62 வருடங்களாக கண் விழித்திருக்கும் அதிசய மனிதர் - தாய் என்கோக்!

கடந்த 62 ஆண்டுகளாகத் தூங்காமல் வாழ்ந்து வரும் தாய் என்கோக் பற்றிய உண்மையும், ஆச்சரியமும்.
தாய் என்கோக் | Thai Ngoc
தாய் என்கோக் | Thai Ngoc
வைகறை கண்ணன்

வணக்கம். நான், அனைத்து ஊடக, பத்திரிக்கைகள், கலை நிகழ்ச்சிகள், ஆகியவற்றில் விளம்பரங்கள் வெளியிட்டு தரும் விளம்பர ஏஜென்ஸி தொழில் செய்து வருகிறேன். விளம்பரப்படம் தயாரிப்பாளராகவும் இருந்து வருகிறேன். பல முன்னணி பத்திரிக்கைகள், வார, மாத, இணைய இதழ்களிலும் சிறுகதைகள், கவிதைகள் எழுதிவருகிறேன். கட்டுரைகள் எழுதுவதற்கு வாய்ப்பு வழங்கிய கல்கி ஆன்லைன் குழுமத்திற்கு என்றென்றும் நன்றி நவில கடமைப்பட்டுள்ளேன். முதல் காதல்! முதல் வாய்ப்பு! முதல் வெற்றி! முக்கியம் தானே..!

Updated on: 
Kalki strip
Kalki strip

உங்களால் ஒருநாள் தூங்காமல் இருக்க முடியுமா? அதுவும் ஆரோக்கியமாக. ஆனால், எந்த வித உடல் பாதிப்புகளும் இல்லாமல் ஒருவர் 62 ஆண்டுகள் துளியும் தூங்காமல், அன்றாட வேலைகளில் சுறுசுறுப்பாக செயல்பட்டு வருகிறார் என்றால், நம்பமுடிகிறதா? அறிவியல் ரீதியாகவும், மருத்துவ உலகிலும் கூட நம்புவதற்கு மிகக் கடிமான விஷயம் தான்!

இரவு என்பதே உலகிற்கே ஓய்வு தரும் நேரம். பகல் முழுதும் உழைத்து களைத்து வரும் மனிதர்களுக்கு இரவு ஒரு வரப்பிரசாதம். அமைதியான ஒரு கனவு உலகில் மூழ்கி வண்ணக் கனவுகள் காணும் ஒரு அற்புதக் கணம். அதுவே பொய்த்துப் போனால், அவருக்கு இரவே மிகப் பெரிய சிறைச்சாலையாகி விடுகிறது.

மன அழுத்தம், வாழ்க்கைப் போராட்டங்கள், ஓயாத சிந்தனைகள், உடலியல் சார்ந்த சிக்கல்கள் என எதுவாக இருந்தாலும், அவை அவர்களின் கண்களிலிருந்து தூக்கத்தைத் திருடிக் கொள்கின்றன.

தூக்கமின்மை என்பது வெறும் சோர்வு சார்ந்த விஷயம் மட்டுமல்ல, அது ஒரு மனிதனின் அமைதியையும், உடல் ஆரோக்கியத்தையும் மெல்ல மெல்ல அரித்துத் தின்னும் நோயாக உருவாகிவிடுகிறது.

இயற்கையின் கொடையாகிய ஆழ்ந்த தூக்கமும், முறையான வாழ்க்கையும், மன அமைதியுமே, ஒருவரை தனிமைச் சிறையிலிருந்து அவர்களை மீட்கக் கூடிய ஒரே வழியாகும்.

தாய் என்கோக் | Thai Ngoc
தாய் என்கோக் | Thai Ngoc

வியட்நாமின் குவாங் நாம் (Quang Nam) மாகாணத்தில் உள்ள சிறிய கிராமத்தில் வசித்து வருகிறார், தாய் என்கோக் (Thai Ngoc). 1942 ல் பிறந்தவர். இவருக்கு வயது 84 ஆகும். இவரே உலகின் “தூக்கமில்லாத மனிதர்“ (Man Who Never Slept) என்று எல்லோராலும் வியப்பாக அழைக்கப்படுகிறார். இவர் 1962-ம் ஆண்டு முதல் 62 ஆண்டுகள் தூங்காத அதிசய மனிதர்.

இவர் தனது 20-ஆவது வயதில் இவருக்கு ஏற்பட்ட கடுமையான காய்ச்சலுக்குப் பிறகு, இவரது தூங்கும் திறன் முற்றிலும் மறைந்து போனது.

பொதுவாக மனிதர்கள் சில நாட்கள் தூங்க வில்லை என்றால் மரணம் கூட ஏற்படலாம். ஆனால், தாய் என்கோக் எவ்வித உடல் நலப் பாதிப்புகள் இன்றி, தினமும் விவசாய வேலைகளைச் செய்வது, கனமான காய்கறி மூட்டைகளைச் சுமப்பது என பம்பரமாக சுழன்று வருவது கண்டு உள்ளுர் மக்கள் மூக்கின் மீது விரலை வைத்து அதிசயித்துப் பார்க்கிறார்கள்.

இதையும் படியுங்கள்:
பெயரே இல்லாத விசித்திரமான இந்திய ரயில் நிலையம்! 18 ஆண்டுகளாக தொடரும் ஆச்சரியம்!
தாய் என்கோக் | Thai Ngoc

17 வயது மாணவரான ரேன்டி கார்ட்னர் 1964-ல் தூக்கமின்மை உலக சாதனையை தொடங்கினார். அவர் தொடர்ந்து 11 நாட்கள் மற்றும் 25 நிமிடங்கள் தூங்காமல் விழித்திருந்தார். உடனே அவருக்கு உடலில், மனதில் சில மாற்றங்கள் ஏற்பட்டதை கண்டுபிடிக்கப் பட்டது.

கடுமையான கோபம், மனநிலை மாற்றம், இல்லாதவை இருப்பது போன்று உணர்வது என உடல் நலப் பாதிப்புகள் ஏற்பட்டது. உடனடியாக 1997-லிருந்து தூக்கமின்மை சாதனைப் பிரிவை கின்னஸ் நிறுவனம் அதிகாரப் பூர்வமாக நீக்கிவிட்டது.

மரண தூக்கமின்மை நோய் என்பது உலகில் சில குறிப்பிட்ட குடும்பங்களுக்கு மட்டுமே வரக்கூடிய மிக அரிதான மரபணு நோயாகும். இந்த நோய் தாக்கிய மனிதர்களுக்கு மூளையில் உள்ள “தலாமஸ்“ (Thalamus) பகுதி பாதிக்கப்பட்டு அவர்களால், பல மாதங்களுக்கு முற்றிலும் தூங்கவே முடியாது. தொடர்ச்சியான தூக்கமின்மையால் உடல் உறுப்புகள் செயலிழந்து, இறுதியில் மரணத்தில் முடிகிறது.

இதையும் படியுங்கள்:
வகுப்பறைக்கு அப்பால் ஒரு உலகம்: மாணவ தன்னார்வ இயக்கத்தின் மனிதநேயப் பயணம்!
தாய் என்கோக் | Thai Ngoc

இத்தனை அறிவியலையும், விஞ்ஞானத்தையும் கடந்து, 62 ஆண்டுகள் தூங்காமல் இருந்தும், வயலுக்குச் சென்று எல்லா விவசாய வேலைகளையும் செய்து கொண்டு இயல்பாக வாழ்ந்து வரும் தாய் என்கோக்கின் விசித்திரத்தை, இன்றும் மருத்துவர்களும், விஞ்ஞானிகளும், உலக ஊடகங்களும் ஒரு புரியாத புதிராகவே பார்க்கின்றனர், இந்த தூங்காத அதிசய மனிதரை!

இந்தக் கட்டுரையை வாசிக்கும்போது மனித உடல் மற்றும் மூளையின் எல்லைகளைப் பற்றிய முற்றிலும் புதிய பரிமாணங்களைப் புரிந்துகொண்டு, விசித்திரமான மருத்துவ உண்மைகளை ஆழமாக அறிந்துகொள்ளும் தெளிவைப் பெறுவீர்கள்.

logo
Kalki Online
kalkionline.com