

அமெரிக்காவின் பெர்க்லி மாகாணம். வழக்கம்போல் காலையில் நடைப்பயிற்சிக்கு வந்திருந்த நண்பர்கள் நாராயணன், நாசர், அற்புதராஜ் வாக்கிங், ஜாகிங் முடித்துவிட்டு அங்கு போடப்பட்டிருந்த பெஞ்சில் ஓய்வாக அமர்ந்தனர். அறுபதுகளைக் கடந்திருந்த மூவரும் இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள்.
"அற்புதம், நேத்தைக்கு உடம்புக்கு சுகமில்லைன்னு சொன்னியே இப்போப் பரவாயில்லையா?"
ஒருசேரக் கேட்ட நண்பர்களிடம்,
"நேத்து நம்ம நாராயணன் சொன்னக் கஷாயம் போட்டுக் குடிச்சேன், இப்போ கொஞ்சம் வீசிங் குறைஞ்ச மாதிரி ஃபீலிங்."
"ஊம், எல்லாம் என் பொண்டாட்டி சொல்லிக் கொடுத்ததுதான். அவளுக்கு இங்கிலீஷ் மருந்தே பிடிக்காது. ஆசுபத்திரிப் பக்கம் அவ போனது எங்க பிள்ளையப் பிரசவிக்கறதுக்கு மட்டும்தான். ஆச்சு… அவ போய் அஞ்ச வருஷம்… நா அவளை ரொம்ப மிஸ் பண்றேன்."
சிறிதுநேரம் அங்கே கனத்த மௌனம்… மற்ற இருவரும் பிரிந்து மேலுலகம் சென்ற தங்கள் இணைகளைப் பற்றிச் சிந்திக்க… இடையில் நாசர் சற்றே தள்ளிச் சென்று தம் தொழுகையை முடித்துவிட்டு வந்தார்.
"முருகா…" என்று தன்னிலைக்கு மீண்ட நாராயணனிடம், சிலுவையிட்டு நிமிர்ந்த அற்புதராஜ்,
"நாராயணா, மகாளய பட்ச அமாவாசையை ஒட்டி உம் பொண்டாட்டியோட திதி வர்றது, ஊர்ல சொல்லி வாத்தியார் ஏற்பாடு பண்ணனும்னு சொன்னியே, பேசிட்டியா?"
தொழுகை முடித்து வந்த நாசர், "ஆமாண்டா நாராயணா நானும் கேட்கணும்னு நெனைச்சேன், மறந்தே போயிட்டேன். இங்கதான் டாலர்ல கொள்ளையடிக்கறாங்களே, நம்ம ஊர் ஆளுங்கதான் நமக்கு செட்டாகும்."
"நானும் அப்படித்தாண்டா நெனைச்சிருந்தேன். இந்த ஊரைச் சேர்ந்த என்னோட மருமவ என் பிள்ளைக்கிட்டப் பேசினதைக் கேட்டு தடுமாறிப் போயிட்டேண்டா."
"அப்படி என்னடா சொல்லிச்சு, உம் மருமவ?"
முதல்நாள் நடந்ததை நண்பர்களிடம் தொண்டையைச் செருமிக் கொண்டு பகிரத் தொடங்கினார் நாராயணன்.
***************
இரவு… தூக்கம் பிடிக்காமல் சற்றே பால்கனியருகே சென்று ஓய்வெடுத்து வரலாம் என்று தன் ரூமிலிருந்து வெளிவந்த நாராயணனை மருமகளின் குரல் அதுவும் தானும், மனைவியும் வேறு பேச்சில் அடிபட, சற்றே நிறுத்தியது.
"இதப்பாருங்க… விக்னேஷ், நா சொல்றதப் புரிஞ்சிக்கிங்க இந்த ஊர் எல்லாத்துக்குமே காஸ்ட்லின்னு சொல்லி உங்கப்பா இந்தியாவிலிருந்து வாத்தியார் ஏற்பாடு பண்ணி அம்மாவுக்குத் திதி கொடுக்கிறது எனக்கு சரியாப் படலை. இங்க அமெரிக்காவில வந்து செட்டிலாற இந்தியர்களோட முக்கியப் பிரச்னையே டாலரை, இந்தியப் பணத்துக்கு இணையா மாத்தி யோசிக்கிறதுதான்." மனைவி கேத்தரினுக்கு மறுமொழி கூற முடியாமல் தடுமாறினான் விக்னேஷ்.
"செலவைப் பத்தி யோசிக்கறதைத் தாண்டி நாம எந்த இடத்துல இருக்கோமோ, அந்த இடத்துக்குத் தக்கமாதிரி நடந்துக்கணும்."
ஒரு கணம் நாராயணனின் உள்ளம் கோபத்தில் கொந்தளித்தது, 'இப்ப என்ன சொல்ல வர்றா நம்ம பொண்டாட்டிக்கு இங்கன அதிகமாச் செலவழிச்சுத் திதி கொடுக்கிறது வேஸ்டுங்கறாளா?'
அவரின் எண்ணத்தை இடைவெட்டியது காதரினின் குரல்.
"எனக்கு உங்க நாட்டோட சம்பிரதாயங்களெல்லாம் பழக்கமில்லைன்னாலும், நா படிச்சுத் தெரிஞ்சிட்ட அளவில இந்தியர்கள் மொழிகளாலும், சடங்குகளாலும் வேறுபட்டாலும், ‘வேற்றுமையில் ஒற்றுமைங்கிற பொதுவகைப்பாட்டுல அந்தந்த மதங்கள் சார்ந்த சம்பிரதாயங்கள்ல நம்பிக்கையும், பற்றும் உள்ளவங்கன்னு கேள்விப்பட்டிருக்கேன்."
'என்ன இவ சம்பந்தா சம்பந்தமில்லாமப் பேசிக்கிட்டிருக்கா?'
தகப்பனை ஒத்த அலைவரிசையில், "நீ என்ன சொல்ல வர்றேன்னே புரியலை காதரின்."
"சுத்தி வளைக்காம நேரடியா விஷயத்துக்கு வர்றேன் விக்னேஷ், இந்த ஊரின் நேரப்படி திதி செஞ்சு முடிச்சுத் தர்றேன்னு சொல்றாரே இந்தியாவில இருக்குற வாத்தியார் அங்க அப்ப ராத்திரி நேரமில்லையா? ஒரு நியம நிஷ்டையோ நேரங்காலமோ இல்லாமல் மந்திரங்கள் உச்சரிப்பது சரியா? அதனாலதான் சொல்றேன், செலவு கொஞ்சம் முன்னபின்ன ஆனா ஆயிட்டுப் போகுது சம்பிரதாயப்படி அம்மாவோட திதி நடக்கணும்னு நா நெனைக்கறேன் விக்னேஷ். இது தப்பா?"
பொட்டில் அடித்தாற்போல் உணர்ந்தார் நாராயணன்.
'ஒரு அயல்நாட்டுக்காரி யோசிக்கிற சாங்கியத்த நாம எப்படி மறந்தோம்? நாம மட்டுமா? சொந்த ஊரில நியமநிஷ்டையோட எல்லாத் திதிக் காரியமும் பண்ணி வைக்கிற கணபதி குருக்கள் ‘பேஷா, பண்ணிடலாம். கொஞ்சம் பார்த்துப் போட்டுக் குடுங்கோன்னு' கேட்டவருக்கு நடு ராத்திரில மந்திரம் ஜபிச்சுத் திதிக்காரியம் பண்ணறது ஆசாரத்தோட ஆணிவேரையே பிடுங்குற மாதிரி செயல்னு தெரியாதா? ஊம், நம்பள மாதிரி நாலு பேர் இருக்குறதாலதான் இந்த மாதிரி ஒரு பேராசைக் கூட்டம் கிளம்பிக்கிட்டிருக்கு.'
************
"ஒம் மருமவ கேட்டதும் கரெக்டுதான்,"
அவ்வளவு நேரம் நாராயணன் பேசியதைச் செவிமடுத்த அற்புதராஜ் மற்றும் நாசர்,
"அப்படின்னா மருமவ சொல்ற மாதிரி இங்கேயே திதிய கிராண்டா முடிச்சுடலாம்னு இருக்கியா நாராயணன்?"
"என் மனசு ரெண்டுங் கெட்டானாத் தவிக்குது. ஏதோ இவங்க கூப்பிட்ட உடனே எந்த யோசனையும் இல்லாமச் சட்டுன்னு புறப்பட்டு வந்துட்டேன். இவங்களுக்கு அதிகச் செலவு வச்சித் திதியச் செய்யறதுலயும் எனக்கு இஷ்டமில்ல. நா நெனைச்சா மாதிரிச் செய்ய என் பிள்ளை என்னைத் தடுக்க மாட்டான்னாலும், ‘இவங்க நாட்டோட சம்பிரதாயமெல்லாம் வெறும் கடமைக்குத்தானே தவிர ஆத்மார்த்தமானதில்லேன்னு' எம் மருமவ நெனைச்சுட்டா அது எனக்கு மட்டுமில்லே நம்ம நாட்டுக்கே திருஷ்டி மாதிரி. அதுவுமில்லாம எனக்கே அது கொஞ்சம் உறுத்தலா இருக்கு."
"என்னதான் பண்ணப்போறே திதி கொடுக்கப் போறியா? இல்லையா?"
"நண்பன் ஒருவன் கொஞ்சம் தள்ளிப் பக்கத்து ஊர்ல இருக்கான். அங்க இருக்குற கோயில்ல குறைந்த தட்சணைல, எங்க சம்பிரதாயப்படி குறித்த சமயத்துல திதி செய்ய முடியலைன்னா ‘தத்தம்’ கொடுத்து முறை செய்யறது வழக்கம். சம்பிரதாயத்தையும் மாத்தாம, பிள்ளைக்கும் செலவு வைக்காம இந்த வருஷத்திதிய முடிச்சிடலாம்னு இருக்கேன். அடுத்த வருஷத்திதிக்கு இந்தியாவுல இருப்பேன். பிரச்னையில்ல இனிமேதான் பையன்கிட்டச் சொல்லணும்."
பயிற்சியும், ஓய்வும் முடிந்து கிளம்பினர் மூவரும்.