சிறுவர் சிறுகதை: ஒற்றைச் செருப்பு!

The Girl and the Lost Slipper
A Tiny Act of Kindness
பிரபு சங்கர்

About 55 years of experience in journalism, writing and taking photographs. Contributed to all the Tamil magazines of all periodicities. Developed skill through the guidance of Sri Savi, Editor, Dinamani Kadir. Have written hundreds of articles on various subjects; nearly 300 short stories; 12 novels and published hundreds of photographs. Have brought out 30 books, Worked as 1. Sub Editor in Ambalam, Net magazine under Sri Sujatha and Sri Thiruppur Krishnan; 2. Sub Editor in Kumudam Bhakthi Special and 3.Editor-in-Charge for Dinakaran Aanmigam magazines.

Updated on

ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக, ஐந்து கிலோமீட்டர் தொலைவில் இருந்த ஒரு மண்டபத்திற்கு மனைவி நர்மதா, நான்கு வயது மகள் கவிதா ஆகிய இருவரையும் அழைத்துச் சென்றிருந்தான் ராஜேந்திரன்.

இரண்டு நாட்களுக்கு முன்னதாகத்தான் குழந்தைக்கு அவன் புது செருப்பு வாங்கிக் கொடுத்திருந்தான். அதைப் போட்டுக்கொண்டு வெளியே போவதில் அவளுக்கு ஒரே பெருமை, சந்தோஷம்! அந்த நிகழ்ச்சியின்போது காலணியைக் கழற்ற வேண்டிய அவசியம் இல்லாததால், அந்தப் புதுச் செருப்புடன் அரங்கினுள் ஓடி விளையாடினாள் கவிதா. தன் வயது கொண்ட சில சிறுமிகள் அவளுடைய புது செருப்பைப் பார்த்துப் பாராட்டாக மலர்ந்த முகத்துடன் தலையசைத்தது அவளை மேலும் உற்சாகப்படுத்தியது.

“கவிதா, எங்களை விட்டு எங்கேயும் போகாதே. எங்கள் கண் பார்வையிலேயே இரு,” என்று அவ்வப்போது கண்டித்துக் கொண்டிருந்தான் ராஜேந்திரன். நர்மதாவும் தெரிந்தவர்களிடமும், உறவினர்களிடமும் பேசிக் கொண்டிருந்தாலும், கவிதா மீது ஒரு கண் வைத்தபடிதான் இருந்தாள். அதைத் திருப்தியுடன் கவனித்தான் ராஜேந்திரன்.

நிகழ்ச்சியின் நிறைவாக விருந்து முடிந்து இரவு பத்து மணி ஆகிவிட்டது. ஓடியாடி களைத்ததாலும், தனக்குப் பிடித்த உணவு வகைகளை நிறையவே சாப்பிட்டதாலும் கவிதாவுக்குத் தூக்கம் கண்களைச் சொக்கியது.

அடுத்த கவலை – இப்போது ஆட்டோ பிடிக்க வேண்டும். கைப்பேசியை எடுத்து எண்களைத் தட்டினான் ராஜேந்திரன். ஓரிருவர் வருவது போலப் போக்குக் காட்டி, இறங்குமிடம் தெரிந்தபின் தாமாக அவனுடைய அழைப்பை நிராகரித்தார்கள். வேறு சிலரோ, நிர்ணயித்த கட்டணத்தைப் போல இன்னொரு மடங்கு கேட்டார்கள்.

நேரம் வேறு போய்க்கொண்டே இருந்ததால் ராஜேந்திரன் பொறுமை இழந்தான். அதனாலேயே ஓரிரு ஓட்டுநர்களிடம் கடுமையாகச் சண்டையும் போட்டான். தூங்க யத்தனித்த கவிதாவைத் தோளில் போட்டுக்கொண்டு, உடன் நின்றிருந்த நர்மதாவும் அவனுடைய பொறுமையின்மையையும், பதற்றத்தையும் கவலையுடன் கவனித்துக் கொண்டிருந்தாள்.

நல்ல வேளையாக ஒரு ஓட்டுநர் இணக்கமாக வந்தார். மிகச் சரியாக அரங்க வாசலுக்கு வந்து நின்ற ஆட்டோவின் எண்ணைத் தான் பதிவு செய்த எண்ணோடு ஒப்பிட்டுப் பார்த்துத் திருப்தி அடைந்தான் ராஜேந்திரன். ஏறி உட்கார்ந்து ஓடிபி (OTP) எண்ணைச் சொல்ல, ஆட்டோ புறப்பட்டது. வழியில் ஓட்டுநர் கவிதாவிடம் இயல்பாகப் பேச்சு கொடுத்தார். குழந்தையும் பதில் சொல்லிக்கொண்டே வந்தாள்.

இதையும் படியுங்கள்:
Punch-Kun Love: The Little Monkey With a Big Heart!
The Girl and the Lost Slipper

“எனக்கும் இதே வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கிறாள் சார்,” என்று ராஜேந்திரனிடம் தன் பாசப் பேச்சுக்கான காரணத்தைச் சொன்னார் ஓட்டுநர்.

வீடு வந்தாயிற்று. மூவரும் இறங்கினார்கள். திடீரென்று நர்மதா கேட்டாள், “கவிதா, உன்னோட இன்னொரு செருப்பு எங்கே?”

ராஜேந்திரனும் அப்போதுதான் கவனித்தான். உடனே அவன் முகம் கடுகடுப்பாயிற்று. “வழியில விழுந்துட்டுது...” கவிதா பயந்தபடி சொன்னாள்.

“அப்பவே சொல்றதுதானே? புத்தம் புது செருப்பு...” என்று கோபமாகக் கேட்டான் ராஜேந்திரன்.

“நீங்க திட்டுவீங்களே!” என்று பயந்தபடி பதில் சொன்னாள் மகள்.

ஏற்கெனவே வீட்டில் அற்ப விஷயங்களுக்கெல்லாம் கோபப்பட்டு, சூழ்நிலையை இறுக்கமாக மாற்றிய அவனுடைய சுபாவம் குழந்தையின் மனதில் பதிந்திருந்தது. அவன் மிகுந்த பாசத்துடனும் ஆதரவுடனும் நடந்து கொண்ட சம்பவங்களும் நிறைய என்றாலும், எதிர்மறை சூழ்நிலைகள்தான் நினைவில் அதிகம் நிலைத்திருந்தன. அதுவும் தன் கவனக்குறைவால் ஏற்பட்ட இழப்பு என்பதால், அதற்கு அப்பாவின் வினையாற்றல் விபரீதமாக இருக்கும் என்று அந்த குழந்தைக்குத் தோன்றியிருக்கிறது. நர்மதாவும் கணவனின் கோபத்துக்குப் பயந்து என்ன சொல்வது என்று தெரியாமல் நின்றிருந்தாள்.

இதையும் படியுங்கள்:
அனுமன் என்கிற 'சூப்பர் ஹீரோ'!
The Girl and the Lost Slipper

ஓட்டுநர்தான் சூழலைச் சுமுகமாக்க முயன்றார். “என்கிட்ட சொல்லியிருக்கலாமே பாப்பா. நான் ஆட்டோவை நிறுத்தியிருப்பேனே. கொஞ்ச தூரம் பின்னால போய்த் தேடிப் பார்த்தால் கிடைத்திருக்குமே!” என்றார். கூடவே, “எனக்கு அந்தப் பக்கத்திலேதான் வீடு. போற வழியில ஆட்டோ ஹெட்லைட் வெளிச்சத்திலே தேடிக்கிட்டே போறேன். கிடைச்சதுன்னா கொண்டு வந்து தர்றேன், சரியா?” என்று கேட்டார்.

ராஜேந்திரனும் நர்மதாவும் என்ன சொல்வது என்று புரியாமல் நின்றிருந்தார்கள். ஆனால் கவிதாவோ, “வேண்டாம் அங்கிள். ஆனா ஒண்ணு பண்ணுங்க. இதோ இந்த செருப்பை எடுத்துக்கிட்டுப் போங்க. அந்த செருப்பும் கிடைச்சதுன்னா இரண்டையும் உங்க பொண்ணுக்கு என் கிஃப்டா கொடுத்திடுங்க, சரியா?” என்று சொல்ல, மூவரும் திகைத்தார்கள்.

“கவிதா சொல்றதுதான் சரி. சந்திக்காமலேயே அவளுக்கு ஒரு பிரண்ட் (Friend) கிடைத்திருக்கிறாள்,” என்றாள் நர்மதா.

“உண்மைதான்,” என்று மகிழ்ச்சியுடனும் பெருந்தன்மையுடனும் கூறினான் ராஜேந்திரன்.

“ரொம்ப தேங்க்ஸ் பாப்பா...” என்றார் ஓட்டுநர்.

“கவிதா,” என்று தன் பெயரைச் சொல்லி அவரைத் திருத்தினாள் கவிதா.

logo
Kalki Online
kalkionline.com