பண்டிகை காலத்தில் ரயில் டிக்கெட் இல்லையா? பயணிகளின் ஏமாற்றத்திற்கு தீர்வு என்ன?

தீபாவளி, பொங்கல் பண்டிகைகளுக்கு 60 நாட்களுக்கு முன்பே ரயில் டிக்கெட் முன்பதிவு செய்தாலும் கிடைக்காமல் ஏமாறும் தென் மாவட்டப் பயணிகளின் நிலையும் தீர்வுகளும்.
ரயில் டிக்கெட் | railway station
ரயில் டிக்கெட் | railway stationImage credit: Gemini AI
ரெ. ஆத்மநாதன்

ரெ.ஆத்மநாதன், பொருளாதாரம், இதழியல்-மக்கள் தொடர்பியலில் முதுகலைப் பட்டங்கள் பெற்றவர். இவரது 4 நாடகங்கள் வானொலியில் ஒலிபரப்பாகியுள்ளன. அனுபவம் மிக்க எழுத்தாளர்.ஆக்கபூர்வமான கட்டுரைகள், சிந்திக்க வைக்கும் சிறுகதைகள், கவிதைகள் என்று இவரது எழுத்துகள் பல பரிமாணங்களைக் கொண்டவை. கடந்த பல வருடங்களாக கல்கி ஆன்லைனில் எழுதி வருகிறார்.

Updated on: 
Kalki Strip
Kalki Strip

தீபாவளி, பொங்கல் எனப் பண்டிகைகள் நெருங்கினாலே சொந்த ஊருக்குச் செல்லும் ஆசையை விட, ரயில் டிக்கெட் கிடைக்குமா என்ற பதற்றமே சென்னைவாசிகளை அதிகம் தொற்றிக்கொள்கிறது. முன்பதிவு தொடங்கிய சில நொடிகளிலேயே விற்றுத் தீரும் டிக்கெட்டுகளும், விண்ணை முட்டும் ஆம்னி பேருந்துக் கட்டணங்களும் சாமானியர்களின் பண்டிகை மகிழ்ச்சியைக் கேள்விக்குறியாக்குகின்றன. தென் மாவட்டப் பயணிகளின் இந்த நீண்டகாலத் தவிப்பிற்கு ரயில்வே நிர்வாகம் நினைத்தால் முற்றுப்புள்ளி வைக்க முடியும். ‘இல்லை’ என்ற பதில் மாறி ‘இன்னும் இருக்கிறது’ என்ற மாற்றம் சாத்தியமா? தொடர்ந்து படியுங்கள்!

தீபாவளியும் பொங்கலும் தமிழர்களின் இரு கண்கள் போன்று, என்றும் திகட்டாத பண்டிகைகள்! உற்றார், உறவினருடன் ஒன்றாக இணைந்து அவற்றைக் கொண்டாடுவதே ஆனந்தம் அளிக்கும் செயல்! அந்த மகிழ்ச்சியை முழுதாய் அனுபவிக்கவே மக்கள் விரும்புகின்றனர். அதனால்தான், குடும்பங்களைப் பிறந்த ஊர்களில் விட்டு விட்டுப் பணி நிமித்தம் காரணமாகப் பல இடங்களிலும் தங்கியிருப்போர், பண்டிகைகளைக் கொண்டாடப் பிறந்த ஊருக்குப் படையெடுத்து விடுகின்றனர்.

தனது பிரஜைகள் அமைதியாகவும், சந்தோஷமாகவும் விழாக் காலங்களில் பயணிக்கவும், பண்டிகைகளை அவர்கள் விரும்பும் வண்ணம் உற்சாகமாகவும், ஊக்கமுடனும் கொண்டாடிடவும் வழியேற்படுத்திக் கொடுத்தலே ஆளும் அரசுகளின் கடமையாகும்.

ஆனால் நடைமுறை அவ்வாறில்லை!

நம் தமிழ்நாட்டில், தலைநகரான நமது சென்னையில் நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் பணி நிமித்தம் மக்கள் வந்து குவிந்து உள்ளனர். கடலூர், விழுப்புரம், சேலம், திருச்சி போன்ற மாவட்டங்களைச் சேர்ந்தோர் சாலை வழியாகத் தங்கள் ஊர்களுக்கு எளிதாகச் சென்று விடலாம். ஆனால் மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி போன்ற தொலைதூர மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ரயில்களையே நம்பியிருக்க வேண்டியுள்ளது.

இதையும் படியுங்கள்:
பாதை இங்கே... பயணம் எங்கே?
ரயில் டிக்கெட் | railway station

பயண நேரம் அதிகமென்பதாலும், பலர் சர்க்கரை வியாதியால் பாதிக்கப்பட்டு அடிக்கடி ரெஸ்ட் ரூம் செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாலும், படுத்துக் கொண்டும், கை, கால்களை நீட்டியபடியும் தங்கள் விருப்பத்திற்கேற்றவாறு பயணம் செய்யும் வசதியை ரயில் பயணம் அளிப்பதாலும், அதனையே தங்கள் முதல் தேர்வாக அவர்கள் செலக்ட் செய்கிறார்கள். மேலும், ரயில்வேயில் மட்டுந்தான் பண்டிகை காலங்களில் கட்டணங்களை உயர்த்துவதில்லை.

முன்பிருந்ததைவிட அதிக ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது உண்மைதான்.

பல வழித் தடங்கள் புதிதாகச் சேர்க்கப்பட்டு ரயில் என்ற பறவை தன் சிறகுகளை விரித்து வருவதும் மெய்தான்! ஆனாலும் அவை போதுமானவையாக அமைந்துள்ளனவா? என்ற வினாவிற்கு, 'இல்லை’ என்பதைத்தானே விடையாகப் பகர வேண்டியிருக்கிறது.

உலகில் மக்கட்தொகையில் நம்பர் ஒன் நாடாக நாம் உயர்ந்து விட்டதையும், நமது கிராமப் புறங்களிலிருந்து மிகப் பெருவாரியான மக்கள் வேலை காரணமாகத் தலைநகராம் சென்னையிலேயே குவிந்து கிடக்கிறார்கள் என்பதையும் நிர்வாகத்தினர் அனைத்துத் தருணங்களிலும் நினைவில் இறுத்த வேண்டும்.

ரயில் டிக்கெட் | Family waiting in railway station
ரயில் டிக்கெட் | Family waiting in railway stationImage credit: Chatgpt

நிறுவனங்களைப் பரவலாக்கும் முறையில், பல மாவட்டங்களிலும் அமைத்திருந்தால் சென்னைக்கு இவ்வளவு பளு ஏற்பட்டிருக்காது. நீண்ட கால அடிப்படையில் சிந்தித்து, நாம் போக வேண்டிய தூரம் நிறையவே இருக்கிறது.

ரயில்வேயில், ஆன்லைன் டிக்கட் பதிவு ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்தே, பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே அனைத்து டிக்கட்டுகளும் விற்றுப் போவதும், பதிவு செய்ய வருவோரில் பாதிப் பேருக்கு மேல் ஏமாற்றத்துடன் திரும்புவதும் வாடிக்கையாகிப் போன ஒன்றாகி விட்டது.

60 நாட்களுக்கு முன்பாகவே தங்களது பயணங்களைத் திட்டமிட்டு, டிக்கட் கேட்டு வருவோருக்கு ‘இல்லை’ என்ற பதிலை ரயில்வே நிர்வாகம் எத்தனை காலத்திற்குத்தான் தொடரப்போகிறது?

இல்லை என்று முகத்தில் அடித்தாற்போல் சொல்லி அவர்களின் பண்டிகை மூடைக் கெடுப்பதற்குப் பதிலாக, தேடி வருவோர் அனைவருக்கும் பயணச் சீட்டுகளை வழங்கி, அதற்கேற்றாற்போல் கம்பார்ட்மெண்டுகளின் எண்ணிக்கையை ஒவ்வொரு ரயிலிலும் கூட்டலாமே!

ஒரு வேளை நிர்ணயிக்கப்பட்ட கம்பார்ட்மெண்டுகளுக்கு மேல் கூட்ட முடியாத நிலையில், சிறப்பு ரயில்களை இயக்கலாமே! இந்த ஏற்பாடு பண்டிகை தினங்களுக்கு மட்டுந்தானே!

இவ்வாறு செய்வதால் மக்களின் பண்டிகை கால மகிழ்ச்சி பாதுகாக்கப்படும்.

அவர்கள் குடும்ப உறுப்பினர்களுடன் திருப்தியாகப் பயணத்தை ரசித்து மேற்கொள்வார்கள்.

பண்டிகைக் கூட்டத்தைக் கருத்தில் கொண்டே கட்டணத்தைப் பலமடங்கு உயர்த்தி மக்களின் வயிற்றெரிச்சலுக்கு ஆளாகும் ஆம்னி பேருந்துகளுக்குக் கடிவாளம் போட்டது போலாகும்.

இதையும் படியுங்கள்:
தண்ணீருக்குள் பாய்ந்து பிடித்த பாம்பு... சில நொடிகள் உறைந்து போன இதயம்! - Zai Whitaker பசுமை நினைவுகள்!
ரயில் டிக்கெட் | railway station

தமிழ்நாடு போக்கு வரத்துக்கழகங்களும் பண்டிகை காலச் சிறப்புப் பேருந்துகளை ஆயிரக்கணக்கில் இயக்க அல்லல்படுவதை ஓரளவு குறைத்துக் கொள்ளலாம்.

மக்களின் திருப்தியில் ரயில்வே நிர்வாகமும் முழுத் திருப்தியை அடையலாம்.

இனியாவது பயணச் சீட்டு கேட்டு வருவோரை ஏமாற்றத்திற்கு ஆளாக்காமல், ’இல்லை’ என்பதை மாற்றி, ’இன்னும் இருக்கிறது வாருங்கள்!’ என்று அழைக்கும் நிலையினை நமது ரயில்வே ஏற்படுத்தும் என்று நம்புவோம்!

பண்டிகை காலங்களில் தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பயணிகள் எதிர்கொள்ளும் முன்பதிவுச் சிக்கல்களுக்கான அடிப்படைக் காரணங்களை நீங்கள் தெளிவாகப் புரிந்துகொள்வீர்கள்.