

-தமிழில்: ஆர். பிரியங்கா
சென்னையில் உள்ள முதலைப்பண்ணை, கிட்டத்தட்ட அரை நூற்றாண்டைக் கடந்து, இந்த வருடம் தனது 50-வது ஆண்டில் வெற்றிகரமாக அடியெடுத்து வைக்கிறது. இந்த முதலைப் பண்ணையானது, 1976 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் முதன்முறையாக, வெறும் ஒரு ரூபாய் நுழைவுக்கட்டணத்துடன், பொதுமக்களின் பார்வைக்காக திறக்கப்பட்டது.
சில வாரங்கள் கழித்து, நான் எனது நாட்குறிப்பில், "ஆஹா! இன்று ஐம்பதுக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் வருகை தந்திருந்தனர்", என்று மிக்க மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டிருந்தேன். அப்போது முதலைகளின் எண்ணிக்கையும் குறைவாகவே இருந்தது.
வட நெம்மேலியைச் சேர்ந்த சிலருடன் சேர்ந்து நாங்கள் பண்ணையில் பணியாற்றிக் கொண்டிருந்தோம். அன்றைய வட நெம்மேலி, பச்சை பசேலென்ற வயல்வெளிகளும், தோட்டங்களும், ஓலைக்குடிசல் வீடுகள் மற்றும் ஒற்றை டீக்கடையையும் கொண்டிருந்தது. இதில் வருத்தத்திற்குரிய விஷயம் என்னவென்றால், இங்கிருந்த பெரும்பாலான வயல்கள், இன்று வெவ்வேறு கட்டுமான நிறுவனங்களுக்கு விற்பனை செய்யப்பட்டுவிட்டது.
சில வருடங்களுக்கு முன்பு, பணியிலிருந்து ஓய்வுபெற்ற முனுசாமி, முதலைகளைப் பிடிப்பதிலும் கையாள்வதிலும் சிறந்த அனுபவசாலியாக இருந்தவர். ரோம் விட்டேக்கரின் வழிகாட்டுதலின் கீழ், முதலைகளைப் பாதுகாப்பாக பிடிப்பது மற்றும் விடுவிப்பது போன்றவற்றில் அவர் நன்கு பயிற்சி பெற்றிருந்தார். இந்தியாவின் பல்வேறு உயிரியல் பூங்காக்களில் உள்ள முதலை பராமரிப்பாளர்களுக்கு அவர் பயிற்சி அளித்துள்ளார்.
மேலும், மனித-முதலை முரண்பாடுகள் (Human-Crocodile conflict) ஏற்படும் சூழ்நிலைகளில், மனிதர்களுக்கும் முதலைகளுக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில், முதலைகளைப் பாதுகாப்பாக பிடித்து, மீண்டும் விடுவிப்பதற்கான பணிகளில் வனத்துறையினருக்கு உதவ, அவரது திறமை பெரிதும் பயனுள்ளதாக இருந்தது.
முதலைப்பண்ணையின் மற்றொரு முக்கியமான பணியாளராக விளங்கியவர் பயிண்டி. அவரும் தனது நீண்டகால பணிக்குப் பிறகு, தற்போது ஓய்வுபெற்றுள்ளார். இவர்களிடமிருந்து அனுபவத்தையும் நுணுக்கங்களையும் கற்றுக்கொண்ட இளம் தலைமுறை விலங்கு பராமரிப்பாளர்கள் (Animal Keepers), தற்போது இங்குள்ள விலங்குகளைத் தொடர்ந்து பராமரித்து வருகின்றனர். வெவ்வேறு தொழில் வாய்ப்புகள் இருந்தாலும், வெவ்வேறு கல்விப் பின்புலத்தைக் கொண்டிருந்தாலும், விலங்குகளுடன் பணியாற்றுவதை அவர்கள் விருப்பத்துடன் செய்து வருகின்றனர்.
கடந்த ஐம்பது வருடங்களில், முதலைப்பண்ணையின் வளர்ச்சியானது, வட நெம்மேலி கிராம மக்களின் வாழ்வாதார முன்னேற்றத்திற்கு ஒரு முக்கியத் தூண்டுகோலாக அமைந்துள்ளது. வருடந்தோறும் சுமார் 4.5 இலட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்கள் முதலைப்பண்ணைக்கு வருகை தருகின்றனர். அவர்களுக்குத் தேவையான சிற்றுண்டிகள் தொடங்கி, இன்ன பிற அத்தியாவசியமானப் பொருட்களும் இங்கு கிடைக்கத் தொடங்கியுள்ளன.
அதுமட்டுமின்றி, பழைய குடிசை வீடுகள் அனைத்தும், தற்போது பக்கா (Pukka) வீடுகளாக மாறியுள்ளன. துணிக்கடைகள், டீக்கடைகள், பல்வேறு உணவகங்கள் என வணிகம் சார்ந்த செயல்பாடுகள் தற்போது இப்பகுதியில் அதிகரித்துள்ளன. அவற்றில், Croc Kitchen கடையும் ஒன்று! (பெயரைக் கேட்டு கவலைவேண்டாம், அங்கு முதலை இறைச்சிகள் பரிமாறப்படுவதில்லை).
இதில் சிறப்புக்குரிய விஷயம் என்னவென்றால், வட நெம்மேலி மக்கள், தற்போது கல்விக்கு தரும் முக்கியத்துவம் பெருமளவில் அதிகரித்துள்ளது என்பதுதான். ஐம்பது வருடங்களுக்கு முன்பு, அடிப்படைக் கல்வியறிவு பெற்றிருந்தவர்களைக் காண்பதே அரிதாக இருந்தது.
ஆனால் இன்று, பல்வேறு துறைகளில் தங்களுக்கென ஒரு தொழில்திறனை உருவாக்கிக்கொண்டு, தங்களது வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தி வருகின்றனர். முதலைப்பண்ணை, கிராம மக்களுக்கு வழங்கிய கல்விக்கடன்களும் இதற்கு ஒரு முக்கிய காரணமாகும். இங்கு பணிபுரிபவர்களின் அடுத்த தலைமுறையினர், பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் செல்வதைக் காணும் ஒவ்வொருமுறையும், என் உள்ளம் அளவில்லா மகிழ்ச்சி கொள்ளும்.
“பெர்ரி மேசன்” என்று நாங்கள் அன்புடன் அழைக்கும் பெரியசாமி, முதலைப்பண்ணையின் சிறந்த கொத்தனாராக விளங்கியவர். நேர்த்தியான கட்டடங்களை உருவாக்குவதில் அவர் மிகவும் வல்லவர். முதலைப்பண்ணையில் உள்ள கட்டடங்கள் மற்றும் விலங்குகள் வைக்கப்பட்டிருக்கும் செயற்கை வாழ்விடப் பகுதிகளை (Enclosures) கட்டியதில் அவரது பங்கு அதிகம். நிதிப் பற்றாக்குறை நிலவிய காலங்களில், சம்பளம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டாலும், வேலை தொடர்ந்து நடைபெறவேண்டும் என்பதற்காக அவர் அதற்கு ஒப்புக்கொள்வார்.
பெரியசாமியின் பேத்தி விஜயலட்சுமி, இன்று முதலைப்பண்ணை வளாகத்தில் உள்ள மரம், செடி, கொடிகளுக்கு தண்ணீர் ஊற்றி, அவற்றைப் பராமரித்து வருகிறார். மற்றொரு பேத்தியான சாந்தி, ஆமை பராமரிப்பாளராகப் பணிபுரிந்து வருகிறார்.
சாந்தியும் அவருடன் பணிபுரிந்துவரும் பிற பெண்களும், முதலைகள் மற்றும் ஆமைகள் வைக்கப்பட்டிருக்கும் தொட்டிகளில், அவற்றைப் பராமரிப்பதற்காக மிக சர்வசாதாரணமாக ஏறி இறங்குகின்றனர். அவர்கள் பணியின் நேர்த்தி, அப்பணியை மிக எளிதானதாகவும், இயல்பான ஒன்றாகவும் தோற்றமளிக்கச் செய்யும்.
கோழி இறைச்சி, மீன் மற்றும் கரியால்களுக்குத் தேவையான குட்டி மீன்குஞ்சுகள் உட்பட, இங்குள்ள விலங்குகளுக்குத் தேவையான பெரும்பாலான உணவுகள், வட நெம்மேலியிலிருந்தே பெறப்படுகிறது.
மேலும், பச்சை ஓணான் மற்றும் சில நன்னீர் ஆமையினங்களுக்கு தேவையான மல்பெர்ரி பழங்களுக்காக, எங்களுடன் பணியாற்றிவரும் பணியாளரது குடும்பத்தினர், தங்களது வீட்டிலேயே மல்பெர்ரிச் செடிகளை வளர்த்து வருகின்றனர்.
இவ்வாறாக முதலைப்பண்ணைக்கும், வட நெம்மேலிக்கும் இடையிலான இந்த உறவு, காலங்காலமாக இருதரப்பினருக்கும் பல்வேறு வகைகளில் பயனளித்துவருகிறது. சமீபத்தில், சென்னை ஐஐடி-யின் (Indian Institute of Technology) உதவியுடன், புற்றுநோய் பரிசோதனை முகாம் இக்கிராமத்தில் நடத்தப்பட்டது. மேலும், இங்குள்ள தொடக்கப் பள்ளிகளுக்கும் முதலைப்பண்ணை தன்னால் இயன்ற பங்களிப்பை தொடர்ந்து வழங்கி வருகிறது.
என் மனதிற்கு மிகவும் நெருக்கமான நினைவுகளில் ஒன்று, மாலை வேளைகளில் நடத்திய ஆங்கிலப் பயிற்சி வகுப்பாகும். தினசரி பயன்பாட்டிற்குத் தேவையான ஆங்கில வார்த்தைகளை, கிராமத்திலிருந்து வரும் குழந்தைகளுக்கு நான் சொல்லித்தருவது வழக்கம்.
ஒருமுறை வகுப்பில் நாங்கள் உரையாடிக் கொண்டிருக்கும்போது, அவர்களில் ஒருவன் வகுப்பிற்கு வந்தவுடன் என்னிடம், “How do you do?” என்று கேட்டான். அதற்கு நான் “Hello அல்லது Nice to meet you!” என்று சொன்னால் இன்னும் பொருத்தமாக இருக்கும் என்று கூறினேன்.
சிறிது நேரம் கழித்து, பிரிட்டிஷ் சுற்றுலாப்பயணி ஒருவர் அறையினுள் வந்தார். முதலைகளைப் பற்றி அவருக்கு இருந்த கேள்விகளை என்னிடம் கேட்டு அறிந்து கொள்வதற்காக அவர் வந்திருந்தார். உள்ளே வந்தவுடன் என்னிடம் “How do you do?” என்று கேட்டார்.
குழந்தைகள் அனைவரும் தங்களுக்குள் சிரித்துக்கொண்டே, “ஓ! வெளிநாட்டினருக்கும் ஆங்கிலப்பாடங்கள் தேவைப்படுகிறது போலவே!” என்றனர்.
வனவிலங்கு பாதுகாப்பும் கிராமப்புற சமூக வளர்ச்சியும் எவ்வாறு ஒன்றுக்கொன்று கைகோர்த்து செயல்பட முடியும் என்பதையும், ஒரு வரலாற்று சிறப்புமிக்க நிறுவனம் உள்ளூர் மக்களின் பொருளாதார மற்றும் கல்வி நிலையை எவ்வாறு உயர்த்துகிறது என்பதையும் நீங்கள் தெளிவாக உணர்ந்து கொள்வீர்கள்.