நச்சுனு நாலு மினி கதைகள்!

Story  Image
Story ImageAI Image
Kalki Strip
Kalki Strip

1. நோட்டாவுக்கே ஓட்டு!

Political Meeting
Political MeetingAI Image

பரபரப்பாக கட்சி அலுவலகத்துக்குள் நுழைந்த வட்டச் செயலாளர் மாணிக்கம் அங்கே அமர்ந்திருந்த முத்துவைப் பார்த்து "முத்து நீயும் வந்துட்டையா, இன்னும் ஒரு வாரம் தான் இருக்குது நம்ம ஏரியால நடக்கிற கூட்டத்துக்கு. தேர்தல் பிரச்சார கூட்டங்கறதால நம்ம கட்சி தலைவரோட கூட்டணி கட்சி ஆளுங்களும் வராங்க. ஆளுகள நிறைய கூட்டிட்டு வந்து நம்ம பலத்த காமிச்சு சிறப்பா செய்யணும்," என்றான்.

"அதெல்லாம் கவலையே பட வேண்டாம் மாணிக்கம். நம்ம ஏரியா மொத்தமும் அங்க தான் இருக்கும். வழக்கம் போல எல்லாம் உண்டு தானே?" என்றான் முத்து அசட்டு சிரிப்புடன்.

"குவாட்டர், பிரியாணி, பணம் எல்லாம் உண்டு," என்று கூறியபடி அட்வான்ஸ் பணத்தை அவனிடம் நீட்டினான் மாணிக்கம்.

'வட்டச் செயலாளர் ஆகிட்டோம்ன்னு பணத்தை நீட்டி கெத்து காட்டுறான் பாரு. ஒரு காலத்தில நாங்க  இரண்டு பேரும் ஒண்ணா சேர்ந்து பீடி வலிச்சவங்க தான். இப்போ இவன் வட்ட செயலாளர். இந்த ஏரியா பக்கம் தலையே காட்டாம இப்ப கட்சி ஆபீஸ்க்கு என்னைய போன் பண்ணி வரச் சொல்றான். இவனுக்கெல்லாம் நேரம் நல்லா இருக்குது... ம்...' என மனத்தினுள் பொறுமினான் முத்து.

பணத்தை வாங்கிய முத்துவிடம், "நீ முதல்ல நம்ம ஏரியா மகளிர் அணித் தலைவியை பார்த்து விஷயத்தை  சொல்லிடு. அவங்க பார்த்துக்குவாங்க," என்றான் மாணிக்கம்.

"அவங்க பார்த்துக்குவாங்கன்னா நான் வேற எதுக்கு?" என கோபமாக கேட்டான் முத்து.

"கோவிக்காதப்பா, கூட்டம் சேர்க்க உன்னை விட்டா ஆளில்லை, உன் வேலையில அவங்களையும் சேர்த்துக்க..." என்றான் மாணிக்கம் இறங்கிய குரலில்.

"சரி நான் பார்த்துக்கறேன் விடு" என்றான் முத்து கெத்தாக.

தன் ஏரியா மகளிர் அணி தலைவியை கூப்பிட்டு, 'பொம்பளைங்க ஒரு ஆள விடாம எல்லாம் கூட்டத்துக்கு வந்துடணும். அதுக்கு நீதான் பொறுப்பு' என்று முத்து பேசிக் கொண்டிருந்த போதே அந்த ஏரியா பெண்கள் அங்கு கூட்டமாக வரத் தொடங்கினர். 

"என்ன இப்பவே பிரியாணி சாப்பிட வந்துட்டீங்களா?" என்ற முத்துவை முறைத்தனர் பெண்கள்.

கூட்டத்தில் இருந்த ஒரு பெண் "இனிமே நாங்க உங்களை நம்ப தயாராக இல்லை. குடிச்சிட்டு நீங்க கொடுக்கிற அடி உதையை வாங்கவும் தயாரா இல்லை. அதனால நீங்க கொடுக்கிற பிரியாணியும் பணமும் எங்களுக்கு தேவையில்லை," என்றாள் உறுதியாக.

"அய்ய... இத பாருடா பிரியாணியும் பணமும் வேணாமா. அப்ப ஓட்டாவது போடுவீங்களா இல்லையா?" என்றான் முத்து. 

"போன முறையே மதுவிலக்கு அமல் படுத்துவோம்னு சொன்னவங்க, இலவசமா எதையாவது கொடுத்துட்டு  இப்பவும் அதையே சொல்லிட்டு வந்து ஓட்டு கேப்பாங்க. நாங்க திரும்பவும் ஓட்டு போடணுமா? மதுவால சீரழிஞ்ச எங்க வீடுகளுக்கு இன்னும் விடியல் வரல. அதனால இந்த முறை எங்க ஓட்டு நோட்டாவுக்குத் தான்" என்றாள் அந்த பெண்.

அனைத்து பெண்களும் கை தட்டி அதை ஆமோதித்தனர்.

2. கொலுசு

Woman and Begger
Woman and BeggerAI Image

"ஐயா சாமி, ஏதாவது தர்மம் பண்ணுங்க" ரோட்டோரத்தில் அமர்ந்திருந்த அந்த கிழவர் தான் இப்படி ஈனஸ்வரத்தில் அனைவரிடமும் பிச்சை கேட்டார். தன் அருகில் சிறு ஓசை கேட்டாலும் "ஐயா சாமி" என தேய்ந்து போன ரெக்கார்டாய் முணங்கினார். வெயிலின் கடுமை தாளாமல் அந்தக் கிழவர் அங்கிருந்த பஸ் ஸ்டாப் நிழற்குடைக்குள் வந்தார். அவரின் கிழிந்த ஆடையும் பரட்டை தலையும் அங்கிருந்தவர்களின் முகங்களை சுழிக்க வைத்தன.

பாமா தன் எட்டு வயது மகளுடன் பஸ்சுக்கு காத்துக் கொண்டிருந்தாள். "பாவம்மா அந்த தாத்தா அவருக்கு ஏதாவது கொடுப்போமா...?" என்று கேட்டாள் மகள். கோபமாக மகளைப் பார்த்த பாமா "இவனுக எல்லாம் திருடனுங்க பாப்பா" என்று கூறியவள், "இந்த பிச்சைக்காரனுங்க தொல்லை ரொம்ப அதிகமா போச்சு, பஸ் வேற வரமாட்டேங்குது" என்று சலித்துக் கொண்டாள்.

வீட்டுக்கு வந்த பாமா தன் மகளின் உடையை மாற்றியவள் "ஏய் எங்கடி ஒரு கால் கொலுசை காணோம்?" என்று கேட்டாள். மகள் விழித்தாள். "எங்க விழுந்துச்சோ வெள்ளி விக்கிற விலைக்கு 3,000 ரூபா போச்சு..." பாமா புலம்பினாள்.

மறுவாரத்தில் பாமா அந்த பஸ் ஸ்டாப்புக்கு வந்த போது அந்த பிச்சைக்கார கிழவனை பார்த்ததும் "ஏதாவது வேலை செஞ்சு பிழைக்கலாம் இல்லை?" என்று சத்தமாகவே கேட்டாள் அவரிடம்.

"அம்மா தாயி உங்க மகளை கூட்டிட்டு அன்னைக்கு வந்தீங்க தானே" என்று பாவமாக கேட்டார் கிழவர். "ஆமா அதுக்கு என்ன இப்போ" என்று அவரிடம் அதட்டலாக கேட்டாள் பாமா. "இந்த கொலுசு உங்க மகளுதா பாருங்க. அன்னைக்கு பஸ்ஸில ஏறும் முன்ன உங்க மக தான் என் தட்டுல பிஸ்கட் பாக்கெட்டை போட்டுட்டு போச்சு. ஏறுற அவசரத்துல ஒரு கால் கொலுசு கீழே விழுந்திருச்சு..." என்றார் அந்த கிழவர் அமைதியாக. 

பாமா தன் மகளின் கொலுசு அவர் கைகளில் இருப்பதை பார்த்து திகைத்து நின்றாள்.

3. ஷாக் ட்ரீட்மென்ட்

Bride-seeing ceremony
Bride-seeing ceremonyAI Image

தன் மூத்த மகள் வர்ஷாவைப் பெண் பார்த்து முடித்ததும் அந்தப் பையன் வீட்டார் சொன்னதைக் கேட்டு கொதித்துப் போனார் கேசவன். "அக்காவைப் பெண் பார்க்க வந்துட்டு தங்கச்சியை பிடிக்குதுனா என்ன அர்த்தம்" என்றார் கோபத்துடன்.

வர்ஷா தான் தன் தந்தையை சமாதானப்படுத்தி "அப்பா அவங்க இப்படி கேட்டது தப்பு தான். ஆனா நல்ல குடும்பம். இந்த இடம் அமைஞ்சா நல்லா இருக்கும்னு நீங்கதானே சொன்னீங்க. எனக்கு வேற வரன் பார்க்கலாம். இந்த பையன் குமரனையே தங்கச்சி ப்ரியாவுக்கு ஃபிக்ஸ் பண்ணிடலாம் பா," என்றாள்.

இதைக் கேட்டுக் கொண்டிருந்த ப்ரியா மிகுந்த பதட்டமானாள். கையில் போனுடன் வீட்டின் பின்புறம் சென்றவள் தன் காதலன் பார்த்திபனுக்கு போன் செய்தாள். "என்ன செய்வியோ எனக்கு தெரியாது நீ இப்ப இங்க வரலைன்னா எனக்கு இப்பவே நிச்சயமே செய்துடுவாங்க இந்த பையனோட," என்று புலம்பினாள்.

வெகு வேகமாக வந்து ப்ரியாவின் வீட்டினுள் நுழைந்த பார்த்திபன், பெண் பார்க்க வந்திருந்த அனைவரையும் பார்த்து என்ன பேசுவது என்று தெரியாமல் தடுமாறி நின்றான். ஆனால் ப்ரியாவோ அதற்கு மேல் பொறுக்க முடியாமல் அனைவர் முன்னிலையிலும் "நானும் பார்த்திபனும் காதலிக்கிறோம்," என்று உண்மையை போட்டு உடைத்தாள்.

"எங்களுக்கு தான் அது தெரியுமே..." என்று சிரித்தனர் ப்ரியாவின் அக்கா வர்ஷாவும் அவளை பெண் பார்க்க வந்த குமரனும். அனைவரும் வியந்து இருவரையும் பார்க்க, "ப்ரியாவும் பார்த்திபனும் தங்கள் காதலை பெற்றோருக்கு பயந்துட்டு யாரிடமும் சொல்லாம  தவிச்சாங்க. அந்த விஷயம் தெரிஞ்ச நாங்க இரண்டு பேரும் சேர்ந்து இவங்களுக்கு ஒரு ஷாக் ட்ரீட்மென்ட்  கொடுத்தோம். இப்போ உண்மை வெளிய வந்துடுச்சு," என்றாள் வர்ஷா.

"இந்த நாடகத்துக்கு ஒத்துக்கிட்ட உங்களுக்கு ரொம்ப நன்றிங்க," என்றாள் வர்ஷா குமரனிடம் காதலுடன்.

இதையும் படியுங்கள்:
சிறுகதை: திண்ணையைக் காணோம்!
Story  Image

4. தேடல்

Husband and wife searching somthing
Husband and wife searching somethingAI Image

'நான் ஒரு மறதி மாணிக்கமா ஆகிண்டு வரேன்' என்று முணுமுணுத்தபடி தன் நெற்றியில் வலிக்காமல் தட்டிக் கொண்டாள் புவனா. 'இப்படி எல்லாத்தையும் இடம் மாத்தி வச்சிட்டு தேடறதே எனக்கு வேலையா போச்சு' என மனதில் நினைத்தபடி பிரிட்ஜ் மேல் இருந்த பொருட்களை ஒவ்வொன்றாக எடுத்துப் பார்த்தாள். 

ஹால் சோபாவில் அமர்ந்திருந்த சுந்தரம் தன் மனைவி புவனா எதையோ தேடுகிறாள் எனப் புரிந்து "என்னத்த காணும்? எதை தேடற?" என்று கேட்டார் அவளிடம். "ஒண்ணும் இல்ல நானே பார்த்துக்கிறேன்" என்று அவரிடம் கூறிய புவனா பிரிட்ஜைத் திறந்து அதனுள்ளும் தேடினாள். 

"நீ எங்க தான் போன? நீ இல்லேன்னா எனக்கு கை உடைஞ்ச மாதிரி இருக்கு... உனக்கு அது புரியர்தா? எங்கேயோ போய் உட்கார்ந்துண்டு இருக்க..." என்றவளின் கண்களில் வெகு நாட்களுக்கு முன் தொலைந்து விட்டது என நினைத்த அவள் பேனா பிரிட்ஜ் கதவின் ஒரு ஓரமாக இருப்பது தெரிந்தது.

புவனா எந்த வேலையைச் செய்தாலும் ரசித்து பேசிக் கொண்டே செய்வாள். "நீ இங்கதான் ஒளிஞ்சிண்டு இருக்கியா?" என்றவள் அதை எடுத்து டேபிள் மேல் இருந்த ராமஜெயம் எழுதும் நோட்டின் அருகில் வைத்தாள். அப்படியும் புவனா தேடியது அங்கு இல்லை.

'என்னன்னு சொன்னா நானாவது எடுத்து தருவேன் அதுவும் சொல்ல மாட்டா' மனைவியை மனதில் கடிந்தவர் இளம் வயது புவனாவை நினைத்துக் கொண்டார்.

கல்லூரியில் கோல்ட் மெடல் வாங்கியவள். கணக்கில் புலி போன் நம்பர், கார் நம்பர் என எல்லாம் மனப்பாடமாக சொல்லுவாள். வீட்டில் அவளை ராமானுஜம் என்றே அழைப்பர். 'அதெல்லாம் பழங்கதையாய் போய்விட்டதே' என எண்ணிய சுந்தரம்

"ம்... அது ஒரு காலம்... இது ஒரு காலம் அப்படித்தான் எடுத்துக் கொள்ளணும்" எனக் கூறியவர் திரும்பி புவனாவை பார்த்தார்.

புவனாவோ சமையலறை ஷெல்ஃபில் தேடிக் கொண்டிருந்தவள் தன் தலையை தொட்டுப் பார்த்தாள்.  'ஆட்டை தோளில் போட்டுக் கொண்டு ஊரெல்லாம் தேடினவனாட்டம் எங்கேயாவது அவசரத்தில் தலையில் மாட்டிக் கொண்டே தேடுகிறோமோ' என நினைத்து சிரித்தாள்.

இதையும் படியுங்கள்:
சிறுகதை: வானப்பிரஸ்த்தம்!
Story  Image

ஆனால் அது அங்கு இல்லை. வீடு முழுவதும் அரை மணி நேரமாக தேடியதில் காணவில்லை என நினைத்த அவளின் தலை கிளிப், ஜாக்கெட், சிறிய ஊதுபத்தி ஸ்டாண்ட், நெயில் கட்டர் என எல்லாம் கிடைத்தது. 'வயது வெறும் நம்பர்தான்னு சொன்னாலும் இந்த மாதிரி மறந்து போய் இடம் மாத்தி வச்சுட்டு தேடும்போது அதை ஆயுள் கணக்காக எடுத்துக்கத் தான் வேணும்' என நினைத்து புன்னகைத்தாள் புவனா.

'நானே தேடிக்கிறேன்னு ஜம்பமா சொன்னேன். ஆனா என்னால உன்னை கண்டு பிடிக்க முடியலையே, நீ இல்லைன்னா எனக்கு பொழுதே போகாதே, சரி அவர்கிட்ட சொல்றேன். நீ அவர் கண்ணுக்காவது தெரியரையான்னு பார்க்கிறேன்' என்று புலம்பியபடி புவனா கணவர் ஹாலில் இருக்கிறாரா என பார்த்தாள்.  

அவள் பின்னால் வந்து அவள் தோளைத்  தட்டிய சுந்தரம் "இதானே நீ தேடினது?" என அவள் கையில் புவனாவின் மூக்கு கண்ணாடியை வைத்தார்.

"இதென்ன இட்சினி வேலை. இது எங்க இருந்தது" என்று கேட்ட புவனாவின் முகம் எல்லாம் சிரிப்பு. "லைப்ரரியில் இருந்து எடுத்துண்டு வந்த புக்கை படிக்கலாம்னு பார்த்தா இத காணோம்" என்றாள் சிரித்தபடி.

"இது உன்னோட ரீடிங் டைம். இதைத்தான் தேடுவேன்னு நினைச்சேன். உன் டிரெஸ்ஸிங் டேபிள் ட்ராவில இத பத்தரமா வச்சிருக்க," என்ற சுந்தரத்திடம்,

"டேபிள் மேல பாருங்கோ போன மாசம் காணோம்னு நான் தேடினதெல்லாம் கிடைச்சுடுத்து எடுத்து வச்சிருக்கேன்..." என்றாள் புவனா புன்னகைத்தபடி.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com