வந்தே மாதரம்! கீதம் பிறந்த கதை!

1894 ஏப்ரல் மாதம் 8ம் நாளன்று பங்கிம் சந்திர சட்டோபாத்யாயா மறைந்தார் என்றாலும், அவரது கீதம் இமயம் இருக்கும் வரை நிலைத்திருக்கும்!
bankim chandra chattopadhyay
Bankim chandra chattopadhyayImg Credit: Wikipedia
Published on

பிரம்மாண்டமான தேசம். பாரம்பரியமான தெய்வீக அறிவைக் கொண்டிருக்கும் தேசம். உலகில் உள்ள நாடுகளுக்கு வழி காட்டுவதற்காக இறைவன் படைத்த தேசம்.

அது தூங்கிக் கொண்டிருந்தது. அடிமைப்பட்டிருந்தது. வருவோர் போவோர் எல்லாம் அதன் மீதிருந்த ஆபரணங்களையும் இதர செல்வங்களையும் கொள்ளையடித்துச் சென்று கொண்டிருந்தனர்.

இதைப்பார்த்த தெய்வீக புருஷர்கள் அன்னையை வேண்டினர். அன்னை மனம் கனிந்தாள்.

வந்து உதித்தார் பங்கிம் சந்திர சட்டோபாத்யாயா!

1838ம் ஆண்டு ஜூன் மாதம் 27ம் தேதியன்று வங்காளத்தில் 24 பர்கணா மாவட்டத்தில் கண்டலபதா என்ற ஊரில் அவர் பிறந்தார். இருபது வயதிலேயே ஆங்கில ஆட்சியில் துணை நீதிபதியானார்.

பாரதப் பாரம்பரியத்தில் ஆழ்ந்த பக்தி கொண்ட அவருக்கு வழிகாட்டி, உணவு, மருந்து எல்லாமே பகவத் கீதை தான்!

அவர் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவம் இதை மெய்ப்பிக்கிறது.

ஒரு சமயம் அவர் நோய்வாய்ப்பட்டிருந்தார். அவரது டாக்டர் அவரிடம் வந்து ஒரு குறிப்பிட்ட மருந்தை உட்கொள்ளுமாறு கூறினார். பங்கிம் சந்திரர் சிரித்தார். இது டாக்டருக்கு கோபத்தை ஏற்படுத்தியது.

இதையும் படியுங்கள்:
தபால் தலைகள் (Postage Stamps) பற்றி சில தகவல்கள்!
bankim chandra chattopadhyay

“நீங்கள் தற்கொலை செய்து கொள்கிறீர்கள்” என்று அவர் கத்தினார்.

பங்கிம் கேட்டார்: “எப்படி?”

“இந்த மருந்தை உட்கொள்ளாமல் இருந்தால் அது தற்கொலை செய்து கொள்வதாகத்தானே அர்த்தம்?”

“யார் சொன்னது நான் மருந்தை எடுத்துக் கொள்ளவில்லை என்று?”

“எங்கே நீங்கள் எடுத்துக் கொள்ளும் மருந்தைக் காண்பியுங்கள், பார்ப்போம்!”

பங்கிம் பேசவில்லை. தன் அருகில் இருந்த ஒன்றைச் சுட்டிக் காட்டினார்.

அது ஒரு புத்தகம். கீதை புத்தகம்.

அது தான் அவரது வாழ்க்கைக்கு வழிகாட்டி!

தேச மக்கள் தூங்கிக் கொண்டிருந்ததைப் பார்த்து அவர் பரிதவித்தார்.

தேசம் எப்போது விழித்தெழும், எப்படி விழித்தெழும் என்ற சிந்தனை தான் அவருக்கு எப்பொழுதும்,!

இதையும் படியுங்கள்:
Beating Retreat - 'பின்வாங்கு முரசறை' எப்படி, எங்கு தொடங்கியது?
bankim chandra chattopadhyay

1875ம் ஆண்டு. அப்போது அவருக்கு வயது 37. ஒரு நாள் கல்கத்தாவின் பரபரப்பான நகர வாழ்க்கையிலிருந்து சற்று தப்பிக்க எண்ணி தனது சொந்த ஊரான கண்டலபதாவிற்குச் செல்லும் ரயிலில் ஏறினார். நகரை விட்டுத் தாண்டியவுடன் ரயிலின் ஜன்னல் வழியே வெளியே பார்த்தார் பங்கிம்.

அடடா! என்ன அற்புதம்! எங்கும் பச்சை பசுமையான வயல்கள். பசுமைத் தோட்டங்கள் அவர் மனம் சந்தோஷத்தால் துள்ளிக் குதித்தது. பாரதத் தாய் அவர் முன்னே தரிசனம் தர ஆரம்பித்தாள். அற்புதமான ஜீவ நதிகள் அங்கு ஓடின. மலர்கள் பூத்துக் குலுங்கின. பரந்த காடுகள் தெரிந்தன. ஒரு உற்சாகம் அவர் உடல் முழுவதும் பாய்ந்தது.

தாயின் செழுமையையும் அழகையும் கண்டு அவர் புல்லரித்தார். அவர் மனதில் தோன்றியது:

வந்தே மாதரம்!

சுஜலாம் சுபலாம் மலயஜ சீதலாம்

சஸ்ய சியாமளாம் மாதரம்

வந்தே மாதரம்.

கீதம் பிறந்தவுடன் எல்லையற்ற மகிழ்ச்சி அவருக்கு ஏற்பட்டது.

நாட்கள் கழிந்தன. 1880ம் ஆண்டு பங்கதர்ஷன் என்ற இதழில் இரு வருடங்கள் ஆனந்தமடம் என்ற ஒரு தொடர் நாவலை அவர் எழுதிவந்தார். அதில் இந்த கீதம் இடம் பெற்றது. 1882ல் ஆனந்தமடம் புத்தகமாக வெளியானது.

1772ல் ஏற்பட்ட சன்யாசிகளின் போராட்டத்தைச் சித்தரிக்கும் இந்த நாவல், நாட்டில் ஒரு புரட்சியை ஏற்படுத்தும் என்று பங்கிம் நினைத்தார். ஆனால் உடனே அது நடைபெறவில்லை.

இதையும் படியுங்கள்:
ராஷ்டிரபதி பவனில் குடியேற மறுத்த குடியரசுத் தலைவர் யார் தெரியுமா?
bankim chandra chattopadhyay

ஆனால் அவர் முன் ஒரு பெரிய காட்சி விரிந்தது. அதில் இந்த கீதம் தேசத்தில் விளைவிக்கும் தெய்வீகக் காட்சியைக் கண்டு அவர் மனம் சிலிர்த்தது.

அவர் தனது மகளுக்கு எழுதிய கடிதத்தில், “இன்னும் 20, 30 வருடங்களில் இந்த கீதத்தைப் பித்துப் பிடித்தது போல வங்காளத்தில் அனைவரும் பாடப் போகின்றனர். வங்காளம் இந்த கீதத்துடன் இணைந்து இருக்கும்,” என்று எழுதினார்.

அரவிந்தர், தாகூர் உள்ளிட்ட பலரும் பங்கிம் சந்திரரைப் போற்றி எழுதினர்.

வந்தே மாதரத்தை எழுச்சி பெற்ற தேசம் தேசீய கீதமாக நாடே ஏற்றது.

அதன் ஒலி இமயத்தில் ஆரம்பித்து குமரி வரை ஒலித்தது!

1894 ஏப்ரல் மாதம் 8ம் நாளன்று பங்கிம் சந்திர சட்டோபாத்யாயா மறைந்தார் என்றாலும், அவரது கீதம் இமயம் இருக்கும் வரை நிலைத்திருக்கும்!

வந்தே மாதரம்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com