

எழுதியவர்- டாக்டர் மரியா மாண்டிசோரி
தமிழ் மொழிபெயர்ப்பு - ஹேமலதா ரங்கராஜன்
பதிப்பகம் - இந்தியன் மாண்டிசோரி பவுண்டேஷன்
விலை - ₹320.00
தொடர்புக்கு - +91 82480 10258 / info@montessori-india.org
***************
குழந்தையை வெறும் பெற்றோராக வளர்க்காமல் தனித்தன்மை கொண்ட மனிதராக பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தை வலியுறுத்தும் பெற்றோருக்கான வழிகாட்டி நூல்தான் மரியா மாண்டிசோரி ஏழுதி இருக்கும் 'குடும்பத்தில் குழந்தை'. குறிப்பாக குழந்தையின் மன உலகத்தை புரிந்துகொள்ள விரும்பும் பெற்றோர், ஆசிரியர்கள், கல்வியியல் ஆர்வலர்கள் ஆகியோர் படிக்க வேண்டிய புத்தகமாக இதை நிச்சயம் வரவேற்கலாம்.
“குழந்தையை கட்டுப்படுத்துவதற்குப் பதிலாக, புரிந்துகொள்ள வேண்டும்” என்பதுதான் இந்தப் புத்தகத்தின் மையக் கருத்தாக உள்ளது.
குழந்தையின் மன வளர்ச்சி, சுய சிந்தனை, ஆர்வம் ஆகியவற்றை மதிக்க வேண்டும் என்று ஆசிரியர் கூறுகிறார். வீட்டிலேயே குழந்தைக்கு சுதந்திரமான மற்றும் பாதுகாப்பான சூழலை உருவாக்குவது எப்படி என்பதையும் ஆங்காங்கே பூத்தூவல் போல சம்பவங்களுடன் விளக்குகிறார்.
பெற்றோர் அடிக்கடி செய்யும் தவறுகள், அதிக கட்டுப்பாடு, ஒப்பீடு, கோபம் போன்றவை குழந்தையின் மனநிலையை எவ்வாறு பாதிக்கின்றன என்பதையும் எடுத்துரைக்கிறார்..
ஆரம்பம் முதல் இறுதி வரை ஒரே விஷயத்தை பல்வேறு தலைப்புகளில் ஆராய்ந்து அலசி தனது கண்ணோட்டத்தில் அதன் சாரத்தை 11 அத்தியாயங்களாகப் பிரித்து அழகான தலைப்புகளில் தனித்தன்மை எழுத்துக்களில் நமக்கு எளிதில் புரியும் படி விளக்கியுள்ளார். குழந்தைகளிடம் நாம் செய்யும் தவறுகளை பட்டியலிட்டு இவற்றைத் தவிருங்கள் என வேண்டுகிறார்.
முதல் அத்தியாயத்தில் குழந்தைகள் மீதான பெரியவர்களின் ஆதிக்கம் பற்றி சொல்லப்பட்டுள்ளது . அதிலும் நாம் மேம்பட்டது என்று கருதப்படும் நாகரிகங்களில் சிக்கலான நடைமுறைகளால் குழந்தைகள் தங்கள் இயற்கையான குணத்தையும் சுதந்திரமான செயல்பாடுகளையும் இழக்கின்றனர் என்றும் இதனாலேயே பெரியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு இடையே என கருத்து வேறுபாடு இன்னும் அதிகரிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
குழந்தைகளின் செய்கைகளை அவர்களுக்கு உரியதாக புரிந்து கொள்ளாதது மட்டுமின்றி அவைகளை தவறான நடத்தையின் வடிவங்களாகவே தொடர்ந்து பார்க்கிறோம். இந்த செய்கைகள் இறுதியாக மறைந்துவிடும் என்பதையும் அவை கவலை கொள்ள தக்கவை அல்ல என்பதையும் நாம் உணர வேண்டும். குழந்தையை இவ்வாறு அணுகும் முறையை நாம் ஏற்றுக் கொள்ளத் துவங்கினால் பல விஷயங்களை புரிந்து கொள்ள தொடங்குவோம் . குழந்தையை அவனது சிறு குறைகளுடன் நேசிக்கத் தொடங்குங்கள் என்ற ஆலோசனையை முன்வைக்கிறார்.
குழந்தைக்கு தேவை புத்துணர்ச்சியான காற்று மற்றும் சூரிய ஒளி என்ற எண்ணத்தில் நாம் உள்ளோம். இவை இரண்டும் மிக உன்னதமான விஷயங்கள். ஆனால் இவை உடலைப் பொறுத்த விஷயங்கள். அகவளர்ச்சி என்பது ஒவ்வொரு குழந்தைக்கு மாறுபடும் மென்மையான நுட்பமான முக்கியமான ஒரு நிகழ்வாகும். இந்த நிகழ்வை பெரியவர்களாகிய நாம் நம் சக்திகள் மூலம் அழித்து விடுகிறோம் என்கிறார் ஆசிரியர்.
நாம் உருவாக்கியுள்ள சமூக சூழல் குழந்தைக்கு உகந்தது அல்ல என்றும் இந்தச் சூழலில் எப்படி பொருந்தி வாழ்வது என்கின்ற திகைப்பு நிலையில் உள்ள குழந்தை பள்ளியில் ஒப்படைக்கப்படுவதாகவும் வருந்துகிறார். அப்பள்ளி பெரும்பாலும் குழந்தைக்கு ஒரு சிறைச்சாலையாக ஆகிவிடுகிறது என்றும் இத்தகைய பள்ளிகள் ஏற்படுத்தும் கடுமையான விளைவுகளை நாம் தெளிவாக காண்கிறோம். இதனால் குழந்தைகள் உடலளவிலும், தார்மீக அளவிலும் பாதிக்கப்படுவதாகவும் தெளிவாக எடுத்துக்காட்டுகிறார்.
பெரியவர்கள் தான் குழந்தையின் பண்புகளை சிதறடித்து இயற்கையான உந்து சக்திகளை பறித்து விடுகிறார்கள் என்று கூறும் ஆசிரியர், பெரியவர்கள் தங்கள் தவறுகளை உணர்ந்து திருந்த முற்படாவிடில் தீர்க்க முடியாத பல பிரச்னைகளில் சிக்கிக்கொண்டு தவிப்பர் என்பதுடன் குழந்தைகள் பெரியவர்கள் ஆகும் போது இதே தவறுகளுக்கு பலியாவார்கள்; இதையே அவர்கள் பரம்பரை பரம்பரையாக கடத்திச் செல்வார்கள் என்று நமக்கு ஒரு எச்சரிக்கை தந்து முடிக்கிறார் ஆசிரியர்
எளிய மொழியில் ஆழமான கருத்துகள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் இருவருக்கும் பயன்படும் நடைமுறை ஆலோசனைகள் ஆகியவை இந்தப் புத்தகத்தின் அடிப்படை பலமாகிறது.
குழந்தையின் வளர்ப்பில் உடனடி தீர்வுகள் அல்லாமல், நீண்டகால மனப்பாங்கு மாற்றத்தை எதிர்பார்க்கும் நூலாக பலவித நுணுக்கமான உணர்வுகளை படிப்பவர்கள் மனதிற்குள் கடத்துவதில் சிறந்ததாகிறது இப்புத்தகம் என்றால் மிகையாகாது.
எனினும் மொழி பெயர்ப்பில் சமரசமின்றி எழுத்தாளரின் எண்ணத்தை நமக்கு கடத்தும் முயற்சியில் ஒரே விதமான கருத்துகள் மீண்டும் மீண்டும் வருவதை தவிர்த்திருக்கலாம். ஆசிரியர் வெளிநாடு என்பதால் அந்த நாட்டுக்குரிய கலாச்சாரம் வெளிப்படுவது தவிர்க்க முடியாதது எனினும் சற்றே சலிப்பு தருகிறது.
ஆசிரியர் குறிப்பு
ஆசிரியர் மரியா மாண்டிசோரி
உலகப் புகழ்பெற்ற கல்வியாளர், மருத்துவர் மற்றும் குழந்தை வளர்ப்பு முறையில் புதிய மாற்றத்தை கொண்டு வந்த சிந்தனையாளர் ஆவார். “குழந்தை இயல்பாக கற்றுக்கொள்ளும் திறன் கொண்டவன்; அவனை கட்டாயப்படுத்தாமல் வழிநடத்த வேண்டும்.” என்ற நோக்கத்தின் அடிப்படையில் இவர் உருவாக்கிய கல்வி முறை தான் (Montessori Education) மாண்டிசோரி கல்வி முறை. இன்று உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான மாண்டிசோரி பள்ளிகள் செயல்படுகின்றன. இந்தியாவிலும் இந்தக் கல்விமுறை மிகவும் பிரபலமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
Kalkionline-ஐ Google செய்திகளில் பின்தொடர... Google News
Kalkionline-ஐ முகநூலில் பின்தொடர... Kalkionline Facebook, Mangayar Malar Facebook
Kalkionline-ஐ இன்ஸ்டாகிராமில் பின்தொடர... Kalkionline Instagram, Mangayar Malar Instagram
Kalkionline-ஐ வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
Kalkionline-ஐ பின்தொடர: Youtube, Twitter
Add KalkiOnline as a preferred source on Google... Click Here