சிறுகதை: ரெண்டாவது அப்பா!

ஜூன் 21 - தந்தையர் தின சிறப்பு சிறுகதை..
Friends with sad
தமிழ் கதை | Friends with sadImage credit: AI Image
Updated on
Kalki Strip
Kalki Strip

விமான நிலையத்தை ரவியின் கார் நெருங்கிக் கொண்டிருக்கையில், ஓர் விமானம் லேண்ட் ஆகிக் கொண்டிருந்தது. ’இந்த விமானமாகத்தான் இருக்குமோ! பரவாயில்லை! நேரத்திற்கு வந்தாயிற்று! ஃபார்மாலிடீஸ் முடிந்து கவின் வெளிவருவதற்கு முன்பாகவே நாம் பிக் அப் பாயிண்ட் சென்று விடலாம்!’ என்ற எண்ணம் அவனுக்கு சற்று ஆறுதலைத் தர, அவன் நினைவுகள் மெல்லப் பின்னோக்கிச் சென்றன...

கவினும், ரவியும் பால்ய காலத்திலிருந்து நண்பர்கள். கிராமத்துத் தொடக்கப்பள்ளியில் ஆரம்பித்த நட்பு +2 வரை தொடர்ந்தது. இருவருமே அந்தக் காலத்தில் கடுக்கன் போட்டிருப்பார்கள். ஸ்டார் கடுக்க இரட்டையர்கள் என்றே வெங்கட்ராம வாத்தியார் கூப்பிடுவார். +2 படிக்கையில் டைபாய்ட் ஜூரம் வந்து ரவி வீக்காகி விட, அவன் படிப்பும் வீணாகிப் போனது. கவின் கல்லூரி போனான். ரவி மெக்கானிக் ஷாப்பில் வேலைக்குச் சேர்ந்தான். இருந்தாலும் அவர்கள் நட்பில் எந்தக் களங்கமும் வரவில்லை. எஞ்சினீயரிங் முடித்த கவின் பெங்களூருவில் வேலைக்குப் போக, ஒரு சில வருடங்களிலேயே அங்கிருந்து யு.எஸ் சென்று செட்டில் ஆகி விட்டான்.

எப்பொழுது ஊருக்கு வந்தாலும் ரவியைப் பார்க்காமல் செல்ல மாட்டான். முன்பெல்லாம், கவினே கம்பல் பண்ணி ரவியின் செலவுக்கும் பணம் கொடுத்து விட்டுச் செல்வான். அப்பொழுதெல்லாம் ரவிக்குச் சங்கடமாக இருக்கும். ஆனால் அவனின் இயலாமை, இப்பொழுதெல்லாம் அவசரத்திற்குப் பணம் வேண்டுமென்றால் கவினிடம்தான் கேட்பான். கூச்சமாகத்தான் இருக்கும். ஆனால்,வேறு வழியில்லையென்ற நிலையில் ஆபத் பாந்தவன் அவன்தான். கூடுமானவரை வாங்கியதைத் திருப்பிக் கொடுத்து விடுவான். கவினே வேண்டாமென்றாலும், கடன் என்று வாங்குவதைத் திருப்பிக் கொடுத்தலே நட்பின் அடையாளம் என்று ஏதாவது பேசி, அவனிடம் கொடுப்பான். சில சமயங்களில் அதனை வாங்கிக் கொள்ளும் கவின், ’கடனையடைத்த கறார் நண்பனுக்குக் கவினின் அன்புப் பரிசு!’ என்று சமயோசிதமாகப் பேசித் திருப்பிக் கொடுத்து விடுவான்.

A man is waiting in the airport pick up point
தமிழ் கதை | A man is waiting in the airport pick up pointImage credit: AI Image

கவினின் தலை அரைவல் பகுதியில் தெரிந்ததும், நன்றாக ஓடிக் கொண்டிருக்கும் பில்ம் திடீரென அறுந்து படம் கட்டாகி நிற்பதைப்போல, அவன் நினைவுகள் அறுந்து, நிகழ்காலத்திற்குத் தாவின. குடும்பத்துடன் வந்த கவினின் கண்கள், அழுது சிவந்து போய்க் கிடந்தன. ஆம்! கவினின் அப்பா நேற்று மாலை, உறவினர் வீட்டுக் கல்யாணத்திற்குப் போக, பேருந்து நிலையம் சென்றவர், மயக்கமுற்று கீழே விழ, அருகிலிருந்தவர்கள் ஆஸ்பத்திரியில் சேர்க்க, டாக்டர்கள் வழியிலேயே உயிர் பிரிந்து விட்டதாகச் சொன்னார்கள்.

“சாரி கவின்! அப்பா இப்படிப் போவார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.” ரவி தழுதழுத்தான். கவின் அமைதி காத்தான்! ஒரு பெருந்தொகையை ரவியின் கைகளில் திணித்து “எல்லாவற்றையும் பார்த்துக் கொள்!” என்றான், உடைந்த குரலில்.

இதையும் படியுங்கள்:
ரஷ்ய நாடோடிக் கதை: பேராசை பெரு நஷ்டம்..!
Friends with sad

வீடு வந்து சேர்ந்தார்கள். பந்தல், மாலை, இறுதிச் சடங்குச் செலவுகள் என்று கண்டபடி கேட்டார்கள். ’ஒன்றுக்கு இரண்டாய் எழவு வீட்டிலும் பிடுங்குகிறார்களே!’ என்ற ஆதங்கம் ரவியை வாட்டியது. அதிலும் அமெரிக்க மகன் என்று அறிந்து கொண்டவர்கள், அரித்தெடுத்தார்கள். ஒவ்வொரு முறை தொகையை எண்ணும் போதும் ரவி கவினைப் பார்க்க, அவனோ, "கணக்குப் பார்க்காதே!” என்றே சைகை செய்தான்.

ரதத்தில் கொண்டு வந்து மயானத்தில் பாடியை இறக்கினார்கள். கொள்ளி வைக்கக் கவினைத் தயார் படுத்த, கவின் மொட்டை போட்டுக் கொள்ள, கூடவே ரவியும் இருந்தான். மொட்டை போட்ட நாவிதர் 500 ரூபாய் கேட்க, ரவிக்கு மயக்கம் வராத குறைதான்!கவினோ, ”கொடுத்து விடு. கண்டு கொள்ளாதே!” என்று சாடை காட்ட, முக்கிய அமைச்சரின் தொகுதியிலேய நிலவரம் இதுவென்றால், மற்ற இடங்களில்? கொடுத்து விட்டு வந்தார்கள்!எல்லோரும் பார்க்கும் இடத்தில், ”யாருக்கும் லஞ்சம் கொடுக்க வேண்டாம். யாராவது அப்படிக் கேட்டால், தொடர்பு கொள்ள, என்று கூறி, மொபைல் எண்ணையும் குறித்து விபரப் பலகை ஒன்று அப்பாவியாய் தொங்கிக் கொண்டிருந்தது!

இதையும் படியுங்கள்:
'திகில்' கதை : 13 ஆம் நம்பர் வீடு!
Friends with sad

மார்புக்கு மேலே வைக்கப்பட்ட சூடத்தில் நெருப்பை ஏற்றி, அது வரை அமைதி காத்த கவின் “அப்பா..” என்று அலறியது மயானச் சுவர்களில் பட்டு எதிரொலித்தது!

அவனைக் கைத்தாங்கலாக அழைத்துக் கொண்டு வெளியே வந்த ரவிக்கு, வயதான தன் தந்தை மரணப்படுக்கையில் நாட்களை எண்ணிக் கொண்டிருப்பதையும், அவர் திடீரென்று போனால் தன்னால் இவ்வளவு செலவுகளையும் எப்படிச் சமாளிக்க முடியும் என்று எண்ணியதிலும் அவனுக்கு மயக்கமே வந்து விட்டது!

ரவியின் பிடி தளர்வதையும், அவன் மயங்குவதையும் அறிந்த கவின், இப்பொழுது அவனைக் கைத்தாங்கலாகப் பிடித்துக் கொண்டான்! அந்த அன்புப் பிடியில் “நான் இருக்கிறேன்டா!எனக்கு ரெண்டு அப்பாவாக நினைத்துக் கொள்கிறேன்!கலங்காதே!” என்று சொல்வதாக ரவி உணர்ந்தான்!

logo
Kalki Online
kalkionline.com