சிறுவர் சிறுகதை: நண்பா, இது உனக்காக!

உண்மையான நட்பின் ஆழம் உணர்த்தும் நெகிழ்ச்சியான சிறுகதை!
சிறுகதை | Two friends
சிறுகதை | Two friendsImage credit: Chatgpt
கல்பனா ராஜகோபால்

கல்பனா ராஜகோபால், பள்ளிப் பருவம் முதலே தமிழ் வாசிப்பிலும் கவிதையிலும் ஈடுபாடு கொண்டவர். இவரது கவிதைக்கு டாக்டர் அப்துல் கலாமிடமிருந்து வாழ்த்துக் கடிதம் பெற்றுள்ளார். மங்கையர் மலர் வெள்ளி விழா மலரில் வெளியான இவரது கவிதை பரிசு வென்றது. பணி ஓய்வுக்குப் பின் கல்கி ஆன்லைனில் எழுதி வருகிறார்.

Updated on: 

அது ஓர் அழகான கிராமத்துப் பள்ளி. பள்ளியின் நுழைவாயிலில் கிளைகளை விரித்து நின்றது ஒரு பெரிய வேப்பமரம். அதன் இலைகளுக்கிடையே புகுந்து வந்த காற்று, வெயிலின் வெம்மையைத் தணித்தது. மதிய இடைவேளை நேரத்திற்கான பெல் சத்தம் கேட்டது வகுப்பறையில் இருந்த மாணவர்கள் அதன் நிழலில் கூடினர். சிலர் தங்கள் டிபன் பாக்ஸ்களைத் திறந்து நண்பர்களுடன் உணவைப் பகிர்ந்து சாப்பிட்டுக்கொண்டு இருந்தனர்.. சில மாணவர்கள் ஓடிப்பிடித்து விளையாடிக் கொண்டிருந்தனர்.. இன்னும் சிலரோ மரத்தடியில் அமர்ந்து சிரித்தபடி கதைகளைப் பேசிக்கொண்டிருந்தனர்.. குழந்தைகளின் சிரிப்பொலியும் பறவைகளின் கீச்சொலியும் ஒன்றாகக் கலந்து, அந்தப் பள்ளி வளாகத்தையே மகிழ்ச்சியால் நிறைத்தன.

ஆறாம் வகுப்பு மாணவன் கவினுக்கு ஓவியம் வரைவதில் மிகவும் ஆர்வம். அவனுடைய நோட்டுப் புத்தகத்தின் கடைசிப் பக்கங்கள் முழுவதும் விதவிதமான படங்கள் நிறைந்திருக்கும். மரங்கள், பறவைகள், வீடுகள், மலைகள் என்று அவன் வரையும் ஓவியங்களைப் பார்த்தால் ஆச்சரியமாக இருக்கும்.

கவினுடைய அப்பா கட்டடத் தொழிலாளி. அம்மா வீடுகளில் வேலை செய்து வந்தார். குடும்பத்தின் வருமானம் குறைவு என்பதால், பள்ளிக்குத் தேவையான பொருள்களைக்கூடப் பார்த்துப் பார்த்து வாங்க வேண்டியிருந்தது. அதனால் அவனிடம் கலர் பென்சில்கள் கிடையாது.

ஆனால் அது அவனது திறமைக்கு தடையாயில்லை தன்னிடம் உள்ள பென்சிலை வைத்து பென்சில் ஓவியங்கள் அழகாய் தீட்டுவான்.

ஒருநாள் வகுப்பாசிரியர் முரளி, மாணவர்களிடம் ஓர் அறிவிப்பை வெளியிட்டார்.

“குழந்தைகளே, அடுத்த வாரம் நம்ம பள்ளியில் ஓவியப் போட்டி நடக்கப் போகிறது. தலைப்பு ‘என் கனவுக் கிராமம்’. முதல் பரிசாக ஒரு பெரிய கலர் பென்சில் பாக்ஸ் வழங்கப்படும். யார் யாருக்கெல்லாம் ஓவியம் வரையப் பிடிக்குமோ, அவங்க எல்லாரும் போட்டியில் கலந்துக்கலாம்!”

இதைக் கேட்டதும் கவினுக்கு ஒரே மகிழ்ச்சி.

‘எனக்கும் ஒரு கலர் பென்சில் பாக்ஸ் கிடைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்!’ என்று நினைத்தான்.

அன்று மாலை வீட்டுக்குச் செல்லும்போது தன் நண்பன் பாலாவிடம் இதைப் பற்றிச் சொன்னான்.

“பாலா, நான் இந்தப் போட்டியில் கலந்துக்கப் போறேன்!”

“சூப்பர்! கவின் உன்னிடம் கலர் பென்சில் இருக்கா?” என்று கேட்டான் பாலா.

கவின் சற்று அமைதியானான்.

“இல்லைடா. பென்சிலால் மட்டும் படம் வரைஞ்சிடலாம்னு இருக்கேன்.”

பாலா யோசித்தான். பிறகு தன் பையிலிருந்து இரண்டு கலர் பென்சில்களை எடுத்தான்.

“என்னிடம் சிவப்பு, பச்சைன்னு இரண்டு கலர் பென்சில் இருக்கு. இதை நீ வச்சுக்கோ!”

“அப்போ நீ எப்படி வரைவ?”

“எனக்கும் போட்டியில் கலந்துக்க ஆசைதான். ஆனா, என்னிடம் இரண்டு கலர் பென்சில்தான் இருக்கு. அதனால நான் கலந்துக்க வேண்டாம்னு நினைக்கிறேன்.”

இதையும் படியுங்கள்:
சிறுவர் சிறுகதை: கடைசி பெஞ்ச் கண்ணுசாமி!
சிறுகதை | Two friends

கவின் உடனே சொன்னான்.

“ஏன் அப்படிச் சொல்றே? இரண்டு கலர் பென்சில் இருந்தாலே அழகான படம் வரையலாமே! நீயும் போட்டியில் கலந்துக்கோ!”

“இரண்டு கலரை வச்சு என்ன படம் வரைய முடியும்?”

“முயற்சி செய்து பாரேன். முயற்சி பண்ணாமலேயே முடியாதுன்னு நினைக்கக் கூடாது!”

நண்பனின் வார்த்தைகள் பாலாவுக்குத் தைரியத்தைக் கொடுத்தன.

போட்டிக்கு முந்தைய நாள் இருவரும் பள்ளி முடிந்ததும் வேப்பமரத்தடியில் அமர்ந்து தங்களுடைய ஓவியங்களைப் பற்றிப் பேசினார்கள்.

சிறுகதை | Two friends
சிறுகதை | Two friendsImage credit: Chatgpt

“நான் ஒரு அழகான கிராமத்தை வரையப் போறேன். அதில் வீடுகள், மரங்கள், வயல்கள், ஆற்றில் ஓடும் தண்ணீர் எல்லாமே இருக்கும்!” என்றான் கவின்.

“நான் ஒரு பெரிய மரத்தை வரையப் போறேன். அதன் கீழே பறவைகளுக்குத் தண்ணீர் வைக்கும் ஒரு சிறுவனை வரையப் போறேன்!” என்றான் பாலா.

“அருமை! உன் ஓவியத்தில் நல்ல கருத்தும் இருக்கே!” என்று பாராட்டினான் கவின்.

அடுத்த நாள் ஓவியப் போட்டி தொடங்கியது.

மாணவர்கள் அனைவரும் ஆர்வமாக ஓவியம் வரையத் தொடங்கினர். ஒவ்வொருவரும் வானவில், மலைகள், அருவிகள் என்று வரைந்தார்கள்.

கவின் தனது கனவுக் கிராமத்தை அழகாக வரையத் தொடங்கினான். வீட்டின் முன் மரங்கள், மரக்கிளைகளில் பறவைகள், வயலில் உழைக்கும் விவசாயிகள், தெருவில் விளையாடும் குழந்தைகள் என்று ஒவ்வொன்றாக வரைந்தான்.

பாலாவும் தனது ஓவியத்தில் கவனம் செலுத்தினான். சிவப்பு, பச்சை என்ற இரண்டு வண்ணங்களை மட்டுமே பயன்படுத்தி ஒரு பெரிய மரத்தை வரைந்தான். மரத்தின் கீழே ஒரு சிறுவன் பறவைகளுக்குத் தண்ணீர் வைப்பதுபோலவும் வரைந்தான்.

ஓவியம் முடிந்ததும் இருவரும் தங்களுடைய படங்களை ஆசிரியரிடம் கொடுத்தார்கள்.

மதிய உணவு இடைவேளையில் கவின் பாலாவிடம் கேட்டான்.

“என்னடா, உன் படம் எப்படி வந்திருக்கு?”

“நல்லாத்தான் வந்திருக்கு. ஆனா, மற்றவங்க படங்களைப் பார்த்தால் எனக்குக் கொஞ்சம் பயமா இருக்கு!”

“எதுக்குப் பயப்படுறே? உன்னால் முடிந்ததை நீ நல்லா வரைஞ்சிருக்கே. அதுவே போதும்!”

போட்டி முடிந்தது. மாணவர்கள் அனைவரும் பரிசு அறிவிப்புக்காக ஆவலுடன் காத்திருந்தனர்.

மதியம் பள்ளி மைதானத்தில் சிறிய நிகழ்ச்சி நடைபெற்றது. தலைமை ஆசிரியர் மேடைக்கு வந்து பேசத் தொடங்கினார்.

“குழந்தைகளே, இந்தப் போட்டியில் கலந்துகொண்ட எல்லாருக்கும் என் பாராட்டுகள். பரிசு கிடைப்பது மட்டுமே வெற்றி கிடையாது. நம்முடைய திறமையை வெளிப்படுத்த முயற்சி செய்வதும் ஒரு வெற்றிதான்!”

பிறகு பரிசுகளை அறிவிக்கத் தொடங்கினார்.

மூன்றாம் பரிசு, இரண்டாம் பரிசு என்று அறிவிக்கப்பட்டது. இறுதியாக முதல் பரிசுக்கான பெயரை ஆசிரியர் முரளி அறிவித்தார்.

“முதல் பரிசு பெறுபவர்... ஆறாம் வகுப்பு மாணவன் கவின்!”

கவினுக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. நண்பர்கள் கைதட்ட, அவன் மேடைக்குச் சென்று பரிசைப் பெற்றுக்கொண்டான். அது அழகான கலர் பென்சில் பாக்ஸ்.

அவன் மகிழ்ச்சியுடன் தன் இருக்கைக்குத் திரும்பினான்.

சிறிது நேரம் கழித்து மீண்டும் எழுந்து ஆசிரியரிடம் சென்றான்.

“ஐயா, நான் ஒரு விஷயம் சொல்லலாமா?”

“சொல்லு கவின்!”

“இந்தக் கலர் பென்சில் பாக்ஸை என் நண்பன் பாலாவுக்குக் கொடுக்க விரும்புகிறேன்.”

அரங்கமே அமைதியானது.

பாலா ஆச்சரியத்துடன் கவினைப் பார்த்தான்.

“ஏன் கவின்? உனக்கும் ஓவியம் வரைய ஆசை இருக்கிறதே!” என்று கேட்டார் ஆசிரியர்.

“ஆமாம் ஐயா. ஆனால், என்னிடம் கலர் பென்சில்கள் இல்லை என்பதற்காக என் நண்பன் தன்னிடம் இருந்த இரண்டு பென்சில்களையும் எனக்குக் கொடுக்க முன்வந்தான். அவனுக்கும் ஓவியம் வரைய ஆசை இருக்கிறது. அவனிடம் கலர் பென்சில் பாக்ஸ் இல்லை என்பதற்காக அவன் தன் ஆசையை விட்டுவிடக் கூடாது!”

கவின் தொடர்ந்து பேசினான்.

“என்னிடம் இப்போது இந்தப் பாக்ஸ் இருக்கிறது. நான் எப்போது வேண்டுமானாலும் ஓவியம் வரையலாம். ஆனால், இதை என் நண்பனுக்குக் கொடுத்தால் அவனும் நிறைய ஓவியங்கள் வரைய முடியும். அதனால் எனக்கு மகிழ்ச்சிதான்!”

இதையும் படியுங்கள்:
சிறுவர் சிறுகதை: ஒற்றுமை ஒர் ஆயுதம்!
சிறுகதை | Two friends

ஆசிரியர் முரளியின் முகத்தில் பெருமிதம் தெரிந்தது.

“கவின், உனக்கு ஓவியம் வரைவதில் மட்டுமல்ல, நல்ல நண்பனாக இருப்பதிலும் திறமை இருக்கிறது!” என்றார்.

அனைத்து மாணவர்களும் கைதட்டினர்.

கவின் கலர் பென்சில் பாக்ஸைப் பாலாவிடம் கொடுத்தான்.

“நண்பா, இது உனக்காக!”

பாலாவின் கண்களில் ஆனந்தக் கண்ணீர்.

“நன்றி கவின்! இந்த உதவியை நான் மறக்கவே மாட்டேன்!”

அப்போது தலைமை ஆசிரியர் எழுந்து நின்றார்.

“குழந்தைகளே, கவின் செய்தது ஒரு சாதாரண உதவியாகத் தோன்றலாம். ஆனால், மற்றவர்களுடைய திறமையை வளர்க்க உதவுவது மிகப் பெரிய விஷயம். நம்மிடம் இருப்பதைப் பகிர்ந்துகொள்ள நிறையப் பணம் தேவையில்லை. நல்ல மனம் இருந்தால் போதும்!”

அடுத்த வாரம் பள்ளியில் ஒரு புதிய அறிவிப்பு வெளியானது.

‘நண்பர்களுக்கான கலர் பென்சில் பாக்ஸ்!’

மாணவர்கள் தங்களிடம் கூடுதலாக இருந்த கலர் பென்சில்கள், ஓவியத் தாள்கள் போன்றவற்றைப் பெட்டியில் வைக்கலாம். தேவையான மாணவர்கள் அவற்றை எடுத்துப் பயன்படுத்தலாம் என்று ஆசிரியர் ஏற்பாடு செய்தார்.

மெல்ல மெல்ல அந்தப் பெட்டி நிறையத் தொடங்கியது. ஓவியம் வரைவதில் ஆர்வமிருந்த, ஆனால் பொருள்கள் வாங்க வசதியில்லாத மாணவர்கள் பலரும் அதைப் பயன்படுத்தத் தொடங்கினர்.

ஒருநாள் பள்ளி முடிந்ததும் ஆசிரியர் முரளி கவினையும் பாலாவையும் அழைத்தார்.

“குழந்தைகளே, உங்களுடைய நட்பு எனக்கு ஒரு நல்ல பாடத்தைக் கற்றுக் கொடுத்திருக்கிறது!”

“என்ன பாடம் ஐயா?” என்று இருவரும் ஒரே குரலில் கேட்டனர்.

ஆசிரியர் புன்னகைத்தார்.

“ஒரு விளக்கிலிருந்து இன்னொரு விளக்கைப் பற்றவைத்தால், முதல் விளக்கின் ஒளி குறைந்துவிடாது. அதுபோல நம்மிடம் இருக்கும் மகிழ்ச்சியையும் திறமையையும் மற்றவர்களுடன் பகிர்ந்துகொண்டால், நம்முடைய மகிழ்ச்சி குறையாது. அது இன்னும் அதிகமாகும்!”

இருவரும் மகிழ்ச்சியுடன் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர்.

அன்று மாலை வீட்டுக்குத் திரும்பிய கவின், அம்மாவிடம் நடந்தவற்றை எல்லாம் சொன்னான்.

அம்மா அவனை அணைத்துக்கொண்டார்.

“கண்ணா, உனக்குக் கிடைத்த பரிசு ஒரு கலர் பென்சில் பாக்ஸ். ஆனால், அதைவிடப் பெரிய பரிசு உன்னிடம் இருக்கிறது!”

“என்னம்மா அது?” என்று கேட்டான் கவின்.

“அது உன் நல்ல மனம். மற்றவர்களுடைய சந்தோஷத்தில் நீயும் சந்தோஷப்படுகிறாய். அதுதான் வாழ்க்கையில் மிகவும் முக்கியம்!”

கவின் புன்னகைத்தான்.

அன்று அவனுக்குப் புரிந்தது.

கலர் பென்சில்கள் ஓவியத்துக்கு அழகு சேர்க்கும். ஆனால், பகிர்ந்துகொள்ளும் மனம் வாழ்க்கைக்கே அழகு சேர்க்கும்!

நீதி: நம்மிடம் இருப்பதைப் பகிர்ந்துகொள்வது சிறிய உதவியாக இருக்கலாம். ஆனால், அது இன்னொருவரின் கனவுக்கு வண்ணம் தீட்டும் பெரிய செயலாக மாறலாம்.