

தெனாலிராமன் கதை: சூடு பட்ட புரோகிதர்கள்!
மன்னர் கிருஷ்ணதேவராயருக்கு அவர் தாய் மீது அன்பும் மரியாதையும் உண்டு. அவரது தாய்க்கு வயதாகி விட்டதால் நோய்வாய்ப்பட்டிருந்தார். வைத்தியரை அழைத்து வந்து தாயின் உடலைப் பரிசோதிக்கச் சொன்னார். அவரும் பரிசோதனை செய்து அவர் அதிக நாட்கள் இருக்கமாட்டார். சிவலோகம் பதவி அடைந்து விடுவார் எனக் கூறவும் மன்னர் வேதனையுற்றார். தன் தாயாரிடம் அவருக்கு மிகப் பிடித்தமானது எது என்று கேட்க அவரது தாயாரும் மாம்பழம் வேண்டும் என்று கூறினார். அது மாம்பழம் கிடைக்கக்கூடிய காலம் அல்ல. இருப்பினும் ஆட்களை அனுப்பி வாங்கி வரச்சொன்னார்.
ஆட்கள் வந்து சேர்வதற்குள் தாயார் மரணம் அடைந்து விட்டார். மிகவும் ஆசையாகக் கேட்ட மாம்பழத்தை சாப்பிடாமலேயே மரணமடைந்த தாயாரை நினைத்து இதற்கு பரிகாரம் செய்ய எண்ணி அரண்மனை புரோகிதர்களை வரவழைத்தார். அந்தப் புரோகிதர்கள் மிகவும் பேராசைக்காரர்களாக இருந்தார்கள். தங்கத்தால் 108 மாம்பழங்கள் செய்து 108 புரோகிதர்களுக்குக் கொடுத்தால் நல்லது என்று யோசனை கூறினார்கள்.
மன்னரும் அதற்கு சம்மதித்து உடனடியாக 108 தங்க மாம்பழங்களை தயாரிக்கச் செய்து அதை 108 புரோகிதர்களிடம் கொடுத்தார்.
அவர்களும் மகிழ்ச்சியாக அதைப் பெற்றுக் கொண்டனர். இதைஅறிந்த தெனாலிராமன் வேதனை உற்றான். புரோகிதர்களுக்குத் தக்க பாடம் கற்பிக்க எண்ணினான். அதற்காக அந்த புரோகிதர்களை சந்தித்து தன் அம்மாவிற்கு திதி வருவதால் அவர்கள் அனைவரும் நடத்திக் வைத்தால் தன்னால் முடிந்தளவு பொருள் தருவதாகக் கூறினார்.
புரோகிதர்களும் மகிழ்ச்சியாக தெனாலிராமன் வீட்டிற்குச் சென்றார்கள். அவர்கள் எல்லோரையும் வரவழைத்து உள்ளே உட்கார வைத்தார். பிறகு கதவை பூட்டினார் நன்கு பழுக்கக் காயச்சிய இரும்புக் கம்பியால் ஆளுக்கு ஒரு சூடு போட்டார். அலறி அடித்து புரோகிதர்கள் மன்னரிடம் சென்று முறையிட்டார்கள். கோபமடைந்த மன்னன் தெனாலிராமனிடம் ஏன் இப்படிச் செய்தாய் என கேட்க, "மன்னா, என்னை மன்னிக்க வேண்டும். என் தாயாருக்கு உடல்நலம் இல்லாமல் இறக்கும் தருவாயில் அவருக்கு வலிப்பு வந்து விட்டது. வைத்தியர்கள் சூடு போடும்படி கூறினார்கள். அதற்குள் அவர் இறந்துவிட்டார். என் தாயாரின் ஆன்மா சாந்தி அடைய புரோகிதர்களுக்கு சூடு போடும்படி பரிகாரம் சொன்னார்கள். அதனால்தான் போட்டேன்" என்றார்.
"என்னடா தெனாலிராமா இது முட்டாள்தனமாக அல்லவா இருக்கிறது" என்று மன்னர் கூற, அதற்கு அவர், "தங்கள் தாயார் மாம்பழம் சாப்பிட்டாமலேயே இறந்ததால் தாங்கள் 108 தங்க மாம்பழம் கொடுத்து அவரது ஆன்மா சாந்தி அடையச்செய்தீர்கள் அதுபோல் என் தாயாரின் வலிப்பு நோய்க்கு சூடுபோட முடியாததால அவர் ஆன்மா சாந்தி அடைய புரோகிதர்களுக்கு சூடு போட்டேன்" என்றார். இதைக் கேட்டதும் மனனர் சிரித்து விட்டார்.
புரோகிதர்களின் பேராசையை மன்னர் புரிந்து கொள்ளவே தெனாலிராமன் இப்படி நடந்து கொண்டதையும் புரிந்து கொண்டார். தங்க மாம்பழம் பெற்ற புரோகிதர்கள் தலைகுனிந்து நின்றார்கள்.
தெனாலி ராமன் அவர்கள் கிருஷ்ணதேவராயர் சபையில் புரோகிதர்கள் சுயநலம் மற்றும் பேராசை காரணமாகவே தங்கமாம்பழ யோசனையைக் கூறினர். அவர்களுக்கு நல்ல பாடம் புகட்டவே தெனாலிராமன் யோசித்து அவர்களுக்குத் தக்க தண்டனையும் கொடுத்தார். அவருடைய மதியூகத்தினால் மன்னரின் தனி மதிப்பையும் பெற்றார்.
இந்தக் கதையை வாசிப்பதன் மூலம், அன்றாட வாழ்க்கையில் எழும் சிக்கல்களைக் கூர்மையான நகைச்சுவையாலும் சமயோசித புத்தியாலும் எப்படி கையாள்வது என்ற கலையை நீங்கள் கற்றுக் கொள்ளலாம்.