இந்திய அரசியலே வியந்து பார்க்கும் 'தகைசால் தமிழர்' நல்லகண்ணு!

டிசம்பர் 26: இரா. நல்லகண்ணு பிறந்த நாள்! எந்தவிதமான எதிர்பார்ப்புமின்றி, பொதுவுடமைக் கொள்கையை முழுமையாக ஏற்றுக் கொண்டு, அதன் வழியில் வாழ்ந்து கொண்டிருக்கும் தகைசால் தமிழரைப் போற்றுவோம்! அவரது 101 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடி மகிழ்வோம்!
R. Nallakannu
R. NallakannuImg Credit: DT next
Published on
Kalki Strip
Kalki

இந்திய விடுதலைப் போராட்டம், விவசாயிகள் போராட்டம், தீண்டாமைக்கு எதிரான போராட்டம், கனிமவளக் கொள்ளைக்கு எதிரான போராட்டம் என்று தனது வாழ்நாளின் பெரும்பகுதியைப் போராட்டங்கள், சிறை வாழ்க்கை என்று வாழ்ந்த இரா. நல்லகண்ணு 100 வயதை நிறைவு செய்து 101 ஆவது வயதில் அடியெடுத்து வைக்கிறார்.

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் எனும் ஊரில் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த இராமசாமி - கருப்பாயி இணையர்களுக்கு 1925 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் நாளன்று, மூன்றாவது மகனாகப் பிறந்தவர் இரா. நல்லகண்ணு. ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள காரனேஷன் உயர்நிலைப் பள்ளியில் படித்த நல்லகண்ணுக்கு அப்பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றிய பலவேசம் என்பவர் பாரதியார், திரு.வி.கல்யாணசுந்தரம், விவேகானந்தர் ஆகியோரது படைப்புகளை அறிமுகம் செய்தார். பாரதியாரின் எழுச்சி மிக்க பாடல்களும், திரு.வி.கவின் எழுத்துகளும் அவருக்குள் இந்திய விடுதலை வேட்கையைத் தோற்றுவித்தன.

அவருடைய 15 ஆவது வயதில், அவர் வயதொத்த இளைஞர்களுடன் சேர்ந்து, ஸ்ரீவைகுண்டம் தெருக்களில் மகாகவி பாரதியின் 'என்று தணியும் இந்த சுதந்திர தாகம் என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்' என்ற கவிதையைப் பாடிக் கொண்டே சென்றார். காந்தியடிகள் நடத்திய 'வெள்ளையனே வெளியேறு' இயக்கத்திற்கு ஆதரவாக மாணவர்களைத் திரட்டிப் போராட்டம் நடத்தினார். திருநெல்வேலியில் நடந்த விடுதலைப் போராட்டங்களிலும் பங்கேற்றார்.

அவரது பள்ளி ஆசிரியர் பலவேசம் அவருக்குப் பொதுவுடைமைக் கருத்துகளை அவருக்குப் பயிற்றுவித்தார். அதில் ஈடுபாடு கொண்டு 18 ஆவது வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார். அன்றிலிருந்து 82 ஆண்டுகளுக்கும் அதிகமாக, பொதுவுடமைக் கொள்கையுடன் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.

1948 ஆம் ஆண்டில் 'உழுபவனுக்கே நிலம் சொந்தம்' என்ற போராட்டத்தை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி முன்னெடுத்தது. இப்போராட்டத்தின் போது, இந்திய அரசுக்கு எதிராகச் செயல்பட்டதாகத் தொடரப்பட்ட நெல்லை சதி வழக்கில் நல்லகண்ணு சேர்க்கப்பட்டார். இந்த வழக்கில் ஏழு ஆண்டுகள் சிறையில் இருந்தார்.

அவரது குடும்பத்தினர் 1958 ஆம் ஆண்டில் அன்னசாமி என்பவரது மகளான ரஞ்சிதத்தைத் திருமணம் செய்து வைத்தனர்.

நல்லகண்ணுவின் அரசியல் செயல்பாடுகளில், விவசாயச் சங்கத்தின் பணிகளே அதிகமாக இருந்தது. 1970 ஆம் ஆண்டில் நடந்த நில மீட்சிப் போராட்டத்தில், நிலங்களை மீட்பதற்காக இந்தியா முழுவதும் போராட்டம் நடந்தது. அப்போது தமிழ்நாட்டில் மடங்களின் கட்டுப்பாட்டில் இருந்த நிலங்கள் தொடர்பான விவரங்களைத் தொகுத்து சிறிய நூல் ஒன்றை நல்லகண்ணு வெளியிட்டார். சமூகப் பிரச்சினைகள், இந்தியாவில் நதி தொடர்பு சாத்தியங்கள், விவசாயச் சீர்திருத்தங்கள் மற்றும் கம்யூனிச அடிப்படையிலான கட்டுரைகள் மற்றும் பல புத்தகங்களை எழுதியிருக்கிறார்.

1996 ஆம் ஆண்டு தென் மாவட்டங்களில், இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட சாதிக் கலவரத்தின் போது பல பாதிப்புகள் ஏற்பட்ட நிலையில், 'சிலர் செய்த தவறுக்காக ஒரு சமூகத்தையே குற்றவாளியாக்க முடியாது' என்று சொல்லி, இரு சமூகத்தினரையும் அமைதிப்படுத்தும் பணியில் ஈடுபட்டார். மதுரை மாவட்டம், பாப்பாபட்டி, கீரிப்பட்டி ஊராட்சிகளில் தலித் ஊராட்சித் தலைவர்கள் பதவியேற்க முடியாத சூழல் இருந்தது. இதனை எதிர்த்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக இருந்த நல்லகண்ணு, சுமார் நான்காயிரம் பேரைத் திரட்டி மாபெரும் உண்ணாவிரதம் இருந்தார்.

இதே போன்று, 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற கனிம வளக் கொள்ளைக்கு எதிராகப் போராடியிருக்கிறார். மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் 2018 ஆம் ஆண்டில் தாமிரபரணி ஆற்றில் இருந்து மணல் எடுப்பதைத் தடை செய்யக் கோரி நடைபெற்ற வழக்கில் தனியாக இவரே வழக்காடித் தடை பெற்றார். இப்படி இவர் வாழ்க்கை முழுவதும் பல போராட்டங்களில் பங்கேற்று, விவசாயிகளுக்கும் ஏழைத் தொழிலாளர்களுக்கும் பல்வேறு பயன்களைப் பெற்றுத் தந்திருக்கிறார்.

இதையும் படியுங்கள்:
கிறிஸ்துமஸ் கவிதை: இணைந்து மகிழ்ந்து கொண்டாடுவோம்!
R. Nallakannu

பல பொறுப்புகளை வகித்த நல்லகண்ணு 1999 ஆம் ஆண்டில் கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். இருப்பினும், அது குறித்தக் கவலையின்றி, எளிமையான மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் தனது அரசியல் பயணத்தைத் தொடர்ந்தார்.

இவருடைய சிறப்பான செயல்பாடுகளைச் சிறப்பிக்கும் விதமாக, 2007 ஆம் ஆண்டில் தமிழக ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலாவிடமிருந்து சகாயோகி விருது, 2007 ஆன் ஆண்டில் தமிழக அரசின் அம்பேத்கர் விருது, 2008 ஆம் ஆண்டில் அகில இந்திய மகாத்மா காந்தி சமூக நல மன்றத்தின் சமூக சேவைக்கான காந்திய விருது, 2009 ஆம் ஆண்டில் மாவட்ட எழுத்தாளர் சங்கத்தின் ஜீவா விருது என்று பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டிருக்கின்றன. 2022 ஆம் ஆண்டில் இவரது சமூக சேவைகளைப் பாராட்டி, தமிழ்நாடு அரசு, ‘தகைசால் தமிழர் விருது’ எனும் சிறப்பு விருதினை வழங்கிச் சிறப்பித்திருக்கிறது.

இதையும் படியுங்கள்:
தவெக-வில் அடுத்து இணையப் போகும் அதிமுக பிரபலம்..!
R. Nallakannu

இவரது 80 ஆவது வயதில் இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி, தொண்டர்களிடம் வசூலித்து வழங்கிய ரூ.1 கோடியையும், காரையும் கட்சிக்கே திரும்பக் கொடுத்துவிட்டார். இந்திய விடுதலைப் போராட்டத் தியாகிகளுக்காக வழங்கும் ஓய்வீதியத்தை அவருக்கு கொடுக்க அரசு முன் வந்த வேளையில், “நான் என் நாட்டுக்காக கடமையை செய்தேன். அதற்கு நான் ஓய்வூதியம் பெறுவது நியாயமில்லை" என்று சொல்லி மறுத்து விட்டார். இதே போன்று, தமிழ்நாடு அரசு நல்லகண்ணுவிற்கு வழங்கிய தகைசால் தமிழர் விருதுக்கான விருதுத் தொகை ரூபாய் 10 இலட்சத்துடன், தனது சொந்தப் பணம் ரூபாய் 5 ஆயிரத்தையும் சேர்த்து முதல் அமைச்சரின் பொது நிவாரண நிதிக்குக் கொடுத்துவிட்டார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. எந்தவிதமான எதிர்பார்ப்புமின்றி, பொதுவுடமைக் கொள்கையை முழுமையாக ஏற்றுக் கொண்டு, அதன் வழியில் வாழ்ந்து கொண்டிருக்கும் தகைசால் தமிழரைப் போற்றுவோம்! அவரது 101 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடி மகிழ்வோம்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com