

அன்று முதல் பாட வேளை தமிழ் அம்மா உள்ளே நுழைந்தார். எல்லோரும் எழுந்து நின்று....
“வணக்கம் அம்மா”
“அனைவருக்கும் இனிய காலை வணக்கம். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக அமைய என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்”
“நன்றி அம்மா”
"உங்களிடம் நான் ஒரு கேள்வி கேட்க போகிறேன்?”
“கேளுங்கள் அம்மா!”
“தொகை என்ற சொல்லை நீங்கள் கேள்விப்பட்டது உண்டா?”
“எங்களுக்கு கல்வி உதவித்தொகை கொடுக்கிறார்கள் அம்மா”
“அருமை மாணிக்கம். தொகை என்றால் என்ன யாராவது கூறுங்கள்?”
“பணத்தை தொகை என்று கூறுகிறோம் அம்மா”
"அதற்கு என்ன காரணம் என்று தெரியுமா?
பணம் நமது கையில் நிலைத்து இருக்காது. மறைந்துவிடும் அதனால் அதனை தொகை என்று கூறுகிறோம்.
அதேபோல் நாம் பேசக்கூடிய வார்த்தைகளிள் சில தொகைச்சொற்கள் உள்ளன. இவ்வாறு தொகைச் சொற்களைக் கொண்டுள்ள தொடர்கள் தொகைநிலைத் தொடர்கள் என்று அழைக்கப்படுகின்றன. தொகை என்பதற்கு மறைத்து வருதல் என்று பொருள்.
இன்று நாம் பார்க்கப் போகிற பாடம் தொகைநிலைத் தொடர்கள் ஆகும்."
தொகைநிலைத் தொடர்:
ஒரு தொடரில் இரு சொற்களுக்கிடையே சொல்லோ, உருபோ மறைந்து ஒரே சொல் போல நிற்குமானால் அதனைத் தொகைநிலைத் தொடர் என்று கூறுவர்.
இரண்டிற்கு மேற்பட்ட சொற்களும் அவ்வாறு வரும்.
தொகைநிலைத் தொடர் ஆறு வகைப்படும். அவை வேற்றுமைத்தொகை, வினைத்தொகை, பண்புத்தொகை, உவமைத்தொகை, உம்மைத்தொகை, அன்மொழித்தொகை என்பனவாகும்.
1. வேற்றுமைத்தொகை:
எ.கா. மதுரை சென்றார், இராமன் வில், கோவில் சென்றார்கள்,
இத்தொடர் மதுரைக்குச் சென்றார் என விரிந்து நின்று பொருள் தருகிறது. கொடுக்கப்பட்டுள்ள இரு சொற்களுக்கு இடையில் 'கு' என்னும் வேற்றுமை உருபு இல்லை. அது தொக்கி நின்று பொருளை உணர்த்துகிறது.
இவ்வாறு, ஒரு தொடரில் வேற்றுமை உருபுகள் ஐ, ஆல், கு, இன், அது, கண் ஆகியவற்றுள் ஒன்று மறைந்து வந்து பொருள் உணர்த்துவது வேற்றுமைத்தொகை எனப்படும்.
உருபும் பயனும் உடன்தொக்க தொகை:
எ.கா. தேர்ப்பாகன்
இத்தொடர், 'தேரை ஓட்டும் பாகன்' என விரிந்து பொருளை உணர்த்துகிறது. கொடுக்கப்பட்டுள்ள தேர், பாகன் என்னும் சொற்களுக்கிடையில் 'ஐ' என்னும் வேற்றுமை உருபும் 'ஓட்டும்' என்னும் பொருளை விளக்கும் பயனும் மறைந்து வந்துள்ளன.
இவ்வாறு, ஒரு தொடரில் வேற்றுமை உருபும் அதன் பொருளை விளக்கும் பயனும் சேர்ந்து மறைந்து வருவது உருபும் பயனும் உடன்தொக்க தொகை எனப்படும். இதுவும் வேற்றுமைத் தொகையே ஆகும்.
2. வினைத்தொகை:
காலம் காட்டும் இடைநிலையும் பெயரெச்ச விகுதியும் மறைந்து நிற்க, வினைப் பகுதியை அடுத்துப் பெயர்ச்சொல்லோடு தொடர்வது வினைத்தொகை எனப்படும். காலம் கரந்த பெயரெச்சமே வினைத்தொகையாகும்.
எ.கா. வீசுதென்றல், ஊறுகாய், மறை பொருள், குடிதண்ணீர், சுடுதண்ணீர்
வீசு என்பது வினைப்பகுதி. இது தென்றல் என்னும் பெயர்ச்சொல்லோடு சேர்ந்து காலத்தை வெளிப்படுத்தாத பெயரெச்சமாயிற்று. மேலும் வீசிய தென்றல், வீசுகின்ற தென்றல், வீசும் தென்றல் என முக்காலத்திற்கும் பொருந்தும்படி விரிந்து பொருள் தருகின்றது. காலம் காட்டும் இடைநிலைகள் இப்பெயரெச்சத்தில் தொக்கி இருக்கின்றன.
வினைப்பகுதியை அடுத்துப் பெயர்ச் சொல் அமைந்த சொற்றொடர்களிலேயே வினைத்தொகை அமையும்.
3. பண்புத்தொகை:
நிறம், வடிவம், சுவை, அளவு முதலானவற்றை உணர்த்தும் பண்புப்பெயருக்கும் அது தழுவிநிற்கும் பெயர்ச்சொல்லுக்கும் இடையில் 'மை' என்னும் பண்பு விகுதியும் ஆகிய, ஆன என்னும் பண்பு உருபுகளும் மறைந்து வருவது பண்புத்தொகை எனப்படும்.
செங்காந்தள் - செம்மையாகிய காந்தள், தனித்தமிழ், கருங்குவளை, செந்தமிழ்
இருபெயரொட்டுப் பண்புத்தொகை:
சிறப்புப்பெயர் முன்னும் பொதுப்பெயர் பின்னும் நின்று இடையில் ஆகிய' என்னும் பண்பு உருபு தொக்கி வருவது இருபெயரொட்டுப் பண்புத்தொகையாகும்.
எ.கா. மார்கழித் திங்கள், சாரைப்பாம்பு.
திங்கள், பாம்பு ஆகிய பொதுப் பெயர்களுக்குமுன் மார்கழி, சாரை என்னும் சிறப்புப் பெயர்கள் வந்து மார்கழி ஆகிய திங்கள் என்றும் சாரை ஆகிய பாம்பு என்றும் இருபெயரொட்டாக வந்துள்ளன.
4. உவமைத்தொகை:
உவமைக்கும் பொருளுக்கும் (உவமேயம்) இடையில் போல, ஒப்ப முதலான உவம உருபுகள் மறைந்து வருவது உவமைத்தொகை எனப்படும்.
எ.கா. மலர் பாதம்,மலர்க்கை (மலர் போன்ற கை)
மலர் - உவமை, கை - உவமேயம் (பொருள்) இடையே 'போன்ற' என்னும் உவம உருபு மறைந்து வந்துள்ளது.
5. உம்மைத்தொகை:
இருசொற்களுக்கு இடையிலும் இறுதியிலும் 'உம்' என்னும் இடைச்சொல் மறைந்து வருவது உம்மைத்தொகையாகும்.
எ.கா. இரவு பகல், அண்ணன்தம்பி, தாய்சேய்
அண்ணனும் தம்பியும், தாயும் சேயும் என விரிந்து பொருளை உணர்த்துகின்றன.
6. அன்மொழித்தொகை (அல்+மொழி+தொகை):
வேற்றுமை, வினை, பண்பு, உவமை, உம்மை ஆகிய தொகைநிலைத் தொடர்களில் உருபுகளும் அவை அல்லாத வேறு சொற்களும் மறைந்து நின்று பொருள் தருவது அன்மொழித் தொகை எனப்படும்.
எ.கா. சிவப்புச் சட்டை பேசினார்.
முறுக்கு மீசை வந்தார்.
இவற்றில் சிவப்புச் சட்டை அணிந்தவர் பேசினார், முறுக்கு மீசையை உடையவர் வந்தார் எனத் தொகைநிலைத் தொடர் அல்லாத வேறு சொற்களும் மறைந்து நின்று பொருள் தருகின்றன.
இவைதான் மாணவர்களே நாம் இங்கு பார்த்த தொகைநிலைத் தொடர்கள். இவற்றை நீங்கள் நன்றாகப் புரிந்து வைத்துக் கொண்டால் எந்தச் சொல் தொகைச் சொல்லாக வந்துள்ளது என்பதே நீங்கள் அறிந்து கொள்ளலாம். மற்றொரு இலக்கணப் பாடத்தோடு அடுத்த வகுப்பில் சந்திப்போம்…