
-வளர்கவி, கோவை
ஆற்றங் கரையின் ஓரத்தில்
அழகிய வளைந்த கிளையொன்றில்
அமர்ந்திருந்தது ஒரு பறவை
அந்நீரில் மிதந்தது ஓரெறும்பு
எறும்புக்கு நீச்சல் தெரியவில்லை
ஏறிக் கரைவர வழியுமில்லை
மரத்தில் இருந்த பறவைக்கோ
மனமோ மிகவும் மெல்லியதாம்.
பழுத்த இலையைப் பறித்தந்த
பறவை நீரில் துபோட
இலையைப் பற்றி எறும்பதுவும்
ஏறிக் கொண்டதாம் கரைமீது!
வேடன் ஒருவன் ஒருசமயம்
பறவை அதனைக் கொல்வதற்கு
வில்லை எடுத்துக் குறிவைக்க
வெடுக்கென எறும்பு கடித்ததனால்
விலகிப் போனது அம்பதுவும்
பறவை எறும்பின் பக்கம்வந்து
“பழகி இருவரும் நட்பானோம்.,
பாது காப்போம் நம்முறவை!”
என்றே சொல்ல எறும்பதுவும்
‘ஒன்றை நன்றாய் நீஉணர்வாய்!’
எங்கள் இனமாம் கரையானை
கொத்திக் கொல்லுதே உங்களினம்
செய்த நன்றி மறவாமல்
சென்று புத்தி நீசொல்லு:
வையம் தனிலே எறும்புகட்டு
அல்லல் தராது காத்திடுவோம்
உயிரைக் காத்த உயரெறும்பின்
இனத்தைக் காத்தல் நம்கடமை
வயிறை வளர்க்க வேறுணவை
வயலில் உண்டு வாழ்ந்திடுவோம்!
என்றே சொல்லச் சொல்லியதாம்
யாவும் நன்றென ஏற்றனவாம்
உதவிய பேரின் உயர்நட்பை
உயிரினும் மேலாய்க் காத்தனவாம்!!
-வளர்கவி, கோவை