பொதுவாக இப்பொழுது ஒரு ராசி நிலவுகிறது. இரண்டாம் பாகத்தை மையமாக வைத்து எடுக்கப் படும் படங்கள் அவ்வளவு வரவேற்பைப் பெறுவதில்லை. புஷ்பா மட்டுமே விதிவிலக்கு. ஆனாலும் இயக்குனர்களுக்கு இந்த இரண்டாம், மூன்றாம் பாகங்கள்மீது உண்டான மோகம் தீரவில்லை. பாகுபலி, கே ஜி எப், போன்ற படங்கள் பெற்ற வெற்றிகள் அவர்களை இந்தச் சோதனை முயற்சியில் தொடர்ந்து ஈடுபட வைத்து மக்களையும் சோதனைக்கு உள்ளாக்குகிறது.
கடலை ஒட்டிய மலை, அந்த மலையில் நான்கு கோஷ்டிகள். அவர்களுக்குக் கடலில் வரும் கப்பலிலிருந்து கன்டெய்னர்களைத் திருடித் தரையில் ஒப்படைப்பது தான் வேலை. அதில் ஆயுதங்கள் கடத்தலில் ஈடுபடுவது முரளி ஷர்மாவும், அபிமன்யு சிங்கும். இந்தக் கூட்டத்தின் தலைவர் தேவரா. வில்லன் சைப் அலிகான். தமிழுக்கு கலைச்செல்வன், மலையாளத்திற்கு ஷைன் டாம் சாக்கோ. பான் இந்தியா சிலபஸ் ஓவர்.
வாகாகத் திருடினாலும் அதன் உள்ளார்ந்த அர்த்தம் புரியவில்லையாம் ஹீரோ தேவராவிற்கு. அந்தக் கெட்டெண்ணம் புரிந்ததும் தானும் திருடமாட்டேன் மற்றவர்களையும் திருட விடமாட்டேன் என்று சபதம் போட்டுக் கடலுக்குள் போய்விடுகிறார். இதற்குள் ஐந்து சண்டைகள், ஆயிரம் லிட்டர் ரத்தம் காலி.
கடலுக்குள் சென்று விட்ட தேவராவிற்கு பயந்து அந்தத் தொழிலையே செய்யாமல் உறுமிக்கொண்டே தனது ஆட்களையே பொழுது போக்கிற்கு கொன்று கொண்டு இருக்கிறார் வில்லன் சைப். அதற்குள் அவர்களுக்கு வயதாகிவிட அடுத்த தலைமுறை ஜூனியர் வில்லன்கள் வந்து விடுகிறார்கள். வில்லன்கள் மட்டுமா. ஒரு தேவரா போனால் இன்னொருவர் வரவேண்டுமே. வருகிறார் வரா. பெயரில் கூட ஒரு யோசனைக்கு மெனக்கெடவில்லை. ஜூனியர் என்டி ஆரின் ஜூனியர். அவர் டெர்ரர் என்றால் இவர் ஜோக்கர். ஆனாலும் சண்டை என்று வந்துவிட்டால் சீனியராக மாறி விடும் வேடம் அவருக்கு.
ஜான்வி கபூர் ஹீரோயின் என்று நம்ப வைத்த விஷயத்தில் மட்டுமே இயக்குனர் வென்று விட்டார். ஐந்து காட்சிகள். ஒரு பாடல். கால்ஷீட் ஓவர். அடுத்த பாகத்தில் அனுஷ்கா போல வெயிட்டான கேரக்டர் என்று சொல்லியிருப்பார் போல.
மூக்கில் நெடியேறும் அளவுக்கு மசாலா குடோனையே உள்ளே இறக்கி இருக்கிறார். இந்த மசாலாக்களை இன்னும் ஆக்கட ரசிகர்கள் ரசிக்கிறார்கள் என நம்பியிருக்கிறார். சண்டைக்காட்சிகளைத் தவிர எந்த ஒரு சின்னக் காட்சி கூட நினைவில் நிற்காமல் பார்த்துக் கொண்டிருக்கிறார். ரன்னிங் கமென்டரி கொடுக்க ஒரு ஆள் வேண்டுமே. இருக்கவே இருக்கிறார் பிரகாஷ் ராஜ். நேரே கே ஜி எப் செட்டிலிருந்து இங்கே லாண்ட் ஆகிவிட்டார். இவர் சொல்லும் பிளாஷ் பாக் தான் இந்த மூன்று மணி நேர படம்.
இந்தப் படத்தில் என் டி ஆரை அடுத்து முழுதும் உழைத்திருப்பவர் ஒளிப்பதிவாளர் ரத்னவேலு. சண்டைக்காட்சிகளை சும்மா சுற்றி சுற்றி பாய்ந்து பாய்ந்து படமாக்கியிருக்கிறார். காட்டில் நடக்கும் அந்த ஓட்டம், கடலில் நடக்கும் சண்டைக்காட்சிகள் என இரண்டும் அதகளம். ஆனால் அந்தக் கண்டைனர் சண்டைக்காட்சிகள் மூன்று முறை வந்தாலும் ஒரே மாதிரி தான் இருக்கிறது. அதிலும் சுறாவிற்கு மூக்கணாங்கயிறு போட்டுச் சவாரி செய்யும் காட்சி புல்லரிக்க வைக்கிறது.
படம் முழுதுமே தேமே என்று படம் பார்த்துக் கொண்டிருப்பதால் அடுத்தப் பாகத்திற்கு என இவர்கள் கொடுக்கும் கடைசி இரண்டு ட்விஸ்ட்கள். அடடா. அந்த ஏடுகொண்டலவாடா தான் ரசிகர்களைக் காப்பாற்ற வேண்டும். கமர்ஷியல் படங்களுக்கு அதுவும் தெலுங்கு படங்களுக்கு லாஜிக் என்ற வஸ்து தேவையே இல்லை. அதை எதிர்பார்ப்பதும் இல்லை. ஆனால் அப்பா மகனுக்கான குறைந்த பட்ச வித்தியாசம் கூடவா காட்டக் கூடாது.
எல்லாரும் எப்போதும் அடித்துக் கொண்டே இருப்பதால் இவர்கள் நண்பர்களா வில்லன்களா என்றே நம்மால் முடிவு செய்ய முடியவில்லை. முதல் காட்சியில் உலகக் கோப்பை கிரிக்கெட் என்று ஒரு விஷயம் சொல்கிறார்கள். தனிப்படை அமைக்கிறார்கள். ஆனால் இவர்கள் தேடுவது இந்தத் தேவரா கும்பலை. வந்தவர்கள் ப்ரகாஷ்ராஜிடம் நம்மைப் போல மூன்று மணி நேரம் மாட்டிக் கொள்கிறார்கள்.
இரண்டு ஆர் ஆர் ஆர் ஹீரோக்களையும் வைத்துச் செய்ததில் சரித்திரத்தில் இடம் பெற்று விட்டார் சிவா. பரத் ஏனே நேனு, ஜனதா கராஜ், ஸ்ரீமந்துடு என நல்ல நல்ல படங்களாகக் கொடுத்துவிட்டு திருஷ்டியாக இரண்டு படங்கள் கொடுத்து எடுத்த பேரைத் திரும்பக் கொடுத்து விட்டார். இதை மீட்க அவர் இரண்டாம் பாகம் எடுக்க வேண்டும். அதற்கு இந்தப் படம் வசூலைக் குவிக்க வேண்டுமே.
அனிருத் பற்றிச் சொல்ல வில்லையே. ஜெயிலர் இருக்க பயமேன் என்று பல இடங்களில் அதைக் காப்பி பேஸ்ட் செய்து விட்டார் மனுஷன். சலிக்காமல் அடித்துத் தள்ளுகிறார். ஆனால் சண்டைக் காட்சிகளைக் கொஞ்சமாவது அடுத்தக் கட்டத்திற்கு மாற்றுவது இவரது இசை தான். இவர் போட்ட குத்துப் பாட்டை வேறு இந்தப் பாகத்தில் காணவில்லை.
பிரம்மாண்டம் என்று திரை முழுக்க ஆட்களை நிரப்பி, வெட்டி வீசுவது நம்ப முடியாத சாகசங்களைச் செய்வது மட்டுமல்ல. அதற்குண்டான ஒரு திரைக்கதை அமைத்து மேக்கிங்கில் வாவ் என்று சொல்ல வைப்பது, நம்ப வைப்பதை விட யோசிக்க விடாமல் காட்சிகளில் கட்டிப் போடுவது ஒரு திறமை. அது ராஜ மௌலிக்கு கை வந்த கலை. சிவா அதில் முதல் படியில் தான் இன்னும் நின்று கொண்டிருக்கிறார்.
ஆந்திராவில் படம் வெளியான அன்று இரவே சக்ஸஸ் மீட் ஏற்பாடு செய்து சனியன்று கொண்டாடியிருப்பதாகத் தகவல். தமிழ்நாட்டைப் பொறுத்த வரை வாரக்கடைசி தாண்டி விட்டால் பெரிய விஷயம். ஆனால் நாங்கள் தசாப்தங்களாகத் தெலுங்கு டப்பிங் படம் பார்த்து வளர்ந்தவர்கள் என்று சொல்பவர்கள் கண்டிப்பாக இந்தத் தேவராவை தரிசிக்கவும்.