
சீனா இந்தியாவின் அண்டை நாடு என்றாலும் அந்த நாட்டின் சுற்றுச்சுழல் இந்தியாவின் சுற்றுச்சூழலோடு ஒப்பிட முடியாது. சீனாவில் உள்ள சில இயற்கைச் சூழல் மற்ற நாடுகளில் இல்லை. அதே நேரம் சீனாவில் அதிசயம் நிறைந்த சில ஆபத்துகளையும் இயற்கை அவர்களுக்கு வழங்கியுள்ளது.
சீனாவின் தெற்கு மாகாணத்தில் 'டியான்கெங்ஸ்' எனப்படும் மிகப்பெரிய மரண பாதாளக் கிணறுகள் இயற்கையாக அமைந்துள்ளன. இதை அந்த மொழியில் மரண கிணறுகள் என்று பொருள்பட அழைக்கிறார்கள். இந்த மிகப்பெரிய கிணறுகளை 'சொர்க்கக் குழிகள்' என்றும் கூட அழைக்கிறார்கள்.
இந்த பெரிய கிணறுகள் பல ஆச்சர்யங்கள் நிறைந்த இயற்கை அதிசயமாக விளங்குகிறது. இது அறிவியல் வளர்ச்சிக்கு முன்னர் தெரியாத சுற்றுச்சூழல் அமைப்புகளையும் உயிரினங்களையும் வெளிப்படுத்துகின்றன. சமீபத்தில் புவியியல் ஆய்வாளர்கள் சீனாவின் தெற்குப் பகுதியில் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட 'டியான்கெங்'கில் இறங்கி ஆராய்ச்சி செய்தனர்.
சீனாவின் குவாங்சி ஜுவாங் தன்னாட்சிப் பகுதியில் உள்ள தென்சீன கார்ஸ்டின் பகுதியில் இந்த மரணக் கிணறு உள்ளது. யுனெஸ்கோவால் பட்டியலிடப்பட்ட 30க்கும் மேற்பட்ட பாதாளக் கிணறுகளில் இதுவும் ஒன்று. இந்த மாபெரும் பாதாளக் கிணறு 190 மீட்டருக்கும் அதிகமான ஆழம் கொண்டது . இந்த கிணறு சுமார் 300 மீட்டர் நீளமும், 150 மீட்டர் அகலமும் கொண்டுள்ளது.
புவியியல் விஞ்ஞானிகள் இந்த ஆழமான பாதாளக் கிணறுகளில் இறங்கி ஆராய்ச்சி செய்கின்றார்கள். அவர்களின் ஒவ்வொரு ஆராய்ச்சி பயணமும் பூமியின் இயற்கை புவியியலை பற்றி ஆராய்ச்சிகளை வெளிப்படுத்துகிறது. புவியியல் ஆர்வங்களுக்குப் பதிலாக, சீனாவின் டியான்கெங்ஸ் உயிருள்ள ஆய்வகங்களாக இயற்கையின் பல்வேறு அதிசயங்களை பற்றிய நுண்ணறிவுகளை வழங்குகின்றன
மிகவும் ஆழமாக மரணக் கிணறுகள் இருந்தாலும் அங்கு பசுமையான பெரிய காடுகளைக் கொண்டுள்ளது . இவ்வளவு ஆழமான இடம் உயிர்கள் வாழத்தகுதியற்ற வெற்றிடங்களாக இருக்கும் என்று நினைப்பவர்களுக்கு இது அதிசயத்தை தருகிறது. சீன புவியியல் ஆராய்ச்சியாளர் டாங் ஜியான்மின் கூற்றுப்படி, இந்த செங்குத்தான குகைகளுக்குள் காணப்படும் பல்லுயிர் பெருக்கம் திகைக்க வைக்கிறது.
2016 ஆம் ஆண்டில் டாங் ஜியான்மின் ஒரு பாதாள மரணக் கிணறைப் பற்றி ஆராய்ச்சி செய்யும் போது, "கீழே உள்ள காட்சி என்னை பிரமிக்க வைக்கிறது.
மனித நடவடிக்கைகளின் எந்த தடயமும் இல்லாத பாதாளத்தில் ஒரு அழகிய காடு ஆச்சரியப் படுத்துகிறது. 40 மீட்டர் உயரமுள்ள பழங்கால மரங்கள் மற்றும் டைனோசர்களின் காலத்திலிருந்து அழிந்து வரும் காட்டு தாவரங்கள் அங்கு உள்ளன" என்று கூறினார். இந்த பாதாள சோலைகள் குறைந்த சூரிய ஒளியைப் பெற்றாலும் உயிர்களால் நிறைந்துள்ளன, மேலும் அவை எவ்வாறு செழித்து வளர்கின்றன என்பது பற்றி விஞ்ஞானிகள் இப்போது அதிகம் ஆய்வு செய்கிறார்கள்.
ஒரு சமீபத்திய ஆய்வில், "டியான்கெங் சுற்றுச்சூழல் அமைப்புகள் நெட்டில்ஸ், ஃபெர்ன்கள் மற்றும் ஸ்ட்ரோபிலாந்தஸ் குசியா போன்ற தாவரங்கள் நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம், கால்சியம் மற்றும் மெக்னீசியம் ஆகியவற்றை மிகுதியாக உறிஞ்சுவதன் மூலம் வாழும் தகவமைப்புத் தன்மையைப் பெறுகின்றன. தாவரங்கள் அவற்றின் ஊட்டச்சத்தை பெறுவதன் மூலம் பாதகமான சூழல்களுக்கு ஏற்ப வாழ முடிகிறது. அதிக ஈரப்பதம் மற்றும் தனித்துவமான மைக்ரோக்ளைமேட்டுடன் இணைந்த இந்த சூழல்கள் , அரிய வகை தாவரங்கள் வளர வளமான நிலங்களை உருவாக்குகின்றன" என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர் .
உலகளவில் அடையாளம் காணப்பட்ட சுமார் 300 மரண பாதாள கிணறுகளில், மூன்றில் இரண்டு பங்கு சீனாவில் உள்ளது. மற்றவை பப்புவா நியூ கினியா, மலேசியா, மடகாஸ்கர் மற்றும் ஐரோப்பாவின் சில பகுதிகளில் உள்ளன. ஆனால் , தென் சீன கார்ஸ்டில் உள்ளவற்றின் அளவு மற்றும் உயிரியல் பன்முகத்தன்மையுடன் உலகில் உள்ள வேறு மரண பாதாள கிணறுகள் பொருந்தவில்லை.