சிறுவர் சிறுகதை: ஒற்றுமை ஒரு ஆயுதம்!

பிறரை பிரித்து குளிர் காய நினைக்கும் மனிதர்களின் சூழ்ச்சி மற்றும் ஒற்றுமையின் சக்தியை விளக்கும் சிறுவர் சிறுகதை.
சிறுவர் சிறுகதை | Wild animals
சிறுவர் சிறுகதை | Wild animals AI Image
ஆழியார் விக்னேஷ்

D. Vignesh from Annur, has been working as a teacher at a private matriculation school in Coimbatore for the past seven years. He teaches Commerce, Accountancy, and Economics. Alongside teaching, he is also a politician, and has developed a passion for writing. Vignesh has created five short stories. His writings explore social issues, human values, nature, and everyday life and reflect his interest in meaningful storytelling.

Updated on

ஒரு அழகிய காடு. அங்கு பல்வேறு வனவிலங்குகள் ஒற்றுமையுடனும் அமைதியுடனும் வாழ்ந்து வந்தன. அந்தக் காட்டில் ஒரு தந்திரமான நரியும் வாழ்ந்தது. வேட்டையாடி உயிர் வாழ்ந்த அந்த நரி, புதிய பகுதியில் வசிக்கும் விலங்குகளைப் பார்த்ததும், அவற்றின் பழக்கவழக்கங்களையும், பலவீனங்களையும் கவனித்து, தந்திரமாக வேட்டையாடத் திட்டமிட்டது.

சில நாட்கள் அவற்றைக் கவனித்த நரி, ஒரு பெரிய எலியும் ஒரு பூனையும் அடிக்கடி சண்டையிட்டு வாழ்வதைக் கண்டது. "இவர்களின் பகைதான் எனக்கு வாய்ப்பு" என்று நினைத்த நரி, தனது முதல் வேட்டைக்குத் அந்த இருவரையும் தேர்ந்தெடுத்தது.

மறுநாள், வேறு உருவத்தில் பூனையைச் சந்தித்தது. அது நரிதான் என்பதை பூனை அறியவில்லை. இனிமையாகப் பேசி, நட்பை வளர்த்த நரி, "உன் எதிரியான எலியை அழித்துவிட்டால் உனக்கு நிம்மதியாக இருக்கும்" என்று பூனையின் மனதில் பகையை மேலும் தூண்டியது. பூனையும் தன் கோபத்தை வெளிப்படுத்தியது.

அதேபோல், எலியையும் தனியாகச் சந்தித்த நரி, "பூனை இல்லையென்றால் உன் வாழ்க்கை பாதுகாப்பாக இருக்கும்" என்று கூறி, அதனுடனும் நட்பாக பழகியது. இருவரும் நரியின் உண்மையான நோக்கத்தை அறியாமல் அதை நம்பினர்.

இதற்கிடையில், காட்டில் ஒரு பெரிய திருவிழா நடைபெற்றது. பெரும்பாலான விலங்குகள் விழா ஏற்பாடுகளுக்குச் சென்றதால், காடு அமைதியாக இருந்தது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்த நினைத்த நரி, முன்கூட்டியே யாரும் அறியாத இடத்தில் ஒரு ஆழமான குழியைத் தோண்டி, அதன் மேல் சிறிய குச்சிகளையும் வைக்கோல்களையும் போட்டு மறைத்துவைத்தது.

இதையும் படியுங்கள்:
சிறுவர் சிறுகதை: உண்மை + நேர்மை!
சிறுவர் சிறுகதை | Wild animals

பின்னர் பூனையை அழைத்து, "எலி அந்த மரத்தின் பின்னால் ஒளிந்திருக்கிறது. உடனே ஓடி பிடி. அதன் காலில் காயம் இருப்பதால் தப்பிக்க முடியாது" என்று கூறியது. நரியின் வார்த்தையை நம்பிய பூனை வேகமாக ஓடியது. ஆனால் மறைத்து வைக்கப்பட்டிருந்த குழியில் விழுந்தது. உடனே நரி குழிக்குள் குதித்து பூனையை வேட்டையாடி உண்டது.

சில நேரம் கழித்து, எலியையும் அதேபோல் ஏமாற்றி அதே குழிக்குள் விழச் செய்து, அதையும் வேட்டையாடியது.

இவ்வாறு தனது தந்திரம் வெற்றி பெற்றதால், அடுத்த வாரம் மீண்டும் வேட்டைக்குத் திட்டமிட்டது.

இந்த முறை, அடிக்கடி சண்டையிடும் முயலையும் மானையும் கவனித்தது. முந்தையதைப் போலவே இருவரிடமும் தனித்தனியாக நட்பாகப் பழகி, ஒருவரைப் பற்றி மற்றொருவரிடம் தவறான எண்ணத்தை உருவாக்கியது.

ஒருநாள், மானிடம், "முயல் அந்த மரத்தின் பின்னால் ஒளிந்திருக்கிறது. நாம் சேர்ந்து பிடிப்போம்" என்று கூறியது. மான் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தது. பின்னர், "சரி, நீயும் என்னுடன் சேர்ந்து ஓடி வா" என்றது.

சிறுவர் சிறுகதை | Wild animals
சிறுவர் சிறுகதை | Wild animalsAI Image

தனக்குத் தோண்டிய குழி எங்கே உள்ளது என்பது நரிக்குத் தெரிந்ததால், அதைத் தவிர்த்து ஓடத் திட்டமிட்டது. ஆனால் அதற்குத் தெரியாமல், அதே இடத்திற்கு முன்பாகவே இன்னும் பெரிய, ஆழமான குழி ஒன்று தோண்டப்பட்டிருந்தது. அதில் நரி நேராக விழுந்தது.

அப்போது அந்தக் குழியின் மேல் மான், முயல் மற்றும் ஒரு சிறிய அணில் நின்று கொண்டிருந்தன.

அணில் சிரித்தபடி, "கடந்த முறை நீ எலியையும் பூனையையும் இதே தந்திரத்தில் கொல்வதை நான் மரத்தின் உச்சியிலிருந்து பார்த்தேன். அதனால் உன் சூழ்ச்சியை மானுக்கும் முயலுக்கும் முன்பே கூறினேன். நீ தோண்டிய குழிக்கு முன்பாக இன்னும் பெரிய குழியை நாங்களே தோண்டினோம். இப்போது உன் தந்திரமே உன்னை விழுங்கிவிட்டது" என்றது.

குழியிலிருந்து வெளியே வர முடியாமல் தவித்த நரி, இறுதியில் பசியால் உயிரிழந்தது.

அன்றிலிருந்து அந்தக் காட்டில் இருந்த அனைத்து விலங்குகளும் தங்களுக்குள் இருந்த சண்டை, பகை, பொறாமை ஆகியவற்றை விட்டுவிட்டு ஒற்றுமையாக வாழத் தொடங்கின. இனி யாராலும் தங்களை ஏமாற்ற முடியாது என்பதை அவை உணர்ந்தன.

நீதி: பிறரைப் பிரித்து ஆதாயம் தேடுபவன், இறுதியில் தன் தந்திரத்திலேயே சிக்கி அழிவான். ஒற்றுமையும் விழிப்புணர்வும் இருந்தால் எந்தச் சூழ்ச்சியையும் வெல்ல முடியும்.

மனித வாழ்க்கையுடன் ஒப்பிட்டு விளக்கம்:

இந்தக் கதையில் வரும் நரி, சமூகத்தில் பொய், வதந்தி, சூழ்ச்சி மற்றும் பிரிவினையை உருவாக்கி தனது லாபத்தை நாடும் மனிதர்களைக் குறிக்கிறது.

பூனை, எலி, மான், முயல் ஆகியவை சிறிய கருத்து வேறுபாடுகளால் ஒருவரை ஒருவர் நம்பாமல் வாழும் மனிதர்களைக் குறிக்கின்றன.

இதையும் படியுங்கள்:
சிறுவர் சிறுகதை: கடைசி பெஞ்ச் டு கலெக்டர்!
சிறுவர் சிறுகதை | Wild animals

ஒரு குடும்பம், நண்பர்கள், அலுவலகம், அரசியல், சமூகம் என எங்கு பார்த்தாலும் சிலர் பிறரைப் பற்றி தவறான தகவல்களைப் பரப்பி, ஒருவரை ஒருவர் மோதவைத்து அதனால் தங்களுக்கு ஆதாயம் தேட முயற்சிக்கிறார்கள். அவர்கள் வெற்றி பெறுவதற்குக் காரணம், அந்த மனிதர்கள் உண்மையை ஆராயாமல் பிறர் சொல்வதை நம்புவதுதான்.

ஆனால், உண்மையை அறிந்து ஒன்றுபட்டு செயல்பட்டால் எந்த சூழ்ச்சியையும் முறியடிக்க முடியும். இந்தக் கதையில் அணில் செய்தது போல, விழிப்புணர்வு கொண்ட ஒரே ஒருவர் கூட ஒரு சமூகத்தைப் பாதுகாக்க முடியும். அதே நேரத்தில், பிறருக்குச் செய்யும் நம்பிக்கைத் துரோகம், ஏமாற்றம், சூழ்ச்சி ஆகியவை ஒருநாள் அதையே செய்தவரைத் தாக்கும் என்பதையும் இந்தக் கதை எடுத்துக்காட்டுகிறது.

logo
Kalki Online
kalkionline.com