
அமெரிக்காவிலுள்ள கொலொரோடாவிலுள்ள புரூட்டா எனுமிடத்தில் லில்யாட் ஒல்சன் எனும் விவசாயி வசித்து வந்தார். 1945 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 10 ஆம் நாளன்று, அவரது வீட்டிற்கு அவரது மாமியார் வந்திருந்தார். ஒல்சனின் மனைவி, தனது தாய்க்கு இரவு உணவாக கோழிக்கறி சமைத்துத் தர விரும்பினார். உடனே அவர் கணவரிடம், தோட்டத்தில் அவர்கள் வளர்த்து வரும் கோழிகளில் ஒன்றை பிடித்து வரும்படி சொல்லி அனுப்பினார்.
தோட்டத்திற்குச் சென்ற அவர், மைக் எனும் பெயரிட்டிருந்த ஐந்தரை மாத கால அளவிலான சேவலைப் பிடித்துக் கோடாரியால் வெட்டினார். அவர் வெட்டும் போது அந்தச் சேவல் தலையைச் சிறிது உள்ளே இழுத்துக் கொண்டது. அதனால், அதன் கொண்டை, அலகு, கண்கள், ஒரு காது என முகத்தின் முன்பகுதி மட்டும் துண்டானது. மூளை லேசாக சேதமுற்றது. ஆனால் மூளைக்கும், இதயத்துக்கும் குருதியைக் கொண்டு செல்லும் நாளங்கள் சேதமடையவில்லை.
தலையின் பெரும் பகுதியை வெட்டிய பின்னரும் மைக் தலையில்லாமல் அங்கும் இங்கும் ஓட ஆரம்பித்தது மட்டுமின்றி, தனக்கான உணவையும் தேடத் தொடங்கியது. அதனைக் கண்டு ஆச்சரியமடைந்த ஒல்சனுக்கு மீண்டும் அதனைக் கொல்ல விரும்பவில்லை. அதனைப் பராமரிக்க முடிவு செய்தார். அந்தச் சேவலின் காயத்திற்கு மருத்துவம் பார்த்தார். தண்ணீருடன் பாலையும், சிறு சிறு உணவுப் பொருட்களையும் மை குமிழ் கொண்டு மைக்கின் தொண்டைக்குள் ஊற்ற ஆரம்பித்தார். அந்தச் சேவலின் காயம் விரைவில் ஆறியது. அதன் பின்னர், சேவலின் தொண்டைப் பகுதியிலிருந்த துளையின் வழியாகவே சிறு தானியங்களையும் கொடுக்கத் தொடங்கினார். அந்தச் சேவல் அதனையும் விழுங்கத் தொடங்கியது.
அப்படியே அந்த மைக் எனும் கோழி தலையில்லாமல் ஒல்சனின் பராமரிப்பில் உயிருடன் இருந்து வந்தது. மைக்கின் புகழ், 'தலையில்லாத கோழி' என்று நாடெங்கும் பரவியது. அதன் முகப்பகுதியை ஒரு போத்தலில் போட்டு பாதுகாத்தார்.
ஒல்சன் அந்தக் கோழியை பல இடங்களுக்கு காட்சிக்குக் கொண்டு சென்றார். அமெரிக்காவில் புகழ்பெற்ற "டைம்" மற்றும் "லைப்" பத்திரிக்கைகள் அதனைப் படம் பிடித்து செய்தி வெளியிட்டன. ஒல்சன், மைக்கைப் பார்க்க 25 சென்ட் கட்டணமாக வசூலித்தார். அதன் மூலம் அவருக்கு மாதம் 4500 அமெரிக்க டாலர்கள் வரை கிடைத்தது. அப்போது அந்தச் சேவலின் மதிப்பு 10,000 அமெரிக்க டாலர்கள் என மதிப்பிடப்பட்டது.
அமெரிக்காவில், பழுப்பு நிற முட்டைகளுக்காகவும், மஞ்சள் நிற தோல் கொண்ட இறைச்சிக்காகவும் வளர்க்கப்படும் வயண்டோட் எனும் வகையைச் சேர்ந்த அந்த மைக் எனும் தலையில்லாத கோழியை (Mike the Headless Chicken) உத்தாக் பல்கலைக்கழகத்திற்கு எடுத்துச் சென்று காண்பித்தார். அவர்களுக்கு அது ஆச்சரியமாக இருந்தது.
1947 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 17 ஆம் நாளன்று ஒல்சன் அரிசோனா மாநிலத்திலுள்ள போனிக்ஸ் எனுமிடத்தில், தலையில்லாத கோழியுடன் ஒரு நெடுஞ்சாலை உணவகத்தில் தங்கியிருந்தார்.
அங்கு நள்ளிரவில் தலையில்லாத கோழிக்குத் திடீரென்று சளியின் காரணமாக மூச்சுத் திணறல் ஏற்பட்டது. அந்தக் கோழிக்கு மருந்து, உணவு கொடுக்கும் சாதனங்களை, அவர் காட்சிக் கூடத்திலேயே மறந்து வைத்து விட்டு வந்திருந்தார். அதனால், அந்தக் கோழிக்கு மருந்து, உணவு எதையும் அவரால் தர முடியவில்லை. அதனால் அந்தக் கோழி அங்கேயே இறந்து போனது.
அதன் பிறகு, அந்தக் கோழியைப் பிரேதப் பரிசோதனை செய்து பார்த்த போது, அந்தக் கோழியின் கழுத்து சிரை பாதிப்படையவில்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டது. மூளையில் இருந்த ஒரு கட்டி, அந்தக் கோழியின் இரத்தப் போக்கைத் தடுத்திருந்தது.
பெரும்பகுதி மூளையுடன் இருந்தது. அடிப்படை வேலைகளைச் செய்ய உதவும் மூளைப்பகுதி பாதிப்படையவில்லை என்பதால், அது ஒல்சன் உதவியுடன் 18 மாதங்கள் வரை உயிர் வாழ்ந்திருக்கிறது!