Interview: "என் சொந்த வாழக்கையில் நடந்ததைதான் குறும்படமாக எடுத்துள்ளேன்" - தேவயானி!
"நேத்து சினிமாவுக்கு வந்த மாதிரி இருக்கு, முப்பது வருஷம் ஓடிபோச்சு, இந்த முப்பது வருஷத்துல நிறைய மாறுபட்ட மனிதர்கள் வெற்றிகள், தோல்விகள், மகிழ்ச்சி, சோகம் என பல விஷயங்களை கடந்து வந்துட்டேன்," என சிரித்தபடி சொல்கிறார் தேவயானி. சினிமா, டிவி நடிகை, தயாரிப்பாளர் என பன்முக திறமை கொண்டவர். தற்போது 'கைக்குட்டை ராணி' என்ற குறும்படத்தை இயக்கி உள்ளார். ஜெய்பூரில் நடந்த திரைப்பட விழாவில் இப்படம் சிறந்த குறும்படமாக தேர்வு செய்யப்பட்டு, சிறந்த குறும்பட இயக்குனர் விருதை இப்படத்தை இயக்கியதற்காக தேவயானி பெற்றுள்ளார். இப்படம் இயக்கியதற்கான காரணம், இளையராஜா, தம்பி நகுல் என பல விஷயங்களை நம் மங்கையர் மலர் ஆன்லைன் இதழுக்காக பகிர்ந்து கொள்கிறார்.
யார் இந்த 'கைக்குட்டை ராணி'?
இன்று பெற்றோர்கள் பலர் தங்கள் குழந்தைகளை பிரிந்து வெளியூர்களிலும், தூர தேசங்களிலும் பணி புரிகிறார்கள். இவர்களின் குழந்தைகளின் ஏக்கங்கங்களை சொல்லும் படம் தான் கைக்குட்டை ராணி. வெளியூரில் வேலை செய்யும் அப்பாவை பிரிந்து தாத்தா பாட்டியிடம் வளரும் பெண் குழந்தை மனதில் இருக்கும் வலியை சொல்வதுதான் இந்த கைக்குட்டை ராணி.
இந்த கதைக்கு இன்ஸ்பிரேஷன் யார்?
வேறு யாரும் இல்லை. நானே தான். சிறு வயதாக இருக்கும் போது பல ஆண்டுகள் என் அப்பா வெளிநாட்டில் வேலை செய்து வந்தார். ஆண்டுக்கு ஒரு முறை தான் வருவார். அவர் வரும் நேரங்களில் எங்கள் குடும்பம் மிக மகிழ்ச்சியாக இருக்கும். அப்பா திரும்பி செல்லும் போது மிக வருத்தமாக இருக்கும். என் குழந்தை பருவத்தில் என் அப்பாவுக்காக ஏங்கிய நாட்கள்தான் இந்த கைக்குட்டை ராணிக்கான இன்ஸ்பிரேஷன்.
இந்த படத்திற்காக இளையராஜாவை அணுகிய போது ஏற்பட்ட அனுபவம் எப்படி?
பலரும் சொல்வது போல பயம்தான் இருந்தது. ஒரு வழியாக தைரியத்தை வரவழைத்து கொண்டு ராஜா சாரை பார்த்தேன். படத்தை பார்த்த ராஜா சார் இரண்டே நாட்களில் மியூசிக் கம்போஸ் செய்து தந்தார். போனஸாக நான் கேட்காமலே ஒரு பாடல் எழுதி தந்தார். இந்த பாடலை எனக்கு கிடைத்த ஆசீர்வாதமாக பார்க்கிறேன். மேலும் எடிட்டர் லெனின் அவர்களுக்கு போன் செய்து இப்படி ஒரு படம் பண்ணியிருக்கேன் என்று போன் பண்ணி சொன்ன உடனேயே "நான் எடிட் பண்ணி தரேன், நீ படத்தை அனுப்பு" என்று நான் கேட்பதற்கு முன்னால் சொன்னார். இவர்களை போல நல்ல உள்ளங்களின் ஆதரவுதான் இத்தனை வருடங்களில் நான் சம்பாதித்த சொத்தாக நினைக்கிறேன்.
கைக்குட்டை ராணியை விருதுக்கு அனுப்பும் எண்ணம் எப்படி வந்தது?
நான் 30 வருடங்களில் பல படங்கள் நடித்திருந்தாலும் என் படங்கள் திரைப்பட விழாக்களில் ஸ்க்ரீன் ஆக வில்லையே என்ற வருத்தம் இருந்தது. இதை போக்கும் விதமாக என் குறும்படத்தை அனுப்ப முடிவு செய்தேன். பல பேரிடம் எப்படி அனுப்புவது என கேட்டு தெரிந்து கொண்டு படத்தை அனுப்பினேன். பல படங்களுக்கு நடுவில் என் படத்திற்கு விருது கிடைக்கும் என எதிர் பார்க்கவில்லை. என் பெயரை மேடையில் சொல்லும் போது என்னால் நம்ப முடியவில்லை.
உங்கள் குடும்பத்தினரின் பங்களிப்பு உங்களின் படைப்புக்கு கிடைத்ததா?
என் கணவர் ராஜகுமாரன் ஸ்கிரிப்ட்டை பார்த்து விட்டு ஓகே சொன்னார். என் மூத்த மகள் இனியா விஸ்காம் படிக்கிறார். எனவே இனியா ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு வந்து நிறைய டெக்னிகல் விஷயங்களை பார்த்து கொண்டார். படம் ஆரம்பித்து முடிக்கும் வரை இனியாவின் சப்போர்ட் இருந்தது. இரண்டாவது மகள் பிரியங்கா இப்போது ப்ளஸ் டு படிக்கிறாள். படிப்பை முடித்து விட்டு என்ன செய்ய போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
கோலங்கள் - 2 எப்ப எதிர் பார்க்கலாம்?
நாங்க ஆர்ட்டிஸ்ட் எல்லோரும் ரெடி. டைரக்டர் ரெடியா இருக்காரு. விகடன் டெலி விஸ்ட்டா, சன் டிவி யும் ஓகே சொல்லிட்டா ஷூட்டிங் கிளம்ப வேண்டியதுதான்.
எப்படி இருக்காரு தம்பி நகுல்?
தம்பி முன்னாடி விட இப்ப பொறுப்போட நடந்துகிறான். பக்குவமா பேசுறான். அவனை விட 11 வயது மூத்தவள் நான். அவன் அம்மா கிட்ட வளர்ந்ததை விட என்கிட்ட வளர்ந்ததுதான் அதிகம். நான் நகுலுக்கு இன்னொரு அம்மா. அவனுக்கான நேரம் இன்னும் சினிமாவில் வரல. வரும் போது என் தம்பியின் திறமைகள் இன்னும் நல்லா தெரிய வரும். ஒரு அம்மாவாக அந்த நாளுக்காக காத்திருக்கிறேன்.