

ஒரு மனிதன் அடிமைப்பட்டு இருந்து விடுதலை..! ஆனால் என்ன செய்வான் வெளியில் வந்து ஆடுவான்; பாடுவான்.
அதைத்தான் பாரதி பாடினார் சுதந்திரம் அடையும் போது என்ன செய்வோம் என்று…, “ஆடுவோமே பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம் என்று.”
சுதந்திரக்காற்றை அவர் சுவாசிக்கவில்லை. 1921லேயே மறைந்து விட்டார். அது என்ன பள்ளு பாடுவோமே. ஆம், பள்ளு என்பது தமிழ் சிற்றிலக்கியங்களில் ஒன்றாகும். 96 பள்ளு இலக்கிய நூல்கள் இருந்தாலும், அதில் நாம் அதிகம் அறிந்த ஒன்று முக்கூடற் பள்ளு.
"ஆற்று வெள்ளம் நாளை வர தேற்றுதே குறி…
மலையாள மின்னல் ஈழ மின்னல் சூழ மின்னுதே.."
இதை இயற்றிய ஆசிரியர் யார் எனத் தெரியவில்லை என்றாலும் என்னயினாப் புலவர் (வேளான் சின்னத்தம்பி) இயற்றி இருக்கலாம் எனக் கருதுகின்றனர். மொத்தம் 320 பாடல்கள் உள்ள அந்த நூல் முத்தமிழ் நூலாகும். பாடுவதற்கு சுலபமாகவும் இனிமையாகவும் இருக்கும்.
17 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டிருக்கலாம் என்கிறார்கள். 1680 வாக்கில் திருநெல்வேலி மாவட்டத்தில் பொருநை, சித்ரா, கோதண்டராமன் ஆறுகள் சேரும் முக்கூடல் நகர் அழகர் மீது பாடப்பட்டது என்பர்.
அந்நூலில் குடும்பன் எனும் பாட்டுடைத் தலைவனுக்கு இரு மனைவியர். மூத்தவள் முக்கூடல் ஊர். இளையவள் ஊர் மருதூர். பெரியவள் பெருமாள் பக்தை. இளையவள் சிவ பக்தை. இருவருக்கும் எந்த தெய்வம் பெரியவர் என்று சிலேடையாக இந்நூலில் பாடுவர்.
மூத்தவள் சொல்வாள், “உங்க சிவனார் சாப்பிட எதுவும் கிடைக்காமல் விஷத்தை தின்னாரே..” சின்னவள் சொல்வாள், “உங்கள் கண்ணன் மட்டும் என்ன.. சும்மாவா மண்ணைத் தானே தின்றார்.”
மூத்தவள், “உங்க சிவன் கட்டிக்க எதுவும் கிடைக்காது புலித் தோலை அல்லவா உடுத்துகிறார்.” பதிலாக இளையவள் பாடுவாள்“ புடவையை கட்டிக்கிட்டாரே கிருஷ்ணன் தெரியாதா..”
இதோ அந்தப் பாடல் வரிகள்
மூத்தவள்..
"சுற்றிக்கட்ட ஒரு முழத்துண்டு மில்லாமல் புலித்
தோலை உடுத்தானுங்கள் சோதி அல்லோடி."
இளையவள்…
"கற்றைச் சடைகட்டி மரவுரியும் சேலைதான் பண்டு
கட்டிக்கொண்டான் உங்கள் சங்குக் கையன் அல்லோடி"
மூத்தவள்…
"நாட்டுக்குள் இரந்தும் பசிக்காற்ற மாட்டாமல் வாரி
நஞ்சையுண்டான் உங்கள் நாதனல்லோடி"
இளையவள்..
"மாட்டுப் பிறகே திரிந்தும் சோற்றுக்கில்லாமல் வெறும்
மண்ணையுண்டான் உங்கள் முகில் வண்ணணல்லோடி"
அக்காலத்தில் அப்படி ஒரு உயர்ந்த கடவுள் யார் பாலிடிக்ஸ் நடந்தது. முக்ககூடற்பள்ளு காலம் 1680.
அப்பராகிய நாவுக்கரசர் சமண சமயத்தில் கொஞ்ச நாள் பற்று கொண்டிருந்தார்.
பல்லவ மன்னர்கள் காலத்தில் பௌத்த மதம் அதன் துறவிகள் பற்றி நிறைய சிவகாமியின் சபதம் நாவலில் கல்கி எழுதினார்.
பொன்னியின் செல்வனில் நாகை சூடாமணி விகாரம் பற்றிச் சொல்வார். அது பௌத்த ஆலயம்.
குடந்தையில் இருந்து 13 கி.மீ தூரத்தில் சோழபுரம் தாண்டி சென்னை சாலையில் தெற்கே 2 கி.மீ தூரத்தில் சேங்கணூர் உள்ளது.
அது வியாக்கியானச் சக்கரவர்த்தி பெரிய வாச்சான் பிள்ளை 1228 ஆம் வருடம் பிறந்த அவதார ஸ்தலம். (திரு கிருஷ்ண ப்ரேமி அவர்களின் ஊரும் அதுவே)
அங்கே உள்ள பெருமாள் கோவிலில் வினாயகர் விக்கிரகம் திருமண் ஆகிய நாமம் தரித்து இருப்பார். “தும்பிக்கை ஆழ்வார்” எனக் கீழே பெயர் இருக்கும்.
இப்போது எல்லா கோவிலுக்கும் எல்லோரும் போகிறார்கள். ஏதாவது ஒரு தெய்வம் நல்ல வழி காட்டாதா என ஒரு ஏக்கம் மக்களுக்கு. வீட்டுக்கு வீடு பிரச்சனைகள் குவிந்து இருப்பதே காரணம்.
இதையெல்லாம் குப்புசாமி தன் நண்பர்களிடம் சொல்லி ஆற்று வெள்ளம் நாளை வர பாடலை இசையோடு பாடினார். அவர் படித்த காலத்தில் முக்கூடற்பள்ளு, குற்றாலக் குறவஞ்சி பாடல்கள் புத்தகத்தில் இடம் பெற்றிருந்தன.
இதைக் கேட்ட ரிடையர்டு புதை பொருள் ஆய்வாளராகிய நாகமுத்துசாமி, “இயற்றியவரைப் பற்றி சில குறிப்புகள் நீங்கள் பாடிய பாடலிலேயே இருக்கு. அவர் தாய் மலையாளம், தந்தை ஈழம் அல்லது தாய் ஈழம் தந்தை கேரளா; கடக ராசிக்காரர்” என்றார்.
“எப்படிச் சொல்றீங்க.”
“அந்தப் பாடலில் நண்டு என்று வருதே.”
கர்னல் கந்தசாமி ரிடையர்டு பிரெஞ்ச் ஆர்மி சொன்னார். “இது போல் ரகசியக் குறியீடுகளில் ராணுவச் செய்திகளை அனுப்புவோம். பெறுவோம். அந்தச் செய்திகளை விளக்க சாவி, கீ ஒவ்வொருவரிடமும் இருக்கும்.”, எனச் சொல்லி ஆப்பிரிக்காவில் தன் அனுபவத்தைச் சொல்லத் தொடங்கினார்.
கலகக் காரர்களை அடக்க ஐ. நா அனுப்பிய படையில் இருந்த இவரிடம் ஒரு ரகசிய செய்தி பிடிபட்டது. ஒருவன் தன் சகா கிராமத்து ஆளுக்கு அனுப்பிய செய்தி இதுவே.
“முன்னூறு கோழிகள், முப்பது ஆடுகள், ஆயிரம் முட்டைகள், அனுப்பவும்”, என்று. இது செய்தியாக இல்லை ஒரு படமாகக் கிடைத்தது.
கந்தசாமி தன் மூளையைக் கசக்கி கலகக் கார தலைவன் முன்னூறு வீரர்கள், முப்பது பீரங்கிகள், ஆயிரம் கையெறி குண்டுகள் கேட்டுள்ளான் என மொழி பெயர்த்து அதை சமாளிக்க ஒரு பெரும் படையுடன் காத்திருந்தார்கள்.
“அப்புறம் என்ன பிடி பட்டானா அவன்?”
“என்ன ஆச்சு தெரியுமா மூன்று கிராமத்து ஆட்கள் வந்தார்கள். கோழிகள், ஆடுகள், கூடையில் முட்டைகளுடன், எங்கள் கூடாரத்தை நோக்கிப் போனார்கள். பிடித்து விசாரித்ததில் மறு நாள் சாப்பாட்டுக்கு கந்தசாமியின் பிரெஞ்ச் ஆர்மிக்கு தான் அந்த சப்ளை எனத் தெரிந்தது. படிக்காத கிராம வாசிகளுக்கு படம் போட்டு மேஜர் பிரெஞ்ச் தளபதி விளக்கி இருந்தார்”
குப்புசாமி தன் செல் போனில் ஒரு புத்தகத்தைக் காட்டி “இது தான் வாய்னிச் புத்தகம். இது நாள் வரை இதை யாரும் என்ன மொழி, என்ன செய்திகள், எனக் கண்டு பிடிக்க முடியாமல் திணறுகிறார்கள். 1912ல் வில்ஃப்ரிட் வாய்னிச் என்பவர் இந்த புத்தகத்தை வாங்கினார். 240 பக்கங்கள் உள்ள அது. 1969முதல் யேல் பல்கலைக் கழகம் அதை பாதுகாக்கிறது. புத்தகத்துக்கு அதை வாங்கிய வாய்னிச் பெயரையே வைத்து விட்டார்கள்அதன் டிஜிட்டல் பக்கங்கள் எல்லோருக்கும் ஆய்வுக்கு கிடைக்கிறது. இதோ பாருங்கள்..! எதுவும் புரியாததால் அந்த புத்தகம் எழுதப்பட்ட மொழிக்கு வாய்னிசீஸ் என்றே பெயர் வைத்து விட்டனர்.”
நாகமுத்துசாமி பார்த்து விட்டு “பூ… இது என்ன தெரியுமா? இது ஒரு இத்தாலிய நாவல்”
“எப்படிச் சொல்றீங்க”
“அங்கே தான் இந்தத் தாவரங்கள் விளையும்..”
குப்புசாமி, “ சிலர் இது மோனலிசாவை வரைந்த லியனார்டோ டாவின்ஸி தன் தாத்தா தோட்டத்தைப்பற்றி எழுதிய டயரி. சிறு வயதில் அவர் தாத்தா வீட்டில் வளர்ந்தார். அவர்தான் யாருக்கும் புரியாமல் தனக்கு மட்டும் புரியும் வகையில் எழுதுவார் சங்கேத மொழியில், எனவும் சொல்கிறார்கள். 2018ல் ஏ. ஐ பயன்படுத்தியும் ஒரு பிரயோசனமும் இல்லை.”
கர்னல் கந்தசாமி பார்த்து விட்டு “இது ஒன்றுமில்லை சார். இது ஆப்பிரிக்காவில் ஒரு ஊரில் ஆக்ஷனுக்குப் போனேனே! அந்த ஊர் மொழியில் எழுதப்பட்ட இராமாயணம். அதில் உள்ள மூலிகை படங்கள் தான் இவை. சஞ்சீவி மூலிகைகள். அனுமார் சஞ்சீவி மலையைத் தூக்கி வருவாரே. அந்தக் கதை தான் இது. இதை அந்த ஊர் லைப்ரரியில் நிறைய பேர் வாசிப்பார்கள். பார்த்திருக்கேன். அனுமாருக்கு ஆஞ்சனேயர் என்று அங்கே சொல்வார்கள்..”, என்று ஒரு போடு போட்டார். “இங்கேயும் அப்படித் தானே சொல்வார்கள்” என குப்புசாமி நினைத்துக் கொண்டார்.