சிறுவர் சிறுகதை: ஆன்மீகம்னா என்ன? - அர்ஜுனின் சந்தேகமும் குருஜியின் விளக்கமும்!

ஆன்மீகம் என்றால் என்ன? நல்ல ஒழுக்கத்திற்கும் மனத் தூய்மைக்கும் உள்ள தொடர்பு என்ன என்பதை இந்தக் குட்டி ஆன்மீகக் சிறுகதை மூலம் தெரிந்து கொள்ளுங்கள்.
சிறுகதை | Guruji and Arjuna
சிறுகதை | Guruji and ArjunaImage credit: Gemini AI
இந்திராணி தங்கவேல்

என் பெயர் இந்திராணி தங்கவேல். சொந்த ஊர் தஞ்சாவூர். வசிப்பது சென்னையில் உள்ள மாடம்பாக்கம். சிறு வயது முதலே எழுத வேண்டும் என்ற ஆர்வம் அதிகம் இருந்தது. ஆதலால் முதன்முதலாக மங்கையர் மலருக்கு ஒரு கட்டுரை எழுதி அனுப்பினேன். அது பிரசுரமாகியதால் அதிலிருந்து எழுதத் தொடங்கினேன். இன்று பாரம்பரியமிக்க கல்கி குழும பத்திரிகைகளில் எழுதி வருகிறேன். அது எனக்கு மன நிறைவு தருகிறது.

Updated on

அடர்ந்த அமைதியான ஒரு காட்டுப்பகுதியில் 'ஞானக் குடில்' என்ற அழகான ஆசிரமம் இருந்தது. அங்கு குருஜி ஒருவர் தன் சீடர்களுக்கு அறிவையும் நல்வழிகளையும் கற்பித்து வந்தார்.

​அந்தக் குடிலில் 'அர்ஜுனன்' என்ற சிறுவன் படித்து வந்தான். அவன் சுட்டித்தனமும் கூர்மையும் உடையவன்.

'நல்ல ஒழுக்கம்னா என்ன? அதை ஏன் நாம கடைப்பிடிக்கணும்? ஆன்மீகம் அதுக்கு எப்படி உதவி பண்ணும்?' போன்ற எண்ணற்ற கேள்விகள் அவனுக்குள் நீண்ட நாட்களாக இருந்தன.

​ஒரு நாள் மாலை, குருஜி தன் சீடர்களை அழைத்துக் கையில் ஒரு அழகான ஸ்படிகக் கிண்ணத்தைக் காட்டினார். அதில் தெளிவான, தூய்மையான நீர் இருந்தது.

​"குழந்தைகளா, இந்த நீரைக் கவனிங்க. இதுதான் உங்க மனசு. இப்போ இந்த நீரை நல்லா பாருங்க," என்றபடியே குருஜி ஒரு துளி சாக்கடைச் சேற்றை அதில் விட்டார். தெளிவான நீர் உடனே கலங்கலாக மாறியது.

​"அர்ஜுனன், இப்போ இந்த தண்ணியைக் குடித்துப்பார்க்க முடியுமா?" என்று கேட்டார் குருஜி.

​"ஐயோ குருஜி! இது அசுத்தமாயிடுச்சே, குடிக்க முடியாது," என்றான் அர்ஜுனன்.

சிறுகதை | Guruji and Arjuna
சிறுகதை | Guruji and ArjunaImage credit: Gemini AI

குருஜி புன்னகைத்துக்கொண்டே, "பொய் பேசுறது, கோபப்படுறது, அடுத்தவங்களுக்குத் தீங்கு நினைக்குறது, பேராசைப்படுறது எல்லாமே இந்தச் சேறு மாதிரிதான். இது நம்ம மனசுல விழுந்தா, நம்ம நல்ல குணங்கள் எல்லாம் மறைஞ்சு, மனசு கலங்கிடும். இதான் ஒழுக்கமின்மை" என்றார்.

​அர்ஜுனன் யோசித்துவிட்டு, "சரி குருஜி, ஆன்மீகம்னா என்ன? அது எப்படி இந்தச் சேற்றை சுத்தம் பண்ணும்?" என்று கேட்டான்.

​குருஜி உடனே அந்தச் செம்பில் இருந்த கலங்கல் நீரை ஒருபுறம் வைத்தார். பின், அருகிலிருந்த ஒரு பெரிய துளசி தீர்த்தக் குடத்தை எடுத்து, அந்தச் சிறிய கிண்ணத்தில் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றத் தொடங்கினார். சுத்தமான நீர் தொடர்ந்து விழ விழ, கிண்ணத்தில் இருந்த சேற்று நீர் வெளியேறி, மீண்டும் கிண்ணம் முழுவதும் தெளிவான, தூய்மையான தீர்த்தத்தால் நிரம்பியது!

இதையும் படியுங்கள்:
சிறுவர் சிறுகதை: பீர்பாலின் நுண்ணறிவு!
சிறுகதை | Guruji and Arjuna

​"அர்ஜுனன், தினமும் கடவுளைக் கும்பிடுறது, தியானம் பண்றது, நல்ல புத்தகங்களைப் படிக்கிறது, 'எல்லா உயிர்களிலும் இறைவன் இருக்கான்'னு நினைச்சு அன்பு காட்டுறதுதான் ஆன்மீகம். நாம ஆன்மீகப் பாதையில நடக்கும்போது, இந்தத் தூய்மையான தீர்த்தம் போல நம்ம மனசுக்குள்ள நல்ல எண்ணங்கள் வந்து சேர்ந்துகிட்டே இருக்கும். அது உள்ளே இருக்கும் கெட்ட எண்ணங்களை வெளியேற்றி, மனசைத் தூய்மையாக்கும். மனசு தூய்மையா இருந்தா, தானாவே நம்ம பேச்சும் செயலும் நேர்மையா, அன்பா மாறும். அதுதான் நல்ல ஒழுக்கம்," என்று குருஜி விளக்கினார்.

​அர்ஜுனனுக்கு உண்மை புரிந்தது. ஆன்மீகம் என்பது ஏதோ பயந்து கடவுளைக் கும்பிடுவது அல்ல; அது நம்ம மனசை எப்போதும் தூய்மையாகவும், அன்பாகவும் வைத்திருந்து, பிறருக்கு உதவி செய்ய வழிகாட்டும் ஒரு வெளிச்சம் என்பதை உணர்ந்து தெளிந்தான்.

இதையும் படியுங்கள்:
சிறுவர் சிறுகதை: மந்திரக் கண்ணாடி!
சிறுகதை | Guruji and Arjuna

குட்டீஸ்...​ கதை சொல்லும் கருத்து என்ன தெரியுமா?

ஆன்மீகம் என்பது இறைவனிடம் செலுத்தும் அன்பு; அந்த அன்புதான் மனிதர்களிடம் நேர்மையாகவும், கருணையாகவும், நல்ல ஒழுக்கமாகவும் வெளிப்படுகிறது என்பதுதான்.

இந்தக் கதையை வாசிப்பதன் மூலம், குழந்தைகளின் மனதில் நேர்மறை எண்ணங்களையும் நற்பண்புகளையும் வளர்த்து, அவர்களைச் சமூகத்தில் பொறுப்புள்ள மற்றும் அன்பான மனிதர்களாக மாற்றும் வழிகாட்டுதலைப் பெற முடியும்.

logo
Kalki Online
kalkionline.com