
தற்போது தமிழகத்தில் நடிகரும், தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய்க்கு மத்திய உள்துறை அமைச்சகம் ‘Y’ பிரிவு பாதுகாப்பை வழங்கியுள்ளது. எக்ஸ் தளத்தில் விஜய்க்கு எதிராக வந்த சில அச்சுறுத்தல் கருத்துக்களால் இந்த பாதுகாப்பு அவருக்கு அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ‘Y’ பிரிவு பாதுகாப்பு என்பது என்ன?
‘Y’ பிரிவு பாதுகாப்பு என்பது, தீங்கு விளைவிக்கும் குறிப்பிட்ட அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் நபர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகத்தால் (MHA) வழங்கப்படும் மிதமான அளவிலான பாதுகாப்பாகும். இது ஆயுதமேந்திய போலீஸ் அதிகாரிகள் மற்றும் கமாண்டோக்களை உள்ளடக்கிய பாதுகாப்பு குழுவாகும்.
‘Y’ பிரிவு பாதுகாப்பானது பொதுவாக எட்டு முதல் பதினொரு பேரை உள்ளடக்கிய மிதமான அளவிலான பாதுகாப்பை வழங்குகிறது. அதாவது ஒன்று அல்லது இரண்டு தேசிய பாதுகாப்பு காவலர் (என்எஸ்ஜி) கமாண்டோக்கள், சிவில் போலீஸ் அதிகாரிகள் மற்றும் இரண்டு தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரிகள் இந்த பிரிவின் உள் அடக்கமாகும். நம் நாட்டில் இந்த ‘Y’ பிரிவு பாதுகாப்பு மட்டத்தின் கீழ் உள்ள நபர்களில் பல அரசியல்வாதிகள் மற்றும் பொது நபர்கள் உள்ளனர்.
‘Y’ பிரிவில் ஒரு ஆயுதம் ஏந்திய காவலர் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள நபரின் வீட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார். மேலும் 9 மிமீ பிஸ்டலுடன் ஒருவரும், ஸ்ன் கன் உடன் ஒருவரும் என இரண்டு பாதுகாப்பு அதிகாரிகள் இடம் பெறுவர். அதாவது ‘Y’ பாதுகாப்பு பிரிவில் உள்ள 11 பேரும் ஷிஃப்ட் முறையில் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள நபருக்கு பாதுகாப்பு அளிப்பார்கள். இந்த ‘Y’ பிரிவு பாதுகாப்பு ஒருவர் எந்த மாநிலத்தில் உள்ளாரோ அங்கு மட்டும் வழங்கப்படும் பாதுகாப்பு முறையாகும். அதுமட்டுமின்றி இரவு நேரங்களில் கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்படும்.
இந்தியாவில் குடியரசு தலைவர், பிரதமர் தொடங்கி நாட்டில் மிக முக்கியமான அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், திரைத்துறை பிரபலங்கள், தொழிலதிபர்கள் என பல்வேறு துறையில் உள்ள முக்கியமானவர்களுக்கு பல வகையான பாதுகாப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.
பண பலம், அரசியல் பலம் என ஒவ்வொருவருக்கும் அவர்கள் வகிக்கும் பதவி மற்றும் அச்சுறுத்தல் போன்ற காரணங்களில் அடிப்படையில் இந்திய அரசாங்கம் அளிக்கப்படும் பாதுகாப்புகளில் பிரிவுகள் உள்ளது.
நாட்டிலேயே மிக முக்கிய பாதுகாப்பு என்றால் அது சிறப்பு பாதுகாப்பு குழு எனப்படும் எஸ்பிஜி பாதுகாப்பு தான். இது 180 வீரர்களை கொண்ட மெய்க்காவலர்கள் படைப்பிரிவாகும். முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் படுகொலைக்கு பிறகு உருவாக்கப்பட்ட இந்த முக்கியத்துவம் வாய்ந்த எஸ்பிஜி பாதுகாப்பு படை, பிரதமர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படுகிறது.
இந்தியாவில் பல்வேறு வகையான பாதுகாப்பு பிரிவுகள் இருந்தாலும் எக்ஸ், ஒய், ஒய் +, இசட் மற்றும் இசட்+ என்ற பாதுகாப்பு பிரிவுகள் முக்கியமானதாக கருதப்படுகின்றன. அவை தனிநபரின் உணரப்பட்ட ஆபத்து நிலையின் அடிப்படையில் பாதுகாப்பு பிரிவுகள் ஒதுக்கப்படுகின்றன.
பாதுகாப்பை யார் கோருகிறார்கள், அதற்கான காரணங்கள் என்ன, உயிருக்கு உண்மையான அச்சுறுத்தல் உள்ளதா போன்ற காரணிகளைக் கருத்தில் கொண்டு மட்டுமே அரசாங்கம் பாதுகாப்பை அங்கீகரிக்கிறது. அதன்படி, பாதுகாப்பைக் கோரும் நபர் கட்டணம் செலுத்த வேண்டும் அல்லது பாதுகாப்பிற்காக ஒரு பாதுகாப்புத் தொகையை டெபாசிட் செய்ய வேண்டும்.
பிரபலங்கள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு ‘Y’ பிரிவு பாதுகாப்பு வழங்கிட ஒரு மாதத்திற்கு ரூ.12 லட்சம் செலவு செய்யப்படும்.
ஏற்கெனவே சல்மான் கான், ஷாருக்கான், கங்கனா ரனாவத் ஆகியோருக்கு Y+ பிரிவு பாதுகாப்பு வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.