

மதிய பாட வேளை தமிழ் வகுப்பு. செல்லத்தாய் அம்மா வகுப்பறைக்குள் நுழைந்தார்.
“வணக்கம் அம்மா”
“வணக்கம் அன்பு குழந்தைகளே!”
“எல்லோரும் மதியம் சாப்பிட்டீர்களா?”
“சாப்பிட்டோம் அம்மா”
“ரமேஷ் நீ இன்று என்ன சாப்பிட்டாய் மதியானம்”
“எலுமிச்சைச் சாதம் மற்றும் உருளைக்கிழங்குச் சாப்பிட்டேன் அம்மா”
“கயல் நீ என்ன சாப்பிட்டாய்?”
“தக்காளி சாதமும் தயிர் பச்சடியும்”
“அருமை மாணவர்களே!”
“நான் கேட்ட கேள்விக்கு நீங்கள் அருமையான முறையில் பதில் கூறினீர்கள். சொற்கள் தொடர்ந்து வந்து பொருள் தந்தால், அதற்குப் பெயர் தொடர் எனப்படும். நீங்கள் கூறிய அனைத்துப் பதில்களும் ஒரு முடிவைத் தந்தது. அதனால் இதனை முற்றுத் தொடர் என்று நாம் கூற முடியும். இவ்வாறு ஒரு வாக்கியத்தில் எந்த ஒரு மறைபொருளும் இல்லாமல் வெளிப்படையாக வருவதற்கு தொகாநிலைத் தொடர் என்று பெயர். தொகாநிலைத் தொடர்கள் பற்றி தான் நாம் இன்று பார்க்கப் போகிறோம்.
சொற்கள் தொடர்வதைத் 'தொடர்' எனலாம். இது பொருள் முடிவு தராவிட்டால் முடியாத்தொடர் எனப்படும். பொருள் முடிவு தந்தால் அது முற்றுத்தொடர் எனப்படும். இந்த முற்றுத்தொடரை வாக்கியம் என்பர்.
ஒரு தொடரில் சொற்களுக்கு இடையில் சொல்லோ உருபோ மறைந்து வராமல் வெளிப்படையாகப் பொருளை உணர்த்துவது தொகாநிலைத் தொடர் எனப்படும்.
எ.கா. காற்று வீசியது,
குயில் கூவியது,
காகம் கரைந்தது,
நாய் குரைத்தது.
தொகாநிலைத் தொடர்கள் ஒன்பது வகைப்படும். அவை
1. எழுவாய்த்தொடர்:
எழுவாயுடன் பெயர், வினை, வினா ஆகிய பயனிலைகள் தொடர்வது எழுவாய்த்தொடர் ஆகும்.
எ.கா. இனியன் கவிஞர் - பெயர்
காவிரி பாய்ந்தது - வினை
பேருந்து வருமா? - வினா
மேற்கண்ட மூன்று தொடர்களிலும் பெயர், வினை, வினா ஆகிய பயனிலைகள் இடம்பெற்று எழுவாய்த் தொடர்கள் அமைந்துள்ளன.
2. விளித்தொடர்:
விளியைத் தொடர்ந்து வினை அமைவது விளித்தொடர் ஆகும்.
எ.கா. நண்பா எழுது!
தம்பி ஓடு!
அண்ணா வா!
'நண்பா' என்னும் விளிப்பெயர் 'எழுது' என்னும் பயனிலையைக் கொண்டு முடிந்துள்ளது.
3. வினைமுற்றுத்தொடர்;
தொடரின் இறுதியில் இடம்பெற வேண்டிய வினைமுற்று, தொடரின் முதலில் அமைந்து பெயரைக் கொண்டு முடிவது வினைமுற்றுத்தொடர் ஆகும்.
எ.கா. பாடினாள் கண்ணகி
ஆடினால் மாதவி
பாடினான் ராவணன்
எய்தான் ராமன்
4. பெயரெச்சத்தொடர்:
முற்றுப் பெறாத வினை, பெயர்ச்சொல்லைக் கொண்டு முடிவது பெயரெச்சத்தொடர் எனப்படும்.
எ.கா. கேட்ட பாடல்
படித்த புத்தகம்
செய்த கணக்கு
நடித்த கட்டியக்காரன்
5. வினையெச்சத்தொடர்:
முற்றுப் பெறாத வினை, வினைச்சொல்லைக் கொண்டு முடிவது வினையெச்சத்தொடர் ஆகும்.
எ.கா. பாடி மகிழ்ந்தனர்
ஓடி விளையாடினர்
ஆடிப் பாடினர்
தாவி ஓடினர்
6. வேற்றுமைத்தொடர்:
வேற்றுமை உருபுகள் வெளிப்படையாக அமையும் தொடர்கள் வேற்றுமைத் தொகாநிலைத்தொடர்கள் ஆகும்.
எ.கா. கட்டுரையைப் படித்தான்.
வேலையைச் செய்தான்.
குடத்தை எடுத்தாள்.
இத்தொடரில் ஐ என்னும் இரண்டாம் வேற்றுமை உருபு வெளிப்படையாக வந்து பொருளை உணர்த்துகிறது.
அன்பால் கட்டினார்.
ராமனோடு வந்தால் சீதை.
ராமன் கையால் மாண்டான் ராவணன் - (ஆல்) மூன்றாம் வேற்றுமைத் தொகாநிலைத் தொடர்
நான்காம் வேற்றுமைத் தொகாநிலைத்தொடர்: அறிஞருக்குப் பொன்னாடை - (கு) - மதுரைக்குச் சென்றான்.
7. இடைச்சொல் தொடர்:
நிலைமொழியில் பெயர், வினைச்சொல்லின் முன்போ பின்போ இடைச்சொல் சேர்ந்துவரின் அது இடைச்சொல் தொடர் ஆகும்.
எ.கா. மற்றொன்று கிடைத்தது.
அவரே சொன்னார்.
மற்று + ஒன்று. "மற்று" என்னும் இடைச்சொல்லை அடுத்து "ஒன்று" என்னும் சொல் நின்று பொருள் தருகிறது.
8. உரிச்சொல் தொடர்:
உரிச்சொல்லுடன் பெயரோ, வினையோ தொடர்வது உரிச்சொல் தொடர் ஆகும்.
எ.கா. சாலச் சிறந்தது
நனி நன்று
ஆலயம் தொழுவது சாலவும் நன்று
"சால" என்பது உரிச்சொல். அதனைத்தொடர்ந்து "சிறந்தது" என்ற சொல்நின்று மிகச் சிறந்தது என்ற பொருளைத் தருகிறது.
9. அடுக்குத் தொடர்
ஒரு சொல் இரண்டு மூன்று முறை அடுக்கித் தொடர்வது அடுக்குத் தொடர் ஆகும்.
எ.கா. வருக! வருக! வருக!
பாம்பு பாம்பு!, தீ தீ!, ஓடு ஓடு!, பாடு பாடு!, தேடு தேடு!,
வருக வருக! என்னும் ஒரே சொல் உவகையின் காரணமாக மீண்டும் மீண்டும் அடுக்கி வந்துள்ளது.
பாம்பு பாம்பு! என்னும் ஒரே சொல் அச்சத்தின் காரணமாக மீண்டும் மீண்டும் அடுக்கி வந்துள்ளது.
இந்த ஒன்பது வகையான தொகாநிலைத் தொடர்கள் நம் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்திக் கொண்டுதான் இருக்கிறோம். இவற்றை சிறப்பாகக் கற்றுக் கொண்டால் என்றுமே நமக்கு இலக்கணம் இனிக்க தான் செய்யும். தொகாநிலைத் தொடர்களை நன்றாகப் படித்துக் கொள்ளுங்கள் மாணவர்களே! அடுத்த வகுப்பில் உங்களுக்குப் பயனுள்ள வகையில் இது இருக்கும். மற்றொரு இலக்கணப் பாடத்தோடு அடுத்த வகுப்பில் சந்திப்போம்……