சிறுவர் சிறுகதை: சரியானது தவறாகத் திருப்பித் தரப்படுகிறது!

மாயன் நாட்டுப்புற சிறுகதை
சிறுகதை | The Hunter and Animals
சிறுகதை | The Hunter and Animals Image credit: Gemini AI
ஷாராஜ்

இலக்கியவாதி மற்றும் நவீன தாந்த்ரீக ஓவியர். 6 சிறுகதைத் தொகுப்புகள், 5 நாவல்கள், ஒரு கவிதைத் தொகுப்பு, ஒரு மொழிபெயர்ப்பு, மூன்று சிறார் கதைத் தொகுப்புகள் வெளியாகியுள்ளன. சிறுகதைப் போட்டிகளில் பல பரிசுகளும், சில விருதுகளும் பெற்றவர். நாவல் போட்டிகளிலும், ஓவியப் போட்டிகளிலும் ஓரிரு பரிசுகள் / விருதுகள் / பதக்கங்கள் பெற்றுள்ளார். இவரது உலக சிறுவர் கதைகள் மற்றும் நாட்டுப்புறக் கதைகள், 2024-ல், ஓர் அங்குலச் சிறுவன், அமேஸான் கானகத்தில் வழி மறந்த சிறுமி, ஆகாயத்தைத் தின்ற மனிதர்கள் ஆகிய மூன்று நூல்களாக வெளியாகியுள்ளன. இவ் வரிசையில் இன்னும் சில தொகுப்புகள் வரவுள்ளன.

Updated on

கடன் வாங்கிக் கழித்தலில் வாழ்க்கையைக் கழித்துக்கொண்டிருந்தது முயல். பணமும் பொருளுமாக உலகத்தில் பாதிப் பேரிடம் அது கடன் வாங்கியிருக்கும்.

வாங்கிய கடனைத் திருப்பித் தருகிற பழக்கமே அதற்குக் கிடையாது. ஏதாவது சொல்லி தவணையை நீட்டித்துக்கொண்டே இருக்கும். கடன் கொடுத்தவர்கள் அதனிடம் நடையாக நடந்து செருப்போ, பாதமோ தேய்ந்தாலும், கொடுத்த கடனைத் திருப்பி வாங்க முடியாது. ‘முதலை வாய்க்குள் போனது கூட திரும்ப வரும்; ஆனால், முயல் வாய்க்குள் போன கடன் திரும்ப வராது’ என்று மாயன்கள் மத்தியில் ஒரு புதுப் பழமொழியே தோன்றிவிட்டது.

இருந்தாலும் அந்தக் கொடாக்கண்டனுக்கு சில விடாக்கண்டன்களும் இருக்கத்தான் செய்தார்கள். முயலிடம் கொடுத்த கடனை எப்படியாவது திருப்பி வாங்கியே ஆவது என்று கங்கணம் கட்டிக்கொண்டிருந்த அவர்கள், ஐநூறைத் திருப்பி வாங்க ஆயிரம் செலவழித்தும் பலன் இல்லை. இந்தப் பட்டியலில் உள்ளவர்கள் எல்லோரும் ஒரு சமயம் கடனைத் திருப்பிக் கேட்டு ஏக காலத்தில் நெருக்கடி கொடுத்தனர். “வாங்கிய கடனை மரியாதையாகத் திருப்பிக் கொடு. இல்லாவிட்டால் நடப்பதே வேறு!” என்று அதில் சிலர் மிரட்டவே, முயலுக்கு பயம் பீடித்தது.

இனி மேல் தவணை சொல்லித் தப்பிக்கவே முடியாத நிலை. அது மட்டுமல்ல; இது வாழ்வா – சாவா போராட்டம். ஒன்று, கடனைத் திருப்பித் தர வேண்டும்; அல்லது, கடன்காரர்கள் கையால் சாகவேண்டும்.

என்ன செய்வது என்று முள்ளங்கி மூளையைக் கொறித்தபடி யோசித்த அதற்கு, பளிச்சென பல்ப் எரிந்தது. அந்தக் கடன்காரர்கள் எல்லோரிடமிருந்தும் ஒட்டு மொத்தமாகத் தப்பிக்க ஒரு அருமையான ஐடியா!

முதல் கட்டமாக வேட்டைக்காரன் வீட்டுக்குச் சென்று, “உன்னிடம் எட்டு வருடங்களாக வாங்கிய எல்லாக் கடனுக்கும், வட்டிக்கு வட்டியோடு சேர்த்துத் திருப்பிக் கொடுத்துவிடுகிறேன். ஆனால், பணமாகத் தர மாட்டேன்” என்று விபரம் தெரிவித்து, “செவ்வாய்க் கிழமை முற்பகல் சரியாக பதினோரு மணிக்கு எங்கள் வீட்டுக்கு வந்துவிடு. கவனம்! சொன்ன நேரத்துக்கு ஐந்து நிமிடம் முன்போ பின்போ வந்தாலும் காரியம் கெட்டுவிடும்; பிறகு, கடன் கிடைக்காது!” என எச்சரித்துவிட்டு, அடுத்தடுத்த கடன்காரர்கள் வீடுகளுக்குச் சென்றது.

இதையும் படியுங்கள்:
சிறுவர் சிறுகதை: சுதந்திரமாய் பறக்க விடு!
சிறுகதை | The Hunter and Animals

அவர்களிடம் கடன் வாங்கிய பொருள் அல்லது பணம் அல்லது இரண்டையும் திருப்பித் தருவதாக வாக்களித்தது. ஒவ்வொருவருக்கும் அதே நாள், அதே சமயம். ஆனால், தலா ஐந்து நிமிடம் முன்னதாக துல்லியமான நேரம்.

சொன்னபடியே, செவ்வாய்க் கிழமை காலை 10:40-க்கு கரப்பான்பூச்சி வந்தது.

“கஷ்டப்பட்டு வாழ்நாள் முழுக்க சேர்த்து வைத்த பணம், பொருள் அனைத்தையும் உன்னிடம் கொடுத்திருந்தேன். அது ஆற்றோடு போன மாதிரிதான் என்று எல்லோரும் சொன்னார்கள். வாங்கிய கடனைத் திருப்பித் தருகிறேன் என்று நீ சொன்னதும்தான் எனக்கு போன உயிர் திரும்பி வந்த மாதிரி இருந்தது” என்று அது தனது உள்ளக் கிடக்கைகளை உணர்ச்சியோடு வெளிப்படுத்திக்கொண்டிருந்தது.

“சரி சரி,… நீ சிறிது நேரம் கட்டிலுக்கு அடியில் ஒளிந்திரு. கோழி வந்துகொண்டிருக்கிறது!” என்றது முயல். கரப்பானும் பதறியடித்துப் பறந்து கட்டில் அடியே ஒளிந்து, மீசையைச் சுருட்டிக்கொண்டது.

10:45-க்கு கோழி அறைக்குள் நுழைந்தது.

“குஞ்சுகளைத் தனியே மேய விட்டு வந்திருக்கிறேன். காகம் – கழுகு வருவதற்குள் போயாக வேண்டும். ஏற்கனவே உன்னிடம் நடையாக நடந்த சமயத்தில்தான் ஐந்து குஞ்சுகளைப் பறிகொடுத்துவிட்டேன். மிச்சம் உள்ளதையாவது காப்பாற்ற வேண்டும். சீக்கிரம் எனது பொருள்களை எடு!” என அவசரப்படுத்தியது அது, உட்காரக் கூட செய்யாமல்.

“உன் குஞ்சுகளை விட இப்போது உன் உயிருக்கே ஆபத்து. ஏனெனில், கோயோட் (coyote) வருகிறது.

கட்டிலுக்கு அடியில் ஒளிந்துகொள்!” என்கவும் பயந்தடித்து கொக்கரித்துக்கொண்டு கட்டிலுக்கடியே ஓடி ஒளிந்தது.
அங்கே கரப்பான்பூச்சியைக் கண்டதும் மின்னல் வேகத்தில் ஒரே கொத்து! அப்படியே விழுங்கி அமுக்கமாக ஏப்பம் விட்டது.

“நீ சொன்னபடியே சரியான நேரத்துக்கு வந்துவிட்டேன்! நீயும் அதே மாதிரி, அசல், வட்டி அனைத்தையும் சேர்த்து பணத்தைக் கொடுத்துவிட்டால் நல்லது!” என்றபடியே துல்லியமாக 10:50-க்கு அடியெடுத்து வைத்தது கோயோட்.

சிறுகதை | The Hunter and Animals
சிறுகதை | The Hunter and Animals Image credit: Gemini AI

“கண்டிப்பாக் கொடுத்துவிடுகிறேன். அதற்காகத்தானே நானே உன் வீட்டுக்கு வந்து, இப்போது உன்னை வரச் சொன்னேன்! ஆனால், அவசரம்; அதோ, வேங்கை வருகிறது! சட்டென்று கட்டிலுக்கடியில் ஒளிந்துகொள்!”

கோயோட் நடுங்கியபடி கட்டிலுக்கடியே பாய்ந்தது. இன்னமும் காலை உணவு சாப்பிடாமல் இருந்த அது, அங்கே கோழியைக் கண்டதும், கோழி அமுக்காக அமுக்கி, சத்தமெழாமல் குரல்வளையைக் கவ்வி, பசி தீர்த்துக்கொண்டது.

10:55-க்கு வேங்கையின் பிரவேசம்.

“வேட்டைக்குக் கூட நான் இவ்வளவு அலைந்ததில்லை. உனக்குக் கொடுத்த கடனை வட்டியோடு வசூலிக்கத்தான் உன் வீட்டுக்கு நடையாக நடந்தும், ஓடி ஒளிகிற உன்னைத் தேடியும் அலைய வேண்டியிருக்கிறது.

கடன் மட்டும் இந்த அளவுக்கு இல்லாவிட்டால் உன்னை எப்போதோ விழுங்கியிருப்பேன். அசல், வட்டி, வட்டிக்கு வட்டி எல்லாம் சேர்த்து இவ்வளவு ஆயிற்று. பைசா பாக்கியில்லாமல் மொத்தத்தையும் உடனே எடு. ம், ம்…!” என உறுமியது அது.

“உன்னை வரச் சொன்னதே அதற்குத்தானே! ஆனால், இப்போது பார்த்து வேட்டைக்காரன் கையில் துப்பாக்கியோடு இங்கு வருகிறானே! உன்னைக் கண்டால் அவன் உன்னை வேட்டையாடிவிடுவான். நீ என் கட்டிலுக்கடியில் ஒளிந்துகொள். அவன் போன பிறகு பணம் தருகிறேன்.”

வேங்கை பயந்து, தன் உடலைச் சுருக்கி, சிரமப்பட்டு கட்டிலுக்கடியே நுழைந்தது. அங்கே கோயோட்டைக் கண்டதும் அதை விருந்தாக்கிக்கொண்டது.

இதையும் படியுங்கள்:
சிறுவர் சிறுகதை: ஆசிரியர் எனும் போதி மரம்...!
சிறுகதை | The Hunter and Animals

11:00-க்கு வேட்டைக்காரன் வந்தான்.

“அன்று உனக்கு வாக்களித்தபடியே, உன்னிடம் வாங்கிய எல்லாக் கடனுக்கும், வட்டிக்கு வட்டியோடு சேர்த்துத் திருப்பிக் கொடுக்கும்படியாக, உனது வாழ்நாள் லட்சியத்தை நிறைவேற்ற ஏற்பாடு செய்துவிட்டேன்” என்று முயல் கட்டிலடியே சுட்டிக் காட்டியது.

வேட்டைக்காரன் துப்பாக்கியை நீட்டியபடி குனிந்தான்.

இவ்வாறு தனது பெரும் கடன்காரன்களின் தொல்லையை ஒரே சமயத்தில் தீர்த்துக்கொண்டது முயல்.

அடிக்குறிப்பு: கோயோட்* (coyote) – ஒரு வகை ஓநாய்.

logo
Kalki Online
kalkionline.com