

நாடக விமர்சனம்:
ஐ மேக்ஸ் தியேட்டரில் படம் பார்த்த உணர்வை, பிரமிப்பை ஒரு நாடக மேடை தரமுடியுமா?
தாரிணி கோமல் வசனம் எழுதி, இயக்கி, தயாரித்திருக்கும் கோமல் தியேட்டர் குழுவின் “என்று தணியும்” சுதந்திரப் போராட்ட வரலாறு குறித்த நாடகம் பார்த்தவர்கள் நிச்சயம் உணர்ந்திருப்பார்கள்.
பின்னணித் திரையில் செயற்கை நுண்ணறிவில் உருவாக்கிய கதாபாத்திரங்கள் பேசிக்கொண்டே நடந்து வந்து, சரியான டைமிங்கில் மேடையில் அப்படியே காட்சி அளிப்பார்கள்.
தமிழ் நாடக மேடைக்கு முற்றிலும் புதிதான விஷயம்.
தாரிணி கோமல் அவர்களின் அயராத உழைப்பும், இந்திய சுதந்திரம் பற்றிய விழிப்புணர்வுத் தேடலும், அவரது திறமையான இயக்கமும், கூரிய வசனங்களும், இந்த மாபெரும் சவாலான சாதனைப் படைப்பை வெற்றிகரமாக்கியிருக்கின்றன.
செயற்கை நுண்ணறிவில் வரலாற்றுக் கதாபாத்திரங்கள், தீப்பந்தங்கள் எரியும் சிவகங்கைக் கோட்டை, சிப்பாய்களின் சண்டை, ஜான்சி ராணியின் போர், ஜாலியன்வாலாபாக் கூட்டம், போன்றவற்றையும், பொருத்தமான பின்னணி இடங்களையும், கதாபாத்திரங்களுக்கு அந்தந்த காலம், மாநிலத்துக்கு ஏற்றபடி உடைகள் என்று உருவாக்கியிருக்கும் கண்ணன் ருத்ராபதி அவர்களுக்கு மிகப்பெரிய பாராட்டுக்கள்.
60 வரலாற்றுக் கதா பாத்திரங்களில் கோமல் தியேட்டர் குழுவினர் 19 பேரும், மூன்று நான்கு கதாபாத்திரங்கள் ஏற்றாலும், நடை உடை பாவனைகளில், பேச்சில் முற்றிலும் வித்தியாசம் காட்டி அசர வைக்கிறார்கள். இயக்குனர் தாரிணி கோமல் அவர்களுக்கு பாராட்டுக்கள்.
அகண்ட பாரதம் என்று துவங்கும் முதல் எழுத்திலிருந்து, வந்தே மாதரம் என்று முடியும் வரை நாம் போராட்ட காலத்துக்கே சென்றுவிடுகிறோம்.
இதற்காக சரியான தகவல்களைச் சேகரிக்க சுமார் ஒன்றரை வருட காலம் ஆனதாக தாரிணி அறிமுகத்தில் குறிப்பிட்டார். முக்கியமாக, ஆங்கிலேயர் நம்மை எப்படி எதனால் அடிமையாக்கினார்கள் என்ற வரலாறு.
ஒரு சிறு முன்னோட்டமாக, அலெக்சாண்டர் காலத்திலிருந்து ஆங்கிலேய ஆதிக்கம் துவங்கும்வரை நம் அகண்ட பாரதத்தின் கலாசாரம், பரப்பு இவை சில நிமிடங்கள் பின்னணித்திரையில் ஓடிய பின்னர், நாடகத்தின் முதல் காட்சி.
1608ல் இந்திய மண்ணில் குஜராத்தில் ஆங்கிலேயர் இறங்குகிறார்கள்.
பின்னணித் திரையில் கப்பல் அசைந்து வருகிறது. AI கதாபாத்திரங்களாக கப்பலில் இருந்து இறங்கும் கேப்டன் வில்லியம் ஹாக்கின்ஸும் அவரது உதவியாளரும், மேடையில் அதே உடையில், நிஜமாகத் தோன்றுகிறார்கள். பார்வையாளர்களுக்கு முதல் அசத்தல் இங்கே ஆரம்பம்.
அத்துடன் நம்மை அடிபணியவைத்த ஆங்கிலேயரின் நயவஞ்சக கள்ளத் தனமும்…
இந்தியாவின் செழிப்பைக் கண்டு, வணிகம் செய்ய டில்லி அரசர் ஜஹாங்கீருடன் போட்ட ஒப்பந்தப்படி, இந்தியாவின் விளை பொருட்களுக்கு விலையாக டில்லி பாதுஷாவுக்கு பிரிட்டிஷாரின் ஆயுதங்கள். குடிமக்களிடம் வரி வசூலிக்கும் பொறுப்பு தரப்படுகிறது.
கிழக்கிந்தியக் கம்பெனி என்ற பெயரில் நம் நாட்டு நிலங்களும், விளையும் பொருட்களும் மக்களின் உழைப்பும் ஆங்கிலேயரால் சுரண்டப்படுவதோடு வரி கட்டவும் நிர்ப்பந்திக்கப்படுகிறர்கள். எதிர்த்தவர்கள் தூக்கிலிடப் படுகிறார்கள்.
அடர்ந்த காட்டில், எரியும் தீவட்டிகள் வெளிச்சப் பின்னணியில் வேலு நாச்சியார் போராட்டம், ஆங்கிலேயருக்கு வரி கட்ட மறுக்கும் மருது பாண்டியர்களின் வீராவேசம், அவர்களைத் தூக்கிலிடுதல்,
சிப்பாய் கலகம், (பின்னணித் திரையில் சிப்பாய்களின் ஆவேசம், மேடையில் நிஜ சிப்பாய்களின் சண்டையும் மிகச்சரியான கலவை)
ஜெனரல் டயர் மேடையில் ஆணையிடுகிறார். ஜாலியன்வாலேபாக் கூட்டம், சிதறி ஓடுவதும், சுவற்றில் ஏறியவர்கள் சுடப்படுவதும், ஓடிவந்து கிணற்றில் விழுவதுமாக, செயற்கை நுண்ணறிவுக் காட்சிகளும், மேடை நடிகர்களுமாக இணைந்து, நெஞ்சைப் பதறவைக்கும் இடங்கள்.
ஜான்சி ராணியாக நடிக்கும் கிருத்திகா சுர்ஜித், திரையில் ஆவேசமாகப் பாய்ந்து பறந்து ஆங்கிலேயருடன் போரிடுகிறார். குதிரையிலிருந்து குதிப்பது வரை திரை. உடனே சரியாக மேடையில் தோன்றும்போது அரங்கம் அதிர்கிறது.
காளி முன் சபதம் எடுத்து, வாஞ்சிநாதன் ஆஷ் துரையைச் சுட்டுக்கொல்லும் ரயில் காட்சிகளும் பிரமாதம்.
இளம் பகத்சிங், சுக்தேவ் இருவரோடு, இன்னும் 500 இந்தியரையும் தூக்கிலிடும் காட்சிகள். (பின்னணித்திரையில் வரிசையாக தூக்கு கயிறுகள்… கீழே தயாராக இந்தியர்கள்)
அப்போது பகத்சிங் சொல்லும் “புரட்சி என்பது பயத்தால் வருவதல்ல, விழிப்புணர்வால் வருவது” சபாஷ் வசனகர்த்தா தாரிணி மேம்.
உப்புக்கு வரியை எதிர்த்து, தண்டி யாத்திரை செல்லும் காந்தி, தொடரும் ஆயிரக் கணக்கானோர், தொடர்ச்சியாக மேடையில் கோலூன்றி நடந்து வரும் காந்தி, அடக்குமுறையை விட, இந்திய கலாசாரம், கல்வி இவற்றில் தம் கலசாரத்தைக் கொண்டு வருவதென தந்திரமாக ஆங்கிலேயர் எடுத்த முடிவு, இந்தியக் கல்வியில் ஆங்கிலத்தைக் கொண்டு வந்த Lord Macaulay வின் தந்திரம்,
கம்பெனியை மூடிவிட்டு, ராணி விக்டோரியாவின் ஆளுகைக்குக் கீழ் இந்தியாவைக் கொண்டுவந்து பிரிட்டிஷ் ராஜ் ஆக்கியது. அதை கூட்டத்தில் அறிவித்த Lord Cunning (பின்னணியில் இந்திய வரைபடத்தில் Map of British raj, ராணி விக்டோரியாவின் பெரிய படம், சுதந்திரம் நெருங்கும் மற்றொரு சீனில் வரைபடம்.
Indian National Congress உருவானது, பிரித்தாளும் சூழ்ச்சியில், இந்தியர்களுக்கு உயர் பதவி அளித்து அவர்களைக் கொண்டே நம் நாட்டினரைப் பணிய வைத்தது.
1905ல் வங்கப் பிரிவினைக்கு வித்திட்ட முதல் வைஸ்ராய் Lord Curson, தென்னாப்பிரிக்காவில் பெரும் புரட்சி செய்துவிட்டு தாயகம் திரும்பும் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியை, சர்தார் வல்லபாய் படேல், கோபால கிருஷ்ண கோகலே, பால கங்காதர திலகர், லாலா லஜ்பத்ராய், பிபின் சந்திர பால். முகமது அலி ஜின்னா ஆகியோர் சந்திப்பது, பல்வேறு சந்தர்ப்பங்களில் அவர்களது பொதுக்கூட்டம், பக்கிம் சந்திர சட்டர்ஜியின் வந்தே மாதரம் முழக்கம், நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் அறிமுகம், சபர்மதி ஆசிரமத்தில், அவர் காந்தியை சந்திப்பது, இங்கிலாந்தின் அப்போதைய பிரதமர் அட்லியின் இந்தியாவிற்கு சுதந்திரம் தரும் அறிவிப்பு.
Lord Mountbattenனுடன் முகமது அலி ஜின்னா இணைந்து, பாகிஸ்தான் தனி நாடாக வற்புறுத்துவது, எல்லைகள் வரையறுக்கப்படுவது, பிரியும் மக்களின் ஓலம், காந்தியின் வேதனை இப்படி பல சரித்திர நிகழ்வுகள் நம் கண் முன்னே நிகழ்கின்றன.
இத்தனை வரலாற்று நிகழ்வுகளையும் சிறப்பாக எடுத்துக்கொடுத்த நிபுணர் சதீஷ்குமார், சம்பவங்களை ஆங்காங்கே விவரிக்கும் குரலாக டாக்டர் இளங்கோ குமரன், இசையமைத்திருக்கும் ராஜ்குமார் பாரதி ஆகியோரையும் மிக நேர்த்தியாக செய்திருக்கிறார்கள் பாராட்டுக்கள்.
பெரம்பூர் குமார், பழனிகாந்த் இருவரும் கதாபாத்திரங்களின் பொருத்தமான மேக் அப்பில் அசத்துகிறார்கள். அவர்களுக்கும் ஸ்பெஷல் பாராட்டுக்கள்.
சிறப்பான லைட்டிங் கொடுத்த பினு குமார், சேட்டா ரவி, சுதந்திரம் கிடைத்ததும், சுழன்று சுழன்று மக்கள் நடனம் ஆடும் ஆடுவோமே பள்ளு படுவோமே பாடலுக்கு நடனம் அமைத்த மதுசூதனன் அனைவருமே பாராட்டுக்குரியவர்கள்.
அனேகமாக எல்லா Lord பாத்திரங்களிலும் நடிக்கிறார் சாந்தா ராம், வாஞ்சியாக, பகத்சிங்காக, ஆனந்த் ராம், பெரிய மருதுவாக சசிகுமார்,
ஜான்சி ராணியாகவும் வேலு நாச்சியாராகவும் வீரமும் ஆவேசமும் காட்டும் கிருத்திகா சுர்ஜித், ஜின்னாவாக, கண்ணன் ருத்ராபதி என்று அத்தனை பேரும் சிறப்பான நடிப்பு.
நாடகத் தயாரிப்பில் உறுதுணையாக நின்று (கதாபாத்திரமாக நடித்தும்) நாடகத்தின் வெற்றிக்கு பங்களித்திருக்கும் அனுராதாகண்ணன், சசிகுமார் இருவருக்கும் வாழ்த்துக்கள்.
நம் தேசத்தின் பெருமை, வீரர்களின் தியாகம், தலைவர்களின் தேசப்பற்று இவை அத்தனையையும் இரண்டு மணிநேரத்தில் கொண்டு வந்து நம்மை பிரமிக்க வைத்த தாரிணி அவர்கள், இதை நம் இன்றைய இளைஞர்களைப் பார்க்க வைக்கவேண்டும்.
வந்தே மாதரம் முழக்கத்தின் 150 வதுஆண்டு நிறைவு நாட்களில் இந்த நாடகத்தை மேடையேற்றி கலைஞர்களை மட்டுமல்ல, பார்வையாளர்களையும் வந்தே மாதரம் என்று முழக்கமிட வைத்துவிட்டார் தாரிணி கோமல்.