குட்டீஸ்களே விஜயதசமி கொண்டாடுவது ஏன்? தெரிந்து கொள்ள வேண்டிய ஆன்மீக ரகசியங்கள்!

விஜயதசமி ஏன் கொண்டாடப்படுகிறது? ராமர், பாண்டவர்கள் செய்த வழிபாடு மற்றும் அதன் ஆன்மீக ரகசியங்களை எளிமையாக தெரிந்து கொள்ளுங்கள்.
விஜயதசமி  | Vijayadashami
விஜயதசமி | VijayadashamiImage credit: Gemini AI
ஆர்.ஜெயலட்சுமி

ஆர். ஜெயலட்சுமி திருநெல்வேலி ஊர்.மங்கையர் மலரின் முப்பது வருட வாசகியும் எழுத்தாளரும் நான். எனது அம்மா முதலில் மங்கையர் மலரில் எழுதி வந்தவர் அதை தொடர்ந்து நானும் எழுதுகிறேன்

Updated on: 

குட்டீஸ்களா! விஜயதசமி கொண்டாடுகிறோமே அந்த விஜயதசமி பற்றி நமக்கு விவரமாக தெரியவில்லையே என்று யோசிக்கிறீர்களா? கவலை வேண்டாம்! இதோ உங்களுக்காகத் தான் விஜய தசமி சிறப்புகள் இங்கே தரப்பட்டுள்ளது.  

நவராத்திரியை தெய்வங்களும் கடைபிடித்தார்கள் என்பது தெரியுமா? நவராத்திரியின் ஒன்பது நாட்களை மனிதர்கள் மட்டும் கொண்டாடினார்கள் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், அர்ஜுனன் போன்ற புராண புருஷர்களும், ஸ்ரீ ராமபிரான் போன்ற தெய்வங்களும் கூட தங்களுக்கு இடர் வந்த போது இந்த விரதத்தை கொண்டாடித்தான் அந்த இடங்களை வெற்றி கண்டிருக்கிறார்கள்.

சீதையை கவர்ந்து சென்ற ராவணன் சிவனிடமே வரம் பெற்றவன். அவனது வரங்கள் செயலற்று போனால் மட்டுமே அவனை வெற்றி கொள்ள முடியும். என்ன செய்வது என்று அகஸ்தியரிடம் சென்று வழி கேட்க, அவர் ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்திக்கு இராவணனை சம்ஹாரம் செய்யக்கூடிய வலிமையை தரும் ஸ்ரீ பஞ்ச தசாஷரி என்ற மகா மந்திரத்தை அவரது வலது காதில் உபதேசம் செய்கிறார்.

உபதேசம் செய்யப்பட்ட அந்த ஒன்பது நாட்களும் தேவிபக்தனாக மாறிய ஸ்ரீ ராமபிரான் புரட்டாசி மாதத்தின் வளர்பிறை பிரதமை முதல் நவமி திதி வரை பொருந்திய ஒன்பது இரவுகளைக் கொண்டே தேவியை பூஜை செய்தார். அந்த ஒன்பது நாட்களும் வன்னி மரம் ஒன்று ராமரின் படை வீரர்களின் ஆயுதங்களுக்கு பாதுகாப்பு பெட்டகமாக இருந்தது. ராமனுடன் வந்த வீரர்களையோ காட்டில் தவம் செய்த ரிஷி முனிவர்கள் உபதேசித்த ஸ்ரீ துர்கா நட்சத்திர மாலிகா துதி காப்பாற்றியது.

இதையும் படியுங்கள்:
நவராத்திரி சிறுவர் சிறுகதை: ஒன்பதாம் படியின் ஒளி!
விஜயதசமி  | Vijayadashami

ராமனின் வீரர்கள் இந்த துதியை ஜபம் செய்த போது இருபத்தேழு நட்சத்திர தேவதைகளும் அவர்களுக்கு ஆசி வழங்கினார்களாம். விஜயதசமி என்பது வெற்றிகளை கிடைக்க செய்யும் நன்னாள்; நவராத்திரி ஒன்பது நாட்களுக்குப் பின் பத்தாவது நாளை விஜயதசமியாக கொண்டாடுகிறோம்.

விஜய என்றால் வெற்றி என்று பொருள். அன்றைய தினத்தில் அட்சராப்யாசம் துவக்க கல்வியும் அன்னபிரசன்னம் குழந்தைக்கு முதன்முதலாக சோறூட்டுவது போன்றவற்றை துவங்குவது; சிறப்பு காலரூபிணியான அம்பிகைக்கு லலிதா சகஸ்ரநாமத்தில் விஜயா என்ற நாமம் உண்டு புரட்டாசி மாத சுக்ல பட்ச தசமியன்று அதாவது விஜய தசமியன்று மாலையில் நட்சத்திரங்கள் தோன்றும் நேரத்திற்கு விஜயா என்று பெயர்.

அந்த நேரத்தில் துவங்கும் சகல காரியங்களும் வெற்றி பெறும் என்று புராணங்களில் சொல்லப்பட்டுள்ளது. பாண்டவர்கள் அஞ்ஞானவாசத்தின் போது வன்னி மர பொந்தில் தங்கள் ஆயுதங்களை ஒளித்து வைத்திருந்து பின்னர் அவற்றை வெளியே எடுத்து விஜயதசமியில் தான் பூஜை செய்தனர். வனவாசத்தின் போது ஸ்ரீ துர்கா நக்ஷத்திரமாலா துதியை பாண்டவர்கள் ஜெபிக்க தேவியின் அருளும் அஸ்வினி முதல் ரேவதி வரையிலான இருபத்தியேழு நட்சத்திரங்களின் ஆசியும் அவர்களுக்கு கிடைத்தது.

விஜயதசமி  | Vijayadashami Celebration
விஜயதசமி | Vijayadashami CelebrationImage credit: Gemini AI

அஞ்ஞானவாசம் முடிந்த பின் வன்னி மர பொந்தில் தாங்கள் மறைத்து வைத்திருந்த ஆயுதங்களை வெளியே எடுத்து அந்த மரத்தடியில் வைத்து ஒன்பது நாட்கள் வழிபட்டு பத்தாம் நாளான விஜயதசமியில் எடுத்துக் கொண்டனர். தர்மத்தின் வடிவமான தருமரும் தனது மாங்கல்யம் பலம் குறையாமல் இருக்க சாவித்திரியும் இந்த நவராத்திரி விரதத்தை கடைபிடித்திருக்கிறார்கள்.

கண்ணபிரானம் பிருந்தாவனத்தில் நவராத்திரி விரதம் கடைபிடித்து பூஜை செய்த அன்னையின் அருள் பெற்றதாக புராண வரலாறுகள் கூறுகின்றன. விஜயனால் பூஜிக்கப்பட்டதால் விஜயதசமி என்றும் வன்னி நவராத்திரி என்றும் வன துர்கா நவராத்திரி என்று அழைக்கப்படுகிறது.

விஜயதசமியன்று வன்னி மரத்தை இருபத்தியோரு முறை பிரதட்சணம் செய்தால் நினைத்த காரியம் நிறைவேறும் என்பது ஐதீகம். கர்நாடக மாநிலத்தில் நவராத்திரி விழாவை பத்தாவது நாள் விழா தசரா என்ற பெயரில் கொண்டாடுகிறார்கள். மைசூரில் சாமுண்டீஸ்வரி தேவி கோவிலில் பத்தாவது நாள் விஜயதசமி அன்று மிகப்பெரிய ஊர்வலம் நடைபெறும்.

இதையும் படியுங்கள்:
குட்டீஸ்களுக்கு ஒரு சூப்பர் செய்தி! சரஸ்வதி பூஜையை எப்படி கோலாகலமாக கொண்டாடுவது?
விஜயதசமி  | Vijayadashami

வங்காளத்தில் துர்கா பூஜையாக கொண்டாடப்படும் நவராத்திரி விழாவில் மிகப்பெரிய காளி சிலைகளை பூஜித்து பத்தாவது நாள் ஆன விஜயதசமி அன்று அந்த சிலைகளை கடலில் விடுவார்கள். டெல்லியில் ராம நாடகத்துடன் நவராத்திரி இராமலீலா விழாவாக தொடங்கி பத்தாவது நாளான விஜயதசமி அன்று ராவணன் கும்பகர்ணன் ஆகிய உருவம் பொம்மைகள் மீது ராமனின் வில்லிலிருந்து தீ கொளுத்தப் பட்ட அம்பு மூலம் இந்த இராவண சம்ஹாரம் செய்து கொண்டாடுகிறார்கள். 

ஆந்திராவில் ஒன்பது நாட்கள் நவராத்திரி விழா கொண்டாடி பத்தாவது நாளான விஜயதசமி அன்று ஆயுதங்களையும் இசைக்கருவிகளையும் பூஜையில் வைத்து வழிபடுகிறார்கள். விஜயதசமி அன்று அம்பாளை வழிபட்டு தொடங்கும் அனைத்து காரியங்களும் வெற்றி அடையும் என்பதால் அம்பாளை வழிபட்டு பேறுகள் பல பெறலாம்.

குட்டீஸ்களா நவராத்திரியின் பத்தாவது நாளில் கொண்டாடப்படும் விஜயதசமி பற்றி தெரிந்து கொண்டீர்களா..! நீங்களும் விஜயதசமியன்று அம்பாளை வழிபட்டு கல்வி வேலை என அனைத்திலும் வெற்றி பெறுங்கள்.

logo
Kalki Online
kalkionline.com