கூகுள் டூடுளில் ஜொலிக்கும் 2026 FIFA உலகக்கோப்பை: கால்பந்து ரசிகர்களுக்கு கொண்டாட்டம்!

நவீன மாற்றங்களுடன் கூகுள் டூடுள் வெளியீடு; கால்பந்து திருவிழாவின் எதிர்பார்ப்பு எகிறியது!
FIFA World Cup - Google Doodle | கால்பந்து போட்டி
FIFA World Cup - Google Doodle | கால்பந்து போட்டி
Updated on
Kalki strip
Kalki strip

கூகுள் வலைத்தளத்தின் முதன்மைப் பக்கத்தில் ஒவ்வொரு நாளுக்குமான சிறப்புகளை, பன்னாட்டு அளவில், நாடுகள் அளவில் வெளிப்படுத்தும் விதமாக, கூகுளின் கேலிச்சித்திரம் (Google Doodle) உருவாக்கப்பட்டு அவ்வப்போது காட்சிப்படுத்தப்பட்டு வருகின்றன. விடுமுறை, நிகழ்வுகள், சாதனைகள் மற்றும் மக்களைச் சிறப்பித்தல் என்று பல்வேறு கருத்துருக்களில் கூகுளின் முகப்புப் பக்கத்தில் இருக்கும் கூகுளின் அடையாளச் சின்னத்தில், தற்காலிகமாக மாற்றம் செய்து, கூகுளின் கேலிச்சித்திரம் காட்சிப்படுத்தப்பட்டு வருகிறது.

கூகுளின் முதல் கேலிச்சித்திரம் 1998 ஆம் ஆண்டில், எரியும் மனிதன் விழாவை சிறப்பிக்கும் விதமாக முதல் கேலிப்படம் வெளியிடப்பட்டது. வலையமைப்பு சேவையகங்கள் செயலிழந்தால், தாங்கள் இல்லாததைப் பயனர்களிடம் தெரிவிக்கவே இதை லாரி பேஜ் மற்றும் சேர்ஜி பிரின் ஆகியோர் வடிவமைத்தனர். தொடர்ந்து வந்த சில கூகுளின் கேலிச்சித்திரங்களை வெளி ஒப்பந்தக்காரர் வடிவமைத்தார்.

Google FIFA Doodle | கால்பந்து போட்டி
Google FIFA Doodle | கால்பந்து போட்டிAI Image

2000 ஆம் ஆண்டில் பாஸ்டில் நாளுக்கான இலச்சினை வடிவமைக்க பேஜ் மற்றும் பிரின் ஆகியோர் வெளியுறவு அதிகாரி டென்னிஸ் ஹூவாங்கை கேட்டுக் கொண்டனர். அதனைத் தொடர்ந்து, கேலிச்சித்திரங்களை ஏற்பாடு செய்து வெளியிட டூடுலேர்ஸ் (doodlers) எனும் ஊழியர்கள் குழு ஒன்று செயல்படுகிறது. 2000 ஆம் ஆண்டு மே 1 முதல் கூகுள் இலச்சினையின் வழியாக, பல்வேறு நிகழ்வுகள், பண்பாடுகள், இடங்கள் போன்றவை காட்சிப்படுத்தப்பட்டு வருகின்றன.

கூகுள் டூடுளில் களைகட்டும் கால்பந்து போட்டி கொண்டாட்டம்

இன்றைய (13-06-2026) நாளின் கூகுள் டூடுள், பீஃபா கால்பந்து போட்டி உலகக்கோப்பையை மையப்படுத்தி அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த கூகுள் டூடுள் ஒரு வீரர் கால்பந்தை நகர்த்திச் செல்லும் போது, எதிரணி வீரர் அதைத் தடுக்க முனைகிறார். ஆனால், அவரிடம் விட்டுவிடாமல், அந்தப் பந்தை வீரர் நகர்த்திச் செல்வது போன்று சிறந்த முறையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

பன்னாட்டுக் காற்பந்துச் சங்கங்களின் கூட்டமைப்பின் (Federation Internationale de Football Association - FIFA) உறுப்பு சங்கங்களின் தேசிய அணிகளால் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை பீஃபா உலகக்கோப்பை (FIFA World Cup) எனும் பன்னாட்டு ஆண்கள் கால்பந்து போட்டி நடத்தப்பெற்று வருகிறது. தற்போது 2026 ஆம் ஆண்டு பீஃபா உலகக்கோப்பைக்கான போட்டிகள் தொடங்கியிருக்கிறது. ஜூன் 11 அன்று தொடங்கிய இப்போட்டி ஜூலை 19 வரை நடைபெறவிருக்கிறது.

FIFA world cup 2026
FIFA world cup 2026AI Image

கால்பந்து போட்டி வரலாற்றில் புதிய மைல்கல்: 48 அணிகளின் அணிவகுப்பு!

இப்போட்டியானது, ஐக்கிய அமெரிக்காவில் பதினொரு நகரங்களிலும், மெக்சிக்கோவில் மூன்று நகரங்களிலும், கனடாவில் இரண்டு நகரங்களிலுமாக மொத்தம் பதினாறு நகரங்களால் கூட்டாக நடத்தப்படுகிறது. இந்தப் போட்டி மூன்று நாடுகளால் நடத்தப்படும் முதல் பீஃபா உலகக் கோப்பையாகவும், முன்பு 32 ஆக இருந்த அணிகளின் எண்ணிக்கை 48 ஆக உயர்ந்து, தற்போது 48 அணிகளை உள்ளடக்கிய முதல் போட்டியாகவும் இருக்கிறது.

மாஸ்கோவில் நடைபெற்ற 68-ஆவது பீஃபா மாநாட்டின் இறுதி வாக்கெடுப்பில், மொராக்கோவின் போட்டி ஏலத்தை மூன்று நாடுகளின் ஒன்றிய சங்கம் தோற்கடித்தது. 2002 ஆம் ஆண்டிற்குப் பிறகு பல நாடுகள் இணைந்து நடத்தும் முதல் ஆண்கள் உலகக் கோப்பை இதுவாகும். இதற்கு முன்னர் 1970, 1986 போட்டிகளை நடத்தியதன் மூலம், ஆண்கள் உலகக் கோப்பையை மூன்று முறை நடத்தும் அல்லது இணைந்து நடத்தும் முதல் நாடு என்ற பெருமையை மெக்சிகோ பெற்றிருக்கிறது. இதற்கு முன்னர் 1994 ஆம் ஆண்டில் அமெரிக்கா ஆண்கள் உலகக் கோப்பை போட்டியை நடத்தியது. இதற்கு மாறாக, கனடா ஆண்கள் போட்டியை நடத்துவது அல்லது இணைந்து நடத்துவது இதுவே முதல் முறையாகும்.

இதையும் படியுங்கள்:
FIFA 2026: இந்திய வம்சாவளி கால்பந்து வீரர்கள் பட்டியல் மற்றும் விவரங்கள்!
FIFA World Cup - Google Doodle | கால்பந்து போட்டி

2026 உலகக்கோப்பை குறித்த சுவாரசியமான தகவல்கள்

கனடா, மெக்சிக்கோ, ஐக்கிய அமெரிக்கா நாடுகள் போட்டியை நடத்தும் நாடுகள் என்பதால், இந்நாடுகள் அனைத்தும் தானாகவே தகுதி பெற்றன. கேப் வர்டி, குராசோ, ஜோர்டான், உஸ்பெக்கிஸ்தான் ஆகிய நாடுகள், முதன் முதலாக உலகக் கோப்பைப் போட்டியில் பங்கேற்கின்றன. 2022 ஆம் ஆண்டில் தனது மூன்றாவது உலகக் கோப்பைப் பட்டத்தை வென்ற அர்ஜென்டினா, நடப்பு வெற்றியாளராக (சாம்பியனாக) உள்ளது. 2026 ஆம் ஆண்டில் இந்த உலகக் கோப்பையை வெல்லப் போவது யார்? என்கிற எதிர்பார்ப்பு உலகம் முழுவதும் எழுந்துள்ளது.

இன்றைய கூகுள் டூடுள் உலகம் முழுவதுமிருக்கும் கால்பந்து ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

logo
Kalki Online
kalkionline.com