

ஜப்பானின் கிராமம் ஒன்றில் கென்ஜி என்ற ஏழை இளைஞன் வாழ்ந்து வந்தான். நாள்தோறும் அயராது உழைத்தும் அவனுக்கு ஒருவேளை உணவிற்கே வழியில்லை.
அருகில் இருந்த ‘கன்னோன்’ எனும் கருணைத் தெய்வத்தின் ஆலயத்திற்குச் சென்றான். தன் வறுமையை நீக்கி வாழ்வதற்கு வழிகாட்டுமாறு பகல் இரவாகப் பிரார்த்தனை செய்தான். நள்ளிரவில் அங்கேயே அயர்ந்து உறங்கிவிட்டான்.
அவனது கனவில் கன்னோன் தெய்வம் தோன்றியது.
“நாளைக் காலை இக்கோயிலைவிட்டு வெளியேறும்போது உனது கையில் முதன்முதலில் எந்தப் பொருள் கிடைக்கிறதோ, அதை மிகப் பத்திரமாகக் கையாள்க. அதுவே உன் வாழ்வை மாற்றும்!” என்று கூறியது.
கென்ஜி மகிழ்ந்தான்.
மறுநாள் விடிந்ததும் நம்பிக்கையோடு கோயிலைவிட்டு வெளியே வந்தான். படிக்கட்டுகளில் இறங்கும்போது எதிர்பாராதவிதமாகக் கால் தடுமாறிக் கீழே விழுந்தான். எழுந்து நின்றபோது கையில் எதுவோ ஒட்டியிருக்கிற உணர்வு. என்னவென்று பார்த்தான். அது ஒரு உலர்ந்த வைக்கோல். அதைக் கண்டு பெருத்த ஏமாற்றமடைந்தான்.
‘தெய்வம் சொன்ன பொருள் இதுதானா? இந்த ஒற்றை வைக்கோல் எதற்கும் பயன்படாது. இதற்கு எந்த மதிப்பும் இல்லை. இது எப்படி என் வறுமையைப் போக்கி வாழ்வை மாற்றும்?’ என எண்ணினான்.
என்றாலும் அந்த வைக்கோலைக் கையில் பிடித்தவாறே பயணத்தைத் தொடங்கினான்.
கிராமத்துப் பாதையில் நடந்து சென்றுகொண்டிருந்தபோது ஒரு ‘குதிரை ஈ’ அவனது முகத்தைச் சுற்றிச் சுற்றி வந்து மொய்த்தது.
குதிரை ஈ என்பது ஈக் குடும்பத்தைச் சேர்ந்த (Tabanidae) பூச்சியாகும். இவை கிராமப்புறங்களில் - குறிப்பாகக் குதிரை, மாடு போன்ற கால்நடைகள் மேயும் மேய்ச்சல் நிலங்கள் மற்றும் நீர்நிலைகள் நிறைந்த இடங்களில் - காணப்படும்.
சாதாரண ஈக்களைவிடக் குதிரை ஈக்கள் அளவில் மிகப்பெரியவை. சுமார் ஒரு அங்குலம் (2.5 செ.மீ) வரை வளரக்கூடியவை.
கென்ஜி கையை வீசி அந்தக் குதிரை ஈயை விரட்ட முயற்சித்தான். ஆனால் அது பறந்து பறந்து விலகி, அவனைத் தொடர்ந்து வந்து, முகத்தில் மொய்த்துக்கொண்டே இருந்தது. எனவே அவன் அதை லாவகமாகப் பிடித்து, தன் கையில் இருந்த வைக்கோல் துண்டின் முனையில் அந்த ஈயின் காலை லேசாகக் கட்டி, வைக்கோலைப் பிடிததபடி சென்றான்.
இந்திய, தமிழக கிராமங்களில் முன்பெல்லாம் சிறார்கள் தும்பிகளையும் பொன்வண்டுகளையும் பிடித்து நூலில் கட்டிவிட்டு விளையாடுவார்கள். ஜப்பானில் அது போல சிறார்கள் குதிரை ஈயைப் பிடித்து நூலில் கட்டி விளையாடுவது வழக்கம்.
கென்ஜி கட்டிய குதிரை ஈ, வைக்கோலோடு காற்றில் பறப்பதைப் பார்க்க அழகாக இருந்தது. அவன் தனது வறுமைக் கவலைகளை மறந்து, அதைக் குழந்தைத்தனமான குதூகலத்தோடு பார்த்து ரசித்தபடியே நடந்துகொண்டிருந்தான்.
அப்போது எதிரே ஒரு தாயும் அவளது சிறிய மகனும் வந்தனர். அந்தச் சிறுவன் கென்ஜியின் கையில் வைக்கோலோடு பறந்த குதிரை ஈயைப் பார்த்து தாயிடம், “அம்மா,... எனக்கு அது வேண்டும்!” என்று ஆசையோடு சிணுங்கி அடம் பிடித்தான்.
கென்ஜி யோசிக்காமல் அந்த வைக்கோல் ஈயை அவனிடம் கொடுத்தான். சிறுவன் மகிழ்ச்சியோடு அதை வாங்கிப் பிடித்துக்கொண்டு துள்ளிக் குதித்தோடினான்.
அதனால் மகிழ்ந்த அத்தாய், தன் மகனை மகிழ்வித்ததற்கு நன்றியாக, தான் வைத்திருந்த கூடையிலிருந்து மூன்று ஆரஞ்சுப் பழங்களைக் கென்ஜியிடம் கொடுத்தாள்.
கென்ஜி நடை தொடர்ந்தான்.
நண்பகலில் வீதியின் ஓரத்தில் ஒரு பணக்காரப் பெண் தன் வேலைக்காரர்களுடன் அமர்ந்திருப்பதைக் கண்டான். அப்பெண் கடும் தாகத்தாலும் வெயிலின் வெப்பத்தாலும் மயக்கமடையும் நிலையில் இருந்தாள்.
நிலைமையை உணர்ந்த கென்ஜி, ஓடோடிச் சென்று தன்னிடம் இருந்த மூன்று ஆரஞ்சுப் பழங்களையும் அப்பெண்ணிடம் கொடுத்தான்.
அந்த ஆரஞ்சுகளின் சாறு அப்பெண்ணிற்கு உடனடிப் புத்துணர்ச்சியைக் கொடுத்தது.
தன் மகளின் உயிரைக் காப்பாற்றிய கென்ஜிக்கு நன்றி செலுத்தும் விதமாக அவளது தந்தை விலையுயர்ந்த மூன்று பட்டுத் துணிகளை அவனுக்குப் பரிசாக அளித்தார்.
கென்ஜி அடுத்த ஊரை நோக்கிச் சென்றான்.
வழியில், ஒரு சாமுராய் தனது குதிரையோடு நின்றுகொண்டிருந்தான். அந்தக் குதிரை வெப்பத்தின் காரணமாக நிலத்தில் மயங்கி விழுந்து கிடந்தது. அவசரப் பயணத்திலிருந்த சாமுராய், “இக்குதிரை இறந்துவிடும் போல் இருக்கிறது. இதைக் தூக்கிச் செல்ல என்னால் முடியாது. குறைந்த விலைக்காவது யாராவது வாங்கினால் கொடுத்துவிட்டுப் போவேன்!” என்று புலம்பினான்.
கென்ஜி அவனிடம் சென்று, “என்னிடம் பணம் இல்லை. ஆனால், இந்தப் பட்டுத் துணிக்குப் பண்டமாற்றாக இக்குதிரையைத் தருவாயா?” என்று கேட்டான்.
சாமுராயும், ”தாராளமாக!” என்று பட்டுத் துணிகளைப் பெற்றுக்கொண்டு குதிரையை அவனிடம் விட்டுவிட்டுச் சென்றான்.
கென்ஜி உடனடியாக அருகில் இருந்த குளத்திலிருந்து நீர் எடுத்து வந்து குதிரையின் முகத்தில் தெளித்து, அதைத் தடவிக் கொடுத்துப் பராமரித்தான். சிறிது நேரத்திலேயே புத்துணர்ச்சி பெற்ற அக்குதிரை நிமிர்ந்து நின்றது.
ஆரோக்கியமான குதிரையோடு நகரின் எல்லையை அடைந்தான்.
அங்கே ஒரு நிலக்கிழாரின் மாளிகை இருந்தது. அவர் தனது குடும்பத்தோடு தொலைதூர நகரத்திற்குப் புறப்பட்டுச் செல்ல ஆயத்தமாகிக்கொண்டிருந்தார். ஆனால், அவரிடம் சாமான்களைச் சுமந்து செல்ல நல்ல குதிரை எதுவும் இல்லை.
கென்ஜியிடம் இருந்த கம்பீரமான குதிரையைக் கண்ட அவர், “இளைஞனே,... என் பயணம் மிகவும் அவசரமானது. எனக்கு இந்தக் குதிரை தேவை.
அதற்குப் பதிலாக நான் திரும்பி வரும் வரை என் வீட்டையும், அதைச் சுற்றியுள்ள இந்தச் செழிப்பான விவசாய நிலங்களையும் நீ பராமரித்து அனுபவித்துக்கொள். நான் மூன்று ஆண்டுகளில் திரும்பி வராவிட்டால் இவை அனைத்தும் உனக்கே சொந்தம்!” என்று கூறி ஒப்பந்தம் செய்துவிட்டுச் சென்றார்.
நிலக்கிழார் சென்ற பிறகு கென்ஜி அந்த நிலத்தில் இரவும் பகலும் அயராது உழைத்தான். கிராமத்து உழைப்பாளிகளுக்கும் வேலை வாய்ப்புகளை அளித்து, தானியங்களும் காய்கறிகளும் விளைவித்தான். நல்ல மகசூல் கிடைத்து வருமானம் கொட்டியது.
மூன்று ஆண்டுகள் உருண்டோடின. ஆனால் அந்த நிலக்கிழார் திரும்பி வரவே இல்லை. நிலம் கென்ஜிக்கே உரிமையாயிற்று.
தெய்வம் கொடுத்த ஒரே ஒரு துண்டு வைக்கோலில் தொடங்கிய கென்ஜியின் பயணம், அவனது இரக்கம், நேர்மை மற்றும் உழைப்பினால் ஒரு மாளிகைக்கும் பரந்த விளைநிலத்திற்கும் அதிபதியாக அவனை உயர்த்தியது.
ஊரார் அவனை 'ஒற்றை வைக்கோல் செல்வந்தன்' என்று அழைத்தனர்.