கீதாரிகளின் ரகசிய வாழ்க்கை: ஒரே இரவில் நிலத்தை தங்கமாக மாற்றும் மேய்ச்சல் ஆடுகள்!
இந்த பரந்து விரிந்த உலகத்தில் மனிதர்கள் வாழ்வதைப் போலவே விலங்குகளும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. இப்படி வாழ்ந்து கொண்டிருக்கும் பல விலங்கு இனங்களில் ஆடுகளும் இருக்கின்றன. இந்த ஆடுகள் மனித வாழ்க்கையில் ஒன்றிப்போய் உள்ளன என்பது எத்தனை பேருக்கு தெரியும்? ஆடுகளை மேய்ப்பவர்களை ஆயர், ஆய்ச்சியர் என்று அழைத்தாலும், கீதாரி என்ற ஒரு பெயரும் உண்டு. ஆடுகளுடன் கீதாரிகளின் வாழ்க்கை முறையையும் அவற்றின் பயன்பாடுகளையும் பற்றி இக்கட்டுரையில் இனி விரிவாய்க் காண்போம்.
ஆட்டுப்பட்டியில் ஆடுகள் :
கீதாரிகளின் வீட்டுக்கு அருகிலேயே ஆடுகளுக்கு இருப்பிடம் இருக்கும். அதை ஆட்டுப்பட்டி என்பர். அந்த ஆட்டுப்பட்டியில் இரவில் ஆடுகளை அடைத்து வைத்து காலையில் உணவை கொடுத்த பிறகு அவற்றை மேய்ச்சல் நிலங்களுக்குக் கூட்டிச் செல்வார்கள்.
ஆட்டு ரகங்கள் :
நமது தமிழ்நாட்டில் ஆடுகளுக்குப் பல வகையான ரகங்கள் இருக்கின்றன. மேச்சேரி ஆடு, கருப்பு ஆடு, வெள்ளாடு, செம்பறிஆடு, கன்னிஆடு, கோயம்புத்தூர் ஆடு, நெல்லூர் ஆடு, கொடியாடு, பள்ளை ஆடு, மோளை ஆடு போன்ற பல்வேறு ரகங்கள் இருக்கின்றன. இவை இறைச்சிக்காகவும், தோலுக்காகவும், பந்தய சண்டைக்காகவும் வளர்க்கப்படுகின்றன.
ஆடுகளுக்குப் பிடித்த குழைகள் :
ஆடுகளைக் கிராமங்களில் மேய்ச்சலுக்குக் கூட்டிச் செல்லும் போது நிலங்களில் வளரக்கூடிய மஞ்சனத்திச் செடிகள், வேப்பங்குழைகள், கடலைக் கொடிகள், புற்களையும் சாப்பிட்ட பிறகு கண்மாய்க்கரையில் உள்ள தண்ணீரைக் குடிக்கும் அப்பொழுதுதான் அதற்கு வயிறு நிரம்பும். விஷத்தன்மை உள்ள அரளிச்செடி, கள்ளிச்செடி போன்றவைகளை ஆடுகள் உண்ணாது.
கீதாரியின் புறத்தோற்றம் :
கையில் மூங்கில் பிரம்பையும், தண்ணீர் பாட்டிலை கயிற்றுடன் கட்டி இடப்பக்க கையிலும், மற்றொரு கையில் உணவு தூக்குவாளியையும், தலையில் துண்டினை சுற்றிக்கொண்டும், கால்களில் தோல் செருப்பு அணிந்து கொண்டும், பச்சை நிறத்தில் இடைவாரும், இடுப்பில் ஒரு பையில் வெற்றிலை, பாக்கு, மூக்குப்பொடி டப்பியுடன் ஆடு மேய்க்கும் கீதாரிகள் இப்படி தான் இருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கீதாரியின் மதிய உணவு :
ஆடுகளை மேய்க்கும் கீதாரிகள் மதிய உணவில் உடலுக்கு குளிர்ச்சி தரும் கஞ்சி, தயிர், மோர், சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், ஊறுகாய், கேப்பைக்கூழ், கம்மங்கூழ், வரகரிசிச் சோறு போன்ற உணவுகளையே அதிகமாக விரும்பி உண்பார்கள்.
ஆட்டுக்குட்டிகளுக்கு அழகான பெயர்கள் :
கீதாரிகள் தங்களுடைய ஆட்டிற்கு பெரிய கருப்பன், சின்னக்கருப்பன், சங்கிலிக்கருப்பன், முத்தாரம்மன், சந்தன மாரி போன்ற அவர்களின் குலதெய்வ பெயர்களையே வைத்து அழைத்து வருகிறார்கள். ஆடுகள் உடல்நிலை சரியில்லாமல் சாப்பிடாமல் இருக்கும் போதும், சாகும் தருவாயில் இருக்கும்போதும் குலதெய்வத்தை நினைத்து திருநீரை ஆடுகளுக்கு மேல் பூசி விடுவார்கள். இதனால் ஆடுகள் விரைவில் குணமடைந்து விடும் என்ற நம்பிக்கை இன்றைக்கும் கிராமங்களில் இருந்து வருகிறது.
கிடையில் ஆடுகள் :
அறுவடை முடிந்து மீண்டும் விவசாயம் செய்வதற்கு முன்பு நிலங்களில் கிடை போடுவார்கள். கிடைகளில் ஆடுகள் போடும் புழுக்கை, மூத்திர கழிவுகளில் அதிகளவில் உள்ள நைட்ரஜன், பொட்டாசியம், பாஸ்பேட், சல்பர், மெக்னீசியம், கால்சியம் போன்ற சத்துக்கள் பயிர்கள் நன்றாக செழித்து வளர உதவுகின்றன. ஒரு நாள் கிடை போடுவதற்கு கீதாரிகளுக்கு ரூ.750 கூலி வழங்கப்படுகிறது.
ஆடுகளுக்கு முடித்திருத்தம் :
ஆடுகளுக்கு உடம்பில் முடி அதிகமாக இருந்தால் மழைக்காலங்களில் முடியின் மேல் நீர் தங்கி ஆடுகளுக்கு நோய் தொற்று ஏற்படுவதுடன் அவை இறக்கவும் நேரிடும் என்பதால் அடிக்கடி முடிகள் வெட்டி விடப்படுகிறது.
கிடாய்களின் வளர்ச்சிக்கான செயல்முறை :
கிடாய்கள் நன்றாக வளர்ச்சி அடைவதற்காக விதை அடிக்கப்படுகிறது. ஆனால் வளர்க்கும் கிடாய்களில் இனப்பெருக்கத்திற்காக இரண்டு கிடாய்கள் மட்டும் விதை அடிக்கப்படாமல் விட்டுவிடுவார்கள். இந்த கிடாய்களுக்கு காக்கிடாய்கள் என்று பெயர்.
ஆடுகள் விற்பனை :
மாதத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை ஆடுகளை விற்பனை செய்வதற்காக தங்களின் சுற்றுவட்ட பகுதிகளில் உள்ள சந்தைகளுக்கு கொண்டு செல்கிறார்கள். அங்கு ஆடுகளை எடை போட்டு அந்த எடைக்கு ஏற்றார் போல கீதாரிகள் பணத்தை வசூல் செய்து கொள்கிறார்கள். ரமலான் மாதங்களில் சில இஸ்லாமிய பெருமக்கள் கீதாரிகள் இருக்கும் இடத்திற்கே வந்து ஆடுகளை பார்த்து வாங்கிச் செல்கின்றார்கள்.
ஆட்டுப்பட்டியில் சாம்பிராணி புகை :
மழைக்காலங்களில் கொசு தொல்லையை போக்க சாம்பிராணி புகை அல்லது வேப்பங்குழைகளை தீயில் எரித்து அதிலிருந்து வரும் புகையை போட்டு ஆட்டுப்பட்டிகள் முழுவதும் பரவச் செய்வார்கள். இதன் மூலம் கொசுக்களின் மூலம் பரவும் எந்த நோயும் ஆடுகளுக்கு வராது.
புதுப்பொலிவுடன் ஆடுகள் :
மாட்டுப் பொங்கல் அன்று மாடுகளுக்கு இணையாக ஆடுகளுக்கும் கொம்புகளில் வண்ணம் தீட்டி, மஞ்சள், குங்குமம் வைத்து பொங்கல் வைத்து சிறப்புச் செய்வார்கள்.
இறந்த ஆடுகளிடமிருந்து பெறப்படும் பொருட்கள் :
உயிரோடு இருக்கும் போதும் இறந்த பிறகும் ஆடுகள் பல வழிகளில் நல்ல பொருள்களாக மாறி நன்மைகளை தருகின்றன. ஆட்டு தோலானது கம்பளி, தபேலா, மத்தளம், உடுக்கை, உறுமி போன்ற இசைக்கருவிகள் செய்ய பயன்படுகிறது.
சீதனமாக ஆடுகள் :
கீதாரிகள் தங்களுடைய குடும்பத்தில் ஏதேனும் திருமண நிகழ்வு நடந்தால் 100, 200 ஆடுகள் என்று அவர்களின் வசதிக்கு ஏற்றார் போல சீதனமாக தருவதை முக்கியமான மரபு முறையாக இன்று வரை கடைபிடித்து வருகின்றனர்.
ஆடு மேய்த்தபெண் அம்மன் உருவில் :
சிவகங்கை மாவட்டம் கொல்லங்குடி கிராமத்தைச் சேர்ந்த கீதாரி ஒருவரின் மகள் 12 வயதான உடையாள் என்பவள் வயல்காட்டில் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்த போது அந்த வழியாக சிவகங்கை நாட்டு ராணி வேலுநாச்சியார் ஆங்கிலேயரிடமிருந்து தப்பித்து சென்று கொண்டிருந்தார். அதன் பிறகு அந்த வழியாக வந்த ஆங்கிலேயர்கள் உடையாளைப் பார்த்து “வேலு நாச்சியார் எந்த பக்கம் சென்றாள் என்பதை நீ பார்த்தாயா?”
“பார்த்தேன்! ஆனால் என் நாட்டு ராணியை ஒரு போதும் நான் காட்டிக் கொடுக்க மாட்டேன்!” என்று உடையாள் சொன்னாள்.
“நீ வேலு நாச்சியார் சென்ற பகுதியை சொல்லாவிட்டால் உன்னை இரண்டு துண்டுகளாக வெட்டிப் போட்டு விடுவேன்!” என்று சொன்னபோதும், "என் நாட்டின் ராணியை காட்டிக் கொடுக்க மாட்டேன்!" என்று கூறிய உடையாளை ஆங்கிலேய அரக்கன் இரண்டு துண்டாக வெட்டிப் போட்டான்.
பிறகு இந்த செய்தியை அறிந்த வேலுநாச்சியார் உடையாள் வெட்டுப்பட்ட இடத்தில் வெட்டுடையார் காளியம்மன் என்ற பெயரில் கோயிலை கட்டினார் என்பது வரலாற்றுச்செய்தியாகும். காளியம்மன் கோவிலை கீதாரியின் பரம்பரைகள் வழிவழியாக இன்றும் வணங்கி வருகின்றனர்.
அந்த வகையில் கீதாரிகளின் வாழ்க்கையில் ஆடுகளே மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கின்றன.

