்கணப் பிழைகளைத் தவிர்த்து, உங்கள் தமிழ் மொழித் திறனைத் துல்லியமாகவும், ஆற்றலுடனும் வெளிப்படுத்தும் தன்னம்பிக்கையைப் பெறுவீர்கள்.

logo
Kalki Online
kalkionline.com