டிசம்பரில் உச்சமடையும் Godzilla El Niño - தமிழகத்தை என்ன செய்யப்போகிறது?

கடல்சார் ஆராய்ச்சியாளர் சு. நாராயணி எச்சரிக்கை: 2015 கற்றுக்கொடுத்த பாடமும், வடிகால் முதல் சுகாதாரம் வரை அவசியமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும்.
Dr. Narayani Subramanian, Marine Biologist Interview
Dr. Narayani Subramanian, Marine BiologistImage Credit: ChatGPT
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on: 
Kalki Strip
Kalki Strip

ஐ.நா காலநிலை உச்சி மாநாடு (COP31) துருக்கியின் அன்டால்யாவில் நவம்பர் 9-ம் தேதி தொடங்கியது. அதற்கு முன்பே அமெரிக்காவில் டிரம்ப் பின்னடைவு, பிரேசிலில் லூலா வெற்றி, இஸ்ரேலில் நெதன்யாகு தோல்வி என உலக அரசியல் திசை மாறியிருக்கிறது. இன்னொருபுறம், 'காட்ஸில்லா எல்நினோ'வால் இந்த டிசம்பரில் சென்னையில் பெருமழை பெய்யக்கூடும் என்று எச்சரித்து வருகிறார் கடல்சார் ஆராய்ச்சியாளர் சு.நாராயணி (Dr. Narayani Subramanian, Marine Biologist).

உலக அரசியல் முதல் பட்டினப்பாக்கம் வரை, 'Unfiltered Podcast' க்காக அவரிடம் உரையாடினோம்.

சந்திப்பு - பேட்டி: மு. நியாஸ் அகமது (M. Niyas Ahmed)

அமெரிக்கா, பிரேசில்: தேர்தல் தரும் நம்பிக்கை

Q

உலகெங்கும் வலதுசாரிகள் பின்னடைவைச் சந்திக்கிறார்கள். அமெரிக்காவில் டிரம்ப் பின்னடைவு, பிரேசிலில் லூலாவின் பெரும் வெற்றி. சூழலியல் ரீதியாக இதன் தாக்கம் என்ன?

A

'க்ரோனி கேப்பிட்டலிசம்' அணுகுமுறையிலிருந்து நகர்ந்து, மக்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் பாதுகாப்பான சில விஷயங்கள் நடக்கும் என்ற நம்பிக்கை வந்திருக்கிறது. ஐ.நா நிறைய எச்சரிக்கும்; ஆனால் நாடுகளை நிர்பந்திக்க அதனால் முடியாது. இடதுசாய்வு கொண்டவர்கள் வெல்லும்போது ஐ.நா-வின் அதிகாரம் கூடலாம்.

பாரிஸ் ஒப்பந்தத்திலிருந்து இரண்டு முறை வெளியேறிய டிரம்ப், வளரும் நாடுகளுக்கான காலநிலை உதவிகளையும் பெருமளவு குறைத்தார். இதற்கு மேல் குறைக்காமல் தடுக்கவாவது டெமாக்ரட்களால் முடியுமா என்று பார்க்க வேண்டும்.

லூலாவின் வெற்றி காலநிலைக்குக் கிடைத்த பெரிய வெற்றி. அவர் ஆட்சியில் அமேசான் காடழிப்பு மட்டுப்படுத்தப்பட்டது. அவரை எதிர்த்த போல்சனாரோவின் மகன், 'சுற்றுச்சூழல் பெயரில் முன்னேற்றத்தைத் தடுக்க விட மாட்டோம்' என்று நேரடியாகப் பிரசாரம் செய்தார். உலகின் ஒன்பது முக்கிய 'டிப்பிங் பாயின்ட்'களில் ஒன்றான அமேசான் பாதுகாக்கப்பட்டால், காலநிலை மாற்றம் வேகமெடுக்காமல் தடுக்க நமக்கு ஒரு விளிம்பு கிடைக்கும்.

COP31: இது 'தகவமைப்பு' ஆண்டு

Q

COP31-ல் முக்கியமாக என்ன விவாதிக்கப்படும்?

A

2015 பாரிஸ் ஒப்பந்தத்தின் செயல்பாடுகளை ஆண்டுதோறும் மதிப்பிட்டு இலக்குகளை நிர்ணயிக்கும் மாநாடுதான் COP. காலநிலை மாற்றத்தில் இரண்டு அம்சங்கள் உண்டு: மேலும் தீவிரமடையாமல் தடுப்பது (Mitigation), ஏற்கெனவே வந்த பாதிப்புகளைச் சமாளிப்பது (Adaptation). 'சூப்பர் எல்நினோ' காலகட்டத்தில் இருப்பதால், இது தகவமைப்புக்கான ஆண்டு. நேபாளத்தில் பனிப்பாறை உருகியதால் ஏற்பட்ட துயர், இந்தோனேசியக் காட்டுத்தீ, ஆந்திராவைத் தாக்கிய புயல்கள் எல்லாம் அதன் அறிகுறிகள்.

எல்நினோ டிசம்பரில் உச்சமடையும். தமிழ்நாட்டில் மழை தீவிரமடையும்; மார்ச்சில் தொடங்கும் கோடை கொடுமையாக இருக்கும், வறட்சி வரலாம்.

நெதன்யாகுவின் தோல்வியால் போர் குறைந்தால், போர் உமிழ்வுகளும் பொருளாதாரமும் என்னவாகும் என்பது ஒரு கேள்வி. கடந்த மாநாட்டில் லூலா உருவாக்கிய வெப்பமண்டலக் காடுகள் நிதியத்துக்கு, அவர் வென்ற மறுநாளே ஐரோப்பிய நாடுகள் நிதி அறிவித்தன. ஆனால், கடும் பணவீக்கத்தில் காலநிலை நிதியுதவி என்னவாகும் என்பதுதான் பெரிய கேள்வி.

ஐரோப்பா: வலதுசாரி எழுச்சி

Q

முக்கிய நிதியளிப்பாளரான ஐரோப்பாவிலும் கிரீன் கட்சிகள் செல்வாக்கு இழந்து, வலதுசாரிகள் எழுகிறார்கள். இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

A

இது பல ஆண்டுகளாகத் தொடரும் போக்கு. 'நெட் ஜீரோ'வை நெருங்கிய சிறிய நாடுகள் பின்வாங்கவில்லை என்பது நம்பிக்கை தருகிறது. ஆனால் பணவீக்கமும், பிரான்ஸ் சூப்பர் மார்க்கெட்டுகள் ஹேக் செய்யப்பட்டதுபோன்ற சைபர் தாக்குதல்களும் அச்சுறுத்தும்போது, சுற்றுச்சூழல் இரண்டாம் முன்னுரிமையாகிவிடுகிறது. உலகம் நிலையாக இருந்தால்தான் இந்த வேலைகள் நடக்கும். அதனால்தான் போருக்கு எதிரான குரலும் காலநிலைக் குரல்தான்.

இந்தியா, சீனா: பழைய பாட்டா?

Q

முக்கிய கார்பம் எமிட்டர்ஸ்களான இந்தியா, சீனாவின் நிலைப்பாடு எப்படி இருக்கும்?

A

'புதுப்பிக்கத்தக்க ஆற்றலில் நல்ல பாதையில் இருக்கிறோம்; புதைபடிவ எரிபொருள் பற்றிப் பெரிதாகப் பேசப் போவதில்லை' என்று இந்தியா அறிவித்தது வியப்பளிக்கிறது. நிலக்கரி உமிழ்வில் இந்தியா இன்னும் முக்கிய இடத்தில்தான் இருக்கிறது. 'வளரும் நாடு, முன்னேற்றத்துக்கு நிலக்கரி வேண்டும்' என்ற அதே பாட்டையே இந்த ஆண்டும் பாடுமா? சீனா, 'டிரம்ப் செய்யவில்லை, நாங்களும் செய்ய மாட்டோம்' என்று சொல்லுமா, 'நாங்கள் செய்து காட்டுகிறோம்' என்று முன்வருமா என்பதும் தெரியவில்லை.

'2035-க்குள் உலக ஆற்றலில் 35% மின்சாரத்திலிருந்து வர வேண்டும்' என்பது மாநாட்டின் முக்கிய இலக்கு. மாற்றத்துக்கான பெரும் முதலீட்டை, நெருக்கடியில் உள்ள நாடுகளில் யார் ஏற்பார்கள்? அந்த மின்சாரம் எதிலிருந்து வரும்? இவைதான் என் கேள்விகள்.

AI உறுதிமொழியும் கடலுக்கடியில் டேட்டா சென்டர்களும்

Q

நிலமும் நீரும் மிச்சமாக, டேட்டா சென்டர்களைக் கடலுக்கடியில் அமைக்கலாம் என்கிறார்கள். கடல் உயிரியலாளராக இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

A

உப்புநீரில் இது தொழில்நுட்ப ரீதியாகச் சாத்தியமா என்பது முதல் கேள்வி. ஆங்கிலத்தில் 'டீப் சிக்ஸ்' என்ற சொலவடை உண்டு: ஆறு பாகத்துக்குக் கீழே போனதைத் திரும்ப எடுக்க முடியாது. அணுக்கழிவு கொட்டுவது முதல் மறைக்க வேண்டியவற்றைச் செய்வது வரை, கடலை ஏற்கெனவே அப்படித்தான் நடத்துகிறார்கள். நிலத்தில் ஒரு டேட்டா சென்டரைச் செயற்கைக்கோளிலோ ட்ரோனிலோ கண்காணிக்கலாம்; கடலுக்கடியில் யார் கண்காணிப்பார்கள்? அங்குள்ள உயிரினங்களே நமக்கு முழுமையாகத் தெரியாதபோது, 'பாதிப்பு இல்லை' என்று எப்படிச் சொல்ல முடியும்?

அடிப்படைக் கேள்வி: ஆயிரக்கணக்கான டேட்டா சென்டர்கள் உண்மையிலேயே தேவையா? பெட்ரோல் இல்லாவிட்டால் பொருளாதாரம் ஸ்தம்பிக்கும் என்று நம்பவைத்ததுபோல், AI இல்லாவிட்டால் முன்னேற்றமே இல்லை என்று நம்பவைக்கப்படுகிறோமா?

காலநிலை அகதிகள்

Q

இந்தியாவின் உள்நாட்டு அகதிகளில் பலர் காலநிலை அகதிகள். ஒடிசாவின் வெள்ளத்தால் ஒருவர் தமிழ்நாட்டுக்கு வருகிறார். இதற்குத் திட்டம் இருக்கிறதா?

A

உலக அளவில்கூட காலநிலை அகதிகளுக்குத் தனி வழிகாட்டுதல்கள் இல்லை. இந்தியாவில் இவர்கள் குறைந்தபட்ச ஊதியமோ, கண்ணியமோ, சங்கம் அமைக்கும் பாதுகாப்போ இல்லாத நிலையற்ற தொழிலாளர்களாக இருக்கிறார்கள். அவர்கள் ஏன் வருகிறார்கள் என்றும் கேட்க வேண்டும். ஆண்கள் புலம்பெயரும்போது, சொந்த ஊர்களில் பெண்கள் தலைமையிலான குடும்பங்கள் பாதுகாப்பின்றி நிற்கின்றன. அதிக காலநிலை அகதிகள் வரும் சுந்தரவனக் காடுகள், சுற்றுலா மூலம் பெரும் வருமானம் ஈட்டுகின்றன. அங்குள்ள மக்களுக்கு மாற்று வாழ்வாதாரம் ஏன் உருவாக்கப்படவில்லை?

Dr. Narayani Subramanian, Marine Biologist Interview
Dr. Narayani Subramanian, Marine BiologistImage Credit: ChatGPT

சென்னை: டிசம்பர் பெருமழை முதல் பட்டினப்பாக்கம் வரை

Q

'காட்ஸில்லா எல்நினோ'வால் டிசம்பரில் சென்னையில் பெருமழை பெய்யும் என்று எச்சரிக்கிறீர்கள். உண்மையிலேயே அச்சப்பட வேண்டுமா?

A

2015 நமக்குப் பெரிய பாடம். எல்நினோ காலத்தில் தமிழ்நாட்டின் மழைக்காலம் மோசமாக இருக்கும்; புயல்கள் உருவாகும் வாய்ப்பும் அதிகம். ஆனால் புயலின் திசையைக் கணிக்க முடியாது. கடந்த இரண்டு புயல்களும் சென்னையில் வெள்ளத்தை ஏற்படுத்தவில்லை. ஆனாலும், நான்கு நாள் மழை ஒரு மணி நேரத்தில் கொட்டும்போது அதை வெளியேற்றும் வடிகால் நம்மிடம் இருக்கிறதா என்பதுதான் கேள்வி. பயந்து மழை வராவிட்டாலும் பரவாயில்லை; அலட்சியமாக இருந்து மாட்டிக்கொள்ளக் கூடாது.

இதையும் படியுங்கள்:
உலகை அச்சுறுத்தும் El Nino பற்றி தெரியுமா?
Dr. Narayani Subramanian, Marine Biologist Interview
Q

புதிய தமிழக அரசு இதை எப்படிக் கையாள்கிறது?

A

ஐ.நா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் சொல்வதுபோல, நாம் 'காலநிலைச் சீர்குலைவு' நிலைக்கு வந்துவிட்டோம். வெப்ப அலையை மாநிலப் பேரிடராக அறிவித்த முந்தைய அரசின் முடிவைத் தொடர்ந்து, அதற்கான நிதியுதவியைப் பெற வேண்டும். மழைக்காலத் தயார்நிலை என்பது வடிகால் மட்டுமல்ல; சுகாதாரம் உட்படப் பல துறைகளின் ஒருங்கிணைப்பு. வரும் கோடையில் வறட்சி வரலாம். உபரி நீரைச் சேமிக்கக் கூடுதல் நீர்த்தேக்கங்கள், மின்வெட்டுச் சூழலில் கோடை மின்தேவை, இந்த ஆண்டு போனதுபோல் அடுத்த ஆண்டு குறுவைச் சாகுபடி போகாமல் தடுப்பது, திருநெல்வேலி போன்ற பிற நகரங்கள் என எல்லாவற்றுக்கும் திட்டம் வேண்டும்.

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் என்ற பேச்சு, கடல்சார் ஆராய்ச்சியாளராக என்னை அச்சப்படுத்துகிறது. கடல்மட்டம் உயரும் என்று எச்சரிக்கப்படும் சென்னையில், கடலோரக் கட்டுமானங்களைத் தடுக்க வேண்டிய அரசே அங்கு கட்ட யோசிப்பது வருத்தமளிக்கிறது. பிரச்சனைகளை முன்கூட்டியே பட்டியலிட்டு, அவை பத்து மடங்கானால் எப்படிச் சமாளிப்பது என்று தயாராக இருப்பதுதான் இந்த அரசின் நிர்வாகத் திறமைக்கான சான்று.

இதையும் படியுங்கள்:
அச்சச்சோ… பவளப்பாறைகளை அழிக்கும் எல் நினோ பேரழிவு! 
Dr. Narayani Subramanian, Marine Biologist Interview