சிறுகதை: பொங்கல் பணம்!

A lesson learned from money tamil short story
A lesson learned from money tamil short story
Published on
Kalki Strip
Kalki Strip

"ஏங்க, என்னங்க, இங்க வாங்க!" என்றாள் சுமதி.

"ஏன்...? சொல்லு, என்ன விஷயம்?" என்றான் கணவன் ரவி.

"ஒண்ணுமில்லீங்க... உங்க அம்மா ஊருக்குப் போய் ஒரு மாசம் ஆச்சு. உங்க அக்கா வீட்டிலேயே தங்கிட்டாங்க. பொங்கலைக் காரணம் காட்டி அவங்களை இங்க அழைச்சிட்டு வாங்க," என்றாள் சுமதி.

"என்ன திடீர் பாசம் அம்மா மேல?"

"அதெல்லாம் ஒண்ணுமில்லீங்க... இது சுமதி! அது வந்து... வந்து... பொங்கலுக்கு ரேஷன் கார்டுக்கு மூவாயிரம் தராங்க. உங்க அம்மா பேர்லதான் கார்டு தனியா இருக்கே, அதை வாங்கணுமில்ல?" என்றாள்.

"அதானே பார்த்தேன்! என்னடா மாமியார்கிட்ட திடீர் பாசம்னு நினைச்சேன்," என்றான் ரவி.

"சரி, ஏன் நீயும் வாயேன்? நாளைக்கு அரை நாள் ஆபீஸ்க்கு லீவ் போட்டுட்டு, ஈவ்னிங் ரெண்டு பேரும் கார்ல போய் அழைச்சிட்டு வந்துடுவோம்," என்றான் ரவி.

"ஏங்க, உங்ககிட்டதான் சொல்றேன்... பொங்கல் பணத்தை வாங்கத்தான் அம்மாவை அழைக்க வந்தோம்னு சொல்ல வேண்டாம். பொங்கலுக்கு பர்ச்சேஸ் செய்ய மயிலாடுதுறைக்கு வந்தோம், அப்படியே அம்மாவை அழைச்சுக்கிட்டு போகலாம்னு வந்தோம்னு சொல்லிடுவோம்," என்றாள் சுமதி.

"சரி, சரி... நீ சொல்லி நான் என்னைக்கு மறுத்திருக்கேன்?" என்றான் தலையாட்டிப் பொம்மை ரவி!

பேசியபடியே மயிலாடுதுறை போனார்கள். வீடு பூட்டியிருந்தது. அக்கம் பக்கத்தில் விசாரித்தார்கள். "அவங்க உங்க ஊருக்குத்தான் போறோம்னு சொல்லிட்டுத்தான் போனாங்க," என்றார் பக்கத்து வீட்டு மாமி!

ஒரே குழப்பத்துடன் போன் போட்டார்கள். போன் போகவில்லை, 'தொடர்பு எல்லைக்கு அப்பால்' எனச் சொல்லியது. இருவரும் குழப்பத்துடன் பர்ச்சேஸ் முடித்துக்கொண்டு ஊருக்குத் திரும்பும் வேளையில் அம்மாவிடமிருந்து போன் வந்தது.

"ஹலோ ரவியா? நான்தான் அம்மா பேசறேன். எங்க போயிட்டீங்க? வீடு பூட்டியிருக்கு. பக்கத்துல கேட்டோம், யாரும் சரியா சொல்லல," என்றாள் அம்மா சாவித்திரி.

"நாங்க அங்கதான் வந்தோம். பொங்கலுக்கு உன்னையே அழைச்சிட்டு வரலாம்னு சுமதிதான் சொன்னா," என்றான் ரவி.

"சரி சரி, நீங்க வாங்க. நானும் அக்காவும் பக்கத்துல கோவில்ல இருக்கோம், சீக்கிரம் வாங்க," என்றாள் தாயார் சாவித்திரி.

கணவன் மனைவி இருவரும் வந்தார்கள். ரவியைப் பார்த்ததும் அக்காவும் அம்மாவும் வீட்டிற்கு வந்தார்கள். பரஸ்பரம் நலன் விசாரிப்பு நடந்தது!

"சரிடா ரவி, நீ இந்தத் தடவை அக்காவுக்குப் பொங்கல் வரிசை வைக்கணுமில்ல? அதோட இந்த இண்டக்ஷன் அடுப்பையும் சேர்த்து வச்சுக் கொடுத்திடு," எனப் புதிய அடுப்பு பாக்ஸைக் கொடுத்தாள் அம்மா.

"ஏதும்மா உனக்கு ஏது பணம்?" என்றான் ரவி.

"அதுவா... நானும் அக்காவும் ரேஷன் கடைக்கு வந்தோம். எனக்கு வரவேண்டிய பொங்கல் பணம் மூவாயிரத்தை வாங்கினேன். அப்படியே கடைக்குப் போய் இந்த அடுப்பை வாங்கினோம்," என்றாள் சாவித்திரி!

இருவர் முகத்திலும் ஈயாடவில்லை.

"சரி சுமதி, இந்த வருஷம் மாப்பிள்ளை பொங்கலுக்கு பெங்களூர்லேந்து ஊருக்கு வரலியாம். அதனால நான் பொங்கலுக்கு உங்க அக்கா வீட்டுக்கே போறேன். முடிஞ்சா நீங்களும் அங்க வந்துடுங்களேன்," என்றாள் சாவித்திரி!

இதையும் படியுங்கள்:
சிறுகதை: ஆன்மாவின் காலம்!
A lesson learned from money tamil short story

அக்காவும் இருவரையும் பொங்கலுக்குத் தன் வீட்டிற்கு அழைத்தாள். "சரி பார்க்கலாம்," என ரவி தலையாட்டினான்.

அதோடு அக்காவும் அம்மாவும் புறப்பட்டார்கள். "அப்புறம் ரவி, அரிசி, சீனி இதெல்லாம் நான் எடுத்துட்டுப் போறேன். ஆனா முழு கரும்பை டூவீலர்ல எடுத்துட்டுப் போறது கஷ்டம். அதை கோவில்ல வச்சிருக்கேன், நீ எடுத்துக்க. அதான் சுமதிக்குக் கரும்புன்னா கொள்ளைப் பிரியமாச்சே!" என்றாள் சாவித்திரி.

ரவியும் சுமதியும் எதையோ பறிகொடுத்தது போல அவர்களை வழியனுப்பினார்கள்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com