

வெற்றி மட்டுமே வாழ்க்கையா? தோல்வியைச் சந்திக்கும் பயத்தை உதறிவிட்டு, விடாமுயற்சியுடன் மீண்டு எழுவது எப்படி? மால் வாசலில் பாப்கார்ன் விற்ற ஒரு சிறுவனின் வித்தியாசமான அனுபவம் நம் அத்தனை பேருக்கும் ஒரு அத்தியாவசிய வாழ்க்கைப் பாடத்தைக் கற்றுக் கொடுக்கிறது. நம் குழந்தைகளை எப்படி வளர்ப்பது என்ற சிந்தனையைத் தூண்டும் இந்த அருமையான கட்டுரையைத் தொடர்ந்து வாசியுங்கள்!
அது புது மால்! போன வாரந்தான் திறப்பு விழா. எக்கச் சக்க விளம்பரம். பெரு நகரிலேயே அதுதான் பெரிதாம். அருகிலுள்ள நெடுஞ்சாலையில் தினமும் பயணித்தாலும், ரவிக்கு மாலுக்குச் செல்ல இன்றுதான் நேரம் கிடைத்தது. டூ வீலரைப் பார்க் செய்து விட்டு, கையிலிருந்த செல் போனில் எதையோ பார்த்தபடியே நடந்தான்!
நடைபாதையில் பாலகன் ஒருவன் பாப்கார்ன் பாக்கட்டுகளை விற்பதைக் கண்டதும் நின்றான். ஏழெட்டு வயதுதான் இருக்கும் அந்தப் பையனுக்கு.
ரவிக்கு, அந்தப் பையன் வயதிலுள்ள தன் மகன் ஞாபகத்திற்கு வந்து விட்டான். ’என்ன கொடுமை இது? இவ்வளவு சிறிய வயதில் இந்தச் சிறு பையனுக்கு பாப்கார்ன் விற்க வேண்டுமென்ற தலையெழுத்தா? நமக்கே பொறுக்க வில்லையே? இவன் பெற்றோர்கள் பார்த்தால் துடித்துப் போவார்களே!
பெற்றோர்கள் இருப்பார்களா? இருந்தால் இப்படி விட மாட்டார்களே! ஒரு வேளை இருந்தும் இப்படி விட்டிருந்தால் அவர்கள் இரக்கமில்லாதவர்களாகத்தான் இருக்க வேண்டும்!’ என்று எண்ணியபடியே பையனை நெருங்கினான்.
“தம்பி! எனக்கு ஒரு பாக்கட் கொடு!” என்றவன், பையன் கையில் இருந்த பாக்கட்டில் ரூ 20/- என்ற விலையைப் பார்த்து விட்டு, பேண்ட் பாக்கட்டிலிருந்த பர்சை எடுத்து அதிலிருந்து இருபது ரூபாயை எடுத்துப் பையன் கைகளில் வைத்தான்.
புன்முறுவலுடன் வாங்கிக் கொண்ட பையன் “தேங்க்ஸ் அங்கிள்” என்றான். இருந்தும் ரவியின் மனது அமைதி பெறவில்லை.
“இன்னும் எத்தனை பாக்கட் இருக்கிறது விற்க? எவ்வளவு நேரம் விற்க வேண்டும்? வெயிலாக இருக்கிறதே தம்பி!” என்று ரவி உருகினான்!
பையனோ, ”நூறு பேர் நோ! வேண்டாம்” என்று சொல்வதைக் கேட்கும் வரை விற்க வேண்டும். இதுவரை ஐம்பது பேருக்கு மேலானோரிடம் ‘நோ,வேண்டாம்!’ என்பதைக் கேட்டாயிற்று. இன்னும் ஐம்பது பேரிடமாவது நோ, வேண்டாம் என்பதைக் கேட்டால், அதன் பிறகு விற்பனையை நிறுத்தி விடலாம்.
ரவிக்கு பையன் சொன்னது முதலில் புரியவில்லை. அப்புறந்தான் புரிந்தது! அதற்குள் சற்று தூரத்திலுள்ள மரத்து நிழலில் நின்றிருந்த ஆசிரியர் வந்து விட்டார்.
“அவனுக்கு இது ஒரு வாழ்க்கைப் பாடம்! நாம் செய்யும் மிகப் பெரிய தவறு, நம் குழந்தைகளுக்கு வெற்றி பெறுவதை மட்டுமே சொல்லிக்கொடுப்பதுதான்.
தோல்வியை எப்படி ஏற்றுக் கொள்ள வேண்டும்; எவ்வாறு சமாளிக்க வேண்டும் என்று சிறு வயதிலேயே அவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கத் தவறி விடுகிறோம்.
அதனால்தான் சிறு தோல்வி ஏற்பட்டாலும் அவர்கள் துவண்டு போய் விடுகிறார்கள். வாழ்வில் நம்பிக்கையை இழந்து விடுகிறார்கள். குழந்தைகளுக்கு மீண்டும் மீண்டும் நாம் சொல்லிக் கொடுப்பது என்ன?
கஷ்டப்பட்டுப் படிக்க வேண்டும்;
அதிக மார்க் வாங்க வேண்டும்;
முதலிடத்தைப் பிடிக்க வேண்டும்;
போட்டிகளில் ஜெயிக்க வேண்டும்;
எதிலும் தேர்ச்சி பெற வேண்டும்;
மேலும் மேலும் சாதிக்க வேண்டும்!
இதைத்தானே!
ஆனால் எல்லா நிலையிலும் இது சாத்தியமாகாதே!
சில நேரங்களில் சில தேர்வுகளில் நாம் தோற்றுப் போகலாம்;
நெருங்கி வந்த சந்தர்ப்பம் கடைசி நேரத்தில் நழுவிப் போகலாம்;
சில நேர்காணல்களில் நாம் செலக்ட் ஆகாமல் போகலாம்;
நெருங்கிய உறவுகள் கூட நம்மை உதாசீனப் படுத்தலாம்;
நியாயமான நம் கனவுகள் கூட நிறைவேறாமல் நீண்ட காலம் இழுத்தடிக்கலாம்!
வெற்றி எப்பொழுதுமே நம்மை உற்சாகப்படுத்தும். ஆனால் தோல்விதான் நம்மைப் பலசாலியாக்கும். வாழ்க்கையை எதிர் கொள்ள வேண்டிய ஆற்றலை உள்ளத்தில் வளர்க்கும்.
பாப் கார்ன் விற்கும் பையன் பெரும் பாடத்தைக் கற்றுக் கொள்கிறான்! பலர் ‘நோ! வேண்டாம்!’ என்று சொன்னாலும், அடுத்தவரிடம் சென்று ‘சார்! ஒன்று வாங்கிக் கொள்ளுங்களேன்!’ என்று கேட்கும் மன உறுதியைப் பெறுகிறான்.
இதன் மூலம்
துணிச்சலை;
விடா முயற்சியை;
தோல்வியிலும் துவளா நிலையைப் பெறுகிறான்!
எனவே இனி நம் குழந்தைகளிடம் ‘நீ ஜெயிப்பாயா?’ என்று கேட்பதை விடுத்து ‘தோல்வி அடைந்தாலும் நீ மறுபடியும் முயற்சிப்பாயா?’ என்று கேட்டு, அதனை வலியுறுத்தவும் வேண்டும்.
பாலகர்களிடம் ‘வெற்றியடைய வேண்டும் என்று மட்டுமே சொல்லி வளர்க்காமல்
தோல்விகளைக் கண்டு பயப்படாமல், அதனை எதிர்த்து எப்படிச் செயல்படுவது என்றும் சொல்லி வளர்க்க வேண்டும்’.
அந்தப் பாப்கார்ன் பாலகனுக்கும், அவனுடைய பெற்றோர்களுக்கும், ஆசிரியருக்கும் நாம் நன்றி சொல்ல வேண்டும்.
ஏனெனில் ஒரு பாக்கட் பாப்கார்னை ‘கொடு தம்பி!’ என்று கூறி வாங்கிச் செல்வோரைக் காட்டிலும் ‘100 வேண்டாம்!’ என்று கூறிச் சென்றவர்களே வாழ்க்கைப் பாடத்தை அதிகமாகப் போதித்த புத்தர்களாவார்கள்!