கிரேட் நிக்கோபர் சுனாமி - I சுனாமியில் சிக்கிய ஒரு ஆமை ஆராய்ச்சியாளரின் மரண போராட்டம்!

கிரேட் நிக்கோபர் தீவில் ஆமை ஆராய்ச்சியின் போது சுனாமியில் சிக்கி உயிர் தப்பிய சா அகுவின் அதிர்ச்சி வாக்குமூலம்.
சுனாமி பேரலை - Andaman Sea Turtle
சா அகு வலது புறத்திலிருப்பவர் -சுனாமி பேரலை
Updated on
Kalki Strip
Kalki Strip

-Article written in English by Zai Whitaker

-Tamil Translation by Priyanka R

கிரேட் நிக்கோபரின் சுனாமிப் பேரழிவு -1

(டாக்டர் மனிஷ் சாண்டியின் பங்களிப்புடன்)

இதயத்தில் ஆழமாகப் பதிந்துவிடும் வெகுசில உரையாடல்களில் இதுவும் ஒன்று. சென்னை முதலைப்பண்ணையின் ஆராய்ச்சி நிலையங்களில் ஒன்றான அந்தமான் மற்றும் நிக்கோபர் சுற்றுச்சூழல் குழுவைச் (Andaman and Nicobar Environment Team) சேர்ந்த சா அகுவுடன் பேசிக்கொண்டிருந்தேன். 2004 டிசம்பர் சுனாமி பேரலையின்போது கிரேட் நிக்கோபரில் அவருக்கு நிகழ்ந்த சம்பவங்களைப் பற்றி நாங்கள் பேசிக் கொண்டிருந்தோம்.

"உங்களுக்கு அது மிகவும் துயரமான காலமாக இருந்திருக்கும் அல்லவா?" என்றேன்.

"ஆம். என்னுடன் இருந்தவர்களுக்கு என்ன ஆனது, எங்கே இருக்கிறார்கள் என்பதை நினைத்து நான் மிகவும் கவலையுற்றிருந்தேன்."

அவரது கதையை விவரமாகக் கேட்டபிறகு, இது ஒரு துறவியின் பதில் போலத் தோன்றியது.

“இந்தியாவின் ஆமை மனிதர்” என்றழைக்கப்படும் சதீஷ் பாஸ்கர் அவர்கள், 1978 மற்றும் 1979-களின்போது, சென்னை பாம்புப்பண்ணையின் கள ஆய்வுக்குழுவில் முக்கியமான ஒரு நபராக இருந்தார். அவர், அந்தமான் மற்றும் நிக்கோபர் தீவுகளில் தொடர் எட்டுமாத கடல்ஆமை கணக்கெடுப்பை அப்போதுதான் முடித்திருந்தார்.

கடல் ஆமைகள் குறித்தான ஓர் பாதுகாப்புத் திட்டத்தை வகுத்து இந்திய அரசிடம் சமர்ப்பிப்பதற்காகவும், அங்குள்ள கடல் ஆமைகளின் முட்டையிடும் பகுதிகள், அதன் வாழ்விடங்களுக்கு நிலவிவரும் அச்சுறுத்தல்கள் குறித்தும் அவர் ஆய்வு செய்துகொண்டிருந்தார்.

முதலைப்பண்ணையின் Hamadryad செய்திமடலில் வெளியான அவரது அறிக்கையில், "அலெக்ஸாண்ட்ரியா மற்றும் டாக்மர் நதிகளை ஒட்டியுள்ள கடற்கரைகளில், Leatherback turtles எனப்படுகிற ஓங்கல் ஆமைகளின் முட்டையிடும் பகுதிகளின் தடயங்கள் சுமார் 80 இடங்களில் கண்டறியப்பட்டுள்ளன", என்று குறிப்பிட்டிருந்தார். இச்செய்தி எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது. இவ்வகையான அற்புதமான உயிரியல் பல்வகைமை செறிந்துள்ள இடத்தில், ஒரு களஆய்வு நிலையத்தை நிறுவுவதற்கு இது ஒரு முக்கிய காரணமாக அமைந்தது. 1989 ஆம் ஆண்டு தெற்கு அந்தமானில் உள்ள வண்டூரில் (Wandoor), அந்தமான் மற்றும் நிக்கோபர் சுற்றுச்சூழல் குழுவான ANET நிறுவப்பட்டது.

சுனாமி பேரலை - Andaman Sea Turtle
ஓங்கல் ஆமை

உலகிலுள்ள கடல் ஆமைகள் மொத்தம் ஏழு வகைப்படும். அவற்றில், ஓங்கல் ஆமைகள் (Leatherback turtle), பச்சை ஆமைகள் (Green sea turtle), அழுங்காமைகள் (Hawksbill sea turtle) மற்றும் சிற்றாமைகள் (Olive ridley sea turtle) போன்ற நான்கு வகையான கடல் ஆமைகள் உட்பட எண்ணற்ற அழிந்துவரும் நிலையிலுள்ள ஊர்வன இனங்களுக்கும் அந்தமான் மற்றும் நிக்கோபர் புகலிடமாக உள்ளது.

இந்தியா முழுவதிலிருந்தும் இளம் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் கல்லூரிமாணவர்களால் பல்வேறு ஆராய்ச்சிகள் இங்கு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்தமானில் வசித்துவரும் கரேன் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் அவர்களுக்கு கள உதவியாளர்களாக இருந்து வருகின்றனர்.

ஒரிஸ்ஸாவைச் சேர்ந்த டாக்டர் அம்பிகா திரிபாதி கடல் ஆமை ஆராய்ச்சியாளர்களில் ஒருவர். சா அகு அவருடைய கள உதவியாளராக இருந்தார். 2004 ஆம் ஆண்டு சுனாமிக்கு சிலநாட்களுக்கு முன்பு, அவர்கள் அலெக்சாண்ட்ரா மற்றும் டாக்மருக்கு வெகுதெற்கே உள்ள கலாத்தியா ஆற்றினருகில் இருந்தனர். அப்பகுதி இந்தோனேசியாவின் சுமத்ரா தீவிலிருந்து கடல் மார்க்கமாக வெறும் 180 கிலோமீட்டர் தொலைவே இருந்தது.

கலாத்தியா ஆற்றின் முகத்துவாரத்தில் உள்ள South Bay எனும் பகுதியானது, ஓங்கல் ஆமைகள் முட்டையிடும் பகுதியாகவும், வருடந்தோறும் ANET-ன் முகாம்கள் அமைக்கும் இடமாகவும் இருந்துவருகிறது. இவ்விடம் Campbell Bay-விலிருந்து 41 கிலோமீட்டர் தெற்கே அமைந்திருந்ததால் “Point 41” என்று அழைக்கப்படுகிறது. இத்தீவின் பெரும்பான்மையான நிலப்பரப்பு, கிரேட் நிக்கோபர் உயிர்க்கோள காப்பகத்தின் ஒரு பகுதியாகும்.

மற்ற கடல் ஆமைகளைப் போலவே, ஓங்கல் ஆமைகளும் முட்டையிடுவதற்கு கடற்கரைக்கு வரும். இச்செயல், பொதுவாக இரவு நேரங்களில்தான் நடைபெறும். கடற்கரை மணலில் சுமார் 18 அங்குல ஆழத்தில் குழி தோண்டி, அதில் முட்டையிட்டபின் அவற்றைத் தன் கால்களால் மூடிவிடும். பின்னர், மற்றோரு இடத்தில் ஆழமற்ற குழி ஒன்றை தோண்டி, False nesting எனப்படும் போலியான கூட்டை உருவாக்குகிறது. நரிகள் மற்றும் தெருநாய்கள் போன்ற விலங்குகள் மற்றும் வேட்டையாடி பறவைகளிடமிருந்து தன் முட்டைகளை பாதுகாப்பதற்காக இவை அவ்வாறு செய்கின்றன.

சுனாமி பேரலை - Andaman Sea Turtle
ANET ஆராய்ச்சி நிலையம்

2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தின்போது, பூனேவைச் சேர்ந்த சில இயற்கை ஆர்வலர்களும் அம்பிகா மற்றும் சா அகுவுடன் ANET ஆராய்ச்சி நிலையத்திற்கு வருகை தந்திருந்தனர். கிரேட் நிக்கோபரில் நடைபெற்றுக் கொண்டிருந்த ஓங்கல் ஆமைகள் குறித்தான ஆராய்ச்சியில், Dr. அம்பிகா குழுவினருக்கு உதவுவதற்காகவும், மேலும் அங்குள்ள பறவைகளை பற்றி அறிந்துகொள்வதற்காகவும் அவர்கள் வந்திருந்தனர்.

சுனாமிக்கு முந்தைய நாள் இரவின்போது, ஆராய்ச்சிக் குழுவினரும், அந்தமான் மற்றும் நிக்கோபர் வனத் துறையின் இரண்டு வனக்காப்பாளர்கள் உட்பட, கிரேட் நிக்கோபரின் தற்காலிக முகாம் ஒன்றில் தங்கி இருந்தார்கள்.

Dr.அம்பிகா மற்றும் சா அகு, இரவு முழுவதும் அத்தீவை சுற்றிலும் ஆமைத்தடயங்களை தேடிவிட்டு, விடிவதற்கு சற்று முன்பு தங்களது முகாமிற்கு திரும்பினர்.

களைப்பால் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தவர்கள், சில மணிநேரங்களுக்குப் பிறகு, பூமி பயங்கரமாக அதிர்ந்த சத்தம் கேட்டு திடுக்கிட்டு எழுந்தனர். வருடந்தோறும் ரிக்டர் அளவுகோலில் சுமார் 4 அளவுடைய சிறிய நிலநடுக்கங்கள் ஏற்படுவது சகஜம். ஆனால் அன்றைய நிலநடுக்கம், மிகவும் தீவிரமாக இருப்பதை சா அகுவால் உணர முடிந்தது. அது 9-க்கும் அதிகமான அளவுள்ள நிலநடுக்கம் என்பதை அகு பின்னர் அறிந்துகொண்டார்.

இதையும் படியுங்கள்:
அப்பப்பா! ஒரு சதுர அங்குலத்தில் ஆயிரக்கணக்கான முடிச்சுகள்... பாரசீக கம்பளங்களின் அழியா கலை நுட்பங்கள்!
சுனாமி பேரலை - Andaman Sea Turtle

மொத்தக் குழுவினரும் கடற்கரைக்கு ஓடிச்சென்று பார்க்கும்போது, கடல்நீர் மிகவேகமாக உள்வாங்கிக் கொண்டிருந்தது. சிறிதுநேரம் கழித்து, உள்வாங்கிய நீர் முழுவதும் மீண்டும் வேகமாகப் பாய்ந்து வந்து, அவர்களின் ஒட்டுமொத்த உடைமைகளையும் உடைத்து நொறுக்கிப்போட்டது. நிலநடுக்கங்கள் இடைவெளி விட்டு விட்டு தொடர்ந்த வண்ணம் இருந்தன. கடல் உள்வாங்கியது, பின்னர் மீண்டும் அந்த நீர் ஆர்ப்பரித்துக் கொண்டு கரைக்கு வந்தது.

நேரம் செல்ல செல்ல, அவர்கள் அனைவரும் பாதுகாப்பான ஓர் உயரமான இடத்திற்கு செல்லவேண்டும் என்பது அகுவிற்கு தெளிவாக தெரியத்தொடங்கியது. அருகிலிருந்த மலைப்பகுதியை நோக்கி ஓடவேண்டும் என்று அவர்களை எச்சரித்தவாறு ஓடத் தொடங்கினர். கண்ணிமைக்கும் நேரத்தில் அவர்களின் முகாம் அடித்துச்செல்லப்பட்டது.

கலாத்தியா ஆற்றின் குறுக்கே இருந்த பாலத்தை அவர்கள் கடந்து சென்ற மறுநிமிடமே, மொத்த பாலமும் நீரில் மூழ்கியது. அவர்களைச் சுற்றிலும் கடல்நீர் அதிகரிக்கத் தொடங்கியது. அலைகளின் உயரம் உயர்ந்துகொண்டே இருந்தது. அகு, அவர்களுக்கு மிக அருகிலிருந்த பெரிய அரசமரம் ஒன்றை கை காட்டி, குழுவினரை அதில் ஏறுமாறு கூறினார்.

இதையும் படியுங்கள்:
குழந்தைகளுடன் இயற்கையை ரசிக்க இதோ சில 'அட்வென்ச்சர்' இடங்கள்!
சுனாமி பேரலை - Andaman Sea Turtle

ஒவ்வொருவரும் அதில் ஏறிக்கொண்டிருக்கும்போதே, அவர்களுக்கு கீழே நீர்மட்டமும் அதிகரித்துக்கொண்டே இருந்தது. நீருக்கும் அவர்களுக்கும் வெறும் 5 மீட்டர் இடைவெளியே இருந்தபோது, திடீரென்று சுமார் 15 மீட்டர் உயரமுடைய அலையொன்று, பெருத்த சீற்றத்துடன் அவர்களை நோக்கிப் பாய்ந்து வந்தது. ஒட்டுமொத்த மரங்களும் அந்தப் பேரலையினால் சுக்குநூறாய் உடைந்து வேரோடு முறிந்து விழுந்தன.

பழமையான வலுவான மரங்களும் தீக்குச்சிகளைப் போல் சரிந்து விழத் தொடங்கின, அவர்கள் ஏறிக்கொண்டிருந்த அரசமரம் உட்பட. அடுத்தகணமே இராட்சத அலையால், அவர்கள் அனைவரும், சுழன்றுகொண்டிருந்த, துர்நாற்றம் நிறைந்த அந்த நீருக்குள் தூக்கி எறியப்பட்டனர். அதில் காயமுற்று அதிர்ச்சியடைந்த அவர், மரச்சிதைவுகளுக்குள் எங்காவது இருப்பார்கள் என நம்பிக்கையில் அவரது குழுவினரை மீண்டும் மீண்டும் அழைத்துப் பார்த்தார். ஆனால் அகுவிற்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை.

(தொடரும்)

logo
Kalki Online
kalkionline.com