
"தம்பி, எழுந்திருப்பா. மணி ஏழாயிடுச்சு. தூங்கினது போதும். புத்தகத்தை எடுத்து படிப்பா."
"என்னப்பா. இன்னிக்கு ஞாயிற்றுக்கிழமைதானே. இன்று ஒரு நாளாவது நிம்மதியா தூங்க விடுங்கப்பா."
"தம்பி, ஞாயிற்றுக்கிழமைனா காலை காப்பி குடிக்காம இருக்கியா? காலை டிபன் சாப்பிடாம இருக்கியா? தினமும் மாதிரி ஏன், அதை விட இன்னும் பலமா எல்லாம் நடக்குதுல்ல. எழுந்திருடா. ப்ளஸ் டூ படிக்கிறேடா. இதுல நீ வாங்குற மார்க்தான்டா உன் வாழ்க்கையையே உயர்த்திவிடும். சொன்னா கேளுடா தம்பி."
"போங்கப்பா. லீவு நாளுல கூட நிம்மதியா உறங்க விட மாட்டேங்கிறீங்க."
"ஓ. அப்ப சன்டே உனக்கு ஜாலிடே. அதானே. நல்லா தூங்கு. தூங்கிட்டே இரு. இந்த உலகம் எவ்வளவு வேகமா முன்னேறிட்டு இருக்கு. உத்தியோகத்துக்குத்தான் எத்தினி போட்டி. இதெல்லாம் இப்ப புரியாதுடா. ஒரு நாளைக்கு அப்பா சொன்னதை நினைத்து வருத்தப்படுவே. அப்ப நீயா உணர்ந்துப்பே."
மணி எட்டு.
"தம்பி, மணி எட்டாயிடுச்சு. எப்ப காப்பி குடிச்சி, எப்ப நீ காலை டிபன் சாப்பிடுவே. எழுந்திருடா கண்ணு."
இது அம்மாவின் அன்பு குரல்.
"என்ன இருந்தாலும் அம்மா அம்மாதான். அம்மா என் சாப்பாட்டை பற்றி கவலைப்படறாங்க. ஆனா அப்பா படி படின்னு பணம் சம்பாதிப்பதிலேயே குறியா இருக்காரு" என்று சலித்துக்கொண்டவன், "அம்மா, இன்னும் கொஞ்ச நாழியில எழுந்திருக்கிறேன். காப்பி தனியா குடிக்கலே. டிபனோடு சேர்ந்தே குடிக்கிறேன்."
"என்னமோ போ. அப்பா உன் எதிர்காலத்தை நினைத்துதான் ரொம்ப கவலையா உட்கார்ந்திருகாரு."
"என்ன கவலை? என்னை எனக்குப் பார்த்துக்க தெரியாதா? இதெல்லாம் சும்மா வெளி வேஷம்." என்று ஆவேசமாக பதில் கொடுத்தான்.
"அடப்பாவி! அந்த மனுஷனா வெளி வேஷம் போடறாரு. எக்கேடு கெட்டுப்போ" என்று கூறி அம்மாவும் சென்று விட்டார்கள்.
மணி ஒன்பது.
"அடே தம்பி!" இது அவன் அப்பாவின் கோபக்குரல்.
அவன் போர்வைக்குள் தன்னை ஒளித்து குறட்டை விடுவது போல் பாசாங்கு செய்தான்.
"தம்பி, ஒண்ணு கேட்டுக்கோ. எவன் ஒரு கட்டுப்பாடோடு இருக்கானோ, எவன் தன் நிலை உணர்ந்து கடுமையாக உழைக்கிறானோ, எவன் அடுத்தவன் தயவை எதிர்பார்க்காமல் வாழனும் என்று நினைக்கிறானோ அவன்தான் வாழ்விலும் உருப்படுவான். என்கிட்ட இருக்கிற ஒரு வீடு, ஒரு சொத்தை உன் சகோதரிகள் மூன்று பேருக்கும் கொடுத்து, உனக்கும் கொடுத்தா, அதில் நீ ஒரு ஆட்டோ கூட வாங்கி ஒட்ட முடியாது. மாறாக அந்தப் பணத்தை வங்கியில முன்பணமாகக் கட்டி வேணும்னா கடன் வாங்கிக்கலாம். என்னால ஆன முழு முயற்சியும் செய்துட்டேன். பிறகு உருப்படுவதும், உருப்படாமல் போவதும் உன் கையில்" என்றவர் டிபன் சாப்பிட உட்கார்ந்தார்.
"அய்யோ, இவரும் இன்னிக்கு வீட்டுல இருப்பாரே. எழுந்துட்டா உடனே படி படின்னு நச்சரிப்பாரே" என்று நினைத்தவன், "அய்யோ அம்மா" என்று குரல் கொடுக்க, அம்மா ஓடிவந்தாள்.
"ஏண்டா தம்பி, என்னடா செய்யுது?"
"அய்யோ, வயிற்று வலி தாங்கலேம்மா. வலி பிசையுது. என்னம்மா நேத்து இரவு பலகாரம் செய்து கொடுத்தே" என்று பாவனையாக உரக்க குரல் கொடுத்து அழுது நடிக்க, அவன் தந்தை பாதி சாப்பாட்டில் இருந்து எழுந்து வந்து, "தம்பி, எழுந்திரு. பசியா கூட இருக்கலாம். நீ சாப்பிட்டு படுத்துருப்பா. அப்படியும் வலி போகலைனா நாம மாலை மருத்துவரிடம் காட்டலாம்" என்று கருணையுடன் பேச, அவனுக்கு வந்தது உற்சாகம்.
அதை வெளிக்காட்டாமல், "அய்யோ, வலி தாங்கலயே" என்று அலறியவன்,
"என்னங்க, என்னங்க." என்ற குரல் ஓங்கி ஒலித்ததை கேட்டு தனது கனவின் காட்சிகள் மெல்ல மறைந்து போக, நிகழ்காலத்திற்குத் திரும்பினான்.
எழுந்தவன் தன் மனைவியிடம் "என்ன கலா, ஏன் இந்த சத்தம் போடறே. ஞாயிற்றுக்கிழமைனு படுத்திருக்கேன்" என்றான்.
"ஏங்க, ஞாயிறுன்னா பசிக்காது. கொஞ்சமாச்சும் உங்களுக்கு அறிவு வேண்டாமா? நாலரை மணிக்கு ரயில்வே ஸ்டேஷனுக்கு அழைச்சிட்டு போறேன்னு யாருக்காச்சும் சொன்னீங்களா? அந்த ஆளு மூணுவாட்டி போன் செய்துட்டாரு. ஏங்க இப்படி இருக்கீங்க? நம்ம புள்ளைக்கு வேறு பால் பவுடர் வாங்கணும். எழுந்திருங்க. சவாரி காத்துட்டு இருக்காரு. ரெயிலை விட்டுரப்போறாருங்க." அவள் கடிந்து கொண்டாள்.
"அய்யோ!" என்று வாரி சுருட்டி எழுந்தவன் பல் துலக்கவும் இல்லை. மாறாக தண்ணியை முகத்தில் நன்றாக அடித்து, புத்துணர்ச்சியை வரவழைத்துக்கொண்டு, வேகமாக ஆட்டோவை ஸ்டார்ட் செய்து அவர் வீட்டுக்கு போனான். அவர் திட்டின திட்டு செம கணமாக இருந்திருக்கும் என்பதை சொல்லவும் வேணாம்.
ஆட்டோ வேகமாக ரயில்வே ஸ்டேஷனுக்கு விரைந்து கொண்டிருந்தது.
அவன் அப்பா சொன்னது நிஜமாயிடுச்சு!
"ஐயோ, வலி தாங்கவில்லை" என்று நடித்தவன், வளர்ந்தபின் ஒரு விடுமுறை நாளில்கூட அமைதியற்று துன்பப்படுகிறான். இளமையில் அவன் சோம்பலைத் தழுவியதால்தான், பின்னாளில் ஆட்டோ ஓட்டுநராக வாழ நேர்ந்தது.
எனவே, இதனை நன்கு உணர்ந்து கொள்ளுங்கள்: இளமையில் கடுமையாக முயன்று படித்தால், முதுமையில் நிம்மதியாக வாழலாம். அன்னை தந்தையரின் நல்லுரைகளைப் புறக்கணிக்காமல், அவர்களின் சொற்கேட்டு, சோம்பலை நீக்கி உழைத்துப் படித்தால், வருங்காலத்தை நீங்கள் விரும்பியவாறு உருவாக்கிக் கொள்ளலாம்.