

ஒரு ஊரில் நான்கு திருடர்கள் வாழ்ந்து வந்தார்கள். பக்கத்து ஊர்களுக்குச் சென்று திருடுவது இவர்கள் தொழில். ஒருநாள் இரவு திருடிய பொருட்களோடு ஒரு குடிசையை அடைந்தார்கள். அங்கு ஒரு கிழவி உணவு விடுதி நடத்தி வந்தாள். அவள் இவர்களிடம், "என்ன வேண்டும்" என கேட்க, "நாங்கள் திருடர்கள். தங்க இடமும் சாப்பிட உணவும் வேண்டும்" என்றனர். அவர்கள் பார்க்க பயங்கரமாக இருந்ததாலும் மேலும் தான் அவர்களை எதிர்த்தால் கொன்று விடுவார்கள் என பயந்து கிழவி ஒப்புக்கொண்டாள். ஒருநாள் ஒரு தோண்டியை அவளிடம் கெடுத்து, "நாங்கள் திருடிய பொருட்களை இதில் வைத்துள்ளோம். இதை பத்திரமாக வை. நாங்கள் நால்வரும் சேர்ந்து வந்தால்தான் இதை நீ கொடுக்க வேண்டும். ஒருவர் மட்டும் கேட்டால் தரக்கூடாது" என்றனர்.
கிழவியும் பயத்துடன் அதை வாங்கி பத்திரப்படுத்தினாள். அது கோடைக்காலம். மதிய உணவு உண்டபின் குடிசைக்கு எதிரில் உள்ள மரத்தடியில் நால்வரும் அமர்ந்தனர்.. வெயில் அதிகம் இருந்ததால் குளிக்க விரும்பினர். அதனால் நால்வரில் ஒருவனிடம் கிழவியிடம் கிணற்றிலிருந்து நீர் இறைக்க தோண்டியை வாங்கி வரக் கூறினர்.
இதைக் கேட்ட கிழவி "நீங்கள் நால்வரும் சேர்ந்து வந்தால்தான் தோண்டயைத் தருவேன். உன்னிடம் மட்டும் தரமுடியாது" என்றாள். இதைக் கேட்ட அவன் மரத்தடியில் உட்கார்ந்திருக்கும் மூவரிடம் கேட்டுவிட்டு தோண்டியைத் தரலாம். நீபோய் அவர்களிடம் கேள்" என்றான்.
மற்ற மூவரும் தோண்டியைக் கொடுக்கச் சொன்னார்கள். கிழவியும் பொன்னும் பொருளும் இருந்த தோண்டியைத் தான் கேட்கிறார்கள் என்று தவறாக எண்ணி அதை அந்த திருடனிடம் கொடுக்க அவன் கொல்லைப்புறம் வழியாக ஓடிவிட்டான். மற்ற மூன்று திருடர்களும் வெகுநேரம் காத்தபின், உடனே கோபத்தில் மூன்று திருடர்களும் கிழவியிடம் கத்த, "நான் உங்களிடம் கேட்டபோது கொடு என்று சொன்னதால்தான் கொடுத்தேன்" என்றாள். குளிக்க தான் தோண்டி கேட்டோம். நீ ஏன் அந்த பணம் பொருள் நிறைந்த தோண்டியைக் கொடுத்தாய். உடனே அந்த பொன்னும் பொருளும் நிறைந்த தோண்டி வேண்டும்" என்று கிழவியிடம் சண்டையிட்டனர்.
இந்த வழக்கு மரியாதை ராமனிடம் சென்றது. அவர் திருடர்கள் மற்றும் கிழவியையும் நன்கு விசாரித்தார். நான்கு திருடர்களின் ஒருவன் பொன்னும் பொருளும் நிறைந்த தோண்டியை கிழவியை ஏமாற்றி எடுத்து ஓடிவிட்டதையும் தெரிந்து கொண்டார்.
நான்கு திருடர்களிடம், "நீங்கள் தோண்டியை கிழவியிடம் கொடுத்தபோது என்ன சொல்லி கொடுத்தீர்கள்" என்று கேட்டார்.
"நாங்கள் நால்வரும் ஒன்றாக வந்து கேட்டால்தான் மட்டுமே தோண்டியைத் தரவேண்டும்" என்று கூறிதான் தந்தோம். ஆனால், கிழவியோ ஒருவனிடம் மட்டும் அதைக் கொடுத்து விட்டாள்" என்றனர். இப்போது மரியாதை ராமன் நீங்கள் மூவர் தானே தற்போது இருக்கிறீர்கள். உங்கள் நான்காவது நண்பனும் வந்தால்தான் கிழவி தோண்டயைக் கொடுப்பாள்" என்றார். மூன்று திருடர்களும் திகைத்து விழித்தனர். கிழவியின் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. இது சரியான தீர்ப்பு என்று மக்கள் பாராட்டினர். பொருட்களை திருடிய மூன்று திருடர்களுக்கும் சிறைத் தண்டனை கிடைத்தது.
இந்தக் கதையை வாசிப்பதன் மூலம், புத்தி கூர்மை மற்றும் சரியான தருணத்தில் எடுக்கப்படும் சாதுரியமான முடிவுகள் எத்தகைய சிக்கலான பிரச்சனைகளுக்கும் எளிதில் தீர்வு காண உதவும் என்ற தெளிவையும், சவால்களை எதிர்கொள்ளும் மன தைரியத்தையும் பெறலாம்.