குழந்தைகளுக்கான 2 நீதிக்கதைகள்!

The Lazy Cow and the Wise Farmer
Moral stories for childrenAI Image
Published on

1. நண்பனை நண்பனால் அறியலாம்!

Farmer and the cow
Farmer and the cowAI Image

விவசாயி ஒருவன் உழவு மாடு வாங்குவதற்காகக் கிளம்பினான். அப்பொழுது வழியில் தன் நண்பனைச் சந்தித்தான். அவனிடம் இருந்த உழவு மாட்டைப் பார்த்து, "நண்பா, நான் புதிதாக மாடு வாங்கச் செல்கிறேன். நீ உன் மாட்டை விற்கப் போகிறாயா? அப்படி என்றால், எனக்கு உனது மாட்டை விற்பாயா?" என்று கேட்டான். அதற்கு நண்பனும் சம்மதித்தான்.

"ஆனால் ஒரு நிபந்தனை! அந்த மாட்டை என் வீட்டுக்குக் கொண்டு போய் ஒரு சோதனை நடத்துவேன். அதில் உனது மாடு தேறினால் மட்டுமே வாங்கிக் கொள்வேன்," என்றான் விவசாயி. நண்பனும் அதற்குச் சரி என்று கூறி மாட்டைக் கொடுத்தான்.

விவசாயி அந்த மாட்டைக் கொண்டு சென்று, தன் தொழுவத்தில் நின்ற மற்ற மாடுகளுடன் சேர்த்தான். அந்தப் புதிய மாடு, அங்கே நின்றிருந்த மாடுகளிலேயே எது மிகவும் சோம்பேறியோ, எது அதிக தீனி தின்னுமோ, அந்த மாட்டுடன் போய்ச் சேர்ந்து கொண்டது. உடனே அவன் அந்த மாட்டை இழுத்துக் கொண்டு நண்பனிடம் வந்தான்.

"எனக்கு இந்த மாடு வேண்டாம்," என்றான்.

"எப்படி இவ்வளவு குறுகிய காலத்திலேயே இதை நீ சோதித்துப் பார்த்தாய்?" என்று நண்பன் ஆச்சரியமாகக் கேட்டான்.

அதற்கு அவன், "இதற்குச் சோதனையே தேவை இல்லை நண்பா! தொழுவத்தில் இருந்த மாடுகளில் எப்படிப்பட்ட மாட்டை உனது மாடு நண்பனாகத் தேர்ந்தெடுத்தது என்பதைப் பார்த்தாலே போதுமானது," என்றான்.

நீதி: ஒருவனுடைய குணத்தை அவனோடு நட்புக் கொண்டிருப்பவர்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம். எனவே, எப்போதும் நல்லவர்களின் நட்பையே கொள்ள வேண்டும்.

இதையும் படியுங்கள்:
நரியின் தந்திரமும் நாயின் புத்திசாலித்தனமும்!
The Lazy Cow and the Wise Farmer

2. ஆதாயப் பேச்சு அபத்தம்!

Men with watch
Men with watchAI Image

இரண்டு பேர் ஒருவருக்கொருவர் துணையாகப் பயணம் செய்து கொண்டிருந்தனர். அப்பொழுது வழியில் ஒரு கடிகாரம் கிடந்தது. அதை முதலில் பார்த்தவர், "நான் ஒரு கடிகாரத்தைக் கண்டெடுத்தேன்," என்று சொல்லிக்கொண்டே அதை எடுத்தார்.

உடனே மற்றவர், "அப்படிச் சொல்லக்கூடாது நண்பரே! 'நான்', 'நீ' என்று பிரித்துப் பேசக்கூடாது. 'நாம் கண்டெடுத்தோம்' என்றுதான் சொல்ல வேண்டும்," என்றார்.

அவர்கள் சிறிது தூரம் செல்வதற்குள், அந்தக் கடிகாரத்தைத் தொலைத்தவர் எதிரே வந்தார். இவர்களிடம் கடிகாரம் இருப்பதைக் கண்டு, "கடிகாரத்தை எடுத்தது யார்?" என அவர் கோபமாகக் கேட்டார்.

இதையும் படியுங்கள்:
சிறுவர் சிறுகதை: பொறுமை பெருமை தரும்!
The Lazy Cow and the Wise Farmer

அதற்குக் கடிகாரத்தை எடுத்தவர், "நாங்கள் எடுத்தோம்," என்றார்.

உடனே, சற்று நேரத்திற்கு முன் அவருக்குப் பேசக் கற்றுக் கொடுத்தாரே அந்த நண்பர், அவர் குறுக்கிட்டு, "தப்பு தப்பு! அப்படிச் சொல்லக்கூடாது. கண்டெடுத்தவுடன் நீங்கள் சொன்னீர்கள் பாருங்கள், 'நான் கண்டெடுத்தேன்' என்று... அதுதான் சரி! இப்போதும் அதைத்தான் சொல்ல வேண்டும். 'நாங்கள்' என்று சொல்லக்கூடாது," என்று நழுவினார்.

நீதி: தனக்கு ஆதாயம் கிடைக்கும் என்றால் ஒரு மாதிரியும், இழப்பு ஏற்படும் என்றால் வேறு மாதிரியும் பேசுவது அபத்தமானது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com