

விஜயநகரில் நவராத்திரி விழா கொண்டாட்டத்தின் போது கலைஞர்கள் அறிஞர்கள் தத்துவ ஞானிகள் ஆகியோருக்கு அரசர் பரிசுகள் அளித்து கௌரவிப்பது வழக்கம். அரசருடைய மகள் இளவரசி மோகனாங்கி சகல கலைகளையும் கற்றுத் தேர்ந்தவள். அவளுடைய சிறப்பு விருந்தினராக தஞ்சாவூரில் இருந்து தத்துவ ஞானி ஒருவர் வந்திருந்தார் .
தஞ்சையிலிருந்து வந்திருக்கும் பண்டிதர் தத்துவ ஞானத்திலும் மத விஷயத்திலும் என்னை சுலபமாய்த் தோற்கடித்து விடுவார் என்று கருதியே மோகனாங்கி அவரை வரவழைத்து இருக்கிறாள். ஆகையால், ஏதாவது காரணத்தை கூறி சபையில் நடைபெற போகும் விவாதத்திற்கு நான் போகாமல் இருந்தால் தான் என் பெருமையை காப்பாற்றிக் கொள்ள முடியும் என்று தமக்குத்தாமே புலம்பிக் கொண்டிருந்தார் அரசகுரு. அரச குருவின் நெருங்கிய நண்பரான ரங்காச்சாரியை வரவழைத்து விவரத்தை கூறி இப்பொழுது நான் என்ன செய்வது என்று ஆலோசனை கேட்டார். அதற்கு ரங்காச்சாரி, "தங்களை பெருமைப்படுத்தக்கூடிய ஒரு காரணத்தை தாங்கள் வராததற்காக நான் எடுத்துக் கூறுகிறேன்" என்றான். அரச சபை கூடியது அரச குரு தத்தாச்சாரியார் வரவில்லை.
ரங்காச்சாரி எழுந்து, "அரச குரு அதிகமான சிந்தனையில் ஈடுபட்டதால் அவருக்கு மூளை கொதிப்பு ஏற்பட்டு அதனால் அவர் துன்புற்றுக் கொண்டிருக்கிறார். அதனால் அவர் வர இயலவில்லை" என்றான். அதை கேட்ட அரசர், "என்ன வேடிக்கை இத்தகைய ஒரு நோயைபற்றி நான் கேள்விப்பட்டதே இல்லை. அப்படி ஒரு நோய் இருப்பதாகவும் எனக்கு தோன்றவில்லை."
"மன்னர் பிரானே அப்படி ஒரு நோய் இருக்க கூடும். ஏனெனில் நான் அதிகமாக படிப்பதன் பயனாக எனக்கு கண் கொதிப்பு உண்டாக நான் அவதிபட்டுக் கொண்டிருக்கிறேன்" என்றான் தெனாலிராமன்.
"என்ன முட்டாள் தனம். நீ படித்தே நான் பார்த்ததே இல்லையே" என்றார் சபையில் இருந்த ஒரு அனைவரும் சிரித்தனர். "அரசர் பிரானே அரச குரு அதிகமான சிந்தனையில் ஈடுபட்டதை எப்பொழுதாவது தாங்கள் பார்த்ததுண்டா" என்று கேட்டான் தெனாலிராமன் மீண்டும் சபையில் சிரிப்பு.
"மிகப்பெரிய தீர்க்கதரிசிகளான சங்கரர் ராமானுஜர் மத்வாச்சாரியார் போன்றவருக்கு உண்டாகும் மூளை கொதிப்பு நம்முடைய தாத்தாச்சாரியாருக்கு ஏற்பட்டிருக்கிறது தெனாலிராமனை காட்டிலும் அதிகமாக படித்திருக்கும் இந்த தீட்சதருக்கு கண் எரிச்சல் உண்டானதே இல்லை இவையெல்லாம் புரிந்து கொள்ள முடியாத புதிதாக இருக்கிறதே" என்று அரசர் கூறினார்.
"அரசர் பெருமானே அதில் ஒரு புதிரும் இல்லை படிப்பின் காரணமாகவோ சிந்தனையினாலோ நோய் உண்டாவதில்லை. தங்களைப் பற்றி அதிகமாக நினைத்து பெருமைப்பட்டுக் கொள்வதால் தான் மூளை கொதிப்பு ஏற்படுகிறது" என்றான் தெனாலிராமன். சபையில் இருந்தோர் அனைவரும் கர ஒலி எழுப்பினர்.
"இராமா, அரச குரு முக்கியமானவர்களின் ஒருவர் என்பதை மறந்து நீ அவரை பரிகாசம் செய்வது தவறு" என்றான் ரங்காச்சாரி.
"முக்கியமானவர்கள் பெரியவர்கள் என்று மக்களால் கூறப்படாமல் சிலர் தங்களை தாங்களே பெரிய மனிதர்களாக கருதிக் கொள்கின்றனர்" என்றான் தெனாலிராமன்.
"ராமா எப்படி இருந்த போதிலும் உன்னைக் காட்டிலும் அவருக்கு அதிகமான மதிப்பு இருக்கின்றது. ஏனென்றால் அவர் கருத்துக்கள் முதலில் கவனிக்கப்படுகின்றன. ஆகையால் அவர் உன்னை காட்டிலும் சிறந்தவரே" என்று வாதித்தான் ரங்காச்சாரி.
"நாம் முகம் கழுவுவதற்கு முன்னால் முதலில் கை கால்களைத் தான் கழுவி சுத்தம் செய்து கொள்கிறோம். அதனால் அவை முகத்தை விட சிறந்தது என்று கூற முடியுமா" என்று கேட்டான் தெனாலிராமன். சபையோர் கரவொலி எழுப்பி ஆடவாரம் செய்தனர்.
ரங்காச்சாரியால் மேற்கொண்டு எதுவும் பேச முடியவில்லை. தெனாலிராமன் சுடச்சுட கிண்டலாக கூறியவற்றை சபையோர் மிகவும் ரசித்தனர் .
அரச குரு சபைக்கு வராதது அவருக்கு பெரிய ஏமாற்றமே.
தஞ்சாவூர் தத்துவ நிபுணருக்கு பயந்தே அரசகுரு வரவில்லை என்று அரசர், அரசிளங்குமரி மற்றும் சபையோர் அனைவரும் கருதி விட்டனர்...