சிறுவர் சிறுகதை: தேன் மிட்டாய்!

தவறைத் திருத்தும் தாயின் அன்பும், நண்பனின் அக்கறையும் நிறைந்த சிறுகதை
சிறுகதை | Two friends
சிறுகதை | Two friends Image credit: Chatgpt
செ.ஹரிஷ்

செ. ஹரிஷ், விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகிலுள்ள, ஆ. இராமலிங்காபுரத்தைச் சேர்ந்தவர். தற்போது MCA முதலாம் ஆண்டு (2026–2028) படித்து வரும் ஹரீஷ், சிறு வயதிலிருந்தே எழுத்தார்வம் மிகுந்து, பல கட்டுரை மற்றும் சிறுகதை போட்டிகளில் கலந்து கொண்டு சில வெற்றிகளையும் பெற்றுள்ளார். கல்வி கணினி அறிவியல் சார்ந்ததாக இருந்தாலும், தமிழ் மீதான ஆர்வத்தால் இதுவரை 25-க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். தனது எழுத்து எளிய மக்களுக்கும் புரியும் வகையில் அமையவேண்டும் என்பதில் மிகுந்த கவனம் உள்ளவர். சிறுகதைகள் என்பவை மனித வாழ்வியலின் எதார்த்தங்களை அதன் அர்த்தம் மாறாமல் எடுத்துக்காட்டும் மிகச் சிறந்த இலக்கியப் படைப்பாகும் என்ற நம்பிக்கை கொண்டவர். அந்த வகையில், இவரது சிறுகதைகள் அனைத்தும் மனித வாழ்வியல் எதார்த்தங்களுக்கு மிக நெருக்கமாக இருக்கும்.

Updated on: 

மதிய பெல் அடித்தது. வகுப்பறையை விட்டு ஆசிரியர் வெளியே சென்ற அடுத்தக்கணமே, ரகுவும் சசியும் தங்களது புத்தகப் பைக்குள் இருந்த தட்டை எடுத்துக்கொண்டு சத்துணவுக் கூடத்தை நோக்கி ஓடினார்கள்.

சுடச்சுட ஆவி பறக்க சாதமும் கொதிக்க கொதிக்க சாம்பாரும் தயார் நிலையில் இருந்தன.

மற்ற மாணவர்கள் யாரும் வரவில்லை. ரகுவையும் சசியையும் பார்த்த ஆயம்மா, “எப்பவுமே கரெக்டா ரெண்டு பேரும் மொத ஆளா வந்துறீங்களே..?”

அதற்கு சசி, “ஆயம்மா லேட்டா வந்தா முட்ட முடிஞ்சு போயிரும் இல்ல.!”

“சரி சரி... வாங்க தட்ட நீட்டுங்க...”

இருவரும் சாப்பாட்டை வாங்கி திரும்பியதும், மாணவர்களின் வரிசை அலைமோதியது. 

எப்போதும் சாப்பிடும் அந்தப் புளிய மரத்தடிக்கு வந்தார்கள். அங்கு அவர்களுடைய நண்பர்கள் வட்டமாக அமர்ந்து, வீட்டிலிருந்து கொண்டுவந்த சாப்பாட்டைச் சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். அந்த வட்டத்தில் ரகுவும் சசியும் இணைந்தார்கள். 

எல்லோரும் ஒருவருக்கொருவர் சாப்பாட்டைப் பகிர்ந்துச் சாப்பிட்டார்கள். சாப்பிட்டு முடித்துவிட்டு, தட்டைக் கழுவிவிட்டு, ரகுவும் சசியும் தட்டுடன் கேன்டீனுக்குச் சென்றார்கள்.

அப்போது ரகு, “டேய் சசி உங்கிட்ட காசு எவ்ளோ இருக்கு?”

“அஞ்சு ரூவா இருக்குடா... உங்கிட்ட எவ்ளோ இருக்கு?”

“எங்கிட்டயும் அஞ்சு ரூவாதான் இருக்கு.. வீட்டுக்கு போம்போது தேன் மிட்டாய் வாங்கி சாப்பிட்டுப் போவோமா?”

“சரி...டா.”

ஒருவருக்கொருவர் தோளில் கை போட்டுக்கொண்டு வகுப்பறையை நோக்கி நடந்து சென்றார்கள்.

வகுப்பறைக்குள் சென்றதும், மதன் கையில் இருந்த குட்டி வடிவிலான பறக்கும் குதிரை பொம்மையைப் பார்த்த ரகு, “டேய் மதனு குதிர சூப்பரா இருக்குடா! எங்கடா வாங்குன?”

“இது கிண்டர் ஜாய்குள்ள இருந்ததுடா!”

“எங்க குடு பாப்போம்!” என்று கையில் வாங்கிப் பார்த்தான்.

இதைப் பார்த்த சசி, “டேய் ரகு வா... பாத்ரூம் போயிட்டு வருவோம்!”

கழிப்பறைக்கு நடந்துப்போகும்போது சசி ரகுவைப் பார்த்து, “டேய் ரகு! நீ கிண்டர் ஜாய் சாப்பிட்டது இல்லையா?”

“இல்லையே!”

“ஏன் சாப்பிடல உனக்கு ஆசை இல்லையா?”

“இருக்குதா! எங்க அப்பாகிட்ட அன்னைக்கு ஒரு நாளு கேட்டேன்! அப்புறம் வெலைய கேட்டுட்டு, நானே வேணாம்னு சொல்லிட்டேன்! சரி... நீ சாப்பிட்டு இருக்கியா?”

“நான் ரெண்டு தடவ வாங்கி சாப்பிட்டு இருக்கேன்டா!”

“சரி..டா...”

கழிப்பறைக்குச் சென்றுவிட்டு வகுப்பறைக்குள் வந்தார்கள். ஐந்தாவது பாடவேளைக்கு கணக்கு வாத்தியார் உள்ளே வந்தார்.

அனைவருக்கும் தூக்கம் சொக்கியது! ரகுவால் தூக்கத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. பக்கத்தில் உட்கார்ந்திருந்த சசி, ரகு தூங்கும் போதெல்லாம் அவனின் தொடையைக் கிள்ளிவிட்டபடி இருந்தான்.

மாலையானதும், வீட்டிற்கு விடும் பெல் அடித்தது.

மாணவர்களோடு மாணவர்களாக சசியும் ரகுவும் வெளியே வந்தார்கள்.

சைக்கிள் ஸ்டாண்டில் சைக்கிளை எடுத்துக்கொண்டு, பள்ளிக்கூடத்தை விட்டு வெளியே வந்தார்கள். 

தேன் மிட்டாய் கடை வந்ததும், இருவரும் சைக்கிளை வெளியே நிறுத்திவிட்டு உள்ளே சென்றார்கள். 

இதையும் படியுங்கள்:
சிறுவர் சிறுகதை: நண்பா, இது உனக்காக!
சிறுகதை | Two friends

எண்ணெயில் பொரிக்கும் வாசமும் அதோடு சேர்ந்து வந்த சீனிப் பாகு வாசமும் மூக்கைத் துளைத்தது.

அந்தக் காலத்து பழைய குடிசை கடை. வாசலுக்கு அருகில் எண்ணெய் டின்கள் அடுக்கியிருந்தன. மண்ணால் பூசப்பட்ட அடுப்பின் மேல் பெரிய கடாயில் தேன் மிட்டாய்கான மாவு, உருண்டை உருண்டைகளாக எண்ணெயில் பொரிந்துகண்டிருந்தது. ஒரு பெரியவர் உருண்டைகளைக் கரண்டியால் பிரட்டி விட்டபடி இருந்தார். 

“தாத்தா பத்து ரூவாய்க்கு தேன் மிட்டாய்!” ரகு கேட்டான்.

வெளியே சைக்கிள் கீழே விழும் சத்தம் கேட்டது. சசி ஓடிப்போய் பார்த்தான். 

அந்த தாத்தா எப்போதும் போல கூடுதலாக 2 தேன் மிட்டாயை வைத்து, மொத்தம் 12 தேன்மிட்டாய்களை ஒரு நியூஸ் பேப்பரில் வைத்து சுருட்டி ரகுவின் கையில் கொடுத்துவிட்டு, எண்ணெயில் வெந்துகொண்டிருந்த உருண்டைகளை எடுக்கச் சென்றார்.

கீழே ஓலைப்பாயில் தேன் மிட்டாய்கள் ஆற வைக்கப்பட்டிருந்தன.

ரகு மெதுவாக உள்ளே சென்று தாத்தாவின் முதுகுக்கு பின்னால், தெரியாமல் இரண்டு தேன் மிட்டாயை எடுத்து பாக்கெட்டில் போட்டுவிட்டு வெளியே வந்து, சசியிடம் ஆறு தேன்மிட்டாயை கொடுத்தான். 

சட்டைப் பையில் ஆறு தேன் மிட்டாயை போட்டுக்கொண்டு சைக்கிளை எடுத்து இருவரும் கிளம்பினார்கள்.

“ரகு... தேன் முட்டாய் நல்லா சூடா சூப்பரா இருக்குலடா!”

“ஆமாண்டா சசி, வாயில வச்ச உடனே கரஞ்சுடுது!”

“அந்த தாத்தா ரொம்ப பாவம்டா!”

சசியின் முக மாற்றத்தைப் பார்த்த ரகு, “ஏன்டா அப்படி சொல்ற?”

“அந்தத் தாத்தா கடையில, உள்ள ஒரு போட்டோ இருக்கும் பாத்திருக்கியா.?”

“பாத்திருக்கேண்டா, தாத்தாவோட பொண்டாட்டிதானே?”

“இல்ல... அது அவரோட தங்கச்சியாம்.!”

சசி சொல்வதைப் பார்த்து ரகுவிற்கு ஒன்றும் புரியவில்லை. 

“ஒனக்கு எப்படி..டா இதெல்லாம் தெரியும்?”

“போன ஞாயிற்றுக்கிழமை நானும் எங்க அப்பாவும் சாத்தூர் போயிட்டு சாமா வாங்கிட்டு வர்றப்ப தேன் மிட்டாய் கடைக்குப் போனோம்! அப்ப எங்க அப்பா அந்த தாத்தாகூட பேசிக்கிட்டு இருக்கும்போதுதான் எல்லாத்தையும் நா கேட்டேன்!”

“என்னத்த கேட்ட?”

“அந்தத் தாத்தா கல்யாணமே பண்ணிக்கலையாம்! அவங்களுக்குன்னு இருக்குற ஒரே சொந்தம் அவங்க தங்கச்சி மட்டும்தானாம்! இப்ப அந்தத் தாத்தாவோட தங்கச்சி…”

இருவரை நோக்கி எதிரே ஒரு லாரி வேகமாக நெருங்கிக்கொண்டிருந்தது.

இருவரும் சாலையின் ஓரத்தில் ஒன்றன்பின் ஒன்றாக சென்றார்கள். 

லாரி கடந்து சென்றதும், இருவரும் அருகருகே சேர்ந்தார்கள்.

சசி தொடர்ந்தான், “அந்த தாத்தாவோட தங்கச்சி வெளியூர்ல அவங்க குடும்பத்தோட இருக்காங்களாம்! இப்ப இங்க இந்த தாத்தா மட்டும் தனியா இருக்கிறாரு பாவம்!”

“உண்மையிலேயே அந்த தாத்தா பாவம்தாண்டா சசி! அப்பறம் எதுக்குடா அந்தத் தாத்தா கல்யாணம் பண்ணிக்கலையாம்?”

“அது எதுக்குன்னு தெரியலடா... அப்பறம் கடைசில நா ஒன்னு கேட்டேன், ‘தாத்தா நீங்களே முடியாம இருக்கீங்க! இந்த வேல உங்களுக்கு கஷ்டமா இருக்கா?’அப்படின்னு, அதுக்கு அந்த தாத்தா ஒரு வார்த்த சொன்னாருடா!”

என்ன வார்த்தையாக இருக்கும்? என்ற ஆர்வம் ரகுவிற்குக் கூடியது.

“என்னடா சொன்னாரு?”

“திருடாம, பொய் சொல்லாம நாம எந்த வேலைய நேர்மையா பாக்குறமோ! நமக்கு வர்ற கஷ்டத்த எல்லாத்தையும் சமாளிக்கிற தெம்ப அந்த ஆண்டவன் கொடுப்பான்னு சொன்னாரு! அந்தத் தாத்தா உண்மையிலே ரொம்ப நல்லவருடா.”

ஊரை நெருங்கியதும் எதிர்காற்று பலமாக வீசியது. காளியம்மன் கோயில் வந்ததும், “ரகு, பாய்டா. லேட்டா உங்க வீட்டுக்கு வரேன்!” என்றபடி சசி அவனது வீட்டிற்கு இடப்பக்கம் வளைந்தான்.

தாத்தாவைப் பற்றி சசி சொன்ன வார்த்தைகள் ரகுவின் மண்டையைக் குடைந்தது. பேண்ட் பாக்கெட்டில் இருந்த இரண்டு தேன் மிட்டாய் கையில் எடுத்தான்.

மீண்டும் சைக்கிளைத் திருப்பி தேன்மிட்டாய் கடையை நோக்கிப் புறப்பட்டான். 

தூரத்தில் பள்ளிக்கூடம் விட்டு நிறைய பேர் வந்து கொண்டிருந்தார்கள். 

‘நாம போறத பாத்து யாராவது நம்ம அம்மாகிட்ட சொல்லிருவாங்களோ?’ என்ற பயத்தில் மீண்டும் சைக்கிளை திருப்பி வீட்டை நோக்கி சென்றான். 

வீட்டிற்கு வந்ததும், ரகுவின் திருட்டு முழியைப் பார்த்த அம்மாவிற்கு சந்தேகம் வந்தது.

“என்னடா ரகு ஒரு மாதிரியா இருக்கியே என்ன ஆச்சு?”

“ஒன்னும் இல்லம்மா சும்மாதான்!”

“ம்.. டிரஸ்ச மாத்திட்டு வா, அம்மா பணியாரம் சுட்ருக்கேன்!”

பள்ளி சீருடையை மாற்றிவிட்டு, திண்ணையில் போய் உட்கார்ந்தான்.

ஒரு தட்டில் பணியாரத்தை வைத்து, மகனின் பக்கத்தில் போய் உட்கார்ந்தார், கலா.

“இந்தா ரகு பணியாரம் சாப்பிடு!”

ரகு கையில் எதையோ பொத்தி வைத்திருந்ததைப் பார்த்த கலா, “கைல என்னடா?”

ரகு கையை விரித்தான், இரண்டு தேன் மிட்டாய் இருந்தது.

“என்னடா தேன் மிட்டாய் வாங்கினியா?”

“ஆமம்மா ஆனா...” மகன் இழுப்பதை பார்த்து, “என்ன ரகு?”

அம்மாவின் முகத்தை ரகுவினால் பார்க்க முடியவில்லை.

கலா மகனின் தலையை தடவி விட்டபடி, “என்னாச்சியா? ஏன் வந்ததுல இருந்து ஒரு மாதிரியா இருக்க ? ஒழுங்கா அம்மாட்ட சொல்லு.”

“அம்மா அது வந்து! அந்தத் தாத்தா கடையில தேன் மிட்டாய் வாங்கும்போது... நான் ரெண்டு தேன் மிட்டாய அந்தத் தாத்தாக்குத் தெரியாம எடுத்துட்டேம்மா!”

கலாவிற்கு அதிர்ச்சியாக இருந்தாலும், மகன் உண்மையை ஒப்புக்கொண்டதில் ஒரு பக்கம் நிறைவாக இருந்தது.

இதையும் படியுங்கள்:
சிறுவர் சிறுகதை: ஒற்றுமை ஒர் ஆயுதம்!
சிறுகதை | Two friends

“ஏண்டா எடுத்த?”

“அங்க நெறையா தேன் மிட்டாய் இருந்துச்சா.. அதப் பார்த்ததும் என்னன்னு தெரியலம்மா... நா தேன் மிட்டாய எடுத்துட்டு ஓடிவந்துட்டேன்!”

“இந்த விஷயத்துக்கு அம்மா உன்னைய அடிக்கவோ திட்டவோ போறதில்ல! ஒன்னு சொல்றேன் நல்லா கேட்டுக்கோ, கெட்ட பிள்ளைன்னு பேர் எடுக்க ஒரு சொடக்கு போதும்! நல்ல பிள்ளைன்னு பேர் எடுக்கத்தான் நாளாகும்! இனிமே இதுமாதிரி பண்ணக்கூடாது சரியா...? நாளைக்கு ஸ்கூலுக்கு போம்போது அந்தத் தாத்தாகிட்ட உண்மைய சொல்லி மன்னிப்பு கேளு.”

“சரிமா கேக்குறேன், ஆனா நாளைக்கு சனிக்கிழம ஸ்கூல் லீவு..ம்மா”

“அப்போ அப்பாகூட போ.”

அப்போது சசி சைக்கிளில் வந்து இறங்கினான். 

சசி வருவதை பார்த்தக் கலா, “வாயா சசி, விளையாட ரகுவ கூப்பிட வந்தியா?”

“ஆமாம்மா...”

கலா சசியின் கையில் நான்கு பணியாரத்தைக் கொடுத்தார்.

சாப்பிட்டு முடித்துவிட்டு, சசி ரகுவை சைக்கிளில் ஏற்றி விளையாட கூட்டிச் சென்றான். சைக்கிளில் போகும்போது ரகு சசியிடம் ஒரு தேன் மிட்டாயைக் கொடுத்தான், இன்னொரு தேன் மிட்டாயை அவன் சாப்பிட்டான். 

“டேய் ரகு உனக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்கு... அத கிரவுண்ட்ல சொல்றேன்!”

“என்னடா சர்ப்ரைஸ்சு சொல்லு சசி என்னன்னு?” ரகுவிற்கு ஆர்வம் தாங்கவில்லை. 

மைதானத்தை அடைந்ததும், ஓரத்தில் இருந்த கல் பெஞ்சில் இருவரும் போய் உட்கார்ந்தார்கள். 

“கண்ண மூடி கையை நீட்டு” என்று சசி சொல்ல, ரகு கண்ணை மூடி கையை நீட்டினான். 

கண்களை திறந்ததும் கையில் இருந்த கிண்டர் ஜாயை பார்த்ததும் ரகுவிற்கு சந்தோசம் தாங்கவில்லை. 

“டேய் ரகு பிரிச்சு தின்னு பாரு... எப்படி இருக்குன்னு சொல்லு?”

கிண்டர் ஜாயைப் பிரித்து ஒரு உருண்டையை வாயில் போட்டான்.

சிறுகதை | Two friends
சிறுகதை | Two friends Image credit: Gemini AI

“எப்புட்றா இருக்கு?”

“நல்லாதான் இருக்கு. ஆனா தேன் மிட்டாய் அளவுக்கு இல்லடா!”என்று சொல்லி ரகு சிரித்ததும், கூடவே சசியும் சிரித்தான்..!

சுவைக்கும்போது தெரியாத பள்ளிப் பருவத்தின் தித்திப்பு, கடந்து வந்தபிறகுதான் இனிக்கும்…!