சிறுவர் சிறுகதை: வரம்!

கடவுளிடம் வாய்தவறி எறும்பு கேட்ட அதிர்ச்சியான வரம்: சுவாரஸ்யமான சிறுகதை
சிறுவர் சிறுகதை | God and animals
சிறுவர் சிறுகதை | God and animalsImage credit: Chatgpt
பவானி உமாசங்கர்

இலக்கியம் என்பது சமூகத்தை பிரதிபலிக்கும் காலக் கண்ணாடி என்பர். அதன் படி என்னுடைய படைப்புகளில் சமூக அக்கறை கொண்ட விஷயங்களை பற்றி அதிகமாக எழுத விருப்பம். நான் ஓய்வு பெற்ற ஆசிரியை. கடந்த பத்து வருடங்களாக பத்திரிகைகளுக்கு என்னுடைய பங்களிப்பை கொடுத்து வருகிறேன். இதுவரை 150 சிறுகதைகள் எழுதி உள்ளேன். இரண்டு நாவல்கள் எழுதி உள்ளேன். சிறார்களுக்காக நல்வழி கதைகள் புராணக் கதைகள் எழுதி வாசித்து சமூக ஊடகமான Spotify யில் வெளியிட்டுள்ளேன். பள்ளியில் கல்வியோடு வாழ்க்கை பாடத்தை கதை வடிவில் கற்பிப்பது என் வழக்கம்.

Updated on: 

முன்னொரு காலத்தில் கடவுள் ஒரு நாள் அனைத்து விலங்குகளையும் அழைத்து உங்கள் அனைவருக்கும் நான் ஒரு வரம் தருகிறேன் நீங்கள் விரும்பியதை கேளுங்கள் என கூறினார்.

முதலில் சிங்கம் எழுந்து, "எனக்கு நல்ல உடல் வலிமையையும் இடி முழக்கம் போன்ற குரலையும் தாருங்கள். அப்போதுதான் நான் மற்ற மிருகங்களை பயப்படச் செய்து வேட்டையாட முடியும்" என்று கேட்டது. கடவுளும் "சரி தந்தேன்" எனக் கூறினார்.

அடுத்த புலி, "எனக்கு வலிமையான கால் நகங்களையும் கூர்மையான பற்களையும் தாருங்கள்" என வேண்டியது. கடவுளும் "ஆம்..! அது உனக்கு மிகுந்த உபயோகமாக இருக்கும்" எனக்கூறி வரம் அளித்தார்.

மான், "எனக்கு நீண்ட உறுதியான கால்களை கொடுங்கள். அப்பொழுதுதான் நான் என்னை வேட்டையாடும் மிருகங்களிடமிருந்து ஓடி தப்பிக்க முடியும்" என்றது. அதற்கு கடவுள், "உனக்கு அந்த சக்தியை அளிக்கிறேன்" என்றார் கருணையுடன்.

அங்கிருந்த பாம்பு, "கடவுளே நான் யாரையும் கடிக்க மாட்டேன். ஆனால் என்னை துன்புறுத்தினால் கடிப்பேன். அப்படி கடித்தால் அவர்கள் இறக்கும்படி என் பற்களில் விஷத்தை கொடுங்கள்" என பணிவுடன் கேட்டது. கடவுளும், "அதுவும் சரிதான் நான் உனக்கு இந்த வரத்தை தருகிறேன்" என்றார்.

இதையும் படியுங்கள்:
சிறுவர் சிறுகதை: மூங்கில் வெட்டுபவரும் நிலவு இளவரசியும்!
சிறுவர் சிறுகதை | God and animals

இப்படி அங்கு இருந்த ஒவ்வொரு விலங்கும் ஒரு வரத்தை கடவுளிடம் கேட்டு பெற்றன. அங்கு இருந்த ஒரு சிறு எறும்பு எல்லோருமே சக்தி மிகுந்த வரங்களை கேட்கின்றனர். கடவுளும் அவர்களுக்கு அருளுகிறார். எனவே நாமும் மிகுந்த சக்தி வாய்ந்த ஒரு வரத்தைக் கேட்க வேண்டும் என யோசனை செய்து கொண்டிருந்தது.

சிறுகதை | Ant
சிறுகதை | AntImage credit: Gemini AI

யோசனையின் முடிவில் நாம் யாரை கடித்தாலும் அவர்கள் இறக்க வேண்டும் என்ற வரத்தை கடவுளிடம் கேட்க வேண்டும். அப்போதுதான் நம்மை கண்டு அனைவரும் பயப்படுவர் என எறும்பு முடிவு செய்தது.

யோசனையுடன் இருந்த எறும்பை பார்த்து கடவுள், "என்ன நீ எந்த வரமும் என்னை கேட்கவில்லையே உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்" என அன்போடு அதனிடம் கேட்டார்.

எறும்பும் மிகுந்த ஆர்வத்துடன், "கடவுளே நான் மிகச் சிறியவன். எனக்கும் சக்தி வாய்ந்த ஒரு வரத்தை நீங்கள் கொடுப்பீர்களா?" என்று சந்தேகத்துடன் கேட்டது. கடவுளோ, "நான் தானே உங்களை அழைத்தேன். நீ கேட்கும் வரத்தை நான் உனக்கு கொடுக்கிறேன் கேள்" என்றார்.

ஆனால் படபடப்பு மிகுதியால் எறும்பு, கடவுளே நான் யாரை கடித்தாலும் அவர்கள் இறக்க வேண்டும் என்று கேட்பதற்கு பதிலாக, கடவுளே நான் யாரை கடித்தாலும் இறக்க வேண்டும் என்று கேட்டது.

இதையும் படியுங்கள்:
சிறுவர் சிறுகதை: அறிவியலும் ஆன்மீகமும்!
சிறுவர் சிறுகதை | God and animals

கடவுளும், "அப்படியே ஆகட்டும்" என சிரித்தபடி கூறிச் சென்றார்.

அந்தோ பரிதாபம் எறும்பு தான் கேட்க வந்த வரத்தை சரியாக கேட்காததால் இப்போது எறும்பு நம்மை கடித்தால் நாம் அதை நசுக்கி விடுகிறோம். எறும்பும் இறந்து விடுகிறது.

குழந்தைகளே..! இந்தக் கதையை வாசிப்பதன் மூலம், வாழ்க்கையில் பதட்டமும் அவசரமும் எப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையை உருவாக்கும் என்பதைப் புரிந்துகொண்டு, நிதானமாகச் சிந்திக்கப் பழகும் தெளிவைப் பெறலாம். எதையும் தெளிவாகச் சிந்திக்காமல் படபடப்புடன் செய்யும் செயல்கள் தரும் ஏமாற்றங்களைத் தவிர்த்து, எப்போதும் விழிப்புணர்வுடன் இருக்கத் தூண்டும்.