
எழுத்தாளர், நடிகர், நாடக ஆசிரியர், பாடலாசிரியர், திரைப்பட இயக்குனர் என்று பன்முகப் பரிமாணம் கொண்ட மனிதர் கொத்தமங்கலம் சுப்பு. இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முந்தைய கால கட்டத்தில் அவர் தமிழ்நாட்டின் கிராமப் புற வாழ்க்கையை களமாகக் கொண்டு எழுதிய ஒரு டஜன் சிறுகதைகளை தமிழிலிருந்து ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து இருக்கிறார் சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி பிரபா ஸ்ரீதேவன்.
“பதினெட்டாம் பெருக்கு சிறுகதைகள்” என்ற தலைப்பில் வெளியாகி இருக்கும் அந்த ஆங்கில மொழிபெயர்ப்பு நூலின் வெளியீடு சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் அண்மையில் வெளியிடப்பட்டது.
அந்த நூலை நாடக ஆசிரியர், நடிகர் இளங்கோ குமணன் வெளியிட, பழந்தமிழ்த் திரைப்படப் பாடல் ஆய்வாளரான நீலமேகம் முதல் பிரதியினைப் பெற்றுக் கொண்டார். சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி ரவிச்சந்திர பாபு வாழ்த்துரை வழங்கினார்.
1910ஆம் ஆண்டு நவம்பர் 10ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவிலுக்கு அருகில் உள்ள கன்னாரியேந்தல் என்ற கிராமத்தில் பிறந்தார் 'கொத்தமங்கலம் சுப்பு'. அவரது பெற்றோர் மகாலிங்க ஐயர், கங்கம்மாள். சுப்ரமணியன் என்பது இவரது இயற்பெயர்.
எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்த அவர் குடும்ப சூழ்நிலை கருதி, காரைக்குடி அருகில் உள்ள கொத்தமங்கலத்துக்குச் சென்று ஒரு மரக்கடையில் வேலை பார்த்தார். அந்த ஊரின் பெயரை சேர்த்துக் கொண்டு, தன் பெயரை சுருக்கிக் கொண்டு, சுப்ரமணியன் கொத்தமங்கலம் சுப்பு ஆனார்.
கொத்தமங்கலம் சுப்புவின் குடும்பத்தைச் சேர்ந்த மூன்று தலைமுறையினர் ஆர்வத்துடன் இந்தப் புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்றுச் சிறப்பித்தார்கள்.
புத்தகத்தை வெளியிட்டுப் பேசிய இளங்கோ குமணன், ஒவ்வொரு கதையாகச் சொல்லி, கொத்தமங்கலம் சுப்புவின் கற்பனை வளம், எழுத்து நடை, இயல்பான நகைச்சுவை, என அவரது பல்வேறு இலக்கிய பரிமாணங்களை விவரித்தார்.
அவரது இந்த ஒவ்வொரு சிறுகதையும் நாடகக் காட்சியமைப்புகளோடும், உரிய வசனங்களோடும் எழுதப்பட்டுள்ளன. அவற்றை அப்படியே நாடக வடிவில் மக்களுக்குக் கொடுக்க நான் ஆர்வமாக இருக்கிறேன்” என்றார். இளங்கோ குமணன், ஏற்கனவே பொன்னியின் செல்வன், காஞ்சி மகா பெரியவர் நாடகங்களை பிரம்மாண்டமான முறையில் மேடை ஏற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
புத்தகத்தின் முதல் பிரதியைப் பெற்றுக் கொண்ட பழந்தமிழ்த் திரைப்படப் பாடல் ஆய்வாளரான நீலமேகம், கொத்தமங்கலம் சுப்பு எழுதிய திரைப்படப் பாடல்கள் தொகுக்கப்பட்டு புத்தகமாக வெளிவர பெரிதும் உதவியவர். அவர், சுப்புவின் பாடல்களின் சிறப்பு குறித்து அழகுறப் பேசினார்.
வாழ்த்துரை வழங்கிய நீதி அரசர் ரவிச்சந்திர பாபு, ஒரு படைப்பினை குறிப்பாக கொத்தமங்கலம் சுப்புவின் எழுத்து போன்ற வட்டார வழக்குகள் அதிகம் கொண்ட படைப்புகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பது என்பது மிகவும் சவாலான விஷயம். அதனை மிக நேர்த்தியாகவும், எளிமையாகவும் செய்திருக்கிறார் மொழிபெயர்ப்பாளரான நம் நீதிபதி அம்மா!” என்று பாராட்டினார்.
அவர் கூறிய இன்னொரு தகவல் இது : எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்தபோது, தமிழ்நாட்டுக்கு வந்த ஒரு அயல்நாட்டுக் குழுவினருக்கு தமிழ்நாட்டின் கலை, கலாசாரம், பண்பாடு இவற்றை எடுத்துச் சொல்ல என்ன செய்யலாம் என்று மூத்த அதிகாரிகள் எம்.ஜி.ஆரிடம் கலந்து ஆலோசனை செய்தபோது, அவர் “தில்லான மோகனாம்பாள் படத்தை அவர்களுக்கு திரையிட்டுக் காட்டுங்கள்! அது போதும்!” என்று சொன்னாராம்.
பிரபா ஸ்ரீதேவன் அவர்கள் இதுவரை பதினைந்து புத்தகங்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்திருக்கிறார். கொத்தமங்கலம் சுப்புவின் 'பதினெட்டாம் பெருக்கு சிறுகதைகள்' தொகுப்பு பதினைந்தாவது புத்தகமாகும். அவர் தனது ஏற்புரையில், "பல சிறுகதைகளைப் படிக்கும்போது நான் அழுதுவிட்டேன். அந்த அளவுக்கு என் இதயத்தை அந்தக் கதைகள் தொட்டுவிட்டன. இந்தச் சிறுகதைகள் 1930களிலும், 1940களிலும் எழுதப்பட்டவை என்பதால், நான் மொழிபெயர்ப்பின்போது இந்தக் காலத்து ஆங்கில வார்த்தைகளுக்கு பதிலாக அந்தக் காலத்து வார்த்தைகளையே கவனத்துடன் பயன்படுத்தி இருக்கிறேன்,” என்று கூறினார்.