சிறுவர் சிறுகதை: வடிவங்கள் பேசிய அதிசய இரவு!

பள்ளி நேரத்திற்குப் பிறகு உயிர்பெற்ற கணித வடிவங்கள் மனித வாழ்க்கைக்குச் சொல்லும் அற்புதமான தத்துவங்களை தரும் சிறுகதை.
சிறுகதை | Shapes
சிறுகதை | ShapesImage credit: Chatgpt
சௌ. சுந்தர்ராஜ்

சௌ. சுந்தர்ராஜ், ஓசூர் செவன்த் டே அட்வெண்ட்டிஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றி வருகிறார். தமிழ் எழுத்தை நேசிக்கும் எழுத்தாளர். வாழ்க்கையின் சிறு நிகழ்வுகளை சுவையான கதைகளாக வடிவமைத்து, வாசகர்களின் மனதைத் தொடும் படைப்புகளை உருவாக்கி நல்ல சிந்தனைகளைப் பரப்புவதே இவரது எழுத்துப் பயணத்தின் இலட்சியம்.

Updated on

‘டிங்... டிங்... டிங்...’ என்று பள்ளி மணி மாலை நேரத்தில் ஒலித்தது. மாணவர்கள் சென்றவுடன், ஆசிரியர்களும் தங்கள் பணிகளை முடித்துவிட்டு வீடு திரும்பினர்.

பள்ளி வளாகம் முழுவதும் அமைதி நிலவியது.

கணித ஆய்வகத்தின் சுவரில் அழகாக தொங்கிக்கொண்டிருந்த வட்டம், சதுரம், முக்கோணம், செவ்வகம், ஐங்கோணம், அறுங்கோணம் போன்ற வடிவங்கள் திடீரென மெல்ல ஒளிரத் தொடங்கின.

கடிகாரம் இரவு பன்னிரண்டு மணிக்கு, ‘டாண்... டாண்... டாண்...’ என்று ஒலி எழுப்பியது. எல்லா வடிவங்களுக்கும் உயிர் வந்தது!

“ஆஹா...!” என்று சதுரம் உடலை நீட்டியது.

“ஒரு நாள் முழுவதும் அசையாமல் நின்று களைத்துப் போய்விட்டேன்!” என்று கொட்டாவி விட்டது.

வட்டம் சிரித்தது.

“நீயாவது நான்கு பக்கங்களில் நிற்கிறாய். என்னைப் பார்! நாள் முழுவதும் சுற்றிச் சுற்றிக் குழந்தைகள் என்னை வரைந்து அழித்துக்கொண்டே இருக்கிறார்கள்.”

அனைவரும் சிரித்தனர்.

அப்போது ஒரு சிறிய முக்கோணம் வேகமாக ஓடி வந்தது.

“நண்பர்களே! இன்று நாம் ஒரு முக்கியமான விஷயத்தைப் பேசவேண்டும்."

“என்ன?” என்று அனைவரும் கேட்டனர்.

“இப்போது மனிதர்கள் நம்மை வெறும் கணிதப் பாடத்தில் வரும் படங்களாகத்தான் பாக்குறாங்க. ஆனால், நம்மில் ஒவ்வொருவரும் ஒரு வாழ்க்கைப் பாடத்தைச் சொல்லமுடியும். அதை உலகிற்கு யார் எடுத்துச் சொல்வது?”

அனைவரும் அமைதியாகிவிட்டனர்.

அந்த நேரத்தில் வயதான வட்டம் மெதுவாக எழுந்து,

“இன்று ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கைக் கதையைச் சொல்லட்டும். பிறகு யார் சிறந்த வாழ்க்கைப் பாடத்தைச் சொல்கிறார்கள் என்று பார்ப்போம்...” என்று கூறியது.

இதையும் படியுங்கள்:
சிறுவர் சிறுகதை: மந்திரக் கண்ணாடி!
சிறுகதை | Shapes

அனைவரும் கைத்தட்டினர்.

சதுரம் மெதுவாக எழுந்தது.

“என் பெயர் சதுரம்... பலர் என்னைப் பார்த்து, ‘நீ மிகவும் சாதாரணம்’ என்று சொல்வார்கள். ஆனால் உலகிலுள்ள எத்தனையோ வீடுகள் என் வடிவத்தை அடிப்படையாகக் கொண்டு கட்டப்படுகின்றன. என் நான்கு பக்கங்களும் சமம். எனவே நான் யாரிடமும் பாகுபாடு காட்டுவதில்லை.

ஒருமுறை ஒரு பெரிய மாளிகையும், ஒரு சிறிய குடிசையும் என்னிடம் கேட்டன.

‘நாங்கள் யார் பெரியவர்?’ நான் சிரித்தேன்.

‘உள்ளே வாழும் மனிதர்களின் அன்புதான் பெரியது; சுவர்களின் உயரம் அல்ல.’

அந்த நாளிலிருந்து அவர்கள் சண்டையிடவில்லை."

அனைவரும் கைத்தட்டினர். சதுரம் மென்மேலும் துள்ளிக் குதித்தது.

வட்டம் சிரித்தபடி பேச ஆரம்பித்தது.

“நான் சுழல்கிறேன். நின்றுவிட்டால் சக்கரம் பயனில்லை. மனித வாழ்க்கையும் அப்படித்தான். வீழ்ந்தாலும் மீண்டும் எழ வேண்டும். ஒரு சைக்கிள் ஒருநாள் என்னிடம் அழுதது. ‘என் டயர் பஞ்சராகிவிட்டது. இனி நான் ஓட முடியாது.’

சிறுகதை | Shapes
சிறுகதை | ShapesImage credit: Gemini AI

‘பஞ்சர் நிரந்தரமல்ல. சரிசெய்தால் மீண்டும் பயணம் தொடரும்.’ என்று நான் சொன்னேன்."

நாம் வாழ்க்கையில் எதுவும் நிரந்தரமல்ல, என்பதை நிரூபித்தது வட்டம்.

மாணவர்களின் கைத்தட்டல் ஒலி கேட்பதுபோல எல்லா வடிவங்களும் மகிழ்ந்தன.

“இப்போது என் முறை!” என்று முக்கோணம் குதித்தது.

“என்னைப் பார்த்து சிலர், ‘உனக்கு மூன்று பக்கம்தான்’ என்று சிரிப்பார்கள். ஆனால் உலகின் மிக வலிமையான பாலங்களில் என்னைத்தான் பயன்படுத்துகிறார்கள். ஏன் தெரியுமா?

ஒற்றுமையாக இணைந்த மூன்று கோடுகள் பெரிய சுமையையும் தாங்கும். அதுபோல வாழ்க்கையில் ‘கடவுள் – குடும்பம் – நல்ல நண்பர்கள்’ இந்த மூன்று தூண்கள் இருந்தால் எந்தப் புயலையும் வெல்லலாம்."

அனைவரும் எழுந்து நின்று கைத்தட்டினர்.

அப்போது திடீரென ஒரு சத்தம்...

“ஹா... ஹா... ஹா...”

யார் சிரிக்கிறார்கள்?

அனைவரும் திரும்பிப் பார்த்தனர்.

அது... ஜிக்ஜாக் கோடு!

“உங்களைப் பார்த்தால் சிரிப்பு வருகிறது”, என்றது சதுரம்.

“நீங்கள் எல்லோரும் அழகாக இருக்கிறீர்கள். ஆனால் என் வாழ்க்கை உங்களைப்போல நேராக இல்லை. என்னுடைய தோற்றம் ஏற்றத் தாழ்வுகள் நிறைந்தது."

இதையும் படியுங்கள்:
சிறுவர் சிறுகதை: ஆன்மீகம்னா என்ன? - அர்ஜுனின் சந்தேகமும் குருஜியின் விளக்கமும்!
சிறுகதை | Shapes

ஒரு கணம் அமைதி.

பிறகு வயதான கோடு மெதுவாகச் சொன்னது:

“உண்மைதான், கவலைப்படாதே! வாழ்க்கை எப்பொழுதும் நேராக இருக்காது. ஏற்றத்தாழ்வுகள் இருக்கும். ஆனால், எந்தப் பாதையாக இருந்தாலும் நல்ல இலக்கை நோக்கி செல்வதுதான் வெற்றி.”

அந்த வார்த்தைகளைக் கேட்ட ஜிக்ஜாக் கோட்டின் கண்களில் கண்ணீர் துளிகள் வழிந்தன.

“என்னை யாரும் இதுவரை இவ்வளவு மதித்துப் பேசியதில்லை...” என்று கூறியது.

அந்த இரவில் எல்லா வடிவங்களும் ஒரு உண்மையை உணர்ந்தன.

ஒவ்வொரு வடிவத்திற்கும் ஒரு நோக்கம் உண்டு. ஒவ்வொரு மனிதருக்கும் ஒரு மதிப்பு உண்டு.

நம்முடைய வாழ்க்கையை மற்றவர்களுடன் ஒப்பிடாமல், அவரவருடைய தனித்திறமையை மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்.

logo
Kalki Online
kalkionline.com